1.
தினமும் தவறவிடுகிறார்கள்
யாரேனும் ஒருவர்
ஏதேனும் ஒன்றை.
கண்கள் உறுத்தும்படி
பயணிப்பவர்கள் யாவரும்
பார்த்திருக்கக்கூடும் சாலைகளில்
ஒருமுறையேனும்.
குழந்தையின் ஒற்றைச் செருப்பு.
நடந்து முடிந்த விபத்து மின்னும்
கண்ணாடிச் சிதறல்கள்.
பேருறக்கம் கொண்ட நிலையில்
ஏதேனும் ஒரு பறவை அல்லது விலங்கு.
அவசரமாய் கிளம்பிப் போனக் குழந்தையா
வேலைக்கு ஓடிச் சென்ற ஆணா, பெண்ணா
என யாருடைய பசி எது எனச் சொல்லும்
இரைந்து கிடக்கும் சாதம்.
இருப்பவனுக்கு ரோஜா
இல்லாதவனுக்கு செவ்வந்தியென
வர்க்கம் பேதம் சொல்லும்
இறுதி யாத்ரையின் பூவிதழ்கள்
இரண்டே நிமிடங்களில்
எல்லாம் துடைத்து
சாலைகள் நின்றபடி
நகர்த்தி விடும் பயணங்களை.
2.
பெரியவைகள் அதி சோர்வுடன்
சிரியவைகள் மிகு உற்சாகத்துடன்
என்ற சிறு முரணோடு
சின்னதும் பெரியதுமாய்
பழக்கப்பட்ட வழியில்
திரும்பி விடுகின்றன
எண்களின் வழி காலத்தை ஊகித்தவாறு.
மனிதன் வீடு திரும்பும் மற்றொரு விலங்கு.
3.
ஒரு வேடனின்
கரிசனம் மிக்க
தானியச் சிதறல்களின் வழி
வலை விரித்தலை
அறிந்தேயுள்ளன,
மனைவி மகள் மாமியார் மறுமகள்
நாத்தனார் மதினி அக்கா தங்கை
போன்ற எல்லா பறவைகளும்.
சுமதி ராமசுப்ரமணியத்தின் ஏனைய கவிதைகள்
http://kaattchi.blogspot.com/2010/03/1.html
http://kaattchi.blogspot.com/2010/03/2_30.html
http://kaattchi.blogspot.com/2010/03/3.html
April 1, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
