1.
குட்டி நாய் பற்றிய சில குறிப்புகள்
ஒரு சிறு நாய்க்குட்டியை
கைப்பேசியில் பதிவுசெய்வதோ
படமெடுப்பதோ
எளிதான காரியமல்ல.
துறுதுறு கண்களும்
நிலைகொள்ளா வாலும்
சிறு செவ்வகத்தில்
அடங்காதன.
குட்டிநாய் வாசம்
உங்கள் மேல்
உடைகள் மேல்
ஏன் அறைகள் முழுவதும் கூட
வியாபிக்கும் போது
நாமும் ஏதோ நல்லவர்தான்
என்று நமக்குத் தோன்றச் செய்யும்.
நல்லவேளை இன்னமும்
அதன்வாசம் மறைக்கும்
வாசனை திரவியங்கள்
விற்பனையில் இல்லை.
பள்ளிகிளம்பும் சிறுமி
நாயை அணைத்து விடைபெறுகையில்
சொல்கிறாள்
தனக்குப் பிடித்த செண்ட்
நாய்வாசம் என்று
கடிக்கும் பல்கூர்மையினூடே
பசை தடவியிருக்கும்
அதன் விசுவாசத்தை
நீரிட்டுக் கழுவையில்
வாலாட்டி வாலாட்டி
காலிடுக்கில் சுற்றி வரும்.
.
கிளைமுறிந்தோ
தனித்து விடப்பட்டோ
மரமென நிற்கையில்
தேடிக்கொள்ளலாம்
ஒரு சிறுநாய்க்குட்டியை.
2.
பறத்தல்
சின்னதான் எரிச்சலுடன்
ஓங்கி அடித்து
கண்முன் விரல் நீட்டிப்பார்த்து
‘ச்சேய்’ என்றபடி
துளி இரத்தம் துடைக்கும்
சொற்ப வேளையிலும்
எதிர்த்த்துப் பறக்கும்
வாழ்தலைக் கற்கலாம்
கொசுவிடம்.
காட்சியில் பிரசுரமான சுமதியின் ஏனைய கவிதைகள்
http://kaattchi.blogspot.com/2010/03/1.html
http://kaattchi.blogspot.com/2010/03/2_30.html
http://kaattchi.blogspot.com/2010/03/3.html
http://kaattchi.blogspot.com/2010/04/4.html
http://kaattchi.blogspot.com/2010/04/5.html
http://kaattchi.blogspot.com/2010/04/6.html
http://kaattchi.blogspot.com/2010/04/7_06.html
April 7, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
