பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 5, 2010

சுமதி கவிதைகள் - 6

மாலை நேரக் கேள்வி

வகுப்பில் என்ன நடந்ததென்ற
அலைபேசி வழியிலான
அப்பாவின் மாலை நேரக்
கேள்விக்கு பதில்
சொல்லிக்கொண்டிருந்தாள்.



தான் கொடுத்த ஆப்பிள்
துண்டுகள்
நான்கைச் சாப்பிட்டுவிட்டு
பூனை ரப்பர் தந்தானாம்
வகுப்புப் பையன்.

கேட்பதற்கு
தானும் ஒரு கேள்வி வைத்திருந்தாள்.
'மிஸ்டர் பீனின் முழுப் பெயர் தெரியுமா?' என்கிறாள்.
எதிர்முனை அப்பா
'தெரியாது' என்றதும்
அமெரிக்காவைக் கண்டுபிடித்த
கொலம்பஸ் மகிழ்ச்சியில் சொல்கிறாள்
மிஸ்டர் பீனின் முழுப் பெயர் பீன்தானாம்!

விழாக்கால முன்னிரவில்

சாணிவழித்துக் கோலமிட்டு
அடுத்த நாளுக்கான
வேலை ஒன்றை
அம்மா மிச்சப்படுத்த நினைக்கையில்
உறங்காது விழிக்கிறாள் சிறுமியும்.

பூ, தேசியக்கொடி, டோரா,
நட்சத்திரம் வரைந்து
அதற்கான வண்ணம் பூசி
மகிழ்கிறாள் சிறுமி.

'தூங்காம அம்மாவுக்கு
ஹெல்ப் பண்றியா?'

'பரவாயில்லையே...
அம்மாவைவிட
கோமதி அழகாக் கோலம் போடுறாளே!'

இன்னும் என்னென்னவோ
கேட்டவாறே கடந்துபோகும்
தெருவாசிகளின் விசாரிப்பில்
சிறுமிக்கும் அம்மாவுக்கும்
தொடங்கிவிடுகிறது
முதல் நாளிலே விழா!

நன்றி:  ஆனந்த விகடன் 23 டிசம்பர் 2009


அறிமுகம்:

சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச் சார்ந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும், முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர்.  தற்போது கோவையில்  கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். இவருடையக் கவிதைகள் காட்சியில் தொடராய் இடம் பெறுகின்றன. இவருடைய கவிதைகள், கட்டுரைகள்,காலச்சுவடு, கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன், வார்த்தை, வடக்கு வாசல் அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.



காட்சியில் பிரசுரமான இவரின் ஏனைய கவிதைகள்
http://kaattchi.blogspot.com/2010/03/1.html
http://kaattchi.blogspot.com/2010/03/2_30.html
http://kaattchi.blogspot.com/2010/03/3.html

http://kaattchi.blogspot.com/2010/04/4.html
http://kaattchi.blogspot.com/2010/04/5.html

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com