பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 27, 2013

ப்ராக்கு



            இருபெரும் கண்மாய்களுக்கு ஊடே ஊரின் ஓரக்காலில் பனைமரங்களைச் சூழ்ந்து நிற்கும் முத்தரசன் அரசு நடுநிலைப்பள்ளி, மதியத்திற்கு பிறகு கரைச்சலெடுத்துக்கொண்டிருந்தது. எட்டாம் வகுப்பின் கடைசி பாடவேளைப்பிரிவு கணக்கு வாத்தியார் உள்ளே வர மாணவர்கள் அவரவருக்கு உரிய இடத்தில் வந்து அமர்ந்து கொண்டனர்.
                                 ‘வார வியாழக்கிழமை நம்ம ஸ்கூல்ல இருந்து  ராமேஸ்வரம் ரெண்டு நாள்  டூர் போறோம், ஏற்கனவே தெரிஞ்சுருக்குமுன்னு  நெனக்கிறேன் .வர்றவுங்க புதன்  கிழமைக்குள்ள எரநூற்வா  குடுத்து பேர்  குடுத்துருங்க .நா ஹெட் மாஸ்டர்  ரூம் வரைக்கும் போயிட்டு வறேன். அதுவரைக்கும் சத்தம்போடாம அமைதியா  இருங்க‘.
             அவர் புறப்பட்ட அடுத்த நொடி வகுப்பறையே  தலைகீழானது போல் ஒரே ஆட்டம் பாட்டமாக இருந்தது.  கட்டிப்போட்டு வைத்திருந்த ஆட்டுக்குட்டியை அவிழ்த்து விட்டாற்போல்    
அத்தனை  பேரும்  எங்கிருந்தோ வந்த வேகத்தில்  ஓடியும்  ஆடியும்  தாளமிட்டும் குதூகலித்தனர் . த்தனை குதூகலத்திற்கு மத்தியில் நான்காவது மேசையில் தலையை தொங்கப்போட்டு புத்தகப்பையை கட்டியணைத்துக் கொண்டிருந்த அழகருக்கு இந்த சுற்றுலா ஒரு தவம். இதற்கு முன்னதாக அவன் நான்கு முறை ஏமாற்றத்தை ஏற்றிருக்கிறான். றாம் வகுப்பில் கொடைக்கானல் சுற்றுலாவிற்கு செல்லமுடியாததால் ஏற்பட்ட மனசஞ்சலத்தின் தொடர்ச்சியாய் இதுவும்  ஆகிவிடுமோ என்ற எண்ணத்தில் அவன் உடலை குறுக்கி  பழைய நினைவில்  மூழ்கியிருந்தான். மணிச்சத்தத்திற்கு பிறகு எழுந்து  வழிநெடுகிலும் குழம்பி சோர்ந்த முகமாய் நடந்தான்.

             'அப்பாட்ட இத எப்புடி சொல்லுறது, கேட்டாலும் இல்லனு தான் சொல்லுவாரு ,அழுது பொலம்பியாச்சும் காச வாங்கிரனும் ' அப்போது தான் அவனுக்குள் உண்டியலின் நினைவு வந்தது.

             அழகரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பள்ளி வாழ்க்கையின் ஆரம்ப காலம் முதல் பள்ளி முடிந்ததும்  நேராய் வீட்டிற்கு செல்பவன், அங்கிருந்து கிளம்பி எங்கேனும் சுற்றித்திரிந்துவிட்டு ஒன்பது மணிக்குள்ளாக வீடு  திரும்பியதில்லை. விடுமுறை நாட்களிலும் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கு யாரையாவது இழுத்துசென்று மாலையில் தான் வீடு திரும்புவான். கல்யாணம் காதுகுத்து சடங்குகளுக்கு முதல் ஆளாய் தானும் வருவதாய் அடம்பிடிப்பான். பெரும்பாலும் விட்டுவிட்டுத்தான் செல்வார்கள். ஒருமுறை மேலப்பூங்குடியில் அம்மா வழிச்சொந்த திருமணத்திற்கு அழைத்துசென்றிருந்தார்கள். பொழுது சாய்ந்ததும் வராதவனை ஊருக்குள் தேடி அலுத்து, கடைசியில் கூட்டப்பனை கேணியில் குளித்துக்கொண்டிருந்ததாக ஊரார் ஒருவர் வந்து விட்டுச்சென்றார். அதற்குப் பிறகு வீட்டின்  கண்டிப்பிற்குள் அவன் ஊர் சுற்றலும் பறிக்கப்பட்டிருந்தது.

      வீட்டிற்குள் நுழைந்ததும் வழக்கமான அம்மாவின் வசைமொழி பாத்திர உருட்டல்களுக்கு மத்தியில் ஓங்கி ஒலித்தது. 'ஊருல கண்டவன் நிண்டவன்டயெல்லாம் காசக்குடுத்துப்புட்டு  மாசக்கணக்குல எல்லாரு குண்டிக்குப்பின்னாடியும்  திரியிரத என்னைக்கி விடப்போறானோ, எத்தன தடவ பட்டாலும் திருந்துன பாட்டக்காணம்அவன் அப்பா இல்லாத சமயத்தில் தான் அவள் வாய் ஓங்கும் அவர் எங்கோ பணம் வாங்கப்போயிருப்பது மட்டும் அழகருக்கு தெளிவாய்ப்புரிந்திருந்தது .

      சுவர்க்கடிகார நொடிமுள்ளின் சத்தம் அதற்கு எதிரே அமர்ந்து நேரத்தை நோட்டமிட்டவனை  தூக்க கிக்கத்திற்கு இழுத்துச்சென்று கொண்டிருந்தது .ஒரு முறை நள்ளிரவில்  அதன் மின்கல குறைபாட்டினால் நொடிமுள் அடங்கியபோது அவன் இரண்டு மணிநேர தூக்கம் கெட்டிருக்கும். அது தூக்கத்தை வரவழைத்துக்கொண்டிருந்தது அங்கிருந்து நகர்ந்து வாயிற் திண்ணையில் அமர்ந்தான்.

      அவன் அப்பாவின் குரல் தார்ச்சாலைக்கு அருகிலிருந்து வந்தது, பச்சை வார்த்தைகளால் யாருடனோ கத்திக்கொண்டிருந்தார், அதன் முடிவில் வேக நடையுடன் வந்தவர்  அவனைக்கடந்து உள்ளே நுழைந்து அவருக்கும் அவன் அம்மாவுக்குமான இரண்டு மணி நேர சண்டைக்கு பின் அடங்கியிருந்தார்.

     காலை எழுந்ததும் மணி ஏழு இருக்கும் தோளில் துண்டை போட்டுக்கொண்டு வயற்காட்டை நோக்கி நடக்கலானான், பிள்ளாந்தலை மோட்டர் டவில்லை, அங்கிருந்து கிடக்கேணிக்கு சென்றான் யாருமின்றி அதன் சுற்றம் சலனமற்று வெறிசோடியது. கேணியின் விளிம்பில் கையூன்றி, அதன் தாழ்வாரத்திலிருந்து கல்லெடுத்து நண்பர்களுக்கு காட்டிய நாளை நினைவு கூர்ந்தான் ,நண்பர்களுக்கு மத்தியில்  அவன் பார்த்த இடங்களைப்பற்றிய அவனது  விவரிப்பு  ஒரு பிடியாய் இழுத்து அதை அனுபவிக்கத்தூண்டும். எல்லாம் அவன் தாத்தா அவனை மீன் பிடிக்க வலை விரிக்க இழுத்துச்சென்ற காலத்தில் அந்த சுற்றுவட்டார கிராமங்களின் இறந்தகாலப்பதிவுகளை சொல்லியதுதான் . நீண்ட காலமாக அவன் விவரிப்புக்குள் கடல் நழுவி இருந்தது. அவன் கடலை கண்டதில்லை. நிறயப்பேர் அவனிடம் கடலைப்பற்றி சொல்லியிருக்கிறார்கள். சிலரிடம் தான் கடலை பார்த்ததில்லை என்று சொல்லும்போது சிரித்திருக்கிறார்கள்.இப்போது அது அவனை சந்திக்க அழைப்புவிடுத்திருக்கிறது. அந்த பரந்த  நீர்ப்பரப்பை காணும் வேட்கை தணியும் நேரத்திற்காய் காத்திருந்தான், ஆனால் நேற்றைய சூழல் அவன் தவத்தை கலைக்கும் இடையூறாகிப்போனதை எண்ணி கண்ணீர் வழிந்து வாயில் கடல் போல் கரித்தது.

      பொழுது சாயக்காத்திருந்தது அலமாரியின் மேலடுக்கில் இருந்த மண் உண்டியலை உடைத்து சில்லரையை எண்ணிக்கொண்டிருந்தான்.
ஒரு பெருமூச்சிற்கு பிறகு வதங்கிய முகம் சற்று தெளிவடைந்திருந்தது, இப்போது அவன் சுற்றுலாவிற்கான பாதி இலக்கு கையிலிருந்தது, அதை தூக்கி பைக்கட்டிற்குள் திணித்துவிட்டு கொல்லை கொட்டகைக்கு அருகிலிருந்த உரலில் அமர்ந்து வானத்தை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். கொட்டகையின் முகவாயில் வெளியேறி பீடிப்புகை இவனைக்கடந்து  மேல் நோக்கி நகர்ந்து ட்டு முகட்டில் கரைந்துகொண்டிருந்தது. மெல்ல எழுந்து உள்ளே போனவன் மனதை திடப்படுத்திக்கொண்டு பேச்சை ஆரம்பித்தான் 'ப்பா பள்ளிக்கொடத்துல டூர் கூட்டிட்டுப்போறாங்க காசு வேணும்' பீடியை நிலத்தில் அழுத்திவிட்டு 'அதெல்லாம் இருக்கப்பட்டவுங்க போவாங்க நம்ம கெடக்குற கெடயில இதெல்லாம் தேவயா?' சற்று நெருங்கி வந்தவன்  'இந்த ஒருவட்டம் போறனே செலவுக்குகூட காசு வேணாம்' என்றான். 'அதெல்லாம் பின்னால எல்லாம் இருக்கப்ப போய்க்கிறலாம்'  'நாலாவுது படிக்கும் போது அஞ்சவுதுல போய்க்கிரலாமுன்னு சொன்ன அஞ்சாவுதுல கேட்டப்ப ஆறாவுதுல போகலாமுன்னு சொன்ன இப்புடியே சொல்லி எதுக்கும் போமுடியாம போச்சு இது எனக்கு கடசி வருசம் இந்தவாட்டி விட்டா இனி எப்ப போக கல்லுக்காலில் சாத்தி வைக்கப்பட்டிருந்த கம்பை எடுத்து 'சொல்ல சொல்ல என்ன வீம்பு பன்னிக்கிட்டு, இப்ப போறியா இல்ல கவட்ட கம்புட்ட ரெண்டு இறுக்கவா?' மேலும் பேச முயற்சிக்காமல் ஒழுகும் கண்ணீரோடு வெளியேறி நிலம் அதிர நடந்தான்.

      அங்கிருந்து சற்று  தூரத்தில் இருந்த  பாழடைந்த வீட்டின் இருளுக்குள்  ஒட்டுமொத்த சுற்றுலாக்களின் ஏமாற்றத்தை எண்ணி அழ ஒடினான். அவன் தேம்பல் அந்த ஆளரவமற்ற பங்காளி வீட்டுத்திண்ணையில் கூன் விழுந்த உடம்புடன்  புகையிலையை உதக்கிக்கொண்டு வாசலுக்கு அருகாமையில் மரக்கட்டிலில் படுத்திருந்த அவன் தாத்தாவின் செவிகளில் விழ அவர் யாரென எழுந்து அவனை கண்டுகொண்டு பக்கத்தில் வரும்படி அழைத்தார்.

     'சண்டையா போட்டுக்கிறாக' 'யாரும் சண்ட போடல நீங்க சாப்புட்டிங்களா, சோறு  எடுத்தாரவா?' 'இங்க வாடா' அவன் கையைப்புடித்து அருகாமையில் அமர்த்துகிறார். 'நொப்பன் அடிச்சானா' 'இல்லதேம்பலை அடக்க முயன்று தோற்று அவன் உடல் குலுங்குகிறது 'அப்பா காசு தரமாட்டேங்கிது அய்யா, எத்தன வருசமா பள்ளிக்கொடத்துல டூர் கூட்டிப்போறாங்க ஒரு வருசமும் போக விடல, இதோட படிப்பு முடியுது மேல படிக்கவும் விடாம அண்ணன்ட போயி கம்பேனில வேல பாக்கசொல்லுது , இதுக்கு மேல இனி எப்ப போவேன். நீண்டகால எதிர்பார்ப்பில் கண்ணீர் ஒழுகும் கெஞ்சல் முகம் அவருக்குள் இரக்கத்தை கொண்டு வந்திருந்தது.  'சரி எம்புட்டு ரூவா வேணும்' 'எரநூற்வா நா சேத்துவச்ச காசு நூற்வா செலவுக்கு இருக்கு' சேரி நெல்லு மூட வித்த காசு அடுத்த வாரம் வரும் அதுல வாங்கிதாரன்டா அழுவாதடா'. 'நாளக்கழிச்சுக்குள்ள காசு கட்ட சொல்லிருக்காங்க அடுத்த வாரமுனா டூரே முடிஞ்சுரும்' இடுப்போரமாய் இருந்த மழைக்காகித சுருளை எடுத்து அதன் உள்ளே ஆறு காகிதங்களுக்கு பின் கவுலு பனையேறி அழகுட்ட வாங்கி சொச்சத்த தாரன்டா’ என்றவாறே ஒரு டீத்தூள் காகிதத்திற்குள் இருந்த பச்சுருளை எடுத்து அவன் கையில் கொடுத்தார்.

     சுற்றுலா செல்வதற்கான பெயர்ப்பட்டியலில் முதல் பெயர் அழகருடையது, அது எட்டாவது பெயராய் இருந்த அவன் பெயரின் முன்னால் இருந்த '' என்னும் ஆங்கில சேர்வெழுத்தால் வெறுபட்டிருந்தது . அழகர் யார் தான் அழைப்பார்கள் அவனை அந்தப்பெயரில் ஊர் முழுக்க "ப்ராக்கு" என்றால் தான் தெரியும் அவன் வகுப்பாசிரியரே அவனை அப்படிதான் அழைப்பார்.

    செவ்வாய் அன்று மதியமே விடுப்பு  விட்டிருந்தார்கள் .சுற்றுலாவிற்கு பிறகு தான் அரையாண்டு விடுப்பை அறிவித்திருந்தார்கள்.

    கடல் சார்ந்த தேடல்களுக்காய் சேதுபதி டெய்லர் கடையை நோக்கி நடந்தான். அந்த டெய்லர் குடும்பத்தகராறில் ராமேசுவரத்தை விட்டு கீரணடியில் தஞ்சமடைந்து இரண்டு ஆண்டுகளாகிறது, கடந்த தீபாவளிக்கு முதல் நாள் தான் சேதுபதியை அழகருக்கு தெரியும். அன்றைய தினம் இரவு ஒன்பது மணிக்கு காதுகுத்து செய்முறைக்கு வந்த அவன் அப்பாவின் சட்டைத்துணியை கொண்டு வந்து தைத்து தரச்சொல்லி அடம்பிடித்தான் ‘காலையில தீவாவளிய வச்சுக்கிட்டு இப்ப கொண்டாந்து தந்தா எப்புடிடா தப்பேன் ஒரு சட்ட தக்கெனும் பன்னெண்டு சட்டைக்கி பித்தான் வக்கெனும் நாளக்கழிச்சு எடுத்தாடா‘ ‘ அண்ணே கலையில கோடித்துணி போடனுமுன்னு அம்மாட்ட சண்ட போட்டு வாங்கியாறேன் சங்கட்டபடாம தச்சுத்தாணே நா வேனா பித்தான தக்கிறே..’ பித்தான் தைக்கும் போது அழகர் அவன் தாத்தாவிடம் வெளுச்சிமீன் வலை பின்ன கற்றுக்கொண்டதாக ஆரம்பித்ததிலிருந்து  தொடங்கிய பேச்சு அதன் பின் சேதுபதியின் ஊர்க்கதையை தாங்கி இரண்டு மாதங்களுக்கு மேலாய் ஓடியது . இயற்கை மீதான ரசனைகளைப்பற்றிய விவாதத்தில் ஒரு மானசீக உரையாடல் இருவர்க்குள்ளாக இருந்தது .அவன் விடுமுறை நாட்களின்பொழுது  கேள்விப்படாத பறவைகள், விலங்குகள்,மலை,காடுகளைப்பற்றிய கற்பனை விவாதத்திலேயே இருட்டிவிடும். பரீட்சை சமயம் வந்ததால் ஒரு மாதம் சேதுபதியைப் பார்க்க முடியாமலிருந்தது, முடியாதது இல்லை கணக்கு வாத்தியார் மீது பயம் இரண்டு முறை கணிதத்தில் மதிப்பெண் குறைந்தமைக்கு வெளுப்பட்டிருக்கிறான்.

    டெய்லர் இல்லை சுற்றும் பார்த்துவிட்டு எதிர் வீட்டுக்கு நகர்ந்தான். 'அழகரு என்னப்பா ஆளயே காணமே, சேதுவதி செவசங்கை போயிருக்கான் மூனறக்காருக்கு வந்துருவான்' இடப்புறம் நகர்ந்து தலையை உயர்த்தி கடிகாரத்தை பார்த்தான் இன்னும் பத்து நிமிடம்தான், கடைத்திண்ணையில் அமர்ந்து சிரித்தலும் அடக்குதலுமாய் அவன் எண்ணம் முழுவதும் சுற்றுலா பித்தத்தில் லயித்திருந்தது. மலைக்காகித சரசரப்புக்கு பின்னால் சேதுபதியின் குரல் கேட்டது. 'ப்ராக்கு கணக்கு பருச்ச ஒழுங்கா எழுதுனியாடாதலையை திருப்பிக்கொண்டு கால்களை குறுக்குகிறான் 'அப்போ இந்தவாட்டியும் ..' அதெல்லாம் ஒன்னுமில்ல நான் டூர் போறேன் எங்க தெரியுமா?'

   'டூரா ஒன்னய களத்து பொடப்புக்கு இழுத்து போயி கெளப்பியாரவே பெரும்பாடாப்போச்சு, வெளியூர சுத்திக்காட்டனுமுன்னா ஒராளு கயித்தகட்டியில இழுத்துப்போகனும்' கடை திறக்கப்படுகிறது. 'ஒன்ட்ட எத்தன வாட்டி சொல்லிருக்கேன் கடலப்பாக்கனுமுன்னு, ராமேசுவரம் கூட்டிப்போறாங்க'
'ராமேசுவரமா நா செத்தண்டா ஒனக்கு என்ன சொல்லியும் மாளாதே ,அடுத்த பஸ்சுக்கு வரலாமுன்னு  இருந்தேன் .. நேரமுடா. 'கடைச்சரக்குகளை எடுத்து வைத்துவிட்டு, மெசினில் அமர்ந்து ராமேசுவரத்தை விவரிக்க பாம்பன் பாலம், படகுத்துறை, கோவில் தீர்த்தம், கடல் சங்கு வர மின்விளக்கு எரியத்துவங்கியது தனுஷ்கோடி வந்ததும் கோணம் அங்கிருந்து சில மைல் தூரம் இருந்த   இலங்கையை நோக்கி நகர்ந்தது.

   எல்லாம் முடிந்து அவன் வீட்டை சென்றடைய மணி பத்தாகி இருந்தது, செருப்பை கழட்டியதும் நேராய் அடுப்படிக்குள் நுழைந்து கால் வயிற்றோடு சோற்றைவைத்து விட்டு படுக்கைக்கு வந்தான். காலை ஏழு மணிக்கு புறப்பாடு ஆறு மணிக்கே வந்து விடச்சொல்லியிருந்தார்கள். தலையணையை கட்டிக்கொண்டு திசைகளை மாற்றியும் கோணங்களை மாற்றியும் உருண்டும் பிண்டும் தூக்கம் வரப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்தவுடன் விளக்கை போட்டான்.
   மணி மூன்றிருக்கும் கொல்லையில் தண்ணீர் விழும் சத்தத்தில் விழிப்புத்தட்டி எழுந்த அவன் அம்மா, அவன் படுத்திருந்த திசையை நோட்டமிட்டு மெல்ல வந்த சிரிப்பை அடக்கி அடுப்பு பற்றவைக்க கிளம்பினாள். குளித்துவிட்டு உள்ளே நுழைந்தவன் அவசரமாய்  ஆடை அணிந்து தயாராய் ஒதுக்கப்பட்டிருந்த பொதியை தூக்கி தோளுக்கு கொடுத்தான். 'ஏண்டா சாமத்துலயா டூரு ஏத்திப்போறாங்க, இந்தா இந்த வரக்காப்பிய குடிச்சுட்டு போடா கண்ணுல தூக்கவெறிச்சியா இருக்கு' விடைத்த மூக்கோடு  குவலையை பிடுங்கி கொதியோடு உள்ளே இறக்கினான் நாக்கு பொத்து வாயில் குழைத்து சற்று  கொப்பளித்து உள்ளே இறக்கிய அடுத்த கணம் 'யாரு கேட்டா இப்ப காப்பி இந்தா நீயே குடி என கிளம்ப ஆயத்தமானவனை அவன் அம்மா தடுத்து ஒரு தூக்கில் புளிச்சோற்றை கட்டி பைக்குள் திணித்து அனுப்பி வைத்தாள்.
   இருளடர்ந்த நிசப்தத்திற்கு பின்னால் பள்ளியின் கொடிமரத்திண்டில் அமர்ந்து கொண்டு அதன் முகப்பை பார்த்தவண்ணம் இருந்தான். தூரத்தில் பேருந்தின்  உருமல் சத்தம் காதை எட்டிவிட்டது. முத்தரசன் உட்கோட்டைக்குள் ஆறு மணிக்குத்தான் அரசுப்பேருந்தின் வருகை இருக்கும் அது சுற்றுலா பேருந்தின் வருகையாகத்தான் இருக்க வெண்டும், லாரி சத்தத்தையும் பேருந்தின் சத்தத்தையும் வேறுபடுத்தி அது பேருந்தின் றுமல் தான் என்பதை ஊகித்திருந்தான். இருபெரு நகரங்களுக்கு உள்ள இடைவெளியில் கிழக்கும் மேற்குமான பாதையில் அதன் வருகை எந்த நகரத்திலிருந்து என்பதை தீர்மானிக்க முடியாமல் அதை தீர்மானிக்கும் முனைப்பிலிருந்தான்.
   மிதியடிகளின் உராய்வுகளோடு, தன்னை நெருங்கி வந்த கூட்டத்தின் கொத்து உரைடயாடல்களோடு அவனும் இணைந்திருந்தான். ஒரு சிலர் அவனுடய முன்கூட்டிய வருகையை கிண்டலடித்துக்கொண்டிருந்தார்கள் . சுற்றுலா பேருந்து பள்ளிக்கு முன்னால்  வலைவெடுத்து நிற்கையில் இருக்கைக்கு இடம்பிடிக்க போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள் . சேதுபதியிடம் கேட்டறிந்தபடி அழகர் இடப்புற ஜன்னலை ஒட்டி இடம் பிடித்து அமர்ந்திருந்தான் .

   சுற்றுலா செல்பவர்களுக்கான பெயர் கணக்காசிரியரால் சரிபார்க்கப்பட்டு வண்டி புப்படத்தயரானது. வண்டிக்குள்லிருந்து வந்த ஐந்து  நிமிட கூச்சல்களுக்கு பிறகு பேருந்து ஊரின் எல்லையிலிருந்த முக்குப்பிள்ளையார்  கோவிலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டது.  பூஜையை  முடித்து தேங்காய் உடைத்து  புறப்படும் தருவாயில் சேதுபதி ஒடிவந்து உள்ளே நுழைந்தார்ர் . ' சார் அழகரோட தாத்தா இறந்துட்டார் அவன கூட்டிப்போகணும் '

   அழகருக்கு மூச்சடைத்திருந்தது. உடைமைகளை தூக்கிக்கொண்டு வேகத்தால் வாரந்த செருப்பையும் சுற்றுலாவையும் உதறி எறிந்துவிட்டு இளைப்புக்கு  ஊடே அவன் தாத்தா தெம்புடன் நடமாடிய காலத்தின் பதிவோட்டங்களை அலையவிட்டு ஓடினான். கிழக்கு முகமாய் சாய்வு நாற்காலியில் சாத்தப்பட்டிருந்த தாத்தாவை கட்டிக்கொண்டு அழுதான். சீமைக்கருவைகளின் இலைகளும் களிமண் புழுதிசேர்ந்த வேட்டியும்  வியர்வையோடு கலந்த அவர் மேனி மணம் நுகர்சிக்குள் அடங்காமல் எங்கோ போய்விட்டிருந்தது. காலம் போன காலத்துல சும்மா ஒரு நெக்குல கெடந்தாத்தானே போடுற வெயிலுக்கு நடயா நடந்து கவுலுக்கு
போயாந்து நொடக்குன மனுசன் ப்ச்… சோறே எடுக்கல, அவந்தான் நாலு நாக்களிச்சு
காச கொண்டாந்து தாரமுன்னு  சொல்லிட்டுதான போனான். வெனயா சொல்லியும் கேக்காம போயி சீவனும் போச்சு’ மேற்காரிய மும்முரங்களுக்கு மத்தியில் அவன் அப்பாவின் குரல் அவனை சுவற்றோரமாய் மீளாப் பிரமைக்குள் தள்ளியது.

கொல்லிக்குப்பின் சோற்றைப் பார்த்தலே அருவருத்து ஒடினான். அழுதுகொண்டே ஆறுதல் படுத்திய அம்மா ஊட்டிவிடும் சோற்றையும் துப்பிவிட்டு அவன் தாத்தாவின் கட்டிலுக்கருகே முடங்கிக்கிடந்தான். நாளடைவில் புகையிலை வாங்க அடிக்கடி கடைவீதி சென்று வரும் வழக்கத்தையும், வீட்டுச்சுற்றத்திலிருந்து எப்போதும் கேட்கும் இருமல் சத்தத்தையும் தேடும் முனைப்போடு புதிய சுற்றத்திற்கு  பழக்கப்பட்டுக்கொண்டிருந்தான்.

   விடுமுறைக்குப்பின் , மாணவர்கள் மத்தியில் நான்கு நாட்களாக சுற்றுலா புராணம் ஓடிக்கொண்டிருந்தது. அழகர் யாருடனும் பேசுவதில்லை யாரேனும்
பேச வந்தாலும் காது கொடுத்தும் கேட்பதில்லை. அந்த வார இறுதியில் மானாமதுரை ரயில் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டவன்  சொந்தங்களுக்குள் சிலர்    'ஊமை கொட்டான்', என கேலி செய்து சிரித்துக்கொண்டிருந்ததையும்  பொருட்படுத்தாமல் இரயில் பெட்டிக்குள் அமர்ந்து  ஜன்னல் வெளியை வெறித்துக்கொண்டிருந்தான்இரயிலின் இயக்கத்திற்க்கு பிறகு அவன் சித்தப்பா ரயில் டிக்கெட்டுகளை பத்திரப்படுத்தச்சொல்லி அவன் சட்டைப்பைக்குள் திணித்து விட்டு அவனை ஒட்டி அமர்ந்திருந்தார் .

     அவன் கண்விழிக்கையில் பனை மட்டையில் தட்டிவேயப்பட்டு சுற்றுக்கட்டியிருந்த மணற்திட்டுக்கள் அடர்ந்த பகுதியில்   இரயில்  சென்று கொண்டிருந்ததது. சற்று நேரத்தில் சேதுபதியின் ஞாபகம் வர சட்டைப்பைக்குளிருந்து டிக்கெட்டை எடுத்துப்பார்த்துவிட்டு நரம்புப்பைக்குள் துணியால் சுருட்டப்படிருந்த அஸ்திப்பானையை தாண்டி கதவருகே ஓடி கம்பிகளை பற்றிக்கொண்டு  காட்சி லயிப்பில் உடலை முன்னுக்கு உந்தினான். இரயில் பாம்பன் பாலத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.

                                                                               - செல்வக்குமார் பிச்சை.

(சிவகங்கை மாவட்டத்தின் பெரியகோட்டை கிராமம் மற்றும் திருப்பூரில் வளர்ந்த இவர் கோயமுத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் பயோ டெக்னாலஜி பயின்றுள்ளார். தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இது காட்சியில் வெளிவரும் இவரின் முதல் சிறுகதை).

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com