அய்யப்பன்தாங்கல் பணிமனை தகரக்கூரையின் வழிவந்தடையும் சூரிய
வெப்பத்தின் சூடும், வியர்வையின் எரிச்சலும் காலை மணி ஏழு முப்பதென்று தெளிவாய் சொன்னது.
நான், எனக்கு அடுத்து எண்.166, அதற்கு அடுத்து எண்.17m, அதற்கும் அடுத்து எண்.37g. எனக்கான பேருந்து எண்.11h. இன்னும் வரவில்லை. இதில் 166 தவிர மற்ற இரண்டும் பச்சை போர்டுகள். 166 டீலக்ஸ் பேருந்து. நீங்கள் தினசரி பேருந்தில் பயணம் செய்பவராக இருந்தால் இந்த டீலக்ஸ், பச்சை, வெள்ளை போர்டுகளின் வேறுபாடுகளை அறிந்திருக்கலாம். இவை பயணச் சுமையையோ, வேகத்தையோ எந்தக் காலத்திலும் வேறுபடுத்திக் காட்டியது கிடையாது. இவை கட்டணங்களை வெவ்வேறு வழிகளில் உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டவை. இது தவிர ஏசி பேருந்தும் உண்டு. அதில் நான் ஏறியதே கிடையாது என்பதால் அதைப் பற்றி
சொல்லத் தேவையில்லை. நான் பணிபுரியும் ஏரியாவின் அம்மன் கோவில் நிறுத்தத்தை
எல்லா பேருந்துகளும் 40 நிமிடங்களில்தான் கடக்கும். ஏன் சில சமயங்களில் வெள்ளை போர்டே டீலக்ஸை முந்திச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். சென்னையின் டிராஃபிக் அப்படி. எந்த பேருந்தும் எதை வேண்டுமானாலும் இங்கு முந்தலாம். ஒரு இடத்திற்கு சரியாகச் செல்ல ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி நேரத்தை கூடுதலாக செலவிட வேண்டும். ஒருநாளின் கால்பகுதியினை பேருந்துப் பயணமும், இரைச்சலும், மாசுதூசுமே எடுத்துக் கொண்டுவிடும். அம்மன் கோவில் நிறுத்தம் இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கலாம். அதற்கு ரூபாய் 13,9,6 முறையே டீலக்ஸ், பச்சை, வெள்ளை போர்டு பேருந்துகளில் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. நான் இப்போது வெள்ளை போர்டு 11h பேருந்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். ஏனென்றால் என் கையில் வெறும் 6 ரூபாய் மட்டுமே உள்ளது.
எல்லா பேருந்துகளும் 40 நிமிடங்களில்தான் கடக்கும். ஏன் சில சமயங்களில் வெள்ளை போர்டே டீலக்ஸை முந்திச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். சென்னையின் டிராஃபிக் அப்படி. எந்த பேருந்தும் எதை வேண்டுமானாலும் இங்கு முந்தலாம். ஒரு இடத்திற்கு சரியாகச் செல்ல ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே கிளம்பி நேரத்தை கூடுதலாக செலவிட வேண்டும். ஒருநாளின் கால்பகுதியினை பேருந்துப் பயணமும், இரைச்சலும், மாசுதூசுமே எடுத்துக் கொண்டுவிடும். அம்மன் கோவில் நிறுத்தம் இங்கிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கலாம். அதற்கு ரூபாய் 13,9,6 முறையே டீலக்ஸ், பச்சை, வெள்ளை போர்டு பேருந்துகளில் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன. நான் இப்போது வெள்ளை போர்டு 11h பேருந்திற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். ஏனென்றால் என் கையில் வெறும் 6 ரூபாய் மட்டுமே உள்ளது.
நான் ஒரு தனியார் செல்போன் கம்பெனியில் கணக்கர். மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம். அம்மா, அப்பா, தங்கையை உள்ளடக்கிய என் குடும்பம் சேலத்தில் உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, அங்கு இரண்டாயிரத்திற்கு குறைந்து வேலையின்றி மூன்றாண்டுகள் முன் இங்கு வந்து ஆறு கம்பெனிகள் மாறி நான்காயிரத்திலிருந்து இப்பொழுதுதான் எட்டாயிரத்திற்கு உயர்ந்து வந்துள்ளேன். வீட்டிற்கு மாதம் நான்காயிரம் அனுப்பி ரூம் வாடகை மற்றும் சென்ற மாத கடன் போக எனக்கு செலவிற்கென்று கையில் இரண்டாயிரம் இருக்கும். மாதாமாதம் நான்காம் தேதி சம்பளம் கைக்கு வரும். அந்த நான்காம் தேதியிலிருந்து இருபத்தினான்காம் தேதி வரை எவ்வளவு கட்டுப்படுத்தி செலவு செய்தாலும் மீதி பத்து நாட்களையும் பணமின்றிதான் ஓட்ட முடியும். இந்த சென்னை நகரத்தில் குடும்பத்தைப் பிரிந்து, காதலைப் பிரிந்து வாழ்க்கைப் பிழைப்போட்ட வந்திருக்கும் பலரின் நிலைமையும் இதுதான். அவர்களால் டாஸ்மாக்கை வெறுத்து ஒதுக்கிவிடவும் முடியாது. சிகரெட்டை புறந்தள்ளிவிடவும் முடியாது. இரண்டிலும் அகப்படாமல் செல்போன் சிக்கலில்
அல்லல்படுபவர்களையும் பார்த்திருக்கிறேன். அவ்வாறு பணமின்றி நகர்ந்துகொண்டிருந்த ஒரு கொடுமையான நாள்தான் இன்று. ஏதோ ஒரு மாதத்தின் முதல் நாள். இன்னும் இரண்டு நாட்களைக் கடத்த வேண்டும். பணம் இல்லாமலும், சிகரெட் இல்லாமலும்.
மணி எட்டு. முதல் 11h இப்பொழுதுதான் வருகிறது. நினைத்தது போலவே டீலக்ஸ். கையில் அதிக இருப்பு வைத்திருக்கும் பலரும் ஏறி அமர்ந்தார்கள். என்னைப் போலவே எனக்கு அருகில் மூவர் நின்றுகொண்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் அம்மாக்களையோ, தங்கைகளையோ பைக்கில் வந்து இறக்கிவிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி பல்சர்களும், ஹோண்டாக்களும் என்னைக் கடந்து போயின. எனக்கு பைக்குகளையே பிடிப்பதில்லை. பைக் மீது உண்டான மோகம் எப்போதோ உருமாறி எப்போதோ அழிந்தும் போனது. அப்படி என்னைக் கடந்து சென்ற பைக் ஒரு காரை முறைத்துவிட்டுச் சென்றது. பைக் வைத்திருப்பவனுக்கு காரின்மீது கோபம். பாதசாரிகளுக்கு பைக்கின்மீது கோபம்.
மணி இப்போது எட்டு முப்பது. அடுத்ததாக ஒரு பச்சை போர்டு வருகிறது. இதுவும் என்னைக் கடந்துதான் போக வேண்டும். ஏனென்றால் இதிலும் ஏற எனக்கு மூன்று ரூபாய் அதிகம் வேண்டும். ஆக இதிலும் முடியாது. ஆனால் நான் ஒன்பது முப்பதிற்கெல்லாம் கம்பெனியை அடைந்துவிட வேண்டியது அவசியம். நான் அங்கு பத்து நிமிடம் தாமதித்தால் கூட இவ்வாறெல்லாம் திட்டுவார்கள். ‘என்ன பாஸ் இப்போலாம் லெவன்க்கு முன்னாடி உங்கள பாக்கவே முடியுறதுல’, ’ஆஃபீஸ் டைமிங் ட்வெல்வ்னு மாத்தீட்டாங்களா?’, ’மார்னிங் ஏதும் ஒரு கம்பெனில ஷிஃப்ட் பாத்துட்டு வரீங்களா’ என்றபடியாக. இப்படியாக பல்வேறு சூழல்களில் பல்வேறு
காலங்களில் சிர்த்துக்கொண்டே இவற்றையெல்லாம் சமாளிப்பேன். வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக குறுக்கிட்டுகூட பேச முடியாத சூழல் எனக்கு. ஆகவே இன்னும் ஒரு அரைமணி நேரத்திற்குள்ளாகவாவது ஏறிவிட வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளேன். திடீரென ஏதோ ஊதா சுடிதார் ஒன்று என்னைக் கடக்கிறது.
இவளை 11h-ல் பலமுறை பார்த்திருக்கிறேன். என்னைப் பலமுறை பார்த்திருக்கிறாள். நான் இவளின்
பின்புறம் நின்று கொண்டு அவளின் தலைக்கேசத்தையும் அதில் அமர்ந்திருக்கும் க்ளிப்பையும்
எனது காதலியினுடையதாக நினைத்துக்கொண்டு பார்த்ததுண்டு. ஏனோ அவை என் கல்லூரிக் காதலை
நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும். அவளும் நான் அவளின் பின்னழகைத்தான் ரசிக்கிறேன்
என பலமுறை என்முன்னால் வந்து நிற்பாள். நான்
அவளிடம் எதை ரசித்தேன் என்று இன்றுவரை அவளுக்கு தெரிந்ததில்லை. என்னைப் பார்க்காமலேயே
ஆட்டோவில் சென்று ஏறிவிட்டாள். இருநூறுக்கோ முந்நூறுக்கோ ஆட்டோ ஆவிச்சி நிறுத்தத்ததை
நோக்கி கிளம்பிவிட்டது.
இப்போது ஒரு டீலக்ஸ் 11h வந்து பச்சை போர்டை முட்ட, அது ஓட்டுநர், நடத்துநர் ஏறியவுடன் நகரத்துவங்குகிறது. மூன்று ரூபாய் இல்லாததால் பச்சைபோர்டு என்னை விட்டுச் செல்கிறது. மூன்று ரூபாய் கிடைப்பது ஒன்றும் எளிய காரியமில்லை. ஏனென்றால் எங்கள் ரூமில் தங்கியிருக்கும் ஆறுவரது நிலைமையும் ஏறக்குறைய இதுதான். அதில் இரண்டு உதவி இயக்குநர்கள் வேறு. அவர்களிடம் வேண்டுமானால் சில்லறைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனாலும் அவர்களே எனக்கு எவ்வளவு நாள்தான் பிச்சைபோடுவார்கள். இதுபோக நேற்று, அதற்கு முந்தைய நாள் என அவர்களிடம்தான் சில்லறைகள் பறித்துவிட்டு பேருந்து ஏறினேன். போவதற்கு மட்டும்தான் பணம் தேவை. வரும்வழி பற்றி யோசிப்பதில்லை. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். எப்படியிருந்தலும் ரூமிற்கு வந்துதானே ஆகவேண்டும். இப்படி அன்றைய பொழுதை மட்டுமே எண்ணிப் பிழைப்பு ஓட்டுபவர்கள்தான் சென்னைவாசிகள். நாங்கள்.
டீலக்ஸ் பேருந்துகளுக்கும் ஏழ்மை, வறுமையெல்லாம் உண்டு. மாத இறுதிகளில் இருவர், மூவரை மட்டும் வைத்துக் கொண்டெல்லாம் சில வேளைகளில் பேருந்து பணிமனையிலிருந்து புறப்படும். அப்போது வெள்ளைப் போர்டுகள் திருவிழாக் கூட்டம்போல காட்சியளிக்கும். நானும் என் நண்பர்கள் பலரும் அப்படி மாதயிறுதிகளில் கும்பலாக அதில் கலந்துகொள்வதுண்டு. நாங்கள் பலருமாக அய்யப்பன்தாங்கலில் ரூம் வாடகை எடுத்ததற்கு குறைந்த வாடகை தவிர ஒரு முக்கியமான காரணம் உண்டு. அய்யப்பன்தாங்கலில் பணிமனை உண்டு. இங்கிருந்து புறப்படும் பேருந்துகளில் உட்கார்ந்து கொண்டே செல்லலாம். பைக் வைத்திராத நாங்கள் யோசித்து முடிவெடுத்த முக்கியமான அறிவாளித்தனம் இது. ஆனால் நினைத்தபடி எப்பொழுதும் அமைந்ததில்லை. மாத இறுதி நாட்களில் தொங்கிக்கொண்டுதான் செல்வதுண்டு. பணம் உள்ள வேளைகளில் டீலக்ஸ் பேருந்தில் சென்றாலும், அய்யப்பன்தாங்கலுக்கு அடுத்ததான இராமச்சந்திரா மருத்துவமனை நிறுத்தத்தில் வயது முதிர்ந்த பாட்டிகளோ கர்ப்பமான பெண்களோ எழுந்திருக்குமாறு கூறி எழுந்திருப்பதே வழக்கமாக போய்விடும். அது ஏன் அவர்கள் மகளிர் பகுதியில் பெண்களிடம் இருக்கை கேட்காமல் இளைய வயதுள்ள ஆண்களிடம் கேட்கிறார்கள் என்று புரியவில்லை.
பத்தே நிமிடத்தில் டீலக்ஸும் புறப்பட்டு விட்டது. இப்போது 11h இல்லாத பணிமனை. எட்டு பேருந்துகளை உள்ளடக்கியும் அது பேருந்துகளே இல்லாத சத்திரமாகத்தான் காட்சியளிக்கின்றது. வெள்ளைப் போர்டை தேடித் தேடி கண்களும் சோர்ந்துவிட்டன. பேருந்து ஒலிகள் கேளாமல் காது அடைமௌனத்தை தாங்கிக்கொண்டிருந்தது. கால் மாற்றி மாற்றி நின்று கால்களும் சூகையேறிவிட்டிருந்தன. ஆட்சி மாறிய பிறகு என்னதான் சிமெண்ட் தளம் போட்டு தகர கொட்டகை போடப்பட்டாலும் சென்னையின் மிக ஏழ்மையான பேருந்துப் பணிமனை இதுதான். கட்சிக் கொடிகளும், சுவரொட்டிகளும், ஆண்மை பலம் பெற்று விளங்க மற்றும் மாதம் இருபதாயிரம்வரை சம்பாதிக்க போன்ற நோட்டீஸ்களே சுவர்களை அலங்கரிக்கும். அவையெல்லாம் எப்போதும் என்னைப் பார்த்து ஏளனப்படுத்திக் கொண்டேயிருக்கும்.
மணி இப்போது ஒன்பது. இதுதான் என் கடைசிப் பேருந்திற்கான நேரம். நேற்றைய தாமத வசையாடல்களுக்குப் பிறகு இன்றும்
அதைவிட அதிகம்தான் நடக்கும். எவ்வளவு நாள்தான் தாமதமாகவும் செல்வது.
அனைவரின் முன் கூனிக்குறுகி நிற்க மேலும் விருப்பமில்லை. அதற்கு ஒருநாள் தொகை 250ஐ இழந்தாலும் பரவாயில்லை. வீட்டிற்கே திரும்பிவிடலாம் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்.
நினைத்ததுபோலவே இம்மாத 250க்கு முடிவு கட்ட பச்சைப் போர்டே வந்து நின்றது. பேருந்து அதிகபட்சமாக பத்து நிமிடங்கள் நிற்கலாம். அதற்குள் பேருந்தில் ஏறிவிட வேண்டும். தேவை மூன்று ரூபாய். மூன்று ஒற்றை ரூபாய் நாணயங்களோ அல்லது ஒரு இரண்டு ரூபாய் மற்றும் ஒரு ரூபாய் நாணயமோதான். சில்லறை ஒலிகள் காதைக் கிழிக்கின்றன. பாதைகளில் அங்குமிங்கும் சில்லறைகள் உருளாதா என கண்கள் அலைந்துகொண்டிருந்தன.
பணிமனைக்கு வெளிக்கடைகள்,
பெட்டிக்கடை, டீக்கடை, பேக்கரி, ரீச்சார்ஜ் கடை, பழக்கடை, தள்ளுவண்டி சாப்பாட்டுக்கடை இங்கெல்லாம் இல்லாத சில்லறைகளா. நடத்துநர்கள் ரூபாய்களை சில்லறைகளாகவும்,
சில்லறைகளை ரூபாய்களாகவும் மாற்றிக்கொண்டுதான் இருந்தனர். மூன்று ரூபாய் கேட்டால் தர மாட்டார்களா. அது பிச்சை என்று ஆகிவிடுமா? பிச்சை வாங்கிவிடுவதும் அவ்வளவு சுலபமா? அதற்கு என்று சில தோற்றங்கள் அல்லவா தேவைப்படுகின்றன. எப்படி கம்பெனி உத்தியோகத்திற்கு முழுக்கை சட்டை இன் செய்து, ஷு அணிந்து செல்லவேண்டுமோ. அதைப் போலவே பிச்சை எடுப்பதற்கும் கிழிந்த அழுக்கு ஆடை, குரூரமான முகமெல்லாம் தேவைப்படுகின்றன. இதோ போலீஸ் கெடுபிடியால் உள்ளே வராமல் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர் இருவர். அதில் ஐம்பது வயதுமிக்க அந்த முதியவர் எனக்கு மிகவும் பரிச்சயம். காலை ஏழு மணிக்கெல்லாம் தனது பணியைத் துவங்கிவிடுவார். அவரின் இலக்கு எழுபது ரூபாய் சேர்க்க வேண்டும். அவர் அதைச் சேர்க்கவும் பத்து மணிக்கு டாஸ்மாக் திறக்கவும் சரியாக இருக்கும். மதியம் இரவு என்று பலவேளைகளில் அவர் மண்ணை ஆசிர்வதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதேபோலத்தான் அந்த நாற்பது வயது மிக்க பெண்மணியும். கிழிந்த ஜாக்கெட், கிழிந்த சேலை, சிக்கல் கொண்ட தலைமுடி எனப் பார்த்தாலே பதற்றம் கொண்டுவரும் முகபாவம். ஆனால் அவளின் இலக்கு நான்கு மணிவரை மட்டுமே. வானம் இருட்டியவுடன் மல்லிகைப்பூ மணத்துடன் பணிமனைக்கு அருகில் இருக்கும் ட்ரான்ஸ்ஃபாரம் கீழ் நின்று கஸ்டமர்களைப் பிடிக்க ஆரம்பித்துவிடுவாள். ஒரு நாளைக்கு இருவர் மூவரைக் கூட அட்டண்ட் செய்துவிடுவாள். அருகில் இருக்கும் கெங்கையம்மன் கோவில் மைய சன்னிதிக்கு பின்புறம் இருக்கும் இருட்டு சந்தில் நூறு, ஐம்பதிற்கெல்லாம் நிர்வாணமாக நிற்கும்படியாகவே புணரப்பட்டுக் கொண்டிருப்பாள். அவசர அவசரமாகவே எல்லாம் நடக்கும். என்னதான் ஆட்டோக்காரர்கள் பலமுறை அவளிடம் சென்றிருந்தாலும் பகல் பொழுதுகளில் அவளைத் தீண்டத் தகாதவளாகச் சீண்டுவதில்லை. அந்த இருவரிடம் கேட்டால்கூட மூன்று ரூபாய்
கிடைக்கலாம். ஆனால் அவர்களுக்கு என்னைத் தெரியாது. அதுவும் பிச்சையெடுப்பவர்களிடம்
எப்படி பிச்சை கேட்பது?
மேலும் பத்து நிமிடங்கள் சென்றன. இருக்கைகள்
நிறப்பப்பட்ட பேருந்தாக அந்த பச்சைப் போர்டு நிற்கின்றது. எந்தப்பக்கத்திலிருந்து ஓட்டுநர்
நடத்துநர் வருவார்கள் என்று தெரியவில்லை. தூரத்தில் கருப்பு வெள்ளையிலிருந்து நிறம்
மாறி இருவர் வந்துகொண்டிருக்கின்றனர். ஊதா யூனிஃபார்முடன் தோளில் துண்டுமாக ஒருவரும்,
கையில் டிக்கட் பையுடன் ஒருவரும். எனக்குப்பின்
11h பச்சை போர்டு உள்ளது. அவர்களது மெதுநடை என்னை நோக்கித்தான் இருக்கின்றது என்பதை
கிரகிக்க முடியவில்லை. காட்சிகள் ஏனோ மறைபடுகின்றன. இருவரும் என்னைத் தாண்டி பின்புறம்
சென்றார்கள். பேருந்தில்தான் ஏறினார்களா எனத் திரும்பிப் பார்க்கக்கூட மனதில் தைரியமில்லை.
அப்படியே பேருந்தின் அடியில் படுத்து அலறிவிடலாமா என்று தோன்றியது.
சற்றே நேரத்தில் பேருந்து ஹார்ன்
காதைக் கிழிக்கிறது. இரைச்சலின் தாக்கம் அதிகமாகி காதைப் பொத்திக் கொள்ள தோன்றிய எனக்கு.
ஏனோ விலக பயமாயிருந்தது. ஓட்டுநரிடமிருந்து நான் பலரிடமிருந்தும் வாங்கிய சாவுகிராக்கி
என்ற பழைய க்ளிஷே வார்த்தை. யாரோ சிலர் என்னைத் திட்டித்தீராமல் நகர்த்தினர். தலையை
நிமிர எனக்கு பல நொடிகள் தேவைப்பட்டன. ஓட்டுநர் என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தார்.
பேருந்தில் பலரும் என்னை விநோதமாகவும், ஏளனமாகவும், கோபமாகவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
என்னிடம் விலையுயர்ந்த ஷூ உள்ளது. ஏழாயிரம் ரூபாய் கைபேசி உள்ளது. எனக்கென்று ஊரில் ஒரு குடும்பம் உள்ளது, வீடு உள்ளது, இங்கு ரூம் உள்ளது. ஆனால் நம்புவீர்களா பேருந்தில் பயணப்பட என்னிடம் மூன்று ரூபாய் பணம் இல்லை. எல்லாவற்றையும் எனக்கு கொடுத்த இந்தச்
சமூகம் மூன்று ரூபாய் கொடுக்க இயலாமல் என்முன் மண்டியிட்டு அப்போது நின்றது. என்னைப் போன்ற பல இளைஞர்கள் அங்கே நின்று
கொண்டிருந்தனர், பலர் முன்னோக்கி எங்கோ சென்று கொண்டிருந்தனர். நானும் நகர ஆரம்பித்தேன். டீக்கடைநாயர் குவளையிலிருந்து கிளாஸிற்கு மாற்றிய டீ சில்லறைகளாக விழுந்து கொண்டிருந்தது. பூக்கடை பாட்டி மல்லிப்பூக்களுக்கு பதிலாக
சில்லறைகளை நூற்கண்டில் வைத்து கட்டிக் கொண்டிருந்தாள். மெர்ஸி பேக்கரியில் சில்லறைகளுக்கு
க்ரீம் தடவி யாரோ ஒருவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வேப்பமர புற்றுக் கோவிலில் சில்லறைகள்
நிரம்பிய உண்டியல் மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது
நான் பணிமனையின் குறுக்குச் சந்தின் முனையை எட்டிவிட்டிருந்தேன். பேருந்து புறப்பட்டு தூரத்தில் ஒரு புள்ளியாக நகன்று கொண்டிருந்தது.
- சூரிய பிரதமன்.


