பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

June 17, 2011

அற்றவைகளால் நிரம்பியவள் 25 - யமுனா ராகவன்


முனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் "அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர் கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும்.



பகுதி -25

ழக்கம் போல ஓடத்தொடங்கிய சில வாரங்களுக்கு பிறகு, புயல் வர போவதாக அறிவித்திருந்தார்கள் ப்ராலினில். அதனால் பாதுகாப்புக்காக பஸ், படகு, விமான போக்குவரத்து எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தது நான்கு நாட்களுக்கு. ப்ராலினில் இருந்த அரசு மருத்துவமனை தவிர வேறு இடங்கள் எல்லாம் மூடச்சொல்லி அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெகு அருகில் இருந்ததால், காலை முதல் இரவு வரை இடைவிடாது கனத்த மழை பொழிந்தபடி இருந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லக்கூட முடியாது முடங்கி கிடந்த அஞ்சனாவிற்கு வெறுத்து போனது.
      
 வீட்டில் இருந்த புத்தகங்கள் எல்லாம் வாசித்தாகி விட்டது. இருந்த படங்கள் எல்லாம் பார்த்தாகி விட்டது. Internet connection அந்த மழையில் தொலைந்து போயிருக்க, சுத்தமாக வெளியுலகத்தோடு இருந்த தொடர்பு அறுந்து போயிருந்தது. ஒரு நாள் போவதற்குள் யுகம் போல தோன்றியது அஞ்சனாவிற்கு. அடுத்து என்ன செய்வது என்று தெரியாது இருந்தவளுக்கு, ஜெஃப் அலைப்பேசியில் அழைத்த போது அமிர்தமாக தோன்றியது. தொடக்கத்தில் அவன் குரல் எப்போதும் கேட்கும் இறுக்கத்தோடு ஒலித்தது. உணர்ச்சி குறைவான அவன் குரலில் பேச பேச சிரிப்பு லேசாக இழையோடியது. என்ன செய்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்டதற்கு, அஞ்சனா தன் ஜன்னலில் இருந்த சிறிய சிலந்தி வலையில் எத்தனை கோடுகள் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருப்பதாக சொன்னதும், சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினான். சரியாக 20 நிமிடத்தில் தயாராக இருக்க சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தான் ஜெஃப்.
        சிறுவயதில் மழைக்காலம் தொடங்கியவுடன் பாட்டி, வீட்டில் இருந்த Hurricane விளக்குகளை தயாராக கண்ணாடி குடுவையை சுத்தமாக துடைத்து, புது திரி போட்டு, கீழே இருந்த குடுவையில் எண்ணெய் விட்டு வரிசையாக படிக்கட்டின் ஓரம் வைத்து இருப்பார்கள். மழை தூறல் போட்டதும், கரண்ட் கட்டாக போகுது எல்லா விளக்குகளையும் எடுத்து வாங்க என்று சொல்வதற்கு காத்திருப்பார்கள் அஞ்சனாவும் அண்ணா தம்பியும். வீட்டின் முன்கதவும் பின்கதவும் ஒரே கோட்டில் அமைந்திருப்பதால், அழகான காற்று வீசி செல்லும் மழைக்கால இரவுகளில் தளும்பாது நிற்கும் கண்ணாடிக்குள் இருந்த சுடரையும், அசைந்தாடும் மெழுகின் ஒளிக்காக காத்திருப்பாள் அவள். சுவற்றில் விழும் நிழலில் நாயும், முயலும் விரல்களால் செய்தது நினைத்துக்கொண்டாள்.
        மழையில் வெளியே போவதற்கு தோதாக சாதாரண முழங்கால் அளவு pant, t-shirt போட்டு கொண்டு காத்திருந்தாள் அஞ்சனா. மதியம் ஆகியிருந்தாலும், வானம் முழுக்க யானை நிறம் பூசி இருந்தது. ஐந்தாவது வரை படித்த Bon secours Primary schoolல் பணி புரிந்த எல்லா மிஸ்ஸும் Anglo-Indians. அவர்கள் போட்டு வரும் frock தொடங்கி, அவர்கள் பேசிக்கொள்ளும் மொழி வரை அஞ்சனாவிற்கு ஆச்சரியமாக இருக்கும். மூன்றாவது படிக்கும் போது, மழை விடாது பெய்ததை Agnes Miss, பக்கத்து வகுப்பு Maggie Miss பக்கம் திரும்பி, ``Oh! It’s raining cats and dogs’’ என்று சொன்னதை கேட்டு, வானை எட்டி பார்த்து, பூனையும் நாயும் எப்போது மேலிருந்து விழும் என்று பயந்து நின்றது யோசித்து சிரித்துக்கொண்டாள் அஞ்சனா.
        வெளியே வண்டி வந்து நிற்கும் சப்தம் கேட்டு, கதவை பூட்டிவிட்டு வெளியே வந்து பார்க்க, பெரிய பச்சை நிற ஜீப்பில் இருந்து எட்டி பார்த்து சிரித்தான் ஜெஃப். இவளும் சிரித்துக்கொண்டு வந்து வண்டியில் ஏறினாள். வண்டியை திருப்பி மெதுவாக ஓட்டியவன், ‘’எவ்வளவு`` என்றான். புரியாது நிமிர்ந்து பார்த்தவளுக்கு, எத்தனை கோடுகள் இருந்தது சிலந்தி வலையில் என்று கேட்க, இவளும் சிரித்து, ’’one too many’’ என்று சொன்னாள். வண்டியை மெதுவாக Anse boudin வரை உருட்டியபடி சொன்னான், `` you should always drive in higher gear, but at a slower pace, in this kind of weather ‘’ என்று. கண்ணாடியின் வழியே ரோட்டை பார்ப்பதே கடினமாக இருந்தது. அடித்த காற்றில் வண்டியே ஆடுவது போல் இருந்தது. கடலை பார்த்தால் போல் இருந்த மலை முகட்டில் பத்திரமாக நிறுத்தியவன், `` அங்கு பார், அஞ்சனா! `` என்றான். அவர்கள் கார் நிறுத்திய இடத்தில் இருந்து கீழே பார்த்தால், இரண்டு மைல் தூரம் கடற்கரை  தெரிந்தது. இயற்கையின் சீற்றம் எத்தனை அழகானது, ஆபத்தானது என்று மந்திரம் போட்டது போல பார்த்து கொண்டே இருந்தாள் அஞ்சனா. மூர்க்கமான காற்றின் திசைக்கேற்ப மரங்களின் அசைவு ஒருமித்து மாறுவது ஒரு பக்கமும், இரண்டு மாடியளவு அலைகள் நொடிக்கொன்றாய் வருவதும் போவதும் ஒரு பக்கமும், வானம் வெடித்து எல்லா நீர்த்துளியும் மொத்தமாக கொட்டுவது ஒரு புறமும் பார்க்க, எங்கோ ஒரு புள்ளியில் தொடங்கி வானில் இருந்து நிலம் வரை கோலம் போட்ட மின்னலும், வானம் கருப்பு, நீலம், லேசான சிகப்பென நிறங்கள் மாறுவது ஒரு புறமும் இருக்க, கண்ணிற்கு தெரியாத யாரோ நடுவே நின்று symphony இசையை orchestrate செய்வது போல, இயற்கையை பாட ஆட வைப்பது போல தோன்றியது அவளுக்கு. Mesmerising sight to watch! இருவரும் ஒன்றுமே பேசாது பார்த்து கொண்டே இருந்தார்கள். எவ்வளவு நேரம் ஆனது என்ற கணக்கை மறந்து போய், சுற்றி சுற்றி பார்த்தப்படி இருக்க, அஞ்சனாவிற்கு திடீரென ஒரு கேள்வி எழும்பியது. ஜெஃப்பிடம் கேட்டாள், இந்த சீற்றத்தில், கடலின் அடியில் எப்படி இருக்கும் என்று. கடலின் உள்ளே என்று இழுத்தவன், `` இதை பார்க்கும் போது, கண்முன் விரிந்து இருக்கும் கடலும் புயலும், எனக்கு உன்னை போல தோன்றுகிறது. ஆனால் கடலின் அடியில் இப்போது என்னை போல தான் இருக்கும், அமைதியாக`` என்று சொல்லி சிரித்தான்.
        இரண்டு மணி நேரம் போயிருக்கும் போது, அங்கிருந்து கிளம்பினார்கள். ஜெஃப் எங்கு போகலாம் என்று கேட்க, அஞ்சனா வீட்டிற்கு என்று சொன்னாள். வரும் வழியில் பிரெஞ்ச் மக்களால் கட்டப்பட்ட சிறிய மடாலயம் பழைய கருங்கற்கள், பெயிண்ட் அடிக்காத சுவர்கள் தாங்கி, பாசி படிந்து, மழையில் பார்க்க வெகு அழகாக இருந்தது. இப்படி பார்த்துக்கொண்டே வண்டியை செலுத்தியவன், ``என் வீட்டிற்கு வருகிறாயா! சமைக்கலாம்!’’ என்றான். அஞ்சனா யார் இருக்கிறார்கள் உன் வீட்டில் என்று கேட்டாள். அவன் ’’யாரும் இல்லை, நான் மட்டும் தான்’’ என்று சொல்ல, சிறிது நேரம் யோசித்தவள், சரியென்று சொன்னாள். ஜெஃப் வீடு மக்கள் அதிகம் புழங்கும் இடத்தில் இல்லாது, வாலே டே மே காட்டிற்கு அருகே இருந்தது. Main roadல் இருந்து சிறிது தூரம் காட்டிற்குள் கார் ஓட்டின பின், அவன் வீடு சிறிய பள்ளதாக்கில் அமைந்தது போல இருந்தது. சமமில்லா தரையை சீர்ப்படுத்தி கார் போகும் வழியமைத்து இருக்க, வீட்டை சுற்றி fence அடித்து, மெயின் ரோட்டில் இருந்து இறங்கி சிறிது தூரம் வளைந்து சென்று, வீட்டின் முன்பகுதியில் இடது மூலையில் இருந்த ஷெட்டில் கார் நிறுத்தினான். அங்கு ஏற்கனவே மூன்று கார்கள் நின்றுக் கொண்டிருக்க, அதற்கு asbestos கூரை வேய்ந்து, சிமெண்ட் தரை வைத்து garage போல இருந்தது.
        மேட்டில் இருந்து இறங்கி வந்ததில், அவர்கள் வந்த சாலையே தெரியவில்லை. தூரத்தில் வண்டி போகும் சத்தம் மட்டும் கேட்டது. காட்டின் ஒரு பகுதி என்பதால், சுற்றி பெரிய மரங்கள், பூச்செடிகள், புல்வெளியென விரிந்திருக்க, கார் வந்த பாதையை தவிர ஏனைய இடங்கள் மேடும் பள்ளமுமாக இருக்க, பக்கத்திலேயே ஓடையின் சலசலப்பு கேட்டுக்கொண்டே இருந்தது. அழகான வேலைப்பாடு நிறைந்த பெரிய முன்கதவை திறந்து உள்ளே சென்றார்கள் வீட்டின் உள்ளே செல்ல, செருப்பு கழட்டிவிடும் இடத்தில் பெரிய மேஜையும் சுற்றி அமர நாற்காலிகளும் இருந்தது. அஞ்சனா செறுப்பை அகற்றிவிட்டு அங்கேயே அமர போனாள். ஜெஃப் உள்ளே வர சொல்லி கூப்பிட, சிறு குறுகுறுப்புடன், வீட்டின் உள்ளே சென்றாள். இன்னொரு கதவை தாண்டி உள்ளே செல்ல, பெரிய ஹாலில் நிறைய சோஃபாக்களும், Bean Bagம் இருந்தது. வெள்ளை சுவர் மூன்று பக்கமும், மீதமிருந்த சுவற்றில் இளம்சிகப்பு நிற பெயிண்ட் அடித்திருந்தது பார்க்க அழகாக இருந்தது. அந்த அறைக்குள் இருந்த நான்கைந்து கண்ணாடி ஜன்னல்கள் அழகான லேஸ் திரைச்சீலைகள் தாங்கி இருந்தது. அங்கும் இங்குமாய் இரைந்தாற் போல கிடப்பினும், எல்லா பொருட்களும் வெகு அழகாக பொறுந்தியது. சிகப்பு சுவற்றில் African tribal masks, Tikki மாட்டப்பட்டிருக்க, தரையில் கனத்த கார்பெட் இருந்தது. அந்த அறை முடியும் இடத்தில் இருந்த ஆறு படிக்கட்டுகள் மேலே ஏறி செல்ல, 54 இஞ்ச் அகல sony தொலைக்காட்டி பெட்டி, satellite dish, surround system எல்லாம் வைத்து பார்க்க hitech ஆக தென்பட்டது. அங்கும் பெரிய சோஃபா இருக்க, அஞ்சனா அதில் அமர, அதற்குள் புதைவது போல மிருதுவாக இருந்தது. அந்த அறையின் முடிவில் மேலும் சில படிக்கட்டுகள் தாண்டி சென்றதும் மேல்மாடியில் அவன் படுக்கையறையும், en suite bathroom, அதை ஒட்டிய வராண்டாவும் இருந்தது. அங்கு நின்று பார்த்தால், அவன் வீட்டை ஒட்டி சென்ற ஓடை தெளிவாக தெரிந்தது. அங்கேயே கயிற்று ஊஞ்சல் (Hammock) கட்டியிருந்தான். அங்கிருந்து மீண்டும் இறங்கி கீழே வர, சமையல் அறையும் இன்னுமொரு படுக்கையறையும் இருந்தது. எல்லா இடமும் பளிச்சென இருந்தது. சிறிய பொருளானாலும், கலை நயமிக்கதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. அஞ்சனா ஜெஃப்பிடம் அவன் வீடு வெகு அழகாக இருப்பதாக சொன்னப்போது, லேசான பெருமிதம் அவன் முகத்தில் ஓடியதை பார்த்தாள்.
        ஜெஃப் சிறிது நேரத்தில் வருவதாய் சொல்லிவிட்டு உள்ளே செல்ல, மாடியை சுற்றி நடந்தாள் அஞ்சனா. மழை கீற்று போல பெய்துக்கொண்டு இருக்க, கீழே தெளிவான ஓடை, கூழாங்கல், பாசியோடு சலசலத்தபடி ஓடியது. அங்கே இருந்த கண்ணாடி அலமாரியில் இருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக பார்த்தாள். பெரும்பாலும் உலக பிரசித்து பெற்றவர்களின் சுயசரிதைகள் தான் இருந்தது. அவற்றை புரட்டியவளை கீழே இருந்து கூப்பிட்டதும், படிக்கட்டுகள் தாண்டி மீண்டும் கீழே இறங்கி போனதும், சமையலறையில் இருந்து நல்ல வாசம் கிளம்ப, அங்கு நடந்தாள் அஞ்சனா. அரைமணி நேரத்தில் இருந்த பொருட்களை வைத்து ஏதோ ஒன்றை சமைக்க, பசியில் இருந்தவளுக்கு அமிர்தம் போல தோன்றியது. பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்ததும், ஜெஃப் டிவி இருந்த அறைக்கு கூட்டி சென்று, படம் ஏதாவது போடவா? என்று கேட்க, அஞ்சனா வேண்டாம் என்று சொன்னாள்.
        மாடிக்கு சென்று அங்கிருந்த hammockல் ஜெஃப் சாய்ந்து கொள்ள, அங்கேயே இருந்த பிரம்பு கூடை ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள். பெண்கள் இசைக்குழுவான Escala பாடல்கள் தொடங்கிவிட்டு, கண்களை மூடி கேட்டுக்கொண்டிருந்தார்கள் இருவரும். வயலின் இசை ஆசை, காதல், சோகம், காமம், பிரிவு என எல்லா உணர்ச்சியும் கொட்டி உயிரை சுண்டிவிட்டு கொண்டிருந்தது. மழையின் ஈரம், செடி கொடிகளின் பச்சை வாசம், குளிர்ச்சியோடு இழையோடும் தனிமை, அஞ்சனா கேட்டு கொண்டிருந்த இசை எல்லாம் ஏனோ மனதை கேரளாவிற்கு இழுத்து போனது. யோசனையா இல்லை வெறுமையா இல்லை கவலையா என்று தெரியாது இருந்த முகத்தை பார்த்து, ஜெஃப் கேட்டான், `` Already started dreaming of your boyfriend, is it? என்று. கண் திறந்து பார்த்தவள், தலையாட்டி முறுவலித்தாள்.
        சட்டென தோன்றியதால் அவனிடம் அஞ்சனா, `` நீ எப்போதாவது காதலித்திருக்கிறாயா, ஜெஃப்? என்று கேட்டாள். ஜெஃப் அவளை ஆழப்பார்த்துவிட்டு, ம்ம் என்று சொல்லி, அதற்கு மேல் ஒன்றும் சொல்லாது நிறுத்தினான். அவளை பார்த்து, `` நீ ?`` என்று கேட்க, அஞ்சனா சற்று நேரம் பொறுத்து ‘’ I think I was Almost in love in a few occasions, if that makes any sense to you ‘’ என்று சொன்னாள். அதற்கு அவன் புருவம் உயர, `` Interesting. ஆட்சேபனை இல்லாவிட்டால் சொல்லலாம் `` என்றான். அஞ்சனா மெல்ல சோம்பல் முறித்தப்படி`` It takes a minute to have a crush, an hour to like someone, a day to fall in love and a lifetime to forget all these ‘’ என்று தொடர்ந்தாள்.
        இது வரை எத்தனை காதலை தாண்டி நடந்திருக்கிறாள், என்று உரக்க யோசிக்கலானாள் அஞ்சனா. பள்ளிக்கு தன் பின்னோடு சைக்கிளில் சுற்றிய பெயர் தெரியாத அவன் நினைவிற்கு வந்து போனான். ஒன்பதாவது படிக்கும் போதும், எப்போதும் அவளை வம்பு இழுத்துக்கொண்டிருந்த நாதன், ஒரு சாயந்திரம் அவளிடம் வந்து பிடித்திருக்கிறது என்றதும், திருமணம் செய்தால் அவளை தான் செய்யப்போவதாய் சொன்னதும், எப்போது அவள் தன்னை தாண்டி நடந்தாலும் அப்போது பிரபலமாக இருந்த பாடலில் வரும் கதாநாயகன் போல பாடியடி பின்னால் நடந்தது நினைவிற்கு வந்தது. அதன்பின் ஈர்ப்பு, கவர்ச்சி இப்படி பட்ட பல வஸ்துக்களை தாண்டி நடந்தவளுக்கு, அங்கொன்றும் இங்கொன்றுமாக மைல்கற்கள் போன்று அமைந்த நினைவுகளை, அந்த விசித்திர நேரத்தில், ஊர் ஒட்டு மொத்தமாய் கூடி இதயமே அற்றவன் என்று சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவனிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள் அஞ்சனா.
        கண்முன் மீண்டும் மரத்தடியில் படுத்து புத்தகத்தை படித்துக்கொண்டோ, அல்லது அதன் மேல் அமரும் வண்டின் இறக்கை நிறத்தில் லயித்து போகும் ஈஸ்வர் வந்து போனதையும், கனவில் நீல நிற இரும்பு வலைக்கம்பி வழியே, தன் உதட்டோர மச்சத்துக்கு கொடுத்து போன முத்தத்தையும் பற்றி சொன்னவள், சிறிது நேரம் மௌனமானாள். மனது அங்கிருந்து நகர்ந்து, அவள் கல்லூரி வளாகத்தில் இருந்த ஷாஸ்திரி ஹாலில் வந்து நின்றது. கல்லூரியின் மூன்றாமாண்டு படிக்கையில், எல்லா துறைகளில் படிக்கும் மாணவ மாணவிகளில் நாட்டியம் ஆட தெரிந்தவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து, அந்த வருடம் நடக்க இருந்த பல்கலைக்கழகத்தின் 80ம் ஆண்டு விழாவில் பங்கேற்குமாறு சொன்னார்கள். கோமதியும் அவளும் நடனத்திற்கு வரச்சொல்லி அழைத்தார்கள். இவர்களும் அங்கு செல்ல, மருத்துவத்துறையில் இருந்து 8 பேரும், எஞ்சினிரிங்கில் இருந்து 10 பேரும், மற்ற துறைகளில் இருந்து சிலரும் சேர்ந்து மொத்தம் 30 பேர் இருந்தார்கள்.
        மருத்துவக்கல்லூரிக்கும் எஞ்சினியரிங் துறைக்கும் எப்போதுமே ஒத்துப்போகாது. மருத்துவ கல்லூரியில் ஆண்களோடு பெண்கள் வெகு சகஜமாக பழகுவதும், வண்டியில் செல்வதும், நல்ல நட்பு பாராட்டுவதும் தான் அதற்கு காரணம். பொறியியல் துறையில் ஆண் பெண் ratio வெகு குறைவு, பெண்களும் அத்தனைக்கு பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் அல்ல, அத்தோடு பெண்கள் ஆண்களோடு பேசுவதை பார்த்தால் அவர்களுக்கு எச்சரிக்கைகளும், தண்டனைகளும் வழங்கப்படும். இது போன்ற காரணங்களால், இரு துறைக்குள்ளும் எப்போதும் உரசல் இருந்துக்கொண்டே இருக்கும். வண்டியில் செல்லும் மருத்துவ கல்லூரி பெண்களை வேண்டும் என்றே வண்டியில் முந்தி சென்று, சில வேலைகளில் தள்ளியும் விடுவது, அளவிற்கு மீறி கிண்டல் செய்வது என்று நடந்து கொண்டிருந்ததால், பொறியியல் மக்களிடம் இருந்து தள்ளி நின்றே பழகிவிட்டது அவர்களுக்கு. திடீரென ஒன்றாக நடனப்பயிற்சி செய்யவேண்டும், பாடல், உடை, நடன அசைவுகள் எல்லாவற்றிற்கும் பேசி, குழுவாக இயங்க வேண்டிய சூழலில் இருந்தார்கள் எல்லாத்துறையினரும். சிறிது நாட்களுக்கு முன் நடந்த பொறியியல் துறை நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார்கள் அஞ்சனாவும் நண்பர்களும். அப்போது எல்லாவற்றிலும் கடைசி ஆண்டு Computer science group தான் வென்றார்கள். நடுவே இருவர் வெகு பிரமாதமாக ஆடினார்கள். பொதுவாக பொறுட்படுத்தாத போதும், இவர்கள் ஆடியதை பார்த்து, ஆவல் தாங்காது, பெயர்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள். கருப்பாக சுருட்டை முடியோடு இருந்தவனின் பெயர் இளஓவியன், உயரமாக சிவந்த நிறமாகவும் கூர்மூக்கு கொண்டிருந்தவனின் பெயர் ராஜ் (ரங்கராஜனின் சுருக்கம்) என்றும் சொன்னார்கள். அத்தோடு மறந்து போயிருந்தவர்கள் மீண்டும் அதே இருவரை சந்திக்க நேர்ந்தது.
        கால்களிலும் பேச்சிலும் செய்கைகளிலும் ராஜுவிற்கு spring இருந்தது போல தோன்றியது. A bit hyper, even a touch of eccentricity... அஞ்சனாவிற்கும் கோமதி மங்கை நந்தினிக்கும்  சிரிப்பிற்கு குறைவே இருக்கவில்லை. கல்லூரி முடித்ததும், வண்டி எடுத்து கொண்டு போய் நேரே நடன பயிற்சிக்கு செல்வதும், பிறகு ஹாஸ்டலிற்கு திரும்பி வந்ததும் பேச இன்னும் நிறைய விஷயங்கள் இருந்ததில் அந்த இரண்டு வாரங்கள் ஓடி போனது. முதலிரண்டு நாட்களில் ஓரளவு பெயர் தெரிந்து, பார்த்தால் சிரிக்கும் படி பழகி இருந்தார்கள் அனைவரும். ராஜ் மட்டும் அஞ்சனாவோடு பேசவே இல்லை. ஆனால் ஏதாவது செய்துவிட்டு திரும்பும்போது, அவன் பார்த்து கொண்டே இருப்பதை பார்த்து சிலவேலைகளில் கன்னம் சூடாகியதை உணர்ந்தாள். எல்லோரும் குழுமித்து அவரவர் suggestions சொல்லும்போது, இவன் மட்டும் ஒன்றும் சொல்லாமல் இருந்ததை பார்த்து அவன் நண்பர்கள், `` மச்சான்! யாருகிட்டயோ கவுந்துட்டாண்டா இவன். அது தான் இப்படி மந்திரிச்சு விட்டாப்புல இருக்கான். சொல்றா! யாரு figure! எந்த faculty? ‘’ என்று கிண்டல் செய்தார்கள். இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருந்த எல்லோரும் அவன் முகத்தை பார்க்க, அவன் விடுங்கடா என்று சொல்லிவிட்டு, அஞ்சனாவை பார்க்க, எல்லோருக்கும் ஒருவாறு புரிந்தது.
      அஞ்சனாவிற்குள் நடந்த மாற்றங்களை சொல்லமுடியாது போனாலும், உள்ளுக்குள் ஜிவ்வென்று இருந்ததை மறக்கவோ மறுக்கவோ முடியாது. It’s not love, but the mere feeling of being looked at and longed for gives human a heady sense of pleasure. Provocation at its subtlest! It was a beautiful crush... நிகழ்ச்சிகள் நடக்கும் சில நாட்களுக்கு முன்பு, இரவு எட்டு மணி போல, வண்டியில் மறந்து வைத்துவிட்டு வந்த எதையோ எடுக்க போக, வழியில் நின்ற எஞ்சினியரிங் மக்கள், ராஜ், ராஜ் என்று கூப்பிட்டதை கேட்காதது போல சென்றாள். வண்டியில் இருந்து அவளுடைய பையை எடுத்து திரும்பும் போது, அவள் எதிரில் அவன் நின்றான். தன்னை மீறி நெஞ்சு படப்படப்பதையும், மூச்சு விட லேசாக சிரமமாவது போல தோன்றி, அத்தனை அருகில் நின்ற அவன் கண்களை பார்க்க, `` Hi ’’ என்றான். ஒன்றும் சொல்லாது தலையை குனிந்து, உதட்டை கடித்தப்படி நின்ற அவள் கண்ணை பார்க்க, குனிந்து, `` பயமா இருக்கா, அஞ்சனா?`` என்றான் ராஜ். ஆறடி சில அங்குலம் இருந்தவன், இவள் கண்ணை பார்க்க அப்படி குனிந்தது அவளுக்கு லேசாக சிரிப்பை வரவழைத்தது. நிமிர்ந்து பார்க்க, `` என்ன கண்ணுடா? கொல்றே அஞ்சனா. எனக்கு பிடிச்சிருக்கு உன்னை `` என்றான். எப்படி react செய்வது என்று தெரியாது, தாண்டி ஓடிப்போனாள் அஞ்சனா. அதன்பின் ஜோடியாக அது வரை ஆடிக்கொண்டிருந்த சங்கரை மாற்றிவிட்டு, அவன் அவளோடு ஆடப்போவதாக சொன்னார்கள். வைரமுத்து கவிதை போல, அவளை சுற்றி பல மாற்றங்கள் தோன்றியது, பட்டாம்பூச்சிகள் வயிற்றில் பறந்தது அவனை பார்க்கும்போது, கண்கள் தானாக கூட்டத்தில் அவனை தேடியது, அவன் பார்க்காத போது பார்த்து, அவன் பார்த்ததும் திரும்பியது பற்றி சொல்லி சிரித்தாள்.
    ஜெஃப் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தான், இவள் கதைகளை. நடனத்தில் தொட்டு, கையை பிடித்து ஆடும்போதெல்லாம் உடல் வியர்ப்பதும், சிலிர்ப்பதும் அவளுக்கு புதிதாக இருந்தது. அருகில் வரும்போதே இருவருக்கும் magnetic pull இருப்பது போல தோன்றியது. ரிகர்சலின் போது, யாரும் பார்க்காது காதருகே அவளை மிகவும் பிடிப்பதாக குசுக்குசுத்தது, ஆடும்போது உரசலில் ஏற்பட்ட சிலிர்ப்பு, அவன் வாசம் எல்லாமே கிறக்கமாக இருந்தது அவளுக்கு. It felt like a trip to wonderland. அவளால் தூங்கமுடியவில்லை என்றான், நிமிர்ந்து பார்த்தால் கண்ணை கவ்வுவது போல இருக்கிறது உனது பார்வை என்றான். இப்படி பல பல. நிகழ்ச்சிகள் அருமையாக நடந்தேறி முடிவு பெற்றது. இனி அவனை இப்படி சந்திக்கமுடியாது என்பதில் மனம் வருந்தியது நிஜம். வழக்கம் போல கல்லூரி, ஹாஸ்டல், லைப்ரரி என்று போன சில வாரங்களுக்கு பிறகு எஞ்சினியரிங் படிக்கும் கார்த்திகா, அவள் அறைக்கு வந்து அவன் காத்திருப்பதாய் சொன்னாள். கை கால் பதற, பெண்கள் கல்லூரியின் கேட் அருகே சென்று பார்த்தாள் அஞ்சனா. அவன் தான் நின்றிருந்தான், அவளை பார்த்து சிரித்தப்படி. ஏனோ அவனை பார்த்ததும், கால்கள் குழைந்தது நினைத்து சிரித்துக்கொண்டாள்.
    அவன் அருகில் மெதுவாக சென்றவள், `` எப்படி இருக்கீங்க? `` என்று கேட்டாள். அவன் பதில் ஏதும் சொல்லாது பார்த்துக்கொண்டே நின்றது, அவளுக்கு இன்னமும் வெட்கமாக இருந்தது. தனக்கு அவளிடம் சொல்ல நிறைய விஷயம் இருந்ததாகவும், சாப்பிட போகலாம் என்று அழைத்தான். சரி சாரதாராம் ஹோட்டலின் உள்ளே அமைந்திருந்த அக்‌ஷயா ஏசி ரெஸ்டாரண்ட் போகலாம் என்று சொல்ல, அடுத்த நாள் ஆறுமணிக்கு சந்திப்பதாக சொன்னான். அஞ்சனாவும் அங்கு செல்ல, இருவரும் நிறைய பேசினார்கள். மிகவும் பிடித்திருப்பதாக சொன்னவனின் கேள்விகளுக்கு சிரித்தப்படி பதில் சொன்னவளின், முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தவன் மெதுவாக கேட்டான், ``அஞ்சனா! நாங்க ஐயங்கார் ஜாதி! நீ என்ன ஜாதி? என்று. சிரிப்பு முழுக்க உறைந்து போனதும், பட்டாம்பூச்சிகள் மொத்தமாக காணாமல் போன அந்த நொடி வலித்தது. நிமிர்ந்து அமர்ந்து, இன்னமும் முகம் மலர, கண்கள் விரித்து, `` நான் ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்தவள். Scheduled caste ‘’ என்று சொன்னதும், சிறிது நேரம் பேச்சற்று இருந்தான். சாப்பிட்டு முடித்து, ஆட்டோ ஏற சென்றவளிடம், `` அஞ்சனா! I really like you and I think I’m in love with you. ஆனா எங்க வீட்டில`` என்று இழுக்க, ``பரவாயில்லை ராஜ். I had a wonderful meal. Thanks for the evening. Good luck ‘’ என்று சொல்லி கிளம்பினாள். கடைசி வருடம் படிக்கையில், அவனுக்கு திருமணம் ஆகப்போவதாய், அமெரிக்கா சென்று settle ஆக போவதாய் சொல்ல கேள்வி. அதன்பின் இன்று வரை எந்த தகவலும் இல்லை. மறுபடி அவனை சந்திக்க நேருமா என்றும் தெரியவில்லை. ஆங்கிலத்தில் அடைமொழி ஒன்று இதற்கு நன்கு பொறுந்தும் ஜெஃப் என்றாள். அவன் என்ன என்று வினவ, ‘’ That’s the way, the cookie crumbles ‘’ என்று சொல்லி பெருமூச்சு விட்டாள்.
    ஜெஃப் கேட்டான், `` what does caste gotta do with two people, who likes each other? ‘’ என்று. அஞ்சனா அதற்கு, `` Don’t even go there. நான் காலையில் எண்ணிக்கொண்டிருந்த சிலந்தி வலையை காட்டிலும் சிக்கலான, ஆழமான விஷயம்`` என்றாள். அதன்பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிய சில விஷயங்களை பற்றி பேசியவள், கோபகுமாரை பற்றி சொன்னாள். அவனை முதன்முதல் சந்திக்க நேர்ந்த சூழலை பற்றி சொல்லி முடிக்க, அதன்பின் எங்கு சந்தித்தீர்கள்? என்று ஜெஃப் கேட்டான். அவள் சரியான நேரத்தில் காப்பாற்றி அனுப்பிய பேஷண்ட் வீட்டு விசேஷத்திற்கு கேரளாவின் traditional saree பரிசாக கொடுத்து, அவர்களின் மூத்த மகனின் திருமணத்திற்கு அழைத்திருந்தார்கள் அந்த aunty. அந்த சந்தன கலர் ஜரிகை வைத்த சேலை. சேலை கட்டி, பூவைத்து, சந்தன கீற்று நெற்றியில் வைத்து, கை நிறைய கண்ணாடி வளையல் போட்டு, சென்றவளை வாசலில் இருந்து வரவேற்றார்கள் அந்த குடும்பத்தினர். அந்த தம்பதியினரின் வீடு (வலிய பறம்பு தறவாடு) பிரமாதமாக இருந்தது. கேரளாவில் பொதுவாக வீட்டிற்கு எண்கள் கிடையாது, பெயர் தான். இவர்கள் நல்ல வசதி என்பதை ஒவ்வொரு விஷயமும் காட்டியது.. திருமணப்பெண் மேல் மட்டும் 100 சவரன் நகை பூட்டியிருந்தாள். வரதட்சணையாக 2 வீடு, பென்ஸ் கார், 800 சவரன் நகை, வைர நகைகள், பணம் என்று வாரி கொடுத்திருந்தார்கள் என்று சொன்னார்கள். அங்கு சுற்றி நடந்த பெண்களில் குறைவாக நகை அணிந்திருந்தது அவள் தான் என்று சொல்ல தேவையே இல்லை. ஆனால் அது பெரிய குறையாக அவளுக்கு தோன்றவில்லை. பாட்டு கச்சேரி தொடங்கியதில் லயித்து போய் அமர்ந்துவிட்டாள் அஞ்சனா.
    சாப்பிட கூப்பிட வந்தவனை பார்த்து ஸ்தம்பித்து போனாள் அஞ்சனா. பட்டு சட்டை, வேட்டி, தங்க சங்கிலி, கையில் காப்பு, மோதிரம் அணிந்து, சந்தன கீற்று வைத்து கோபகுமாரை பார்க்க கொஞ்சம் நடிகர் மம்மூட்டி போல இருந்தான். அவனும் அவளை எதிர்ப்பார்க்கவில்லை என்று புரிந்தது. அந்த வீட்டின் இளைய மகன் என்று தெரியவந்தது பின்னர் தான். அன்று இரவு பத்திரமாக வீடு கொண்டு வந்து சேர்த்ததற்கு, இன்று நன்றி சொன்னாள். சாப்பிட்டு விட்டு கிளம்பினவளை வீடு சென்று விடுமாறு அந்த ஆண்டி சொல்ல, கோபகுமார் காரை எடுத்து வந்தான். அங்கிருந்து கிளம்பி, வீடு வந்து சேரும்வரை, இருவரும் ஒன்றுமே பேசவில்லை. கோபு இறக்கிவிடும் போது, `` அது எந்தோ அஞ்சனா ஒன்னும் மிண்டாதெ வந்தது? ( ஏன் ஒன்றுமே பேசவில்லை ) என்று கேட்க, அவள்,  `` சேட்டன் ஒன்னும் சம்சாரிச்சல்லலோ ( நீங்க ஒன்றும் கேட்கவில்லையே ) என்று சொன்னாள். இந்த சம்பவங்களுக்கு பிறகு அங்கும் இங்குமாக இருவரும் பார்த்து நன்கு பழகத்தொடங்கியிருந்தார்கள்.
    கேரளாவில் இருந்த சர்ச்களில் நடந்த திருவிழாக்களின் பெயர் `` பள்ளி பெருநாள் `` என்று சொல்வார்கள். ஊரில் இருந்த சர்ச்களில் அந்த வாரம் முழுக்க இரண்டு பட்டது. வான வேடிக்கையும், திருவிழா கடைகள், சாப்பாடு இப்படி எல்லாம் இருக்க, highlight of the whole occasion was செண்டை மேளம். 40, 50 நபர்கள் வெற்றுடம்போடு, வெள்ளை வேட்டி, அங்கவஸ்திரம் போட்டு, ஆடியபடி 2 அல்லது 3 மணிநேரம் செண்டை மேளத்தை வாசிப்பது காண்பது கண்கொள்ளா காட்சி. அதைவிடவும் அழகு, மேளம் வாசிப்பவர்களின் முன் இளசுகள் ஆடுவது பார்ப்பது. மேளசத்தத்தில் அப்படி ஒரு தாளலயம். கேட்பவர் தன்னையறியாது ஆடவைத்தது. அதை எல்லாம் பார்த்து சுற்றி, மருத்துவமனையில் வேலை பார்ப்பவர்களின் குடும்பத்து மக்களிடம் பேசியபடி நடந்தவளை நிறுத்தினான் கோபு. கோபுவின் நண்பர்கள் 15 பேர் பின்னால் இருந்து பார்த்துக்கொண்டிருக்க, அவன் எப்படி இருக்கிறது பெருநாள் என்று கேட்டான். அஞ்சனா இதற்கு முன்பு இப்படி பார்த்ததில்லை. அருமையாக இருப்பதாக சொன்னாள். சென்று வருவதாக சொல்லி நடக்க, அவனும் அவளோடு நடந்தபடி, கூட்டத்தில் இருந்து நகர்ந்தபின், `` அஞ்சனா! எனக்கு உன்னை பிடித்திருக்கிறது. திருமணம் செய்துக்கொள்ள ஆசையாக இருக்கிறது `` என்றான். கல்லூரியில் இருந்தது போல ஜிவ்வென்று பறக்கவில்லை ஆனாலும் ஒரு சிறு ஆச்சரியம் இருந்தது அவளுக்கு.
    நல்ல சிவந்த நிறத்துடன் அழகான பணக்காரனான இவனுக்கு ஏன் தன்னை பிடித்தது என்று புரியவே இல்லை. அந்த கல்யாணத்திற்கு போயிருந்த போதே பார்த்தாள், அங்கிருந்த பெண்களில் இவள் தான் கறுத்தநிறம். பார்க்க வசீகரமாக கொஞ்சம் இருப்பதாக தோன்றினாலும், இவனோடு நடந்தால் தான் அசிங்கமாக தான் இருப்போம் என்று பட்டது. அஞ்சனாவின் முகம் அவளை அறியாமல் ஆச்சரியமாக உறைந்திருந்ததை பார்த்து, சிரித்து, `` நிஜமாகவே தான் அஞ்சனா! என்றான். அவள் யோசிக்க நேரம் வேண்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள். மேல்படிப்பிற்காக லண்டன் செல்ல எல்லா ஏற்பாடுகளும் நடந்துக்கொண்டிருந்த நேரம் அது. விசா எப்படியும் 1 மாதத்தில் வரும், உடனே கிளம்பத்தயாராக இருந்தாள் அஞ்சனா. இதற்கு இடையில் இவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை. மறுநாள் அவள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தான் கோபு பதில் தெரிந்து செல்வதற்காக. அஞ்சனாவின் வெகு நாள் ஆசை மேல்நாட்டில் படிக்கவும் வேலையும் செய்யவேண்டும் என்பதை தெளிவாக சொன்னாள். ஆனால் கோபுவோ தனக்கு ஊரை விட்டு செல்ல எந்த எண்ணமும் இல்லை என்றும் தன் மனைவி வீட்டோடு இருந்து, தன்னையும் குடும்பத்தையும் நன்கு பார்த்து கொண்டாலே போதும் என்று சொல்ல, அஞ்சனா இது சரியாக வராது என்று சொல்லி முடித்தாள்.
    அதன்பின் தினந்தோறும் ரோட்டிலோ, அவள் வீட்டின் அருகேயோ, காத்திருந்த அவனை சந்தித்தாள் அஞ்சனா. மீண்டும் அதே கேள்வி, அதே பதில் என்றே போய்க்கொண்டிருக்க, அஞ்சனாவின் விசா ஏற்பாடு ஆகிவந்ததையும், அங்கிருந்து போகப்போவதையும் சொன்னாள் அவனிடம். வேலை செய்யும் இடத்தில் எல்லோருக்கும் வேதனை அவள் விட்டு செல்வது, ஆனாலும் சிறிய function வைத்து, அவளுக்கு பூச்செண்டுகளும், பரிசு பொருட்களும் கொடுத்து வழியனுப்பினார்கள். மாலாவில் இருந்த டாக்ஸி பிடித்து, சாலக்குடி ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது மணி 6 ஆகியிருந்தது. பைகளை தூக்கிக்கொண்டு நடக்க, கோபகுமார் அவளுக்காக காத்திருந்தது தெரிந்தது. பையை அவளிடம் இருந்து வாங்கிக்கொண்டு நடந்தவன், `` போகமாட்டேன் என்று சொல், அஞ்சனா! `` என்றான். கண் கலங்க நின்றிருந்தவனின் முகத்தை பார்த்து, முதன்முதல் இவனுக்கு நிஜமாகவே நம்மை இத்தனை பிடித்திருக்கிறது என்று மனம் குழம்பினாள். திரும்ப திரும்ப மந்திரம் போல சொல்லிக்கொண்டே இருந்தான், `` ஒரு வார்த்தை சொல்! பிடித்திருக்கிறது என்று. வாழ்நாளுக்கும் உன்னை கைவிடாமல் கஷ்டமில்லாமல் பார்த்து கொள்கிறேன். Please Anjana! Say that you love me! ‘’ என்று. இதுவரை இப்படி தர்மசங்கடமாய் தோன்றியதே இல்லை அவளுக்கு, அவனையே பார்த்து கொண்டு நின்றாள்.
    ரயில் வரப்போவதாய் அறிவித்தவுடன், அவள் கைகளை இறுக்கியபடி கெஞ்சலாகவே கேட்டான், `` என்னை ஏன் பிடிக்கவில்லை, உனக்கு. என் வாழ்நாளில் ஒரு பெண் முன் நான் இப்படி நிற்பேன் என்று யோசித்ததே இல்லை. இனி இப்படி ஒரு பெண்ணை பார்த்து தோன்றுமா என்றும் தெரியவில்லை. ஆனால் நெஞ்சு வெடித்துவிடும் போல இருக்கிறது. உன்னை ஏன் பிடிக்கிறது என்றே புரியவில்லை. உன்னை விட அழகான பெண்களை தாண்டி போகிறேன். என் மனதில் உன் முகமும், கண்ணும், சிரிப்பும் தான் வந்து நிற்கிறது, அஞ்சனா. நீ போகப்போகிறாய் என்பதை இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. இந்த ஏழெட்டு மாதத்தில் என் மனது முழுக்க நீ வந்துவிட்டாய். நீ நடந்த தெரு, உன் வீட்டு வாசல், உன்மேல் வீசும் வாசம், சிரிக்கையில் முகமும் கண்ணும் சேர்ந்து சிரிப்பதை பார்த்து கொண்டிருந்ததே போதுமென இருந்துவிட்டேன். என் காதலை இன்னமும் தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். போகாதே அஞ்சனா! நான் அழததே நினைவில் இல்லை. உன்னால் வலி உணர்கிறேன். அழுகை பரிச்சயமாகிறது. என்னை விட்டு போகாதே `` என்று கண்கள் கலங்க பேசினான். அடுத்து என்ன செய்வது என்று புரியாது குழம்பிப்போனாள் அஞ்சனா.
    யோசித்து கொண்டிருக்கும்போதே ரயில் வந்தது. அவளுடைய ஏசி கோச் தேடி, பைகளை வைத்து விட்டு இறங்கினான் கோபு. அஞ்சனா `` கோபு! எனக்கு உன்னை பிடித்திருக்கிறது. மறுக்கவில்லை. ஆனால் உன் மனதில் மனைவி என்று நீ ஏற்படுத்தி வைத்திருக்கும் நிலையை என்னால் முழுமையாக ஏற்கமுடியுமா என்று கேட்டால், முடியாது என்றே சொல்வேன். உனக்கு வரும் மனைவியின் முழு உலகமாக நீ மட்டும் தான் இருக்கவேண்டும் என்று நினைப்பாய். அப்படி என்னால் இருக்கமுடியாது. என் தந்தைக்கு நான் செலுத்தும் அஞ்சலிதான் என் மேல்படிப்பும், வெளிநாட்டு பயணமும். இதை என்னால் விட்டு கொடுக்கவே முடியாது. I do love you, ஆனால் நாம் திருமணம் செய்துக்கொண்டால், இருவரின் வாழ்க்கையுமே வீணாகும். இது நிச்சயம். வாழ்நாள் முழுக்க ஒன்றாக இருந்து கசப்பு சேர்த்துக்கொள்வதற்கு, இனிமையான இந்த நினைவுகளோடு பிரிந்து செல்வது நலம் என்று தோன்றுகிறது. Please let me go. I wish you all the happiness and a lovely partner ‘’ என்று சொல்லி முடிக்க, வண்டி தொடங்கியது.
    கோபு ரயிலை அடுத்து நடந்தபடியே `` அஞ்சனா! நாம் மறுபடி சந்திக்க நேருமா? இதன் பின் எப்போது உன்னை பார்ப்பேன் `` என்று கண்களில் நீர் துளிர்க்க கேட்டான். அவளுக்கும் மனது வலித்து அழுகை வரத்தொடங்கியிருந்தது. தலை நிமிர்ந்து கண்ணீர் வழிய `` தெரியவில்லை கோபு`` என்று சொல்ல, வண்டி வேகம் பிடித்தது. ரயிலோடு வேகமாக நடந்தவன் என்ன நினைத்தானோ, வண்டியின் உள்ளே ஏறி, அவளை வெறியோடு கட்டியணைத்து, உதட்டில் அழுந்த முத்தம் கொடுத்துவிட்டு இறங்க, ஸ்தம்பித்து போனவள், ரயிலில் இருந்து எட்டி பார்க்க, கண்களில் நீரோடு பிளாட்பாரத்து முடிவில் அவன் கையசைப்பதை பார்த்து கொண்டே நின்றாள் அஞ்சனா, அவன் புள்ளியாக மறையும் வரை. வேகமாக செல்லத்தொடங்கிய சில மாதங்களுக்கு பிறகு, அவன் எப்படி இருக்கிறான் என்று கேட்க, தொலைப்பேசியில் அழைக்க, நம்பர் மாறியிருந்தது. இருவருக்குமான தொடர்பு அதன்பின் விட்டு போனதென்று முடித்தாள் அஞ்சனா.
    இருட்டி போய், மழை லேசாகியிருந்தது. வண்டுகளின் ரீங்காரமும், ஓடை சத்தமும், காற்றின் வரவால் இலைகளில் நடந்த சலசலப்பும், வயலின் இசையும் மட்டுமே ஒலித்து கொண்டிருக்க, இருவரும் அவரவர் நினைவுகளில் மூழ்கிப்போயிருந்தார்கள். வீட்டிற்கு வந்து அவளை விடும்போது, அவள் வீட்டில் இருந்த கடிகாரமுள் 9 என்றது. வழக்கம் போல குளித்து உடைமாற்றி படுத்தவளுக்கு, கண்ணின் ஓரம் கசிந்திருந்த கண்ணீர் யாருக்காக என்பதை யோசித்தபடி உறங்கியிருந்தாள் அஞ்சனா.

 தொடரும்....
யமுனாராகவன். 
 

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com