பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 5, 2010

நினைவில் கொதிக்கும் பால்யம் - மாரிசெல்வராஜ்

மனதின் அடியில் கிடந்த ஒரு பெரிய பாராங்கல்லை உருட்டிவிட்டதை போலவும் இருக்கிறது. அதே இடத்தில் ஒரு முள் செடியை என் விருப்பபடியே யாரோ நட்டுவிட்டு போனது போலவும் இருக்கிறது. வெகுநாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு போய்விட்டு திரும்பியது.


சிறுவயதில் அம்மணமாய் நின்ற என்னை பார்த்து ஒரு பூச்சாண்டியை போல சுழித்து சுழித்து பயம்காட்டிய தாமிரபரணி தன் இரு கைகளையும் நீட்டி தாரளமாய் என்னை அழைக்கிறது. ஆயிரமாயிரம் சிறகுகள் இருந்தும் எங்கும் பறந்து செல்லாமல் இன்னும் அதே இடத்தில் இருக்கிறது அந்த சின்ன ஆலமரம். நாக்கை துருத்தி பயம் காட்டி விரட்டிய ஆச்சிமுத்தா கோவில் பூவரசம் மரம் தன் மஞ்சள் பூக்களை என் தலையில் கொட்டி சிரிக்கிறது. அவ்வப்போது என் கை செலவுக்கு காசு கொடுத்த அந்த சுடலைமாட சாமி இன்னும் பல சிறுவர்களுக்கு யாருக்கும் தெரியாமல் தன் உண்டியல் காசுகளை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். நான் எவ்வளவோ கெஞ்சியும் என்னை ஏற்றிகொள்ள மறுத்த அந்த பிடிவாதாக்கார ரயில் இன்னும் ஓடிகொண்டுதான் இருக்கிறது. ஆயிரமாயிரம் ரகசியங்களை பதுக்கி வைத்த அந்த தங்கபரும்பின் பெரும் பள்ளங்கள் இன்னும் நிரப்பபடாமல் தான் இருக்கிறது அதன் உள்ளே என் முதல் பீடியின் நாத்தத்தையும் என் முதல் காமத்தின் வீச்சத்தையும் யாராலும் அகற்றப்படாமல் கிடப்பதை அந்த ஒரு சிறு கல் காட்டிவிட்டது எனக்கு.

இவையெல்லாத்தையும் விட அந்த பெரும் பாறாங்கல்லில் என் பால்ய நண்பன் சீனிராஜ்க்காக நான் காத்திருந்தது என் முதல் காதலை விட முதல் காமத்தை விட அதிக சந்தோசம் தருவதாகவே இருந்தது எனக்கு.
சீனிராஜ்  மூக்கு ஒழுகும்போதே தொடங்கிவிட்டது அவனுக்கும் எனக்குமான நட்பு. சீனிராஜ் வேற யாருமில்லை மேட்டுத்தெரு சொத்தக்கையன் லெட்சுமணன் மாமா பையன் தான்.அவனுடைய சிரிப்பு என்னைபோலவே உங்களுக்கும் கட்டாயம் பிடிக்ககூடும் அப்படியொரு சிரிப்பு அவனுடையது. குச்சிக்கம்பு விளையாடும்போது கட்டப்பால் தாத்தா வீட்டின் கூரை ஓட்டை உடைத்தற்காய் நடுத்தெருவில் நாங்கள் முட்டிக்கால் போட்டப்போது நெருக்கமான எங்கள் நட்பு நாங்கள் எங்கள் பால்யத்தில் சிறுநீர் கழித்து வளர்த்த அந்த அழகிய முள் செடியை போல வேகமாகவே வளர்ந்தது.

என் முதல் பீடி அவன் அப்பா லெட்சுமண மாமாவின் பையில் இருந்து அவன் திருடி வந்து கொடுத்த சொக்கலால் பீடிதான். என் முதல் திருட்டு 
அவனுக்காய் நாடார் கடையில் நான் ஏறி விழுந்து திருடிய கடலை மிட்டாய்தான். என் முதல் போதை அவன் நெஞ்சு சிராய்க்க ரத்தம் கசிய ஏறி இறக்கி கொண்டு வந்த ஒரு கலைய பனைமரக் கள் தான். என் முதல் காமம் அவன் என் கை பிடித்து கூட்டிக்கொண்டு காண்பித்த சுகந்தி அக்காவின் இலை மறை குளியல்தான்.

என் முதல் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரைக்குமானதுதான் அவனுக்கும் எனக்குமான காலம். அதற்குள் எவ்வளவு வாழ்க்கையை அவனுடன் நான் வாழ்ந்திருக்கிறேன் என்று நினைக்கவே எனக்கு பிரமிப்பாய் இருக்கிறது.

அவனுக்கு கணக்கு டீச்சர் பத்மாவையும் அவங்களோட பல் வரிசையும் தான் பிடிக்கும் ஆனால் எனக்கு தமிழ் டீச்சர் காளியம்மாளையும் அவங்களோட கை அசைவும் பிடிக்கும். அவனுக்கு கமலை பிடிக்கும் எனக்கு ரஜினியை பிடிக்கும். அவனுக்கு அந்த சின்ன ஆலமரத்தில் விளையாடுவதுதான் பிடிக்கும் எனக்கு ஆச்சிமுத்தா கோவில் பூவரச மரத்தில் விளையாடுவதுதான் பிடிக்கும். இப்படி அவனுக்கும் எனக்கும் நிறைய வேறுபாடு இருந்தும் என்னையும் அவனையும் ஒன்றாகவே இருக்க வைத்தது, அலையவைத்தது, திரியவைத்தது எல்லாமே அந்த ராமலெட்சுமி தான்.

ஆம் ராமலெட்சுமியை எங்கள் இருவருக்குமே பிடிக்கும். அவளும் எங்களுடன் தான் படித்தாள். ஆனால் அதிலும் நாங்கள் வேறுபட்டுத்தான் நின்றோம். ஆம் அவனுக்கு அவளுடைய கழுத்து மச்சம் தான் பிடிக்கும் எனக்கு அவளுடைய நெற்றித் தழும்பு பிடிக்கும். அந்த பெரிய பாறாங்கல்லில் உட்கார்ந்துதான் அத்தனையும் பேசிக்கொள்வோம். அவன் அவளிடம் தண்ணீர் வாங்கி குடித்தை பெருமையாக சொல்வான். நான் அவளிடம் வாங்கி வந்த பென்னையோ பென்சிலையோ காட்டி அவனை வெறுப்பேத்துவேன். நான் அவள் வீட்டில் போய் பால் வாங்கி வந்தாள். அவன் போய் மீன் குழம்புக்கு மோர் வாங்கி வருவான்.

ஒருநாள் அவன் ராமலெட்சுமி வாய்க்காலில் குளித்ததை ஒளிந்திருந்து பார்த்தையும் அவள் அவ்வளவு அழகாய் இருந்ததாகவும் சொன்ன போதுதான் நான் அவளை என் கனவில்  கட்டிப்பிடித்தைதையும் முத்தம் கொடுத்ததையும் சொன்னேன். அதன்பிறகு நாங்கள் ஒரு இரண்டு நாட்களுக்கு ராமலெட்சுமியை பற்றி அவ்வளவாக பேசிகொள்ளவில்லை. மூன்றாவது நாள் அந்த பாறாங்கல்லிற்கு அவன் தான் முதலில் வந்திருந்தான். மிகவும் சந்தோசமாக இருந்தான். வெகுநேர என் கெஞ்சலுக்கு பிறகே அதை எடுத்து அவன் காண்பித்தான். கொடியில் காய்ந்து கொண்டிருந்த ராமலெட்சுமியின் மேல்சட்டை ஒன்றை எடுத்து வந்திருந்தான். அதன் வாசனையை நுகர்ந்த போது கத்திக் கூச்சலிட்டான். நான் எவ்வளவு கெஞ்சியும் அவன் எனக்கு அதை தரவில்லை. வீட்டிற்கு கிளம்பும்போது நான் பேசாமலே இருந்ததால் அதை தந்தான். “இன்னைக்கு ராத்திரி மட்டும் வச்சிருந்துட்டு காலையில என்கிட்டையே தந்திரனும் என்ன” என்று.

அந்த சட்டையை மறுநாள் நான் தொலைத்தற்காய் நாங்கள் இருவரும் கொஞ்ச நேரம் சண்டை போட்டுக்கொண்டது உண்மைதான். அதன்பிறகு ராமலெட்சுமி பெரியமனுஷி ஆன நாளில் அவளுக்கு தண்ணீர் ஊற்றுவதை ஒரு பெரிய வேப்பமரத்தின் உச்சியில் அமர்ந்து நாங்கள் சிரித்தபடியே பார்த்து ரசித்ததுதான் கடைசியாக அவன் முகம் என் நினைவில் இருக்கிறது.

அவன் ஒன்பாதாம் வகுப்பு பெயிலாகி இருக்க கூடாது இல்லை நான் அதிசயமாய் தேர்ச்சி பெற்றிருக்க கூடாது. இப்போது அவன் எப்படி இருப்பான். இன்னும் தன் வாயின் எச்சியால் முட்டை இடுவானா, இன்னும் அந்த பள்ளி சுவரில் தூரமாய் நின்று சிறுநீர் கழிப்பானா, எனக்கு ராமலெட்சுமி மறந்து போனது போலவே அவனுக்கும் மறந்து போயிருக்குமா, என்னை பார்த்ததும் முதலில் கட்டிப்பிடிப்பானா இல்லை தள்ளி நின்று சின்னதாய் சிரிப்பானா, அவனுக்கு ரொம்ப பிடித்த அந்த கருப்பு கலர் கட்டம்போட்ட சட்டையை வைத்திருப்பானா இல்லை தொலைத்திருப்பானா, இப்போதும் அவனுக்கு கனக்கு டீச்சர் பத்மாவின் பல் வரிசை இப்போதும் பிடிக்குமா, என்னை பார்த்தால் எப்படி அழைப்பான் இப்படியெல்லாம் நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே பின்னாடி நின்று கட்டிப்பிடித்தான் என் அதே சீனிராஜ்.

அவனிடம் எதுவும் மாறவில்லை கொஞ்சம் அந்த சின்ன வயிறு தொப்பை போட்டிருந்தது, கையில் ஒரு தங்க மோதிரமும் கழுத்தில் ஒரு தங்க சங்கிலியும் போட்டிருந்தான் அசிங்கமாக..போதாதென்று ஏதோ ஒரு கட்சியின் கரை போட்ட வேஷ்டியையும் கட்டியிருந்தான். ஆனால் இவயெல்லாவற்றையும் அவனுடைய அதே சிரிப்பு மறைத்துவிட்டது எனக்கு.

எதுவும் பேசாமல் என் தோள் மீது அவன் கை போட்டுக்கொண்டான். மறுபடி மறுபடி என் உள்ளங்கையை எடுத்து அவன் நெஞ்சில் வைத்தபடி என்னை பார்த்து சிரித்தான். நேராய் வீட்டுக்குத்தான் அழைத்துகொண்டு போனான் . பல ஆண்டுகளுக்கு பிறகு அவனை நான் பின் தொடர்ந்து செல்வது என் பால்யத்திற்கே திரும்பி போனது போலிருந்தது.இடையில் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு மறுபடியும் கட்டிபிடித்தபடி சொன்னான் “சொக்கலால் பீடி இப்போது ஊரில் விற்பதில்லை” என்று. நாங்கள் முட்டி போட்டு நின்ற அதே மேட்டுத் தெருவில் நாங்கள் தோள் மீது கை போட்டப்படி நடந்து கொண்டிருந்தோம்.

அவன் வீட்டிற்குள் நுழைந்ததும் என்னை அவன் காய்ந்த ஒரு ரோஜாப்பூ மாலையோடு தொங்கிய அவனுடைய அப்பா லெட்சுமண மாமாவின் புகைப்படத்திற்கு கீழே அமர வைத்துவிட்டு உள் நோக்கி கத்தினான்.
“ஏய் இங்க வாடி, இங்க வந்து பாரு யாரு வந்திருக்காங்கன்னு” என்றபோது ஒரு கத்திரி பூ கலர் போட்ட புடவையில் முகமெல்லாம் வியர்வையோடு சமயலறையில் இருந்து வெளியே வந்தாள் ராமலெட்சுமி. ஆம் அதே ராமலெட்சுமிதான். சீனிராஜின் வலது கையை நான் வேகமாக பிடித்து அழுத்த அவள் என்னை பார்த்து சிரித்தபடி சொன்னாள்.

“அண்ணே உலை கொதிச்சுட்டுண இருந்து சாப்பிட்டுட்டு போங்க” என்றபோது அவர்களின் சோத்துப் பானையில் சத்தமிலாமல் கொதித்தது என் பால்யம்.

- மாரிசெல்வராஜ்
.


தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com