யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் "அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர் கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும்.
பகுதி -26
புகைப்படங்கள் எடுப்பது ஒரு மிக அழகிய கலை தான். அதை பல்வேறு விதமாக உருவாக்கலாம் என்கிறார்கள். அதில் ஒன்று Forced Perspective photography. பார்க்கும் விதத்தில் உண்மையை பொய்யாகவும், பொய்யை உண்மையாக நினைக்கும் விதத்தில் அமைந்திருக்கும் படங்கள் பார்க்க விசித்திரமாக இருக்கும். அதாவது பெரிய எகிப்திய பிரமிட் நுனிவிரலால் தொடுவது போலவும், நிலவினை வாயால் விழுங்குவது போலவும் அமையும் அது போன்ற படங்கள் சிரிக்கவும், கொஞ்சம் யோசிக்கவும் வைக்கும்.
வாழ்க்கையிலும் அது போன்ற கணங்கள் இருக்கிறது உண்மை தான். These are the moments, which makes one to witness life from a different angle that might force to accept the reality and essence of life, at the unlikeliest hour, especially when least expected. ஆனால் வாழ்வில் அப்படி நிகழும் நிமிடங்கள் சிரிப்பை வரவழைப்பது வெகு குறைவு.
அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை இரண்டாவது முறையாக சந்திக்க நேர்ந்த போது மனதொடிந்து போனாள் அஞ்சனா. ப்ராலினில் அவசர சிகிச்சைக்கு அரசு மருத்துவனையில் இருந்து, ஹெலிகாப்டரில் சில வேளை நோயாளிகளை அழைத்து செல்வார்கள் என்று சொல்ல கேள்வி. ஆன்ஸ் லாசியோவில் இருந்து வரும் ரோசினா (Rosina) அன்று தொலைப்பேசியில் அழைத்து, தன் 8 வயது மகள் மேபல் (Mabel) இரண்டு நாளாக உடல்நிலை சரியில்லாது இருக்கிறாள் என்றும் தன்னிடம் இருந்த ஜுரம் மாத்திரைகள் போட்டும் கேட்கவில்லை என்று சொன்னப்போது, அழைத்து வரும்படி சொன்னாள். மேபல் மற்ற குழந்தைகள் போல தான், ஆட்டம் துறுதுறுப்பு குறும்பு நிறைந்தவள். ஜுரத்தில் வாடி போய் வந்தாள் அம்மாவோடு. தலை வலிக்கிறது. முடியவில்லை என்று வாந்தி எடுத்தபடி அழுதவளை பார்த்து, அஞ்சனாவிற்கு உள்ளுக்குள் லேசான உதைப்பு. மருத்துவ பரிசோதனையில், அவளுக்கு Meningitis இருக்குமோ என்று தோன்றி, அவளை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு ரோசினாவிடம் சொல்ல, அவளும் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றதை பார்த்தப்படி நின்றாள் அஞ்சனா.
மூளையை சுற்றி இருக்கும் பாதுக்காப்பு பெட்டகம் போன்றது Meninges. மூன்று layer ஆக இருக்கும் இந்த திசுக்கள், மூளையை ஈரமாகவும், ரத்தவோட்டத்தை ஒரு நிலைப்படுத்தியும், எல்லா சமயமும் ஒரே போன்ற சுழலை கொடுத்து பாதுகாத்தும் இருப்பவை. முடிந்தவரை நோய்கிருமிகளை அண்டவொண்ணாது வைக்கும் இவை, சில சமயம் பாக்டிரியாக்களாலோ, வைரஸ் கிருமிகளாலோ செயலிழக்கும். அப்படி செயலிழக்க நேரிட்டால், மெதுவாக மூளையும் பாதிக்கப்பட்டு, சரியான மருந்துகள் சரியான நேரத்தில் கொடுக்காது போனால், மூளை முழுதாக பாதிப்படைவதால் மூளை வளர்ச்சி குன்றியோ, கடுமையான நோயால் உயிருக்கோ ஆபத்து வரலாம். இதெல்லாம் யோசித்து, ரோசினாவை அனுப்பிவைத்து விட்டு, இவளே அரசு மருத்துவமனையில் வேலை புரியும் மருத்துவரை அழைத்து குழந்தையை பற்றி சொல்லி, பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி சொன்னாள்.
இது நடந்த ஐந்தாறு நாட்களுக்கு பெரிதாக ஒரு விபரமும் தெரியாது போனது மேபலை பற்றி. அந்த வார இறுதியில் ஊரே பரபரப்பானது. அந்த சிறுமி உடல்நிலை கவலைக்கிடமாக ஆகி, ஹெலிகாப்டரில் பிரதான தீவான மாஹேவிற்கு அழைத்து சென்றதாக சொன்னார்கள். சிறு தீவானதால், எல்லோருக்கும் எல்லோரையும் அவர்கள் விவரமும் தெரிந்திருந்தது. அதனால் இது போன்ற செய்திகள் வெகு விரைவில் ஊர் முழுக்க பரவியது. அவளை மாஹே எடுத்துப்போன இரண்டு நாட்களில் அவள் இறந்து போனதாக சொன்னார்கள்.
தன் தொழிலில் இறப்பை சர்வசாதாரணமாக சந்திக்க நேர்ந்தாலும், வயதானவர்களின் இறப்பை பொறுத்துக்கொள்ளும் மனது, சிறுவயது மரணத்தை ஏற்கமறுத்தது தான் நிஜம். அஞ்சனா மேபலின் இறுதி சடங்கில் கலந்துக்கொண்டாள். ஊரே திரண்டு இருந்த சர்ச்சில், அஞ்சனாவும் கூட்டத்தில் ஒரு ஒரத்தில் நின்றிருந்தாள். தூங்குவது போலவே இருந்த மேபலுக்கு அழகான பிங்க் நிற உடை அணிவித்து, குட்டி இளவரசி போல tiara அணிவித்து இருந்தார்கள். இரண்டு மணி நேரம் கிரியோல் மொழியில் சர்ச்சின் அங்கத்தினரும், குடும்பத்தினரும் பேசினது ஒன்றும் புரியாது போனாலும், தன்னை சுற்றி இருந்த அனைவரின் கண்ணிலும் கண்ணீர் கசிந்தபடி இருந்ததை பார்த்து மனம் கலங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. அதன் பின் அங்கிருந்து நடைபயணமாக கல்லறைக்கு மேபலை அழகான பூக்களும் பொம்மைகளும் நிறைந்திருந்த கருப்பு காரில் ஊர்வலமாக கொண்டு சென்றார்கள். வண்டியின் பின்னோடு நடந்து சென்று, புதைக்கும் இடத்தில் நிற்கும் போது ரோஸினாவை பார்த்தாள் அஞ்சனா.
வாழ்வில் சந்திக்கும் மனிதர்களின் முகபாவனைகளை உற்று நோக்கி, படித்து மனதில் பதித்து கொள்ள சொல்லுவார்கள் அஞ்சனாவின் நடன ஆசிரியை சாந்தி. அவை நாட்டியத்தில் முக, உடல் பாவனைக்கு மிகவும் தோதாக இருக்கும் என்று சொன்னதை கேட்டதன் பின் சந்திக்கும் மனிதர்களின் முகத்தை பார்த்து பழகியது, இன்றும் மாறாத பழக்கமாகி விட்டது. முக பாவங்கள் நடன சாஸ்திரிய முறையில் ஒன்பது வகையாக பிரிக்கலாம் என்று படித்திருந்தவளுக்கு, எதிரே இருப்பவர்கள் அழும்போது, சிரிக்கும் போதும் தன்னையறியாது மனநிலை அவர்களோடு ஒன்றுவதை தன்னால் தவிர்க்க முடியாது என்பது தெரிந்த விஷயம். ரோஸினாவின் முகம் வெளிக்காட்டிய வேதனையும், வெறுமையும் கலந்த முகபாவத்தை எந்த வார்த்தைகளாலும் சொல்லி ஈடுசெய்யமுடியாது. அவளின் கண்களில் இருந்த தொலைந்த தேடல், இதற்கு முன்பும் பார்த்து இருக்கிறாள், அவள் பாட்டி சின்னம்மாவின் முகத்தில். அஞ்சனாவின் அத்தை இறந்த சமயம், அவளுக்கு வயது 3 அல்லது 4 இருக்கும். அத்தையை பற்றி தான் எண்ணிக்கொண்டிருக்கிறாள் என்று பாட்டியின் கண்ணை வைத்தே சொல்லிவிடலாம். ஆனால் அஞ்சனாவின் தந்தை இறந்த சமயம், பாட்டி தந்தையின் உடல் வைத்திருந்த அறையின் மூலையில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தாள் இரண்டு நாளும். ஏதோ அனத்தியபடி இருந்தவளின் கண்களில் பார்த்த அதே பார்வையை, இன்று ரோஸினாவின் முகத்தில் பார்த்து, கொஞ்சம் திகைத்து போனாள்.
அறிவியல் வினோதங்கள் பற்றி என்றோ அஞ்சனா படித்த புத்தகத்தில் நிறைய கேள்விகள் இருந்தது. சர்வசாதாரணமாக நடக்கும் பல விஷயங்கள் சிறிது பிழன்றாலும் எப்படி ஏனையவற்றை பாதிக்கலாம் என்பதை பற்றி வேடிக்கையாக இருந்தது அந்த புத்தகம். உலகம் முழுக்க புவியீர்ப்பு விசை இருப்பினும், ஒவ்வொரு மனிதனுக்கும் epicentre ஒன்று இருக்கிறது என்றும், மனிதர்களின் புவியீர்ப்பு நடுவுநிலை மாறி போனால், எப்படி நடப்பார்கள், ஓடுபவர்கள், இயங்குவார்கள் என்று எழுதியிருந்தது. பெற்ற பிள்ளையின் இழப்பு, மனதின் நடுவுநிலையை பிறழ செய்துவிடுகிறது என்பது மறுக்க முடியாத நிஜம்.
கல்லறையில் சவப்பெட்டியை புதைக்கும் முன், மீண்டும் பாதிரியார் ஜெபம் செய்தார். வானம் நீலமும் கருப்புமாக தெரிந்தது. கல்லறைகள் எந்த ஊரானாலும் அந்த இடத்திற்கு பெயர் தெரியாத ஒற்றுமை இருப்பதை எண்ணிப்பார்த்தாள் அஞ்சனா. எத்தனை பச்சை பசேலென மரங்கள் இருந்தாலும், அவைகளில் ஏதோ சொல்லொணாத சோகமான நிசப்தம் அப்பியபடி, மெல்ல வீசிக் கொண்டிருந்த காற்றிற்கும் அசையாத இலைகளை தாங்கியிருந்தது. கடைசியில் முகம் பார்க்கும்படி கூப்பிட்டதும், எல்லோரும் அருகே சென்று நீண்ட தண்டுடன் இருந்த ரோஜாப்பூக்களை மேபலின் மேல் வைத்தார்கள். எல்லோரும் அவர்கள் மரியாதையை செலுத்திவிட்டு, கடைசியில் ரோஸினாவை பார்க்க, மெல்ல சவப்பெட்டியை நோக்கி நடக்க திராணியில்லாது நடந்து முன்வந்தாள். கதறியபடி நின்றிருந்தவர்களின் மத்தியில் அழாது ரோஸினா, குழந்தை மேபலின் முகத்தை பார்த்தப்படியே நின்றாள். பாதிரியார் மெல்ல அருகே வந்து அவள் தோளின் மீது கைவைக்க, சுயநினைவு திரும்பியவளாய், தன்னை சுற்றி நின்ற கூட்டத்தை அசுவாரசியமாக பார்த்தாள். ரோஸினாவின் கணவர், மேபல் 2 வயது குழந்தையாக இருக்கும் போது, மடகாஸ்கரை சேர்ந்த பெண்ணொருத்தியோடு போய்விட்டதன் பின்னால் குழந்தை, அவளை சார்ந்த விஷயங்களே ரோஸினாவின் வாழ்க்கையாகி போனது என்று சொல்லியிருக்கிறாள். இன்று வாழ்வின் பொருள் மொத்தமாக தொலைந்து போய், அடுத்த செய்வதறியதாது நின்ற அவளை பார்க்கையில் அஞ்சனாவால் தாங்க முடியவில்லை. சிறிது நேரம் மேபலின் முகத்தை தொட்டு பார்த்து, முத்தம் கொடுத்தவள், சட்டென ஏதோ நினைவு வந்தவளாய், தன் கைப்பையில் இருந்து மேபலிற்கு பிடித்த பொம்மையை எடுத்து, மேபலின் கையில் வைத்தாள். அதன்பின் பெட்டியை மூடி, பாதிரியார் விசையை அழுத்த, சவப்பெட்டி மெல்ல பள்ளத்திற்குள் இறங்கியது. கூட்டம் மெல்ல கலைய, அஞ்சனா சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்து, எல்லோரும் சென்றபின், மெதுவாக அவளும் நடக்க தொடங்கினாள். வெகு தூரம் நடந்து சென்றபின், திரும்பி பார்க்க, ரோஸினா மட்டும் சவப்பெட்டி புதைத்த இடத்தின் அருகே தரையிலேயே அமர்ந்திருந்தாள். வீட்டிற்கு வந்து சேர்ந்த பின்னர் கூட, குழந்தையின் முகம் மனதில் இருந்து மறையாது ஸ்தம்பித்து அமர்ந்திருந்தாள் அஞ்சனா.
என்ன செய்திருந்தால் அந்த குழந்தையை காப்பாற்ற முடிந்திருக்கும் என்று புரியாத நிலையில் ஏற்பட்ட குழப்பமான கோபத்தினால், எப்போதும் போலவே பதில் இல்லாத கேள்விகள் கிளைகளாகி அவளை சூழ்ந்தது. படிப்பு, மருத்துவம், அறிவியல் வளர்ச்சி இவையாவும், ஒரே பக்கம் சிகப்பு, பச்சை, மஞ்சள், நீலம் என நிறங்களை சேர்க்கும் Rubik cube போல ஒருமித்து குழுமும் கணங்களில் சிக்கும் மனிதர்களின் வாழ்க்கையையும், நோய்களின் விதியையும் கணித்து சரியான சிகிச்சை கொடுக்க, அவர்களும் உடல் தேறி வீடு செல்லும்போது, ஏதோ சாதித்தது போலவும் உள்ளுக்குள் தோன்றும் உவகையின் சாயல் அகங்காரம் தான். Playing God for minutes always gives a heady sense. ஆனால் குணமாகி வீடு செல்லும் பலருக்கு நடுவே, இவைகளில் சிக்காத மேபலை போன்ற உயிர்கள் இவள் படித்த படிப்பும் அவை சொல்லும் விளக்கங்களையும் புறக்கணித்து இறக்க நேரும் சமயங்கள், மருத்துவத்தின் ஆதியந்தத்தை அர்த்தமே இல்லாதது போல கேலிக்கூத்தாகி விட்டு, விதியை நம்பும்படி செய்து விடுகிறது.
ஒவ்வொருவர் வாழ்விலும், சில முகங்கள், சில வார்த்தைகள், சில நிமிடங்கள் எப்போதும் துரத்தும், அது போலவே அஞ்சனாவை துரத்திக் கொண்டிருந்த சில முகங்கள் அந்த இருட்டில் நினைவிற்கு வர, கண்கள் தானாக பனிந்து, நெஞ்சின் பாரத்தை கறைக்க பார்த்தது. வாழ்வில் குற்றவுணர்ச்சி மிகுதியாக அஞ்சனா உணர்ந்த கட்டங்களை அப்போது நினைத்து பார்த்த வைத்தது அந்த இரவு. கல்லூரியில் house surgeon ஆக வேலை செய்த போது, முற்றிலும் பிடிக்காது போன பாடப்பிரிவுகளில் Paediatrics சேர்ந்து கொண்டதற்கு காரணம் இரண்டு குழந்தைகள். கடைசி ஆண்டு பரிட்சையில் தேர்வு பெற்றதும், எல்லா மருத்துவ மாணவ மாணவிகளும் கட்டாயமாக நான்கு பிரிவின் கீழே ஒரு வருடம் வேலை செய்து Compulsory Rotational Residential Internship (CRRI) நிறைவு செய்த பின்னர் தான் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் Full Registration வாங்க முடியும்.
அந்த ஒரு வருட internshipல், நான்கு முக்கிய பிரிவின் கீழே, பிரிவொன்றிற்கு 4 மாதம் வீதம் செய்து முடிக்கவேண்டும். அப்படி செய்யும் பிரிவுகள் Medicine (பொது மருத்துவம்), Surgery (அறுவை சிகிச்சை), Obstetrics & Gynaecology (மகப்பேறு மருத்துவம்) and Community Medicine என்பவை. இதில் அஞ்சனாவிற்கு முதன்முதலில் வந்த posting O&G. அந்த நான்கு மாதத்தில் ஒன்றரை மாதம் மகப்பேறு மருத்துவம் (Obstetrics), ஒன்றரை மாதம் மகளிர் நல மருத்துவம் (Gynaecology) அத்தோடு ஒரு மாதம் குழந்தை நலப்பிரிவு (Paediatrics) செய்தாள். முதல் வேலை என்பதால் மட்டும் அல்ல, இந்த பிரிவு எப்போதுமே வேலை பளு மிகுந்து இருந்ததால் மட்டும் அல்ல, அஞ்சனா தன் மருத்துவ பயணத்தில் முதலாக சந்திக்க நேர்ந்த நோயாளிகளும் அவர்களின் பின்புலமும் அவளுக்கு ஒட்டுமொத்தமாக அந்த பிரிவின் மீதே வெறுப்பு வரவழைத்துவிட்டது.
குழந்தைகள் என்றாலே குண்டு கன்னமும், பட்டு சருமமும், பொக்கை வாய் சிரிப்பும், பால் வாசமும் வர farex விளம்பர குழந்தை போல என்று தான் நினைவுக்கு வரும் பலருக்கு. அதிலும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடித்த அஞ்சனாவிற்கு, Paediatrics வேலை இரவு தூக்கத்தையே கெடுப்பதாக இருந்தது. முதல் நாள் posting இரவு 8 மணிக்கு தொடங்கியது அஞ்சனாவிற்கு. என்னத் தான் புத்தகத்தில் படித்தாலும், முதன்முதல் நோயாளிகளை மேர்பார்வை இல்லாது பார்த்து கொள்ளும் responsibility பெருங்கவலை தந்தது. தன்னுடைய பணிகளை தெரிந்து கொள்ளவே ஒரு வாரம் பிடித்தது. காலைகளை அறவே வெறுக்க வைத்ததற்கு காரணம் காலை ஐந்து மணி தொடங்கி கொதித்து கொண்டிருந்த sterilizerல் இருந்த கண்ணாடி syringes எடுத்து, வரிசையாக எல்லா குழந்தைகளுக்கும் மருந்து ஊசி போட்டு முடிக்கவே காலை 10 மணி போல ஆகும். தூங்கிக் கொண்டும், அரை விழிப்பிலும் இருந்த 80, 90 குழந்தைகளை அவரவர் அம்மாக்கள் தூக்கி வர, கிள்ளி பிடிக்க சதை கூட இல்லாத குழந்தைகளின் பிட்டத்தில் penicillin, ampicillin போன்ற சக்தி வாய்ந்த antibiotics, குழந்தைகளின் எடைக்கேற்ப போட தொடங்க, ஐந்து மணி தொடங்கி இரண்டு மூன்று மணி நேரம் விடாது அலறும் குழந்தைகளின் அழுகை சத்தத்தோடு தொடங்கும் நாட்கள் அஞ்சனாவிற்கு பிடிக்காது போனது.
ஒருவாறு கடமை புரிந்து வேலை இலகுவானதும், அங்கு இருந்த குழந்தைகளின் கதைகள் தானாக காதில் வந்து தானாக விழத்தொடங்கியது அஞ்சனாவிற்கு. இரண்டாவது வார்ட்டில் இருந்த வயதான பாட்டி தன் பெயர் அங்காயி என்று சொல்லி, அவளிடம் எப்போதாவது வெளியே இருந்த டீக்கடையில் டீ வாங்கி தர சொல்லி கேட்கும் போது, அவள் கதையை சொல்ல தொடங்கினாள். கொச்சை தமிழில் பொக்கை வாயோடு பேசிய பாட்டியின் முகத்தில் இருந்த சுருக்கங்களே அவள் வந்த பாதை சுலபமானது இல்லை என்பதை சொல்லியது.
அங்காயி பாட்டி சொன்னாள், ``எங்க ஊரு புவனகிரி பக்கத்தில சின்ன கிராமம் தாயி. ஒடம்பு சரியில்லாத எம் பேத்தி கயலு கூடவே வந்துட்டேன். எனக்கு ரெண்டு புள்ளங்க தான். மவ கண்ணாலம் செஞ்சு பிரசவத்தில செத்து போச்சு. ஊர்ல மழை பொய்ச்சு போன பெறவு, கயலு அப்பா, எம்மவன் லாரி ஓட்ட போயிட்டான் தாயி. அவனுக்கும் ஒரு கண்ணாலம் காச்சி பண்ணி வச்சிட்ட பொறவு நாலு வருசம் நல்லாதான் போச்சு. நல்ல மருமவ, பாக்கும்போதே பொம்பள புள்ள பொறந்துச்சி. கயல்விழின்னு பேரு வச்சோம். எந்த பாவி கண்ணு பட்டுச்சோ, தாயி, எம்புள்ளக்கு ஏதோ கொள்ளைல போற நோவு வந்து, ஒடம்பெல்லாம் கரைஞ்சு போயி, இருமல் ஜுரம் வந்து போயி மகராசன் சேந்துட்டான் தாயி. 25 வயசு தான் இருக்கும் எம்மவனுக்கு, ராசா போல இருப்பான். பெத்த வயித்தை கல்லா மாத்திக்கிட்டு, குழியில எறக்கி வச்சிட்டேன். அவன் போயி சேந்த பொறவு, அவன் பொஞ்சாதி, எம் மருமவளுக்கும் ஒடம்பு சீக்கு வந்துருச்சி. கொழந்த பொறந்த பெறவு, அதே போல, ஒடம்பு உறுகி அவளும் போய் சேந்துட்டா. என்னெவோ ஒட்டுற நோயாமே, அதுன்னு ஊர்க்குள்ளாற பேசிக்கிட்டாங்க. எனக்கென்ன கருமம் தெரியுது. ஊருல எம் மருமவள அடக்கம் பண்ணக்கூட ஒரு மூதியும் வரல. பெரிய மனுசங்க காலுல கைல கெஞ்சி கூத்தாடி எரிச்சேன். நானே குழிக்கு கால நீட்டிக்கிட்டு இருக்கேனே தாயி, அந்த நேரத்தில் இந்த கயலு புள்ளைக்கு வெசஜுரம் வந்து, இழுப்பு வர தொடங்கிருச்சு. இந்த ஆஸ்பித்திரிலயே குத்தவச்சு இருக்கேன், `` என்று அழுத பாட்டியை பார்த்து அஞ்சனாவிற்கு கஷ்டமாக இருந்தது.
அங்காயி பாட்டி வாலிபத்தில் ஐந்து அடி உயரம் இருந்திருக்கக்கூடும். ஆனால் வயது ஓடிப்பிடித்து விளையாடியதில் முதுகு கூண் போட்டிருக்க, உடல் முழுக்க புழுதியோடு வரண்டு சுருங்கிய சருமம், முகமெங்கும் நூறு கோடுகள், தும்பையாய் வெளுத்து உதிர்ந்த தலைமுடியோடு, இரவிக்கை இல்லாது தொங்கும் வற்றிய மார்பகங்கள், ஒட்டிய வயிறும், உலர்ந்த உடலை சுற்றி சிகப்பு நிறம் மங்கி அங்கங்கே நைந்து கிழியும் புடவையை சுற்றிக் கொண்டு, நடக்க ஏதுவாக காய்ந்த கிளையால் செய்த கைத்தடியை தாங்கியபடி, corridor வழியாக மருந்துக்காகவும், மருத்துவமனையில் கொடுக்கும் பிரட் மற்றும் பாலுக்காகவும் நடந்த வெள்ளந்தி மனுஷி, அஞ்சனாவை எங்கும் பார்த்தாலும் நின்று பேசினாள். இரண்டாவது வார்ட்டில் அஞ்சனாவிற்கு வேலை இல்லை. முதல் வார்ட்டை மட்டும் தான் பார்ப்பாள். குழந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக அங்காயி பாட்டி சொல்ல, அஞ்சனா அங்கு சென்றாள். கயல்விழியின் case notes எடுத்து பார்க்க, தாய் தந்தை AIDS நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்க, கயலை HIV பரிசோதனை செய்து, நோய் இல்லை என்று தெரிந்தாலும், பிறப்பாலேயே cerebral palsy இருந்ததால், குழந்தைக்கு விடாது வந்த இழுப்பு நோய்க்கு மருந்து தந்துக்கொண்டிருந்தார்கள். இரண்டு வயது குழந்தைக்கான உடல் வளர்ச்சி இருந்தும் மூளை வளர்ச்சி இல்லை அவளிடம். அந்த குழந்தையை மடியில் கிடத்தி, சங்கில் பாலும் மருந்தும் புகட்டும் போது அங்காயி பாட்டியின் பரிதவிப்பு தெரியும். பாட்டி சாப்பிட ஒன்றும் இல்லாது, அங்கு தரும் பிரட்டையே சாப்பிட்டாள். சில வேலை பக்கத்து அக்கத்து பெட்டில் இருக்கும் குழந்தைகளின் உறவினர் தரும் மிச்சமீதி சாப்பாட்டை சாப்பிட்டாள். ஒரு நாள் சாப்பிட ஒன்றும் இல்லாது, பசியில் சுருண்டு கிடந்தவளுக்கு அஞ்சனா காசு தர, அதில் இருந்து அவ்வப்போது பத்து இருபது என்று தன்னால் ஆன உதவி செய்தாள்.
இப்படி சென்றுக்கொண்டிருந்த நிலையில், குழந்தையின் நிலை பெரிதாக மாற்றம் இல்லாத போதும், fits நின்றதால், இன்னும் ஓரிரு தினங்களில் discharge செய்யலாம் என்ற போது, எப்போதும் கண்ணில் படும் அங்காயி பாட்டியை அன்று காணாது சுற்றி எல்லோரும் தேடினார்கள். மரத்தடியில் துண்டு விரித்து தூங்கிக்கொண்டிருந்த கூட்டத்தில் படுத்திருந்தவளை எழுப்பப்போக, அப்போது தான் தெரிந்தது அவள் இறந்து போன விஷயம். கையில் அஞ்சனா கொடுத்திருந்த பத்து ரூபாயை இறுக பற்றியபடி உயிர் விட்டிருந்தாள். அனாதை பிணம் என்று mortuaryல் சில நாட்கள் வைத்திருந்து, பின்னர் anatomy departmentல் கொடுத்துவிட்டார்கள் அங்காயி பாட்டியை. கயலை ஏதோ கிறுத்துவ தொண்டு நிறுவனத்தின் அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். அங்காயி பாட்டியின் முக சுருக்கமும், சிரிப்பும் மொத்தமாக தொலைந்து போன அவள் வம்சமும், கடைசி மூச்சு வரை அவளால் முடிந்ததை செய்தே கூனேறிய நடையும் சிறிது நாள் பழகினாலும் அஞ்சனாவின் மனதை விட்டு நீங்காது போன இன்னொரு முக அச்சாகி போனாள்.
இதன் பின்னரே Paediatrics பிடிக்காது வெறுப்பு வந்துவிட்டது அஞ்சனாவிற்கு. அடுத்த சில வாரங்களை எந்த விஷயத்திலும் மனதொட்டாது வேலை செய்து முடித்தாள். கடைசி இரவு posting முடித்தால், அந்த வார இறுதியின் பிறகு மகப்பேறு மருத்துவத்திற்கு மாறவேண்டும். அந்த வாரம் முழுக்க, வேலை பளுவாக இருந்ததால், கடைசி நாள் இரவு எப்போது முடியும் என்று காத்திருந்தாள் அஞ்சனா. அன்று இரவு தன்னோடு இருந்தது காயத்ரி அக்கா PG. அவர்கள் நல்ல மாதிரி என்றாலும், வேலையில் ஏதாவது தெரியவில்லை என்று கேட்டால், எந்த உதவியும் செய்யமாட்டார்கள். இரவு 2 மணிக்கு casualtyல் இருந்து emergency case வந்தது என்று தொலைப்பேசியில் அழைத்து சொன்னார்கள். தொடர்சியாக தூங்காது இரவு கண்விழித்து வேலை செய்யும் போது தவறுகள் நிறைய நிகழ வாய்ப்பும், மனது அசதியினால் நடக்கும் விஷயங்களில் அக்கறை செலுத்தமுடியாத படியும் அமைந்து விடும். அப்படி அதிகப்பட்ச உடல் மனச்சோர்வின் பிடியில் தான் அஞ்சனா அன்று இரவு இருந்தாள்.
Casualtyல் இருந்து 12 வயது சிறுவன் கணபதியும் அவன் பெற்றோர்களும், வார்ட்டிற்கு வந்து சேரும் போது, மணி 3 ஆகியிருந்தது. தாய் 35 வயது இருக்கும் போது குழந்தை கருத்தரித்து பிறந்ததால், பிறப்பிலேயே அவனுக்கு Fits வரத்தொடங்கியது என்று சொன்னார்கள். வேறு பிள்ளைகள் இல்லை என்றும் எப்போதும் மருந்துக்கு கட்டுப்பட்டு இருக்கும் கணபதியின் இழுப்பு, அன்று வெகு நேரமாக இருந்துக்கொண்டே இருந்தது என்று சொல்லி தாயும் தந்தையும் அழுதுக்கொண்டே இருந்தார்கள். இரண்டு மணிநேரமாக தொடர்ந்து இழுப்பு வந்துக்கொண்டிருந்ததால், மருந்துகளின் அளவு கூடுதலாகவே தந்தாள். அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாத நிலையில், அஞ்சனா காயத்ரி அக்காவை தொலைப்பேசியில் அழைத்து கேட்க, அவர்கள் இப்போது கொடுக்கும் மருந்தையே தொடர சொல்லிவிட்டு வைத்துவிட்டார்கள். இது ஒரு புறம் இருக்க, அதே சமயம் இன்னும் இரண்டு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக மாற, அஞ்சனா ஒரு வார்ட்டுக்கும் இன்னொரு வார்ட்டுக்கும் ஓட்டமாய் ஓடியபடி இருந்தாள். அதில் கணபதியின் இழுப்பு நிற்காது, இன்னும் அதிகமாகி கொண்டிருக்கிறது என்று அந்த அம்மா இடை இடையே வந்து அழுதுக்கொண்டே இருக்க, எந்த வேலையை செய்வது என்று புரியாது குழம்பிப்போய் நின்றாள்.
இதற்கிடையில் அஞ்சனாவை மற்ற வார்ட்டிற்கு வர சொல்லி தொலைப்பேசியில் அழைத்தப்படியே இருக்க, அவளும் கணபதியை விட்டு நடக்கத்தொடங்கினாள். மணி ஐந்தாகி, லேசாக விடியத்தொடங்கி இருந்தது. குழந்தையின் இழுப்பு நிற்கவே இல்லை. அவளின் குறைந்த அனுபவத்திலேயே, அந்த சிறுவனின் நிலை இப்படியே போனால் தாங்காது என்று புரிந்தப்போதும் என்ன செய்வதென்று தெரியாது விழித்தாள். பாதி வழி போனதும், கணபதியின் தாயும் தந்தையும் அவள் பின்னாலேயே ஓடி வந்து, `` டாக்டர் அம்மா! எங்களுக்கு இருக்கறது ஒரே புள்ள. எப்படியாவது காப்பாத்தும்மா `` என்று காலிலேயே விழுந்த அழ, அஞ்சனாவின் சோர்வும், தூக்கமும், அனுபவமின்மையும் தலைத்தூக்க, இவள் சென்று பெரிய டாக்டரிடம் சொல்வதாக சொல்லிவிட்டு நகர்ந்தாள். பக்கத்து வார்டிலும் ஒரு குழந்தை கவலைக்கிடமாக இருக்க, காயத்ரி அக்காவை தொலைப்பேசியில் அழைக்க, தூக்க கலக்கத்தில் அவர்கள் எரிச்சலோடு பேசினார்கள். அஞ்சனா கணபதியை வந்து பார்க்க சொல்லி அழைக்க, `` அதற்கு மேல் அவனுக்கு செய்ய ஒன்றுமில்லை. இப்படி அனுபமில்லாதவர்களோடெல்லாம் வேலை செய்யவேண்டியிருக்கிறது. சை!`` என்று முகத்தில் அடித்தாற் போல வசை பாடிவிட்டு வைத்துவிட்டார்கள்.
அந்த வார்டின் வேலையை முடித்துவிட்டு திரும்பியவள், நேராக கணபதியிருந்த அறைக்கு சென்றாள். கணபதியின் பெற்றோர்கள் இருவரும் வாயை பொத்தியபடி அழுதுக்கொண்டே இருந்தார்கள். வாய் கோணியபடி, கை கால் இழுத்துக்கொண்டே, நாக்கை கடித்துக்கொண்டு குழந்தை படும் சிரமத்தை பார்க்க அவளுக்கே கடினமாக இருந்தது. பெற்றோர் மனது என்ன சிரமப்படும் என்று புரிந்துக்கொள்ளமுடிந்தது. ஆனால் தொடர்ந்து இழுப்பு வந்தால், உடலில் இருக்கும் எல்லா தசைகளும் வேலை செய்வது நிறுத்தும் என்றும் மூச்சு விடும் தசைகளும் அதில் அடக்கம் என்பதை படித்ததில் அறிந்திருக்கிறாள். சிறுவனின் மூச்சு சிரமமாகிக்கொண்டே இருந்தது. அந்த மூவரும் பார்க்கும் போதே, குழந்தையின் துடிப்பு அடங்கிப்போனது. பெற்றவர்களின் கதறல் அந்த அறையை முழுக்க நிறைத்தது. முழுக்க மனதொடிந்து, அஞ்சனாவாலும் அழுகையை நிறுத்தமுடியவில்லை. அந்த அம்மா, `` ஐய்யோ என் ராசா! என்னையை இப்படி வுட்டுட்டு போயிட்டியேடா! நாங்க என்ன பண்ணப்போறோம் இனிமே `` என்று கதறியது இன்னும் காதில் ஒலித்தது. அந்த குழந்தையை ICU கொண்டுப்போய் ventilate செய்தால், அவன் பிழைத்துக்கொள்ள நல்ல chance உள்ளது என்பது இன்று தெரிந்த அஞ்சனாவிற்கு அன்று தெரிந்திருக்கவில்லை. அநியாயமாக ஒரு உயிர் பிரிந்ததற்கு அவளும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்ச்சி இன்று வரை அவளை தொடர்ந்துக்கொண்டே இருந்தது.
அஞ்சனா கலங்கியபடி படுத்திருக்க, ஜெஃப் அழைத்தான் தொலைப்பேசியில். எப்போதும் இடைவிடாது பேசுபவள், இன்று ஒன்றும் பேசாது இருக்க, ஜெஃப் என்னவாயிற்று என்று கேட்டான். ஒன்றுமில்லை என்று 18வது முறையாக சொன்னவளிடம், வீட்டின் வெளியே வந்து எட்டி பார்க்க சொன்னான். வீட்டில் விளக்கெதும் போடாது, இருட்டு ஹாலில் அமர்ந்திருந்த அஞ்சனா, ஜன்னல் திரைச்சீலையை விளக்கி எட்டிப்பார்த்தாள். இவளோடு பேசிக்கொண்டே வண்டியோட்டி வந்திருந்தான் அவன். வீட்டை பூட்டிக்கொண்டு வந்தவளை ஏற்றிக்கொண்டு கடற்கரையின் ஜெட்டியை நோக்கி ஓட்டினான் அவன். என்னவாயிற்று என்று கேட்டபடி இருந்தவனை பார்த்துக்கொண்டே அமர்ந்தவள், `` எங்கள் வீட்டு பக்கத்தில் நான் எட்டாவது படிக்கையில் ஊருக்குள் நிறைய குரங்குகள் நுழைந்து விட்டது. ஜன்னல்களையோ வீட்டு கதவையோ திறந்து வைக்கவே முடியாது. வீட்டில் இருக்கும் எல்லா சாப்பாட்டு பொருட்களையும் சூறையாடிவிடும், ஆனாலும் தூரத்தில் இருந்து பார்த்து ரசிக்கக்கூடியவை அதன் சேட்டைகள். அப்படி இருக்க, ஒரு முறை, அம்மா குரங்கு ஒன்றை பார்த்தேன், ஜெஃப். குட்டியை வயிறோடு கட்டிக்கொண்டே நடக்கும் குரங்குகள், உனக்கு தெரியுமா? என்றாள்.
ஜெஃப் ஒன்றும் சொல்லாது பார்த்துக்கொண்டே இருக்க, ``அந்த அம்மா குரங்கை பின்னொரு நாள் பார்த்தேன். அந்த குட்டி குரங்கு இறந்து போயிருக்க, அம்மா அதை தூக்கிக்கொண்டே சுத்தியது. நான்கைந்து நாட்கள் தூக்கிக்கொண்டே சுத்திய அம்மா குரங்கிற்கு தெரியவே இல்லை அல்லது குழந்தை இறந்ததை ஒத்துக்கொள்ளவே முடியவில்லை போல. நல்ல வெயிலிலும் மழையிலும் rag doll போல இழுத்துக்கொண்டே போன அம்மாவின் கையிலேயே அந்த குட்டி குரங்கு அழுகிப்போக தொடங்கியது. அதன்பின் அந்த குட்டி குரங்கை எங்கே போட்டது என்று தெரியவில்லை. ஆனால், எங்கள் வீட்டின் அருகே இருந்த மரத்திலேயே அமர்ந்துக்கொண்டு, குழந்தையை தூக்கி இருந்த கைகளை முகர்ந்து பார்த்து மரத்தில் தேய்த்தது, மீண்டும் முகர்ந்து பார்த்து தரையில் இறங்கி காரையில் தேய்த்தபடியே இருந்தது. எதனால் அப்படி செய்தது என்று புரியவில்லை அப்போது. ஆனால் அதன் கைகள் புண்ணாகும் வரை அப்படி தேய்த்து கொண்டது. ஆனால் இன்று எனக்கு தோன்றுகிறது அந்த தாய் குரங்கிற்கு அழுகிய வாடை தெரிந்திருக்காது, அந்த குழந்தையின் வாசத்தை தான் தாங்கொணாது தன்னை தானே ரணமாக்கி கொண்டதோ, என்னமோ. அப்படி ரணமாக உணர்கிறேன் இப்போது `` என்றாள்
ஜெஃப் அமைதியாக சொன்னான், ``நல்ல அம்மாக்களை நான் இதுவரை சந்திக்கவில்லை. எனக்கு உன்னை பிடித்திருக்கிறது. என்னோடே இருப்பாயா எப்போதும்? என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள் அஞ்சனா.

தொடரும்....
யமுனாராகவன்.

7 கருத்துகள்:
படிக்க படிக்க,காட்சிகள் கண் முன்னே வர, கண்ணீர் விட்டேன் பல இடங்களில் ..அருமை,,,
தொடர்ந்து ஒரு வித கனத்துடனே கதை நகர்ந்துகொண்டிருக்கிறது,ஆவலைக் குறைக்காமல்..எல்லாவலிகளையும் தொட்டுச்செல்கிறது..பெற்றோர் மீதான அன்பு,பாட்டியின் மீதான பாசம், காதல்,நட்பு,கடவுள்,வாழ்க்கை,நோய்மை,மருத்துவம் என...நிறைய
awsome ma'am.. aduthadhu eppo,, ennala sathyama wait panna mudiyala... daily indha blog ah open panni paarthitu irukaen,, waiting for ur next post..... :) :)
:)
- NIVI..
ma'am is it possible to hav ur email id,,, am a medical student in europe.. TBILISI STATE MEDICAL UNIVERSITY,, a vry big fan of u,,, i wud lik to contact u ,,, plzzzzzzzzzzzzz plzzzzzzzzzzzzz..tis is my mail id shinobipup@yahoo.com
-NIVI
பிடிக்காத ஜெப் கதாபாத்திரத்தை அருமையாக.. இன்ஜெக்சன் கொண்டு உள்நுழைத்து விட்டீர்கள்.. அற்புதமாக செல்கிறது.. தொடரவும்
ஆனந்த் ராஜ்
miga sirappu
migga sirappu
Post a Comment