தன்மை ஒருமை எந்திரங்கள்
தன்மை ஒருமை கவிதைகள் கேலி செய்கின்றன.
தொடர்பு எல்லைக்கு அப்பாலும் உள்ளேயும்
அயராது அலையும் என் பயண திட்டங்களை
வேறொருவன் தீர்மானிக்கிறான்.
நெல்சன் மாணிக்கம் ரோட்டிலும் நூறடி ரோட்டிலும்
கெட்ட வார்த்தையில் அன்னியர்களை வசைபாடி பயணிக்கும்
லட்சகணக்கான சாதுக்களின் வரிசையில் நான்
காட்டுவழிப்பயணத்தில் பறவைகளோடு விசிலடித்தபடி
அந்த பாழாய்ப் போன வேறொருவன்.
அவன் படுத்துறங்கக் கிளைகள்
எனக்கு அதன் மிச்சங்கள்
இரவில் அண்ணாந்து பார்த்தால் அவனுக்கு நட்சத்திரங்கள்
எனக்கு எலெக்ட்ரானிக் எச்சங்கள்.
நேற்று கனவில் வந்த கடல் தீரத்தின் ஈரமும்
மலைக்காற்றின் வாசமும் எங்கே போனது?
அக்குளில் தேடச் சொன்னது மனசாட்சி
என் வாழ்க்கையை எங்கோ வாழும் வேறொருவரே...
நான் நீங்களாய் நானாய் மாற
பிரார்த்தனையேனும் செய்வீரா?
2.
பத்துக்குப் பதினைந்தில் அறை
படுத்துக் கொண்டே பார்க்க டி.வி
டி.வியில் பார்க்க ஐ.பி.எல்
நண்பருக்கு ஸ்கோர் அனுப்ப ஒரு மொபைல்
மொபைல் வைக்கும் மேஜையில் ஒரு கம்ப்யூட்டர்
கம்ப்யூட்டரும் நானும் சூடாகாமல் இருக்க ஏ.சி
ஏ.சி ரிமோட்டின் அருகில் கேட்பாரற்றுக் கிடக்கும் வீடியோ கேம்
அப்பா அம்மா இல்லாத நாளில் பியருக்கு குளிரூட்ட ஃப்ரிட்ஜ்
அபார்ட்மென்டை அலற வைக்கும் ஹோம் தியேட்டர்
யோசிக்காமல் என் பல்சரை எடுத்துப் போகும் நண்பர்கள்.
அன்று பல்சர் இல்லையெனில் மெரீனா வர மறுக்கும் காதலி
கருமம்... எனக்குப் போர் அடிக்கிறது
ஆனால் இவை எதுவுமே பார்த்திராத என் அப்பனுக்கு
என்னிடம் சொல்வதற்கு உள்ளது ஆயிரம் கதைகள்!
விக்னேஷ்வரன்
சமீப காலமாக வலையில் ஆத்மா என்றும் ரெட்டைவால்ஸ் என்ற பெயரிலும் அறிமுகம். படித்தது மதுரையில் டி.வி.எஸ்ஸிலும் மதுரைக்கல்லூரியிலும். கல்லூரியின் மூன்றாம் வருடத்தில்.
ஆனந்தவிகடனுக்காக மாணவப் பத்திரிக்கையாளனாய் கொஞ்சம் சுற்றினேன், பிறகு பிழைப்புக்காக ஆலப்புழையில் ஒரு வருடம். சென்னையில் ஆறாவது வருடம். எல்லா விஷயத்துக்கும் So What? என்ற கேள்வி எழுந்ததாலும் எழுதுவது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. இது வரை யாருமே சொல்லாத ஒரு விஷயத்தை என்றாவது ஒரு நாள் சொல்லிவிடுவேன் எனும் நம்பிக்கையில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.