பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 4, 2010

ரெண்டு கவிதை - முத்துப்பாண்டி

















திறப்பு

திறக்கப்படாத கதவுகளுக்குப் பின்னால்
எதுவும் இருக்கலாம்.
சூரியரேகைகள் கசிந்திறங்கும் அடர்வனம்.
சி.எஸ்.ஜேயின் குரல் சுழல்கிற இசைப்பெட்டி.
நடுநிசிப் பனியில் தாழ்ந்து கிறங்குகிற வயலட் பூக்கள்.
உருகிவழிகிற டாலியின் கடிகாரம்.
லாலாமிட்டாய்க் கடைவாசலில் மினுங்கும்




மாலைநேரச் சிறுவர்களின் பசிபெருத்த கண்கள்.
குழந்தைகளுக்கு பொம்மைகள் தயாரிக்கிற சர்க்கஸ் கோமாளி.
மொட்டைமாடியில் காய்கிற விடுதிப் பெண்களின் உள்ளாடைகள்.
விரதச்சோறு கொத்தும் காக்கைகள்.
சுயமைதுனம் செய்பவனின் குற்றவரி படர்ந்த கண்கள்.
அளிக்கவே இயலாமல் அழுக்கேறிய ஒரு காதல் கடிதம்.
அலைகிற கண்களுடன் பூத்தொடுக்கிற
அசோக்லாட்ஜ் வாசல்பெண்.
வாசவி மேன்சன் 32வது அறைச்சுவரில்
சுருட்டு புகைக்கிற சேகுவேரா.

எதுவுமிருக்கலாம்.

கதவுகளின் இடுக்குவழி கசிகிற
அழைப்பு பொறுக்காமல்
திறந்துபார்க்கும் நீங்கள்
பார்க்கும்பொழுது
எதுவும் இல்லாமலும் இருக்கலாம்.

ஊடரு பருவம்

அதிக வெளிச்சத்தில் வெளிறிய
புகைப்படம் போன்றுள்ளது நேற்றைய கனவு.
இன்றைய வெயிலை எதிர்கொள்வதற்கான
கேள்விகளுடன் விடிகிறது காலைப்பொழுது.

இரண்டிற்குமிடையே நடந்துகொண்டிருப்பது
ஒரு கண்டன ஊர்வலம்
சில பாலியல் வன்முறகள்
அற்புதம் நிகழ்த்தும் பிரார்த்தனைக் கூட்டங்கள்.

                                - முத்துப்பாண்டி





தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com