1.
போர் மரபு
ஓரிரு புள்ளிகளில் மட்டுமே
இணைய முடிந்த வாழ்வதனில்
நிசப்தமாய் போர் செய்திருப்பர்
ஆணும் பெண்ணும்.
காமச்சுவைப்பு குழந்தை நலனென
அரிதான பொழுதுகளின்
ஒற்றை நிழலில் ஒய்வெடுத்து
களத்திற்குத் திரும்புவார்கள்.
வேற்று மனிதத்தாக்குதல்களில்
அவனுக்காக அவளும்
அவளுக்காக அவனும்
சார்பாய் நின்று
வார்த்தைகளில் வாளேந்துகையில்
பார்வையாளர்களின் புரிதல்கள்
சற்று சிரமமாய்.
கர்ப்ப காலத்தை முன்னிட்டு
ஒத்திவைக்கப்பட்ட போர்க்களங்கள்
வெறிச்சோடும் பெண்ணின்றி.
திணவெடுத்த ஆணின் நாக்கு
போர் செய்தலை எதிர் நோக்கி
தவமிருக்கும் பகல் இரவு பாராது.
விருந்தினர் கிடைக்காத கணவன்
நண்பனுடன் திரும்புவான்
சமாதனக் கொடி ஏந்தி
தேநீருடன் வந்து உபசரிக்கும்
மனைவியின் முறுவலில்
வெண்புறா ஒன்று எழுந்து பறக்கும்.
நண்டூரும் கடற்கரைகள்
பகட்டான உணவுச்சாலைகள்
பிம்பங்கள் நடனமிடும் திரையரங்குகள்
ஒய்வெடுக்கும் பாசறைகளாக்கி
நுழைந்து வெளியேறுவர்
குழந்தைகளுடன்,
மற்றும் ஒரு போர்க்களத்திற்கு
2.
பாடை
முதுகு சுளுக்கி
மூச்சுமுட்ட நடக்கும்
இந்த கணங்களை
எங்கு போய் தள்ளுவது?
மரணபயம் வெள்ளையாய்க் கசிகிறது.
கண்கள் வழியாக.
எனக்குப் பாடைகட்டுபவர்கள்
யாரென்று தெரிந்து வைத்திருக்கிறேன்.
பக்கத்து அறையில்
முகச்சாயம் பூசிக்கொண்டு
எனது இறுதி ஊர்வலத்தில்
நடனமாடக் காத்திருக்கிறார்கள்.
இன்னும் சிறிது நேரத்தில்
பாம்புப் பிடாரனின் மகுடிக்கு
ஜீவாலை விடும் நாக்காய்
என் உயிர் தெறித்து விழப்போகிறது.
அடுப்படியில் பலலிட்டர் பால்
ஆவிபறக்க பொங்கப் போகிறது.
அசதியற்ற அழுகைக்காய்.
காட்சியில் பிரசுரமான சுமதியின் ஏனைய கவிதைகள்
http://kaattchi.blogspot.com/2010/03/1.html
http://kaattchi.blogspot.com/2010/03/2_30.html
http://kaattchi.blogspot.com/2010/03/3.html
http://kaattchi.blogspot.com/2010/04/4.html
http://kaattchi.blogspot.com/2010/04/5.html
http://kaattchi.blogspot.com/2010/04/6.html
http://kaattchi.blogspot.com/2010/04/7_06.html
http://kaattchi.blogspot.com/2010/04/8.html
April 8, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
