பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 12, 2011

கூடு - சின்னப்பயல்

கவிஞர் அறிமுகம்: என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம்." சின்னப்பயல்" என்ற பெயரில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன். கணிப்பொறி மேலாளராகப் பணி புரிகிறேன்.அவை "வல்லினம், யூத்ஃபுல் விகடன்,உயிரோசை, கீற்று மற்றும் திண்ணை" இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன.

கூடு:




எப்போதும் தண்ணீர் சிந்திக்கிடக்கும் முற்றம்,
அவ்வப்போது தலையை சாய்த்து
அடுக்களைக்குள் ஏதேனும் உள்ளதா
என நோட்டம் விடும் காக்கை
அமரும் உடைந்த நாட்டு ஓடு,


அந்த ஓடுகளைச்சரி செய்கிறேன்
பேர்வழி என்று அவற்றில்
பதுங்கியிருந்த தேளிடம் வாங்கிய கடி,
அடுக்களைப் பரணியில் கிடக்கும் உளுத்துப்போன
விறகுகளிலிருந்து உதிரும் மஞ்சள் பொடி,
முற்றத்தில் காரை பெயர்ந்த
தொட்டியின் நீரில் யாருமில்லா
சமயத்து குளித்து கும்மாளமிடும் குருவிகள்,
அருகில் உள்ள வேப்ப மரத்தின் பூக்கள்
காற்றில் பறந்து வந்து விழுந்து கிடக்கும்
சுற்றுக்கட்டு தாழ்வாரங்கள்,
சுற்றி வந்து ஓடிப்பிடித்து விளையாடிய
தாழ்வாரத்தின் தூண்கள்,
தாழ்வார மூலையில் சற்று வீசி ஆட்டினால்
முனகும் ஊஞ்சல்,
எப்போதும் இருட்டியே கிடக்கும் அறைகள்,
அவ்வப்போது கையை கதவு நிலைக்கும்
தலைக்கும் இடையே வைத்து
உயரத்தை அளந்து பார்த்துக்கொண்ட நிலைகள்,
ஓயாம நிலைலயே நிக்காதே என
பாட்டியிடம் வாங்கிய வசவுகள்,
மார்க் ஷீட்டைக் காட்டப்பயந்து
ஒளிந்து கொண்ட பீரோ மூலை, 
என அந்தக்கூட்டிலும்
கொஞ்ச நாள் இந்த உயிர்
நிலை கொண்டிருந்தது. 




 - சின்னப்பயல்
 

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com