1.
ஆறு
மழை பெய்தாலும் பெய்யாட்டியும்
சுழித்துப் போகும் ஆறு அழகு.
அதிசயமும் கூட.
படித்துறை மேட்டில்
ராக்காயி கோயில் அரளி மரம்
பூவுதிர்த்து மெல்ல மெல்ல
அவை நகர்தல்
எப்போதாவதுதான்
பார்க்க கிடைக்கும்.
லைப்பாயும் ஹமாம் சாம்பிளும்
நுரைத்து கிடக்கிற
படிக்கட்டுகளின் வாடையை
உலகில் வேறு எதுவும்
சமன் செய்யாது.
ஏதோ ஒரு மழை நாளில்
தோப்படர்ந்த இருட்புதைவில்
ஆறு பார்த்ததும்
தென்னை அடிமுட்டில்
சாய்ந்து கிரங்கிப் போனதும்
யாரிடம் சொல்லிப் புரிய?
லீவில் ஊருக்கு வந்த கையோடு
ஆற்றுக்கு கிளம்பினால்
யாரைப் பாக்கப் போறேன்னு
அர்த்தம் தொனிக்க
அக்கா சிரிப்பாள்
உலகில் பார்ப்பதற்கென்று
அக்கா வைத்திருப்பவைகளில்
ஆறு பாய்வதில்லை.
குளீப்பதற்கும் துவைப்பதற்கும்
மட்டும் இன்றி
ஆறு பார்ப்பதற்கும் தானே.
2.
ராமசுப்புவுக்கு
வரும் போதெல்லாம்
எதன் பொருட்டு வருகிறாய்
என்பது
எனக்குத் தெரியாது.
போகும் போதாவது
சொல்லி விட்டுப்
போகிற பழக்கமும்
உனக்கில்லை.
எதிர் பாராமல் வந்து
மண் வாடையை
கிளப்பி விட்டுப்போகிற
கோடை மழையை
கேள்வி கேட்பதில்
ஒப்புதல் இல்லை எனக்கும்
முத்துப்பாண்டி, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றவர். சொந்த ஊர் மதுரை. தற்பொழுது சென்னையில் ஒரு விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவருடைய கவிதைகள் காட்சியில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. இதுவரை காட்சியில்
இடம் பெற்ற அவருடைய ஏனைய கவிதைகள்:

