பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 6, 2010

அற்றவைகளால் நிரம்பியவள் - 1 - யமுனா ராகவன்

யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவர இருக்கிறது.



பகுதி - 1
       அஞ்சனாவிற்கு வழக்கம் போல் `கிராண்ட் ஆன்ஸ்` (Grand anse) கிளினிக் முடித்து பஸ் பிடித்து `பே செயிண்ட் ஆன்` ( Baie ste anne) வந்து சேரும் போது மணி ஆறு ஆனது . அந்த அரைமணி பிரயாணம் அவளுக்கு பிடிக்கும். அவள் செல்லும்வழியில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இன்னும் மக்களும் இயந்திரங்களும் தொடாத அருவிகள் நிறைந்த அழகிய `வாலே டே மேய்` ( Valley de Mai) காடு இருந்தது. ஜுராசிக் பார்க் படத்திற்கு காடு போல அமைக்க இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் வந்து இந்த காட்டின் செடி கொடி மலை அருவி அமைப்பை பார்த்து போனாராம் சொன்னார்கள். காதில் கேட்டு கொண்டிருந்த இளையராஜா மனதில் புகுந்து கண்வழி வழிந்தார். உடன்பயணிக்கும் ஒவ்வொரு முகமாய் மாறி மாறி பார்த்தாள்.







         `சேய்ஷல்ஸ்` ( Seychelles )... அந்த பேரை கூட அவள் கேட்ட நினைவில்லை பள்ளியில் படித்த சமயம். ஆப்ரிக்காவை ஒட்டிய அந்த தீவுக்கு வேலைக்கு போகிறோம் என்று தெரிந்த பிறகு கூகிளில் தேடினாள். பரந்த இந்து மகா சமுத்திரத்தில் ஒரு புள்ளியாய் இருந்தது. வந்த பிறகு தான் தெரிந்தது அது ஒரு 170 தீவு கூட்டங்கள் சேர்ந்தது என்று. புள்ளிக்குள் புள்ளிகள்.... பண்ணை வேலைக்கு வெள்ளையர்களால் கொண்டு செல்லப்பட்டவர்கள் அங்கு வாழும் மக்கள். பாதிக்கும் மேலே ஆப்ரிக்கர்களின் சந்ததியினர், மிச்சமீதி அதே காரணத்திற்கு கொண்டு வரப்பட்ட தமிழர்களின் சந்ததிகள். சேய்ஷல்வாக்கள்...இப்படி தான் அழைத்துக் கொள்கிறார்கள் அவர்களை. தலைநகர் மாஹேவில் ( Mahe ) இறங்கி ஒரு 2 வாரங்களில் இரண்டாவது பெரிய தீவான `ப்ராலினில்` (Praslin) வந்து வேலைக்கு சேர்ந்து 8 மாதக் காலம் ஆயிற்று

        பஸ் நின்றது `பே செயிண்ட் ஆனில்`. அவளை பார்க்கும் வினோத பார்வைகள் குறைந்து தான் போயிருந்தது. ஓரளவிற்கு பரிச்சயம் ஆனவர்கள் ``கோம சாவா டாக்டர் (Koman sawa)`` (நன்றாக இருக்கிறீர்களா ) என்றார்கள். க்ரியோல் அவர்கள் பேசும் பாஷை. இலக்கணம் அற்ற பிரஞ்சு மொழி தான் இது என்றார்கள். ``பியேன் மெர்சி`` (Byen merci) (சுகம் நன்றி) என்று கூறி நகர்ந்தாள். வீடு வந்து சேரும்போது வழக்கம் போல ஜெனிஸ், அவள் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரி, தோட்டத்தில் களைப்பிடிங்கிக் கொண்டு இருந்தாள். 60ம் வயதின் கடைசியில் இருந்த ஜெனிஸ் ( Janice ), திருமணமே செய்துக்கொள்ளாதவள். ஒரு 35 வருடம் அரபுநாடுகளில் சென்று ஒரு பெரிய ஷேக்கிடம் வீட்டு வேலை, குழந்தைகளை பார்க்கும் கவர்னஸாக இருந்துவிட்டு இப்போது இங்கு சில வீடுகள் வாங்கிவிட்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்துக்கொண்டு இருப்பவள். நல்லவள் தான் ஆனால் தனக்கிருக்கும் மிதமிஞ்சிய நேரத்தை எப்படி கழிப்பது என்று தெரியாது மற்றவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைத்து புறம்பேசுபவள், . ஆகையால் அஞ்சனா வெறும் ஹை! பை! என்ற அளவே பேசுவாள் ஜெனிஸோடு.

        வீடு வந்து நுழைந்து கதவை சாத்தியவள் சுற்றி பார்த்தாள். இவள் வேலை பார்ப்பது ஒரு தனியார் மருத்துவமனையில். ஒரு 3 தலைமுறையாக அங்கேயே இருந்த செட்டியார் குடும்பத்தில் டாக்டருக்கு படித்தவர் விஸ்வனாதன் சார். சேய்ஷல்ஸில் இருந்த ஒரு பழக்கம், அங்கு இருந்த எல்லா இந்தியர்களுக்கும் அவர்களுடைய அடைமொழி அவர் அவர் ஜாதிபெயர் தான். நிறைய செட்டி, தேவர், நாடார், படையாட்சி இப்படி தான் அங்கிருந்த தமிழ் பெயர்கள் முடியும். விஸ்வனாதன் செட்டி சார்க்கு தலைநகர் மாஹேவில் ஒரு கிளினிக் இருந்தது. ப்ராலினில் இரண்டு கிளினிக். க்ராண்ட் ஆன்ஸ்ல் இருந்தது அவருடைய சொந்த வீடு. ஆனால் அங்கு கூட்டம் வருவதில்லை என்று படகு துறையான பே செயிண்ட் ஆனில் ஜெனிஸுடைய வீட்டை வாடகைக்கு எடுத்து கிளினிக்காக மாற்றி இருந்தார். நுழையும் ஹால் முழுக்க நிறைய இருக்கைகள், பகலில் நோயாளிகள் வந்து அமரும் இடம். உள்ளே ஒரு அறை அஞ்சனா அமரும் இடம். அது முழுக்க மருந்துகள் வைந்து இருந்த மரபீரோக்களும் ஒரு மேஜை நாற்காலியும், பரிசோதிக்க ஒரு படுக்கையும், கை கழுவும் இடமும். அதை விட சிறிய அறை அவள் தங்கும் இடம். ஒரு படுக்கையும் பீரோவும் நடக்க சிறிது இடமும் அமைந்த அந்த இடத்தை பார்த்தாள். குளிக்க துவாலை எடுத்து நடந்தவளின் மனம் எப்போதும் போல லயிக்காமல் இயங்கிக்கொண்டிருந்தது.

         குளித்து உடைமாற்றியவள் குளிர்சாதன பெட்டியில் இருந்த பிரட் பாக்கெட் எடுத்துக்கொண்டு வீட்டை சாத்திவிட்டு நடந்தாள், காதில் அவள் ஐ - பாட் போட்டுக்கொண்டு. கால் நேரே ஜெட்டியை நோக்கி நடந்தது. படகு துறையை அவர்கள் அப்படிதான் கூப்பிட்டார்கள். ஒரு 3 நிமிடம் நடந்தால் அங்கு போய் சேரலாம். ஜெட்டியில் ஒரு இடத்தில் சிறிய ஒரு ஆறு வந்து கடலோடு கலக்கும். அமாவாசை பௌர்ணமி சமயம் அங்கு தண்ணீர் வந்து மூழ்கிவிடும். மத்த சமயங்களில் அமர ஒரு சிறு திட்டும் சில பாராங்கற்களும் இருக்கும். அங்கு அமர்ந்தால் சாலையில் இருந்து கொஞ்சம் மறைவாய் இருக்கும். எப்போதும் போல அங்கு அமர்ந்து அந்த அழகான கடலை பார்த்தாள். தெளிவான டர்க்வாய்ஸ் நீல கடல், கீழே யாரோ விட்டெறிந்து போய் மணலில் குத்தி நிற்கும் சிகப்பு பீர்பாட்டில்கள், பல வண்ணமீன்களும். கை எப்போதும் போல அவைகளுக்கு பிரட் துண்டுகளை பிய்த்துப் போட்டது.

          அஞ்சனா... 20களின் இறுதியில் இருந்தாள். வடமாநிலப் பெயர் கொண்ட மாநிற மறத்தமிழச்சி. சலசலக்கும் உப்புக்காற்று முடியை பறக்கவிட, மனம் எங்கேயோ பறந்தது. இன்று அவளை பார்க்க வந்த ஒரு படையாட்சி தாத்தா அவளைப் பார்த்து கேட்டது நினைவில். `` நீங்க நம்ம சமூகமா, தாயி``. கூட வந்திருந்த அவர் பேரன் விஜயன், 30களில் இருந்த ஒரு வணிக வியாபாரி, ஒரு நிமிடம் விக்கித்துப் போனான். `` என்ன தாத்தா இது இங்கிதம் இல்லாம? இப்ப கூடவா இது எல்லாம் கேட்பீங்க? வர வர விவஸ்தையே இல்லாம போயிடுச்சு உங்களுக்குன்னு அவரை அதட்டி விட்டு, அஞ்சனாவை பார்த்து ``மன்னிச்சிருங்க, இவர் இப்படி தாங்க`` என்றார். அவள் மெலிதாய் சிரித்துவிட்டு `` பரவாயில்லைங்க விஜய்`` என்று சொல்லி தாத்தாவின் பக்கம் திரும்பினாள். பேரன் அதட்டியதில் சிறிது முகம் சுருங்கியிருந்தாலும் இன்னும் பதில் எதிர்ப்பார்த்து கொண்டு இருந்தது அந்த சுருக்கத்தில் தோய்த்த முகம். கண்ணோடு கண் பார்த்து `` இல்லை தாத்தா, நான் கீழ்சாதி. ஆதி திராவிடர் கூட்டத்தை சேர்ந்தவ`` என்றாள். கண் இடுங்கி நின்ற தாத்தாவிற்கும் புருவம் உயர்ந்து நின்ற பேரனுக்கும் மருந்து தந்து அனுப்பியவள், சிரித்துக்கொண்டாள் அவர்கள் போன பின், அவர்களின் உறைந்த முகபாவம் யோசித்து.

          ஜாதி... கல்லூரி வரை அதை அவள் சிறிதும் உணரவே இல்லை அல்லது அதை உணரும் அளவு நிகழ்ந்த சம்பவங்கள் உணரும் பக்குவம் இல்லை. கலந்து கொண்ட பள்ளியில் படிமங்களில் எழுதுகையில் தெரியவில்லை அதன் அர்த்தம். தாயும் தந்தையும் பிரபல மருத்துவர்கள். கலப்பு திருமணங்கள் நிறைந்த குடும்பம். வீட்டில் மலையாளமும், தெலுங்கும், தமிழும் ஆங்கிலமும் பேசியது பின்வந்த காலங்களில் உதவியது. பணத்திற்கு கொஞ்சமும் தட்டுப்பாடு இல்லாத குழந்தைப்பருவம். ஒரு வேளை தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த நிலை வேறு ஒரு குடும்பத்தில் பிறந்திருந்தால் தெரிந்திருக்குமோ, தெரியவில்லை. காலம் அப்படியே பின்னோக்கி போக மனதில் நினைத்துக்கொண்டாள் அவள் கடந்தவைகளை, வெள்ளை மேகமும் சிவப்பும் மஞ்சளும் ஊதாவும் தங்கமுமான வானம் பார்த்தபடி.

          பள்ளிகாலம் முழுக்க பட்டாம்பூச்சியாய் இருந்தது வாழ்க்கை. எழுதிய பரிட்சையில் யார் முதலில் என்ற சண்டைகளும், இன்று எப்படி விளையாடலாம் என்ற யோசனைகளும், வீட்டிற்கு போனால் என்ன சாப்பிட இருக்கும் என்ற கேள்விகளும் மனதின் விஸ்தாரம் முழுக்க வியாபித்து இருந்தது. அவளுக்கு எப்போதும் அண்ணாவுடன் சண்டை போடுவது பிடிக்கும். அவளுக்கும் அண்ணாவிற்கும் 5 நிமிட வித்தியாசம் தான். இரட்டைக்குழந்தைகள்... வயிற்றில் தொடங்கியே உங்கள் சண்டை தொடங்கிவிட்டது... இன்னும் தொடர்கிறீர்கள் என்றார்கள் அம்மா. ``Survival of the fittest`` போட்டி டிஸ்கவரியில் பார்ப்பது போல வயிற்றில் சாப்பாட்டுக்கும் இடத்திற்கும் தொடங்கி வயிற்றை விட்டு வெளியே வந்தும் ``territorial fight’’ ஆக மாறி போனது. நிறைய நாட்கள் வீட்டில் எல்லோரும் முடியை பிய்த்துக்கொண்டு போகும் அளவுக்கு அடித்துக் கொள்வார்கள். இருவரும் ஒரே வகுப்பு எல்.கே.ஜி தொடங்கி காலேஜ் முடியும்வரை... எல்லாமே இரட்டை செலவு. புத்தகம், சீருடை, டியூஷன், எப்படி எல்லாமே. சண்டை போடும் சமயம் எல்லாம் யோசிப்பாள் `` நாம் மட்டும் தனியாகவே இருந்தால் எத்தனை சுகம்`` என்று. இப்போதெல்லாம் தனியாகவே தான் இருக்கிறாள். ஆயினும் சந்தோஷம், சோகம், ஆசை எல்லாம் தாண்டிய இடத்தில் நிற்கிறாள்.

            பள்ளி முடித்து வீட்டை விட்டு காலடி எடுத்து வைத்தவள் இன்னும் ஒரு இடத்தை அவள் வீடு என்று கூற இயலவில்லை தான். போகும் இடமெங்கும் சில சமயங்களில் வரவேற்கப்படுவதும் சில சமயம் அழையா விருந்தாளியாகவோ தான் தோன்றுகிறது. இவள் இருக்கும் இடங்களும் விடுதி போல தான் தோன்றுகிறது. தேசாந்திரி வாழ்க்கை. ஊருக்கு பேசும் 5 நிமிடங்களில் சொல்லவே முடிவதில்லை இந்த ஒன்றுமில்லாது ஏதோவுடன் கழியும் நாட்களை பற்றி. மனம் ஒரு விஷயமும் அல்லாது எல்லாவற்றையும் தின்று கொண்டே நடந்தது. இருட்ட தொடங்கியது. அவள் அமர்ந்த இடம் இருட்டில் பாதுகாப்பற்றது. சேய்ஷல்ஸ் முழுக்க போதை பொருட்கள் ஏகத்துக்கு கிடைக்கும். காரில் வந்து ஆண்களும் பெண்களும் புகைப்பதும் பாடுவதும் ஆடுவதும் முத்தமிடுவதும் இன்னும் பல விஷயங்களும் அரங்கேறும்.

           அஞ்சனா எழுந்து நடக்க தொடங்கினாள். உயரமானவள், வளர்த்தியானவள் அவள். பாப் மார்லியை நினைவூட்டும் டிரட்லாக் ( Dreadlocks ) ஜடாமுடியோடு இருக்கும் ராஸ்டாப்ரியன் (Rastafaraian) சமூகம் உண்டு அங்கே. வந்த புதிதில் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது அவர்களின் வாழ்க்கை முறை, சக்கொஸ் நடனம், நீச்சல், சமையல், ரேகே ( Reggae ) மற்றும் செகா ( sega ) இசை, கஞ்சா புகை, ராஸ்டா மக்கள், எப்போதும் வந்து போகும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எல்லாமும். அதை விட ஆச்சரியம். பண்ணை வேலைக்காக வந்து சேர்ந்த 4, 5 தலைமுறையாகினும் சேய்ஷல்வா தமிழர்கள் இன்னமும் விடாது கடைப்பிடிக்கும் தமிழ் பழக்கவழக்கங்களும். ஊர்விட்டு ஊர் வந்து இத்தனை காலம் ஆகினும் இன்னும் ஜாதி விட்டு ஜாதி யாரும் திருமணம் செய்யவில்லை. மலபார் துறைமுகம் வழியே இங்கு கொண்டு வரப்பட்டதால் ஆப்ரிக்க சேய்ஷல்வாக்கள் இந்தியர்களை கூப்பிடுவது ``மல்பா`` என்று தான்.

         வீடு நுழையும் இடத்தில் இருந்த ஜீப்பில் இருந்து ஒரு பெரிய ஹலோ கேட்டு திரும்பினாள். வண்டியின் உள்ளே ``ஜிஜே லப்போர்ட்`` (Didier Laporte). இவளுக்கு சிரிப்பு வந்தது. அஞ்சனா ``பான் ஸ்வா ( மாலை வணக்கம் ) `` என்று சொல்லி ஜீப்பை நெருங்கினாள். ஜெனிஸுடைய ஜன்னல்திரை விலகுவது தெரிந்தது. ஜிஜேக்கு சுமார் ஒரு 58 வயது இருக்கும். வழுக்கை தலையும், சத்தமிட்டு சிரிப்பதும் பேசுவதும், நிறைய பணம் இருப்பதால் வரும் ஒரு திமிரும், 6 அடி உயரமும், தொந்தியும், சட்டையில் முதல் நான்கைந்து பொத்தான் திறந்து நெஞ்சில் தெரியும் வெளுத்த முடியும், கழுத்தில் ஒரு சுறாவின் பெரிய கூர்பல் பதித்த தடிமான தங்கசங்கிலியும் தான் அடையாளம். எப்போது பார்த்தாலும் ``சோலி சேவே`` ( அழகான முடி), ``மோ கொத்தான் உ`` ( நான் உன்னை காதலிக்கிறேன்) என்பார். அஞ்சனாவின் தந்தை வழி தாத்தா மணவாளன், ஆஜானுபாகுவான மனிதர். மிலிட்டிரியில் இருந்து பின் இரயில்வேயில் வேலை செய்தவர். ஜிஜே ஒரு 80 சதவிகிதம் தாத்தாவை போலவே இருந்ததால் கடிந்து பேச மனம் வராது. ஆனாலும் குசும்பு பிடித்தவர் ஜிஜே. அவருக்கு ஒரு 3 மனைவியர் இருந்தார்களாம். கடைசி மனைவி விவாகரத்து செய்து சில மாதங்கள் தான் ஆனது. அவரும் ஆன பாடு பட்டார் அவளை வெளியே கூட்டிச்செல்ல. ஒவ்வொரு நாளும் ஒரு காரில் வந்தார். பாக்கெட் முழுக்க பணம் காட்டுவார். கேஸினோவிற்கு கூட்டி போகிறேன் வா... இந்த பணம் முழுக்க நீ எடுத்துக்கொள். இல்லை புதிய உணவகத்திற்கு போகலாம் இப்படி தினமும் ஒரு அழைப்பு இருக்கும். அவர் பேசும்போது தெரியும் ஒரு தெத்துப்பல்லும் அவர் பேசும் தோணியும் அவளுக்கு மறந்து போயிருந்த அவள் தாத்தாவை நினைவுப்படுத்தும். இன்று ஒரு பெரிய கண்ணாடி பாத்திரத்தை நீட்டினார். என்ன அது என்று அவள் கேட்டதிற்கு, கோ கோ டெ மெர் ( co co de mer) என்றார். அது உலகில் இங்கு மட்டுமே இருக்கும் ஒரு வித்தியாசமான தென்னை மரம். முதல் முறை அவள் பார்த்தபோது வியந்து போனாள், பெண் மரங்களில் வரும் தென்னை அச்சு அசல் ஒரு பெண்ணுறுப்பு போலவும், ஆண் மரங்களில் வருவது ஆணுறுப்பு போலவே இருந்ததை பார்த்து. அந்த தேங்காயின் வழுக்கை போட்டு எடுத்து வந்திருந்தார் மனிதர். அவருடைய பங்களாவில் இருந்து இங்கு காரில் வரவே ஒரு அரைமணி பிடிக்கும். இருந்தும் தினம் தவறாது வந்து ஆஜராகிறார். ``வேண்டாம்! , போகிறேன்`` என்று சொல்லி விலக முயல, ``ஒன்றாவது எடுத்துக்கொள்`` என்றார். ஒன்றெடுத்து சுவைத்தாள்... வெயில் காலத்தில் வரும் நுங்கு போலவே இருந்தது. நன்றி சொல்லி போகயத்தனிக்க, ``எப்போது தான் எனக்கு ஒரு பதில் சொல்வாய், என்னோடு வெளியே வருவாய்`` என்றார் ஜிஜே. வெறுமே சிரித்துவிட்டு `` இப்போதைக்கு இல்லை`` என்று சொல்லி வீட்டின் உள்ளே சென்று தாழிட்டாள்.

            மணி 7. வீட்டின் அருகே இருக்கும் கடலின் அலை சத்தமும், பூச்சிகளும் ரீங்காரமும், பறக்கும் வவ்வால்களின் சத்தமும் தவிர ஏதும் கேட்கவில்லை. இருந்த ஒரு ஓட்டை தொலைக்காட்சி பெட்டியில் வருவது வெறும் இரண்டு சானல்கள் தான். காலையில் வரும் ஆங்கில செய்தி தவிர பார்க்க ஒன்றும் இருக்காது. அவளுடைய தினங்கள் முழுக்க இப்படி தான். சிறைச்சாலையில் இருக்கும் மனிதர்கள் எப்படி தான் நாட்களை கழிப்பார்களோ என்று யோசித்தாள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அம்மாவிடம் பேசும்போது போர் அடிக்குது மம்மி என்று சொன்னால், ஏதாவது மருத்துவம் சார்ந்த புத்தகத்தை படிமா, நல்லது என்பார். நல்ல விஷயங்கள் கடைப்பிடிப்பது வெகு கடினம். எப்போதும் போல எதையோ சாப்பிட்டு விட்டு புத்தகத்தை எடுத்து எழுத தொடங்கினாள். அவள் புத்தகம் முழுக்க கிறுக்கல்கள் தான். சில சமயம் பொருள் விளங்கும், பல சமயம் பொருளே இருக்காது.

             அவளுடைய தாத்தா மணவாளன் நன்கு குடிப்பார். ஆனால் சனிக்கிழமைகளில் அவர் நெற்றி தாண்டி உச்சி மண்டைவரை நாமம் வரைந்து பெருமாள் கோவிலுக்கு செல்வார். எப்போதாவது பேசும்போது ஜாதி பற்றி சொல்லுவார். ஒரு காலத்தில் தாத்தாவின் தாத்தா எல்லாம் வயலில் வேலை பார்த்ததும், இறக்கும்வரை சட்டையே போட்டதில்லை என்றும், கோவிலுக்குள் விட்டதே இல்லை என்றும் இன்னும் பல விஷயங்கள். ஒதுக்கப்படுவது என்றால் அஞ்சனாவிற்கு ஒரு மாதிரி புரிந்தது அவளுடைய இந்த சூழ்நிலையில். அவளுடைய முப்பாட்டன் பூட்டிகளின் நிலை பற்றி யோசித்தாள் படுத்தவாறு. சுதந்திரம் இல்லாத வாழ்வு எத்தனை கொடுமையான ஒரு நிகழ்வு.

            தாழ்த்தப்பட்ட ஆண்களின் நிலை ஒரு புறம் இருக்க பெண்களின் நிலையை பற்றி யோசித்தாள். ரவிக்கை மாராப்பு போடகூடாது கீழ்சாதி பெண்கள் என்று பாட்டி சொல்லியிருக்கிறாள். அஞ்சனா படுத்தப்படி யோசித்தாள். அதே நிலை இன்றும் தொடர்ந்திருந்தால் அவள் என்ன செய்துக்கொண்டு இருப்பாள் என்று. மதர்த்த மார்பு மறைக்கும் துணியில்லாது வீதியில் அவள் நடக்க நேர்ந்திருந்தால், உடல் தடவும் பார்வைகளை தவிர்க்க முடியாது நெஞ்சு எறிய வயக்காட்டில் குனிந்து வேலை செய்து, கூலிக்காக காத்திருந்து முதுகு வளைந்து நின்று, கை தடவி தரும் காசை வாங்கிக்கொண்டு போயிருப்பாளோ. மனம் அதிர்ந்தது அவளை மேலாடை இன்றி நிர்வாணமாய் நினைத்து பார்த்தப்போது.

            தாத்தாவினுடைய அப்பா முகுந்த ராமனுஜதாசர். அவர்களுடைய காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக சண்டையிட்டு, பிராமணர்களை எதிர்த்து வீரவைஷ்ணவர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டு, அவரவர்களுக்கு முடிந்த பணம் போட்டு கோயில் கட்டினவராம். இப்போதும் ஆண்டு தவறாது கிராமத்து கோயிலில் இருந்து கும்பமரியாதை வீடு தேடி வரும். ``க்ருஸேட் போர்`` ( crusade war) பற்றி வரலாற்றில் படித்திருக்கிறாள். உலகில் பெரும்போர் எல்லாம் கடவுளின் அடிப்படையில் தானே நடந்து இருக்கிறது. ``சுருட்டு இழுக்கும் ஐய்யணார் சாமியும், சாராயம் குடிக்கும் கருப்பண்ண சாமியும், வாயில் ஆட்டு ஈரல் கடித்துக்கொண்டிருக்கும் ரத்தம் வழிய ஆடு, கோழி, மாடு காவு கேட்கும் பத்ர ருத்ரகாளியும் தாண்டா உங்களுக்கு, சந்தனமும் ஜவ்வாதும் மணக்க, பூச்சரமும் சாமரமும் ஊஞ்சலும் உற்சவமும் கொண்டாடும், பொங்கலும், பாயசமும் படையல் கேட்கும் பெருமாள் எங்களுக்கு என்று பேசிய கூட்டத்திற்கு மத்தியில் புரட்சி தொடங்கி ஒரு கோயிலை கட்டிய அவருடைய புகைப்படம் இன்னும் அஞ்சனாவின் வீட்டு சாமியறையில் இருக்கிறது. உடலில் 16 இடங்களில் நாமம் இட்டு சம்மணம் இட்டு அமர்ந்து இருந்த அவரின் இயற்பெயரை மாற்றி தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயர் தான் முகுந்த ராமனுஜதாசர். அவருக்கு பிறகு எல்லோருக்கும் பெருமாள் சார்ந்த பெயர் தான் வைத்தார்கள். புரட்சிக்காரர் என்றும் கலககாரர் என்றும் கூப்பிட்டார்கள் அவரை என்று சொன்னப்போது அஞ்சனாவிற்கு பெருமையாக தான் இருக்கும். தலைக்குனிந்து நின்ற கூட்டத்தில் எதிர்த்து நின்ற ஒரு மனிதனின் வித்துக்களில் இவளும் என்று. இவளுக்கும் ஜாதகப்பெயர் ``ஸ்ரீ``. ஆனால் அப்பாவிற்கு பிடித்ததால் அஞ்சனா என்று செல்லமாக கூப்பிட தொடங்கி, பள்ளி பதிவேட்டிலும் அதே கொடுக்க, இயற்பெயர் அஞ்சனா ஆயிற்று. ஜாதி பற்றி யோசிக்க, மேலும் மனது அவளுடைய கல்லூரி நாட்களுக்கு கூட்டி சென்றது. அங்கு தான் அவளுக்கு தெரிய வந்தது ஜாதியின் தாக்கம் முதல் முறை.

தொடரும்
யமுனா ராகவன்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com