பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 5, 2013

இரும்பு


நல்ல இரவு. எங்கள் வீட்டிற்கு வெளியே இருந்த சாக்கடைக்குச் செல்லும் பொந்திலிருந்து , நடுங்கியபடி எட்டிப் பார்க்கிறேன் நான். எனது அப்பாவும், அம்மாவும், நண்பர்களும் கூப்பிடும் தூரத்தில் தான் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் குரல் எழவில்லை. திடீரென ஒரு கரு வெள்ளம். கருத்த, கொழுத்த பெரிய பெரிய பூனைகளின் படை என் மீது பாய்ந்தது. கத்துவதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் என்னை பற்களால் இழுத்து வெளியே போட்டன. அவை அனைத்தும்
ஒரே மாதிரி இருந்தன. ஒரே மாதிரி கண்கள், மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்பூண்டு கணக்காய், நடுவில் மட்டும் ஒரு சிறிய கரிய தீற்றல். ஊசி நகங்களும் கோரப் பற்களும் காவு கொள்ளத் தயாராகின்றன. மரண பயத்தில் பரிதவிப்புடன் அவர்களைப் பார்க்கிறேன். என்னைக் கைவிட்டவர்களுடன் சேர்ந்து நானும் புன்னகைத்தபடி நிற்கிறேன்.

நெடு நாட்களுக்குப் பிறகு வந்தது இந்த கனவு. எழுந்து அமர்ந்தேன். சிறிது நேரம் பிடித்தது, நான் A-block 52ஆம் ரூமில் இருக்கிறேன் என்று உணர. தூக்கம் வராது. தண்ணீர் குடித்தால் தேவலாம். ஆனால் எழுந்து அவ்வளவு தூரம் தனியே நடந்து மெஸ்ஸிற்குச் செல்ல வேண்டும். பயம்.
இவனுக்கு என்ன குறட்டை வேண்டிக் கிடக்கிறது?
மண்டையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட வேண்டும். 

எனக்கு தினேஷை எழுப்பிக் கூற வேண்டும் போல இருந்தது
“எனக்கு பூனைகளை பிடிக்காது”
எனக்கு இந்த உலகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்பிக் கூற வேண்டும் போல இருந்தது
“எனக்கு பூனைகளை பிடிக்காது. I despise them

ஏன்?
தெரியாது. காரணமில்லாமல் வெறுக்கக் கூடாதா?
இல்லை.
அவை அருவருப்பாக இருக்கின்றன.
பொய்.
உண்மை.
----------------
சரி. பொய். எனக்குப் பூனைகளைப் பார்த்தால் ஆந்தக் கிழவனின் ஞாபகம் வந்து தொலைக்கிறது. அவன் ஆளும் மூஞ்சியும் சிரிப்பும்.

தினமும் சரியாக காலை ஏழரைக்கெல்லாம் வந்து எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பான்.
அப்பொழுது எனக்கு 5 அல்லது 6 வயது. அது ஒரு நீளமான காம்பவுண்ட், அதன் கடைசியில் தான் எங்கள் வீடு. வாசலில் இருந்து பார்த்தாலே தெரியும். காலையில் கார்பரேஷன் தண்ணீர் வரும்போது தான் குளித்தாக வேண்டும். காம்பவுண்ட் பாதையில் எங்கள் வீட்டிற்கு வெளியே நின்றுதான் குளிப்பேன். இல்லை நிற்பேன். அம்மா தான் என் மேல் தண்ணீர் கொட்டி, சோப்பு தேய்த்து விடுவார்கள். மோப்பம் பிடித்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டு நிற்பான்.

அவனது முகம் கோணல் வாயுடைய கிழட்டுப் பூனையைப் போல இருக்கும். காதுகள் மட்டும் ஓநாயுடையவை. முள்ளு முள்ளாக மீசை வைத்துக் கொண்டு, நரைத்த தலையுடன் குட்டையாக இருப்பான். வெள்ளை வேட்டியும் சட்டையும் தான் எப்பொழுதும். அருகில் இருந்த காளிமார்க் சோடா கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

குளித்து யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு வெளியே ஸ்கூல் வேனிற்காக எங்கள் பக்கத்து காம்பவுண்ட் படியில் அமர்ந்து கொண்டிருக்கும் போது, என் அருகில் தவறாமல் வந்து அமர்வான்.
அவன் என்னிடம் பேசியதெல்லாம் ஒரே வாக்கியம், சிரித்தது ஒரே மாதிரி சிரிப்பு, பார்த்தது ஒரே மாதிரி பார்வை
“உன் குஞ்சுமணியை எனக்குத் தருவியா?”
நான் பதிலே பேச மாட்டேன்.
ஒரே ஒரு முறை “ என் கிட்ட குஞ்சு மணி கிடையாது” என்றேன் எரிச்சலுடன்.
நான் இதுவரை கேட்டதிலேயே மிக அசிங்கமான ஒரு சிரிப்பை சிரித்தான்.
“குளிக்கறப்ப டிங் டிங்னு ஆடுதுல, அது பேரு என்னது?”
“நான் ஒண்ணும் குளிக்கலை. உள்ள என்னைய மாதிரியே ஒரு பையன் இருக்கான். அப்படியே என்னை மாதிரி. அவன் கிட்ட தான் அது இருக்கு”
திரும்பவும் அசலாக அதே சிரிப்பு.
“லூசு தாத்தா” என்றேன் மகா எரிச்சலுடன்.

அவன் பேசியதில் என்ன அப்படி தப்பாக இருந்துவிட்டது? சத்தியமாகத் தெரியவில்லை. ஆனால் ஏனோ ஒரு எரிச்சல். I feel like shit when I think of him. ஏதோ காய்ந்த சாக்கடையின் வண்டையில் போட்டு புரட்டின மாதிரி.

இனி என்னால் நிறுத்த முடியாது. சொல்லித்தான் ஆக வேண்டும். எனக்கு குடோன்களையும் super heroக்களையும் கூட பிடிக்காது.

அப்பொழுது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் வீடு இருந்த இடம் ஒரு urban desert. நகரின் மிக முக்கியமான மையம். அங்கே எல்லாமே இயங்கிக் கொண்டிருக்கும், கார்கள், பஸ்கள், ஆட்டோக்கள், டூ வீலர்கள், சைக்கிள்கள், ரிக்‌ஷாக்கள், மனிதர்கள். எப்போதாவது, தலைக்கு மேல் கொஞ்சூண்டு தெரியும் வானம் போல, தெரியாமல் விழுந்து விட்டேன் என மன்னிப்பு கேட்டுக் கொண்டே விழும் தூறல் போல, அருகில் அணி வகுத்திருந்த ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளில் இருந்து யாராவது எட்டிப் பார்த்து சிரிப்பார்கள். அதிர்ஷ்டம் இருந்தால், ப்ளாஸ்டிக் ஸ்டம்ப்பையும், பேட்டையும் பாலையும் வைத்துக் கொண்டு வீட்டு காம்பவுண்டுக்குள் தனியாக வேர்ல்ட் கப் ஆடிக் கொண்டிருக்கும் என் மேல் பாவப்பட்டு வந்து இரண்டு ஓவர்கள் விளையாடுவார்கள். என் வயதையொத்த யாரும் சுற்று வட்டாரத்தில் எங்கும் கிடையாது. அந்த ரோட்டில் மொத்தம் இருந்தது பத்து வீடுகள். ஆனால் மூன்னூறு கடைகள் வரிசை கட்டி நின்றன. ஆட்டோமொபைல், டிராக்டர், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல் உதிரி சாமான்கள் விற்கும் கடைகள்.

அன்று சரியான வெயில்.

நடு நிசியில் உறங்கிக் கொண்டிருந்தது அந்த காட்டின் வாயிலில் இருந்த கிராமம். நிலா இல்லாத வானத்தின் கீழ், குதிரைகளுடன் படையெடுத்து வந்த முகமூடிக் கொள்ளையர்கள் ஊரை சூறையாடினர். நகை, பணம், பாத்திரங்கள் என அனைத்தையும் எடுத்து சுருட்டிக் கொண்டு, எதிரில் பட்டவர்களை வெட்டி வீழ்த்தி, ஊரை தீயிட்டுக் கொளுத்தி தப்பித்துச் சென்று கொண்டிருந்தனர்.

இரும்புக்கை மாயாவியான நான் தான் அந்த ஊரின் ஒரே போலீஸ். எதுவுமே அறியாமல் எனது குகையில் தூங்கிக் கொண்டிருந்தேன். யாரோ என்னை உலுக்கி எழுப்பினார்கள், ஊர் கொள்ளை போனது என்று கதறினார்கள்.

வெகுண்டெழுந்த நான், கொடியில் கிடந்த துண்டை எடுத்து முகமூடியாக்கிக் கொண்டு சீறிப் புறப்பட்டேன், கயவர்களை அழிக்க. மலை மேல் ஓடிச்சென்று பார்த்தேன். வெகு தூரத்தில் அவர்களின் தீப்பந்தங்கள் தெரிந்தன. எனது குதிரையை முடுக்கி விட்டு துரத்தினேன்.

இதோ! நெருங்கி விட்டேன்!

என்ன செய்கிறேன் பார்! நான் இருக்கும்போதே இவ்வளவு தைரியமா? முதுகில் இருந்து ஈட்டியை உருவி வீசினேன்.
“அம்மா!” என்ற அலறலுடன் சரிந்தது ஒரு குதிரையும் அதன் சுமையும்.

இன்னும் 50 பேராவது இருப்பார்கள்.
“பாவம் நீங்கள்! என் கையிலா வந்து சிக்க வேண்டும்? ஹா! ஹா! ஹா!”
கழுத்து முறியும் சத்தம். குதிரையின் கால் முறிந்து கத்தும் சத்தம், மரங்கள் உடையும் சத்தம், இடி வெடிக்கும் சத்தம்.

எனது இரும்புக்கை பட்டவுடன் நொறுங்கித் தூள் தூளாகிப் போய்க் கிடந்தது மொத்த படையும்.
அதோ! ஒருவன் பதுங்கிச் செல்கிறான். கோழை!
“நீ கொடுத்து வைத்தவன். என் கையால் சாகப் போகிறாய்!”

மூச்சிழுத்து ஓங்கிய எனது கை, முழு வேகத்துடன் சென்று மெதுவாக land ஆனது ஒரு நிஜ வயிற்றில்.

ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய், எனது முகமூடியை கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டேன்.

ஐய்யோ! விளையாட்டு ஆர்வத்தில் வாசல் வரை கண் மண் தெரியாமல் வந்து விட்டேன்.
யாருடைய வயிறு இது?
சந்திரசேகர். பக்கத்துக் கடையில் வேலை பார்க்கும் அண்ணன். என் கூட சேர்ந்து கிரிக்கெட் விளையாடும், மேட்ச் பார்க்கும் நல்லவர். 16, 17 வயது இருக்கும். லேசான மீசை அழகாக துளிர்த்திருந்தது.

வெறும் டிரவுசரும், அதற்குத் துணையாக அருணாக்கயிறும் மட்டுமே அணிந்திருந்தேன்.

“என்னடா, சட்டை போடாம சுத்திட்டு இருக்க?” என்றபடியே எனது நெஞ்சுக் காம்பை பிடித்து நன்றாக ஸ்க்ரூவை திருகுவது போல திருகி விட்டான். வலி சுர்ரென்று உச்சந்தலை வரை போனது.

“வலிக்குதுண்ணே!” என்று கத்தினேன்.

எங்கள் காம்பவுண்டை ஒட்டியபடி இருந்த ஒரு சிறிய சந்தினுள் இருந்தது அவன் வேலை பார்த்த குடவுன். அங்கே குவியல் குவியலாக இரும்புப் பட்டைகளை (shock absorber) வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார்கள்.

என்னைத் தனது இரும்புக்கரங்களால் தூக்கிக் கொண்டு சென்றான். நான் தாவிக் குதிக்கத் துள்ளினேன். இரும்புப் பிடி. வேகமாக என்னை இரு கைகளிலும் தூக்கி, அவன் உடலோடு அணைத்துக் கொண்டு (நன்றாக ஞாபகம் இருக்கிறது அந்த இரும்பு வியர்வையின் வாசம்) வேகமாகச் சென்று என்னை அந்த குடவுனுக்குள் தூக்கி வீசினான். பட்டைகள் தேய்த்துத் தேய்த்து பிளந்திருந்த தரை என் முதுகை சிராய்த்தது.

சடாரென்று கதவை மூடினான். ஜன்னல்களற்ற அறையின் இருட்டு எங்களை விழுங்கியது. பொதுவாக குடவுன்களில் மின்சார இணைப்பும் இருப்பதில்லை. தீக்கிச்சியை பற்ற வைத்து என் கண்களுக்கருகே கொண்டு வந்தான்.       
“பால் பாக்குறியா பால்!” என்றபடியே ஜிப்பை கழற்றத் தொடங்கினான்.
தீக்குச்சி அணைந்து போனது.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
புது குச்சி.
வெகு வேகமாக பாண்ட்டை கழற்றினான். எனக்கு ஏதோ விபரீதம் என்று புரிய ஆரம்பித்தது. நான் பயந்து கண்களை மூடிக் கொண்டேன்.
மறுபடியும் இருட்டு.
என் மேல் ஏதோ தெளித்தது போல இருந்தது. தொட்டுப் பார்த்தேன், சூடாக, பிசுபிசுபாக இருந்தது.

“சந்திரசேகர்” என்று வெகு தூரத்தில், பல மைல்களுக்கு அப்பால் இருந்து யாரோ கூப்பிட்டார்கள். சில நொடிகளில் கதவு திறந்து ஒரு உருவம் வெளியேறியது. கதவு தாழிடப்பட்டது.

அந்த மூச்சுமுட்டும் இருட்டில், பிசுபிசுத்த நெடியில், இரும்பாலான ஒரு அறையில், புழுவைப் போல கிடந்த எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் நான் வெறுத்தேன், கடவுள்களை, super heroக்களை, இரும்புக் கைகளை.

பல ஆண்டுகள் அங்கேயே கிடந்தேன். கத்த வேண்டும் என்று கூட தோன்றவில்லை. I was lying there as a vegetable. எதிர்க்கத் திராணியற்ற ஒரு செடி. வலுவற்ற ஒரு நோஞ்சான். செத்துப்போன ஒரு statue. தற்காத்துக் கொள்ள லாயக்கற்ற ஒரு invertiberate. A shameless coward.


பல வருடங்கள் கழித்து, ஏதோ புத்தகத்தில் ‘இரும்பு மனிதர்’ என்றிருந்ததை பார்த்தவுடன் எழுதத் தோன்றியது,
“இரும்பின் அர்த்தம் வலிமையல்ல. அதிகாரமும் அத்துமீறலும்.”

இரும்பாலானது இந்த அறை, இந்த ஊர், இவ்வுலகு.

                                                                                                                                                                                                           - முத்துவேல் ஜனகராஜன். 
(காட்சி அறிமுகப்படுத்தும் புதிய எழுத்தாளர் முத்துவேல் ஜனகராஜன். அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் முடித்துள்ள இவர், தற்போது இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்).

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com