அறிமுகம்:
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்றவர். சொந்த ஊர் மதுரை. தற்பொழுது சென்னையில் ஒரு விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவரின் கவிதைகள் வருமாறு..கொடுங்கனவில் நடுங்கி
உறங்கும் உன்னுடலை
இழுத்தணைக்கிறேன் இந்த நடுநிசியில்.
பாலையெனச் சுடும்உன் உடல்வெளியில்
கனவின் இரகசியங்களைத் தேடுமென் கைகள்.
வரைபடம் ஏதுமற்று திகைத்து
நிற்கும் என் வழியெங்கும்
கண்மூடிப் பிரார்த்திக்கும்
உன்னுரு பிம்பங்கள்.
தொடத்தொடக் கலைகிறாய் கானல்அலையில்.
சிறுசிப்பியென மூடித் திறக்கும்
உன் இதழ்களில் பதிக்கிறேன்
என் அன்பின் ஈரத்தை.
சொல்கொணரா நேசம்
மழைபொழியும் வனமெங்கும் பூக்க
அழைத்துச் செல்லுமென் கைப்பிடித்து வா.
காட்டுப் பூவென விரியும்
நம் அறையின் காலை.
எங்கிருந்தோ திரண்டுவந்து
கொட்டுவதே நல்ல தியானமெனக்
கொட்டுகிறது மலையருவி.
நீ
நான்
மனநலக் காப்பகத்தின்
அந்தக் குழந்தைகள்
குளிக்கிறோம்.
அருவி ஒருபோதும்
அறிவதில்லை
நமது பேரானந்தத்தையும்,பெருந்துக்கத்தையும்.
- முத்துப்பாண்டி
