பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 19, 2011

தேவதையின் வீடு - புஹாரி ராஜா


தேவதையின் வீடு:


 கொஞ்சம் விவரம் தெரிந்த காலங்களில் எங்கள் தெருவில் புதுசா யாராவது வீடு கட்டினால் ஐஸ் பாய் விளையாடிய வீடு,ஐஸ்பாய் விளையாட ஆள் குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த வீட்டு மண்ணை எடுத்து ஆளுக்கு ஒரு கோவிலையோ வீட்டையோ கட்டி அதற்கு நாலு பக்கமும் வாசல் வைத்து (ஒரு வேளை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாலு வழி இருப்பதனால் இந்த பழக்கம் வந்ததா என தெரியவில்லை)மறுநாள் வரை யாரும் இடிக்காமல் இருக்க கொஞ்சமாக நெருஞ்சி முள்ளையும் கருவேலை முள்ளையும் எடுத்து  பாதுகாத்த வீடு...


 மூன்றாவது படிக்கும் போது முத்தமிழ் மன்றத்தின் போட்டிகளுக்காக நானும் ,முன் பெஞ்சு பவித்ராவும் ஒரே அணியாக இருந்தோம்..நான் பேச்சுப்போட்டியிலும் அவள் கட்டுரை ஓவிய போட்டியிலும் பெயர் குடுத்து இருந்தாள்,,கட்டுரை போட்டி முடித்து விட்டு அவள் உடம்பு சரி இல்லாததால் அவளுக்கு பதிலாக ஒரே ஒரு முறை நான்  கலந்து கொண்ட ஓவியப்போட்டியில்..தலைப்புஇயற்கை காட்ட்சிகள்”..எனக்கு படமே வரைய தெரியாது ..இருந்தாலும் ஒரு சூரியன் அதுவும் மலையில் படுத்திருப்பது போல ,ஆங்கில  எழுத்து V இல் vvvv போட்டால்  நான்கு பறவை, கொஞசம் செடி ஒருவீடு ,என எளிதாக வரைந்து விடலாம் என முடிவு செய்து வெறும் கோடுகளை மட்டுமே வைத்து நான் வரைந்த வீட்டிற்கு மூன்றாம் பரிசு கிடைத்தது,,,வீடு வரைவது ரொம்ப எளிதாக பட்டது எனக்கு ..பக்கவாட்டில் ரெண்டு கோடுகள்..கூம்பு போல இரண்டு கோடுகள்..இரண்டையும் இனைப்பதற்கு ஒரு கோடு..சின்ன கட்டம்..அதற்கு குறுக்கும் நெடுக்குமாக கட்டங்கள் வரைந்தால் அது சன்னல்..பெரிய கட்டம் போட்டால் அது கதவு,,இது தான் நான் வரைந்த வீடு...

டி.வி. பார்க்க பக்கத்து தெருவிலிருக்கும் மனிகண்டன் வீட்டுக்கு போவதுதான் வழக்கம் ...அப்படி ஒரு நாள் 13ம் நம்பர் வீடு படம் பார்த்து ரெண்டு நாள் காய்ச்சலில் கிடந்து சினிமாவில் என்னை பயமுறுத்திய வீடு..

எங்கள் தெருவிலேயே முதல் வீடு ,அதுவும் பெரிய வீடு ஒன்று எப்போதும் பூட்டியே கிடக்கும்..பெரியாஸ்பத்திரி நர்ஸ் ஆக  இருந்த அம்மா  மற்றும்  மகளை, நகைக்காக யாரோ கழுத்தை அறுத்துட்டு போயிட்டதாகவும்,அதன் பின் யாருமே பயன்படுத்தாமல் எப்போதும் இருட்டடைந்தபடியே இருக்கும்...இதை எல்லோருடை செவி வழி செய்தியாகத்தான் எனக்கும் கிடைக்கப்பட்டது..அதன் பின் வீட்டுல இருந்து எந்த வேலை விஷயமா இரவு ஏழு மனிக்கு மேல் அந்த வீட்டை தாண்டி போக வேண்டும் என்றால் என் அக்காவை துனைக்கு கூட்டிட்டு  போய் வருவதும்..இல்லை என்றால் 5 காசு தேன் மிட்டாய் 5 வாங்கி தரேன் என பக்கத்து வீட்டு ரபீக்கையும் கூட்டிக்கொண்டு போவேன்..இருவரும் இல்லாத சமயங்களில் சாதாரணமாக ஐந்து நிமிடத்தில் கடக்க வேண்டிய அந்த வீட்டை ,ஊரில் இருக்கும் எல்லா சாமியையும் துணைக்கு கூட்டிக்கொண்டு கண்னை மூடிக்கிட்டு இரண்டே நிமிஷத்தில் ஓடி வந்து விடுவேன்.இது நேரில் பயமுறுத்திய வீடு...

           எங்க ஊரில இருந்து தினமும் டவுனுக்குள்ள வந்து கறிக்கடை போடுவதற்கு சிரமமாக இருப்பதால் வீட்டை கொஞ்சம் நகர்ப்புறத்திற்கு மாத்திக்கலாம் என்பதால் வாடகைக்கு வீடு  தேட ஆரம்பித்தனர் அப்பாவும் அம்மாவும்....தொன்னூறுகளில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களும்,முஸ்லீம் வீட்டு ஆளுக சுத்தமாக இருக்க மாட்டாங்க,அதுவும் கறிக்கடை வேற... ஆடு குட்டிய புழக்கத்துல விட்டா அசிங்கம் பன்னிரும் என எல்லா காரண காரியங்களும் எங்களுக்கு எதிராகவே இருந்தன,,,கடைசியில் ஒரு வயசான அய்யர் வீட்டு மாமியின் வீடு,அவர்களின் மகள் வெளிநாட்டில் கல்யாணம் பன்னி குடுத்து விட்டதால் அவர்கள் வீட்டில் கிடைத்தது அதுவும் சுற்றி உள்ள வீடுகளை விட அம்பது ரூபா அதிகமான வடகையில்... அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் தொடர்பை ஏற்படுத்தி ,எங்களுக்கு மட்டுமில்லாமல் சுற்றி இருந்தவர்களுக்கே ஆச்சர்யமாக தான் இருந்ததாம்..ஊறுகாய் போட்டு விற்கும் அந்த அய்யர் மாமி தான் பின் நாளில் என் தங்கச்சி பிறந்ததும் சீனி தன்னி வச்சவர்...பள்ளிக்கூட ஆண்டுவிழாவில் என் தங்கச்சி ஏதாவது சர்டிபிகேட்டை கையில் பிடிச்சுட்டு வந்தால், எல்லம் அய்யர் மாமி வச்ச சேனை எனபது எங்கள் வீடுகளில் ஒலிக்கும்போதெல்லாம் அந்த வீட்டின் நினைப்பும் வந்து விடும்... என்னை கையில் பிடித்துக்கொண்டும் என் தம்பியை இடுப்பில் வைத்துக்கொண்டும் அலைந்த என் அம்மாவின் அலைச்சல்,சமீபத்தில் சொந்தமாக வீடு கட்டிய பின்பும் மாறாமல் இருப்பதாக தான் அப்பா சொல்லுவார்...இப்படி தெருவுக்குள சமத்துவத்தை வளர்த்த வீடு...

      ஏதாவது கட்டுரை போட்டிக்கோ ,பேச்சுப்போட்டிக்கோ ஜெயித்து விட்டால் கோப்பையோ இல்லை பாராட்டு சான்றிதழ் தான் கிடைக்கும்...மேலூரில் நடந்த ஒரு கட்டுரை போடியில் இரண்டாவது இடம் கிடைத்ததற்கு பரிசாக கிடைத்த புத்தகம் தான் ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்..அதன் கதாபாத்திரங்களான் துரைக்கண்ணும்,வெளி ஊர்காரரும்..லாரி கிளினரும் மறக்க முடியாதவை..நான் முதன் முதலில் படித்த புத்தகமும் அதுதான்...புத்தகத்தின் மூலமாக வீட்டுக்குள் வாழ்ந்த அனுபவத்தை குடுத்தது ஜெயகாந்தனின் வீடு..
ஆனால் இவை எல்லாமே நான் பார்த்து கேட்ட படித்த வீடுகளாக ,...மேலே சொன்ன எல்லா வீடுகளிலுமே சாதாரண மனிதர்கள் வாழ்ந்ததை தான் பார்த்திருக்கிறேன்...தேவதைகள் வாழும் வீட்டை பார்த்தது திருச்சியில் தான்..

 எனக்கு முதல் வேலை கிடைத்தது திருச்சியில் தான் ,,என் நண்பன்  காரைக்குடி ஜீவா அங்கே படித்து கொண்டிருந்ததால் அவனோடு சேர்ந்து தங்கிக்கொள்ள சொன்னான்...டி.வி.எஸ் டோல்கேட் பக்கத்துல தான் மாடி  வீடு ..மேலே  வீடு கீழே நான்கு கடைகள்..ஆஸ்பெஸ்டா சீட் போட்டு இருக்கும்..வீட்டில் என்னையும் சேர்த்து  ஆறு பேர்..இதன் வாடகை 800 ரூபாய்ஒரு ஹால்.ஒரு அடுப்பறை.கொஞ்சம் வராந்தா..சுவரில் முதல் செமெஸ்டெரின் அரியர் முதல் கடைசி செமெஸ்டரின் கடைசி பரிட்சை வரைக்கான அட்டவனை,அசாருதீனின் படமும்,கங்குலி வலக்கை ஆட்டத்தை வெளிப்படுத்துவது போன்ற ஒரு ஃபுலோ அப்,பக்கத்திலேயெ தன்ராஜ் பிள்ளையின் ஹாக்கியுடன் கூடிய ஃபுலோ அப்..,ஆர்ட்டின் வரைஞ்சு அதுல பிரியா னு பெயர் எழுதி அம்புவிட்ட ராமன் என ஒரு சித்திரம்,ஒரு மூலையில் இரண்டு டம்புள்ஸ் ,ஒவ்வொரு பக்கங்களாக கிளிக்கப்பட்டு மொத்தமாக சேர்த்துவைக்கப்பட சுகம் தரும் சுகந்தி இதழ்..நான்கு ஐந்து கட்டுகளின் சீட்டுகட்டு கலவை..அலமாரியில் ஒவ்வொரு செமெஸ்டெரின் புத்தகங்கள்...போர் அடிச்சா சமைப்பதற்காக ஒரு ஏர் ஸ்டவ்..அவசரதேவைக்காக ஏதாவது பொருளை அடகு வைத்த பைனான்ஸ்கடை ரசீது,முருகன் படம் போட்ட பழைய காலண்டர் அட்டை..சாமி கும்பிடுவத்ற்காக,வி...,..ஸ் என எல்லா அரசுத்தேர்வுகளுக்குமான மாதிரி வினா புத்தகங்கள்,ஒரு டேப்புடன் கூடிய ரேடியோ என கிட்டட்த்தட்ட எல்லோரது கனவுகளின் உலகமாகதான் அந்த வீடு

முதல் நாள் எல்லோருடனும் அறிமுகம் செய்து கொண்டேன் ,மொத்தம் இரண்டு சுரேஷ் இருந்தனர்,,ஒருத்தனுக்கு பெயர் ஜிம் சுரேஷ்.எப்போது ஜிம்மே கதி என கிடைக்கும் பயில்வான்.சொந்த ஊரு தஞ்சாவூர்..இன்னொரு சுரேஷை அடையாளப்படுத கடல் மானிக்கம் என அவன் அப்பா பெயரை தான் கூப்பிடுவார்கள் இவனுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை...இன்னொருவன் பெயர் வெங்கடேஷ் சொந்த ஊரு விருதாச்சலம்..இவன் தான் இந்த வீட்டின் நிர்வாகம் முழுதும்..கரண்ட் பில், வீட்டு வாடகை ஆரம்பிச்சு ஒயின்ஷாப் எவ்வளவுக்கு சைட் டிஷ் வாங்கிருக்கோம் என்பது வரை கணக்கு வைத்து கொள்பவன் ,ஆனால் குடிப்பழக்கம் இவனுக்கு இல்லை...ஒர் தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறான். ..நான்காமவன் முத்துவேல்..அருப்புக்கோட்டைகாரன்.... இவர்களோடு மதுரைக்காரன் நானும்....இது போக பரீட்சை நேரங்கள்,திருச்சியில் ஏதேனும் விஷேஷங்களுக்காக வந்து செல்லும் சொந்த ஊர்  நண்பர்கள் என திடீர் திடீர் என கூட்டம் கூடும்..

                    தூங்கி எழுந்த முதல் காலை ,நான் கண் முழித்து பார்த்தபோது எல்லோரும் அவ்வப்போது ஜன்ன்லை பார்ப்பதும் போவதும்மாக இருந்தனர்..,,கொஞ்ச நேரத்தில் நானும் ஜன்னல் வழியாக பார்த்தேன்,,எதிர் வீட்டுல ஒரு பொண்ணு கோலம் போடுக்கொண்டிருந்தாள்..தீடிரென எங்கள் ஜன்னலை பார்த்ததும் விளக்கமாத்தை ஓங்கி சரி செய்து கொண்டாள்...

      ”என்னங்க மாப்ள இந்த எதிர்த்த வீட்டு பிள்ளை ரொம்ப கோவக்காரியோ ?” னு கேட்டேன்..
வாங்க மாப்ள நீங்களும் ஜோதில ஐக்கியமாயிட்டீங்க போலயே,,,
பேரு ஜோதி பனிரெண்டாவதுல ரெண்டு அட்டெம்ப்டு ,,டுடோரியல் காலேஜ் படிக்குது ஆனா பகுமானத்துக்கு மட்டும் குறைச்சல் இல்ல...,நீங்களும் வேடிக்கை மட்டும் பாருங்க மாப்ள..விளயாடனும்னு நினைச்சுராதீங்க...வீட்டுல எல்லாம் தடி மாட்டு பயலுக..பஞ்சாயத்து ஆயி தூக்கி போட்டு மிதிச்சாங்கெனா சானி வந்துரும் என எனக்கு கிளாஸ் எடுத்துக்கொண்டிருந்த போதே மனி ஒரு ஏழு ,ஏழு முப்பது இருக்கும்..வெங்கடேஷ் சோகமாக ரூமுக்குள் வந்தான்,,,

  ”இன்னைக்கு என்னடா காரி துப்புனாளா? இல்லை திட்டிகிட்டே போனாளா..பாவம்டா அந்த புள்ள...”என அவன் சொல்ல சொல்ல..
எதுவும் பேசாமல் போய்விட்டான் வெங்கடேஷ்....

     “ஆமாடா நீ அங்க போயி அந்த பிள்ளைய வேடிக்கை தான் பார்க்கபோற, ஏற்கனவே மூனு வருஷமா பார்த்துகிட்டு தான் இருக்க...இன்னைக்கு பார்க்கலைன்னு தன் குறைஞ்சு போச்சோ.....நீ திட்டு வாங்குறது மட்டும் இல்லாம கூட வர்றவங்கலயும் அந்த கிழி கிழிக்கிறா ,அவ விட்ட சாபமோ என்னமோ தெரில எனக்கு ஃபர்ஸ்ட் இயர்ல விழுந்த இங்லிஷு பேப்பர்  கடைசி வருஷம் வந்தும் அரியர்லயே  கிடக்கு” ..என பேசிக்கொண்டிருந்தனர்...

அப்போது நான் குறுக்கிட்டு என்னவென கேட்டேன்...”இல்ல மாப்ள சர்க்கியூட் ஹவுஸ்  கிட்ட ஒரு பிள்ள ,சும்மா டக்கரா இருக்கும்.பேரு சிந்து..அது ஒரு பயலயும் நிமிந்து கூட பார்க்காது.ஒன்றரை வருஷமா பின்னாடியே போயிட்டு இருக்கான்..இன்னும் ஒரு வார்த்த கூட பேசல...கேட்டா லவ் பன்றானாம்...வாரத்துக்கு ஒரு தடவை அந்த பிள்ளைக்காக வார வாரம் லவ்லெட்டர் எழுதிக்கிட்டு அதை கூட குடுக்க முடியல.அவளுக்காகவே அந்த ஏரியாவுல நாலாவது அஞ்சாவது படிக்கிற பயலுகள எல்லாம் ஃபிரண்டு புடிச்சு வச்சுருக்கான்..தினமும்  காலையில  சம்பளம் இல்லாம செகியூரிட்டி வேலை பார்த்துகிட்டு இருக்கான்..இதுல துணைக்கு வேற ஒரு ஆள்.ஆனா ஒன்னு கூடப்போனா ரெண்டு வடையும் ஒரு டீயும் கன்ஃபார்ம்”..என சலிப்புடன் சொல்லி முடித்தான் முத்து வேல்...

  தண்ணி அடிக்கனும்னு முடிவு பன்னிட்டா ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடித்து தானே ஆகவேண்டும்,ஒரு மாசத்துக்கு முன்னால சுரேஷ் அக்காவுக்கு குழந்தை பொறந்ததை கொண்டாடுவதற்கு அந்த வார சனிக்கிழமை ஒரு கிங் ஃபிஷர் பீரும்..ஒரு ஃபுல் லும் வாங்கி வந்தனர்...ஆறு பேரும் மொட்டை மாடிக்கு போயிட்டோம்... தன்னி அடித்த அன்னைக்கு எல்லோருக்கும் ஊறுகாயாய் இருந்தது வெங்கடேஷின் ஒரு தலை காதல் மட்டும் தான்..

எப்படி மாப்ள அந்த பிள்ளை இருக்கும் என நான் கேட்டேன்....
கன்னம் மொத்து மொத்துனு இருக்கும்..நல்ல தீ கலர் மாப்ளஎன சுரேஷ் சொல்ல,,,

 என்னயா? இவன் ஆள நீங்க வருனிச்சுகிட்டு இருக்கீங்க என நான் கேட்டேன்...

 "வேணும்னா நீ கூட ப்ராக்கெட்டு போடு மாப்ள,ஊத்து தண்ணிய யார் குடிச்சா”........ என சொல்ல ஆரம்பிக்க

டேய் அது உங்க தங்கச்சிடா எனக்கும் அவளுக்கும் தான் கல்யாணம் நடக்கும்.அப்போ 
எவனையும் கல்யாணத்துக்கு கூப்பிட மாட்டேன் டா
 எவனா இருந்தாலும் கல்யாண் கேசட் குடுத்து விடுறேன்,,வீட்டுலயே  பார்த்துக்கங்க”...என
நாங்க பேசிய பேச்சுக்களை மனசுல வச்சு சொன்னான்...


”ஆமா தொங்கச்சி ..இத மட்டும் வேகமா சொல்லுடாஎன அரட்டை முடிந்து தான் தூங்க போனோம்

மறு நாள் ,,சீக்கிறமே எந்திருச்சுட்டேன்..வெங்கடேஷ்செகியூரிட்டுவேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்,,,

மாப்ள நானும் வரவா?னு கேட்டேன்.

யாரு போனா என்ன வேடிக்கைதான பார்க்க போறோம்..சரி வாங்க என என்னையும் சேர்த்துக்கொண்டான்.எங்களின் நோக்கம் எல்லாம் 21 g பொன்மலை பஸ் போறதுக்குள்ள பஸ்ஸ்டாப்புக்கு போய் ஆக வேண்டும்...ஒருவேள சீக்கிறமே நாங்க பஸ்ஸ்டாப்புக்கு போயிட்டா அப்படியே பொடி நடையாய் அந்த பொண்ணுடைய வீடு இருக்குற தெரு வரைக்கும் நடந்து போய் வருவோம்...
அந்த பொண்ணு பஸ்ஸடாப்புக்கு வந்துவிட்டால் எதிரே இருக்கும் டீக்கடையில் எனக்கு இரண்டு வடையும் டீயும் வாங்கி தருவான்..சனி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வீடு வரைக்கும் போய் ஜன்னலை  மட்டும் பார்த்துவிட்டு வருவது உண்டு..

    இவனது வேலை அந்த பெண் வருவதை பார்ப்பது மட்டும் தான்..சில நாட்கள் நடந்து வரும்..சில் நேரங்களில் ஸ்கூட்டியில் அந்த பொண்னோட அப்பா கூட்டி வந்து இறக்கி விடுவார்,,,முதன் முதல்ல அந்த பொண்ன அப்பா கூட பார்க்கும்போது எனக்கு சிரிப்பு விட்டது..

“.என்ன மாப்ள அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கு..வீட்டூல ஏதோ தப்பு நடந்துருக்கோ?
என நான் கேட்க.. ரொம்ப பொறுமையாக சொன்னான்..

மாப்ள அப்படில்லாம் பேச கூடாது என் மனசு கஷ்டப்படும் ல...என் ஆளு அப்படியே என் அத்தை மாதிரி மாப்ள,, ,,ஒரே பொண்ணு எப்டி தேவதை மாதிரி பெத்துருக்காங்கெ..” னு சொன்னான்...

அப்போ அந்த ஸ்கூட்டியில முன்னாடி உட்கார்ந்து போன பொம்மேரியன் நாய்க்குட்டிய விட்டுட்டயே மாப்ள...உன் ஆளுக்கென்ன மனசுலஆசைசுவலட்சுமினு நினைப்பா?”.

இப்படி தினம் தினம் ஏதாவது கூத்துகள் நடந்து கொண்டே இருக்கும்....ஆனால் ஒரு நாள் கூட இவன் இந்த பிளளைகிட்ட பேசுனதே கிடயாது...அந்த பொண்ணோ தூரத்துலயே நாங்க நிக்கிறத பார்த்துட்டு மனசுக்குள்ளயே திட்டிகிட்டு தான் போகும்,,இப்படியே ஆறுமாசம் போயிருந்தது...

சரி மாப்ள ,உன்ன தான் அந்த பிள்ள கண்டுக்கவே இல்லையே..வேற எவனையும் லவ் பன்னுதா?

இல்ல ,ஏரியா பசங்க கிட்ட எல்லாம் விசாரிச்சுட்டேன் யா...இது வீட்ட விட்டே வெளில வராது.அப்படியே எவனாச்சும் அந்த பிள்ளை வீட்டை பக்கம் வந்தா, அண்ணன் லவ் பன்றாரு னு சொல்ல சொல்லிருக்கேன்


,அப்போ ஒரு வேள நீங்க ரெண்டு பேருமே லவ் பன்றீங்கனு வச்சுக்க,பின்னால ஜாதி பிரச்சனை அப்படி இப்படினு வந்தா என்னா பன்னுவ..?

அதுக்கு வாய்ப்பே இல்ல மாப்ள,

எதுக்கு வாய்ப்பு இல்ல ,அந்த புள்ள உன்னய லவ் பண்றதுக்கா? இது நான்

ம்ம்ம் என் கூட இருக்குறவங்கெளுக்கு மட்டும் வாயில நல்ல வார்த்தையே வராதாடா?
 அவுங்க குலசாமி யும் எங்க குலசாமியும் ஒன்னுதான்...எங்க வீட்டுல நான் ஒரே பையன் தான் அதுனால கல்யாணம் பன்னி வச்சுருவாங்க

சரி கடைசி வரக்கும் அந்த புள்ள லவ்வே பன்னலன்னா என்ன பண்ணுவ,?

”அப்படி நினைச்சுருந்தா எதுக்கு மாப்ள ஒன்றரை வருஷம் இவ பின்னால போகனும்...கல்யாணம் பன்னுனா இவள தான்..இல்லைனா கலயாணமே இல்ல மாப்ள’

பேசுறதுக்கு வேணும்னா ,நல்லா இருக்கும் மாப்ள,,எது நடக்குமோ அத பேசுங்க நு சொன்னேன்
அப்படி ஏதாச்சும் நமக்கு எதிரா நடந்துச்சுனா ,நீங்க பார்க்க தானே போறீங்கனு அவனும் என்னை சமாதானபடுத்தினான்..

அப்போ  நம்மள ,அந்த பிள்ளைக்கு பிடிச்சா போதும் அடுத்து கல்யாணம்,அப்படிதானே.. இது நான்

நம்மள இல்ல மாப்ள என்னய... இது அவன்

நீயும்   பார்க்க நல்லா தான் இருக்குற ,கிட்டத்தட்ட ஒன்றரை ,இரண்டு வருஷமா அந்த பிள்ளய சுத்திக்கிட்டு இருக்க..அது மதிக்க கூட மாட்டேங்குது..அப்படி அவகிட்ட என்ன தான்யா பிடிச்சுருக்கு?இதுல ஒரு மூனு மாசம் உன் கூட ஒரு பொம்மேரியன் நாய் குட்டி கூட்டி வந்திருந்தா,அது கூட அவுங்க வீட்டு நாய்குட்டிய  கரெக்ட் பண்ணியிருக்கும்..
அவன் அவனுக்கு லவ் பன்னுனதுக்கு அப்புறம்தான் ஆயிரம் பிரச்சனை வரும்..உனக்கென்னனா லவ் பன்ற  பிள்லையே பிரச்சனையா இருக்கு... ..இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க போற..நல்லதோ கெட்டதோ பேசி பார்த்துரு மாப்ள...என எவ்வளவு சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை..

இப்படித்தான் ஒரு நாள் காலையில பஸ்ஸ்டாப்புக்கு போகும் போது..
 ”ஏ சிந்து உன் கிட்ட என் ஃபிரண்டு பேசனுமாம்என சொல்லி நான் விலகிக்கொண்டேன்..இது அவனுக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது...

இருவருக்கும் ஒரு பத்து அடி தூரம் இடைவெளி இருந்தது...
இனிமேல் பின்னாடி வந்தா போலீஸ் கிட்ட சொல்லிபுடுவேன் என மிரட்ட
இவன் ஏகத்துக்கும் அசிங்கமாக திட்டிவிட்டு வந்து விட்டான்..
.த்தா..இவளுகளுக்கெல்லாம் ஏமாத்திட்டு போறவந்தான் மாப்ள பிடிக்கும்...இனிமேல் இவள பார்க்க வரவே கூடாது என சொல்லிக்கொண்டே என்னை கூட்டி வந்து விட்டான்,,,

”என்னா மாப்ள சின்ன பிள்ளை மாதிரி தாத்தா கிட்ட சொல்லிகுடுத்த்ருவேன் போலீஸ் ல சொலிகுடுத்துருவேனு மிரட்டுது...நல்ல வேள செருப்ப கழட்டி அடிக்கலைனு சந்தோஷப்படு யா ..ஒரு பூச்சாண்டி அளவுக்கு பயமுறுத்தி வச்சுருக்க அவள என ஒவ்வொருத்தனும் போன் போட்டு விசாரிக்குமளவுக்கு அன்று முழுதும் அறையில் சிரிப்பொலி தான்........

அதன் பின் ஒரு இரண்டு நாள் அவளை பார்க்க போகவில்லை..சரி திருந்திட்டான் னு எங்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது...மூன்றாம் நாள் வழக்கம் போல யார்கிட்டேயும் சொல்லாமல் போய்விட்டு வந்தான்..ஆனால்  எல்லோருக்குக்கும் தெரிந்து அவனிடம் கேட்டபோது சொன்னான்..

எல்லா பயலுக்கும் பாத்ரூமுக்குள்ள தனியா தப்பு பன்னும்போது சுகமா தான் இருக்கு,சுகம் முடிச்சதும் இனிமேல் இது மாதிரி தப்பு பன்ன கூடாதுனு தான் முடிவு பன்றான் அதுக்கு பிறகு தப்பு பன்னாமலா இருக்காங்கெ...போங்கடா..என சொல்லி கோபபட்டுக்கொண்டான்...திரும்பவும் எனக்கான டீ வடை பாட்டா தொடங்கியது...
சும்மாவும் சொல்லகூடாது நிஜாமாகவே அந்த பொண்ணுக்காக உசுர குடுக்க சொன்னாலும் செய்வான்..அந்த அளவுக்கு  தான் லவ் பண்ணினான்...ஸ்ரீ ரங்கம் போகும் போதும் மலைக்கோட்டை போகும்போதும் குடும்ப உறுப்பினராக சேர்த்து தான் அவளுக்காவும் வேண்டிக்கொள்வான்...
நாங்கள் எல்லாம் விளையாட்டுக்கு அவன கிண்டல் பண்ணுனாலும் எங்க எல்லோருடைய ஆசை,எதிர்பார்ப்பு எல்லாம்  அந்த பொண்ணு அவனுக்கு கிடைக்க வேண்டும் என்பது தான்.அதே நேரம் அவ கிடைக்காம போனால் இவனும் வழி மாறி போய்விடக்கூடாது என்கிற பயமும் இருந்தது...

 ஒரு ஞாயிற்றுக்கிழமை இருக்கும்...சிந்துவின் வீட்டுப்பக்கம் நானும் வெங்கடேஷும் வந்து கொண்டிருந்தோம்...வீட்டு கதவில் பொம்மேரியனை கட்டி போட்டு இருந்தார்கள்..எதிரே தெரு குழாயில்  தண்ணி பிடித்துக்கொண்டிருந்த சிந்துவின் அம்மா எங்களை பார்த்ததும் அருகே கூப்பிட்டது..
தம்பி இங்க  வாங்க....

    நீங்க என் பொண்ண பின்னாடி சுத்திக்கிட்டு இருக்குறது தெரியும்பா...
நீங்க எங்க எங்க நிக்கிறீங்க..போன வாரம் காலேஜ் வரைக்கும் போனது .எல்லாமே என்கிட்ட சொல்லிருவா என் பொண்ணு..
    இவளுக்கு நாங்க பார்த்து வைக்கிற மாப்ள தான்..
இவளுக்கு பத்து வயசு இருக்குறப்போ  . நாங்க அரியமங்கலத்துல தான் குடி இருந்தோம்..சொந்த ஊரும் அது தான் .இவளுக்கு நேர பெரியவ கல்பனா என் பெரிய பொண்ணு .......ஊருக்குள்ள ஒரு பையனை காதலிச்சுருக்கு அப்போ நாங்க ஏதும் ஏத்துக்கல ரொம்ப பிரச்சனை பண்ணிட்டோம்..ஒரு நாள் வீட்டுல சின்னவ மட்டும் இருந்தப்போ மண்ணெணைய ஊத்திக்கிட்டா...அதை நேருல பார்த்தவ தான்....இன்னிக்கு அவளுக்கு வயசு 19..இப்போ வரைக்கும் நான் தான் அவளுக்கு  சோறு ஊட்டி விடுறேன்,இவளயும் நாங்க கல்பனானு தான் வீட்டுல கூப்பிறது...
        ஊருல ராஜாமாதிரி இருந்தோம் வெளியில தலைகாட்ட முடியாதே னு சொந்த வீட்டை விட்டுட்டு திருச்சிக்கு வந்தோம், சரி ,நீங்களும் படிக்கிற பையன் ,பிரச்சனை பன்னுனா உங்க வாழ்க்கை போயிரும் னு தான் சும்மா இருக்கோம்..இனிமேல் தொந்தரவு பன்னாதீங்க. ” சொல்லிக்கொண்டிருந்ததை அமைதியாக கேட்டுக்கொண்டவன்.. அவுங்க அம்மா கிட்ட பேச ஆரம்பிச்சான்..

     அக்கா தப்பா எடுத்துக்காதீங்க..எனக்கு சிந்துவ ரொம்ப பிடிக்கும்..என்னைக்குமே விளையாட்டா உங்க பொண்ணு பின்னால சுத்துனது இல்ல.....உங்க பொண்ண தொந்தரவு பண்ணனும் அப்படிங்குற  எண்ணமும்  இல்லை...திருச்சியில தான் கிரானைட் கம்பெனியில டிப்ளமா முடிச்சுட்டு சூப்பர்வைஸரா இருக்கேன்.ஊருல சொந்த நிலம் இருக்கு...உங்க பொண்ணையும் நல்லா பார்த்துக்குவேன்,,,.உங்களுக்கு என்ன பிடிச்சுருந்தா எங்க வீட்டுல இருந்து வரசொல்லுறேன் உங்களுக்கு பிடிக்கலைனா உங்க பொண்ணை நான் பார்த்த கடைசி நாள் இது தான் என அவன் பேச பேச எனக்கு ஆச்சர்யமாகவும்..சந்தோஷமாகவும்..அதே நேரம் அந்த அம்மாவின் பதில் எப்படி இருக்கும் என்கிற பதட்டமும் இருந்தது....
 இது சின்ன பசங்க பேசி முடிவு பன்ற விஷயம் இல்ல எதுவா இருந்தாலும் சரி வீட்டுல இருந்து வரசொல்லுங்க என சொல்ல நாங்களும் கிளம்பிவிட்டோம்...அன்னைக்கு முழுவதும் ரொம்ப சந்தோஷமாக இருந்தான்...”பிள்ளய மடக்க முடியல, அவ அம்மாவ மடக்கிட்டயே டா”  என மெப்பனைக்காக நாங்க சொன்னாலும் ,உண்மையிலே எங்க எல்லோருக்குமே சந்தோஷமாக தான் இருந்தது...கூடவே அந்த பொண்ணு குடுத்துவச்சவ என மனசுக்குள்ளே எல்லோருக்கும் பொதுவாகப்பட்ட விஷயம் அது.....
  சரியாக ஒரு மாசம் போயிருக்கும் ,,வெங்கடேஷின்  வீட்டிலிருந்து அவனது சித்தப்பா வந்திருந்தார்,,,அவரை கூட்டிக்கிட்டு அந்த பொண்னோட வீட்டுக்கு போனான்....அவர்களின் பேச்சில் இருவரும் ஏதோ வழிமுறையில் தூரத்து சொந்தங்களாகவே அறிமுகாகி கொண்டனர்..ஒரு வருஷ படிப்பு முடிஞ்சதும் தேதி வச்சுக்கலாம் என நிச்சயதார்த்தம் செய்யாத குறையாக பேசிக்கொண்டதாக சொன்னான்..அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு மதிய சாப்பாடு மாமியார் வீட்டினுடையதாக தான் இருந்தது..
  முன்பு பார்த்த சிந்துவுக்கும் இப்போது பார்க்கும்  சிந்துவுக்கும் ஏகப்பட்ட மாற்றங்கள்,சாயங்காலங்களில்  இருவரும் சேர்ந்தே நாய்க்குட்டியோடு வாக்கிங் போவது ,எப்போதும் அந்த நாய்க்குட்டியை கொஞ்சிக்கொள்வது தான் அவள் பொழுதுபோக்கென சொல்லி இவனும் தெரு நாய்க்கெல்லாம் பிஸ்கட் போட ஆரம்பித்தான்..
   இவர்கள் இருவரையும் காதலர்கள் என்று பார்ப்பதை  விட வருங்கால கணவன் மனைவியாக தான் எங்களுக்கு தோணும்..
    அதன் பிறகு கொஞ்ச நாட்களிலே எல்லா பயலுகளுக்கும் கல்லூரி முடிவடைந்து விட்டதால் சொந்த ஊருக்கு போய்விட்டனர்,,,எனக்கும் மதுரைக்கே டிரான்ஸ்ஃபர் கிடைச்சதால் நானும் வந்துவிட்டேன்..அந்த ரூமில் அவன் மட்டுமே தங்கி இருந்தான்..அடுத்த  ஒரு மாசத்துல அடுத்த செட் காலேஜ் பசங்க வரவும் அவர்களோடு சேர்ந்து தங்கி இருந்தான்..
  திடீரென ஒரு நாள் போன் பன்னி ஒரு 5000ரூபாய் ரெடி பண்ணி குடுக்குமாறும் சம்பளம் வந்ததும் மாத்தி விடுரேன் னு சொல்லி கேட்க நானும் மனி ஆர்டர் பண்ணி இருந்தேன்..   நான்கு நாள் கழிச்சு ,பிப்ரவரி 25 வெள்ளிக்கிழமை காலையில ஆறு மனி இருக்கும்  ஜீவா எனக்கு போன் பன்னி எதுவுமே சொல்லாமல் உடனே திருச்சி கிளம்பி சிந்து வீட்டுக்கு வர சொன்னான்..

     நானும் போனேன்..வீட்டு முன்னால கொட்டகை போட்டுக்கிட்டு இருந்தனர்....என்னால் யூகிக்க முடியவில்லை ..ஆனால் ஏதோ நடந்துருக்குனு மட்டும் தெரிந்தது..ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்க உள்ளே ஓ வெனெ ஒப்பாரி சத்தம்..நாய்க்குட்டியை காணவில்லை..வெங்கடேஷின் அம்ம அப்பா எல்லோரும் அழுது கொண்டிருக்க நடுவே சிந்துவின் உடல் சிரிச்சுக்கிட்டே தூங்குவது போல இருந்தது..அதன் மீது ஒரு அரக்கு கல்ர் பட்டு சேலையும் அதன் மீது செவ்வந்தி மாலையும் போட்டு கால் பெரு விரல் கட்டப்பட்டிருந்தது.”உனக்காக தானம்ம நாங்களே உசுரோட இருக்கோம் நீ இல்லாம போயிட்டா நாங்க எந்த கோட்டைய பிடிக்கபோறோம்”,

“அப்பா அரைக்கை சட்ட போடுப்பா அதுதான் அழகா இருக்கும்னு சொல்லுவயே என்ன பெத்த தாயி இப்போ யாருமா என்னய சொல்லுவா?”என அவளது அப்பாவும் அம்மாவும் கதறுவதும் பார்த்து எனக்கும் அழுகை வந்துவிட்டது

   இவனோ எல்லாத்தையும் தொலைத்துவிட்டவனாக அவளது  சுடிதார் துப்பட்டாவை கையில் சுற்றிக்கொண்டே அழுவதற்கும் திராணி இல்லாதவனாக ஒரு மூலையில் விட்டத்தையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்...
போச்சு டா, எல்லாம் போச்சுடா நானும் அவ கூடவே போக போறேண்டா ,”வெங்கி ,சத்தியமா எனக்கு உன்கூட வாழ குடுத்துவைக்கல னு சொல்றமாதிரி தாணே  சாகப்போறதுக்கு முன்னால அவளது பார்வைகள் இவன் மீதே பதிந்தவண்ணம் இருந்ததாக சொல்லிக்கொண்டே இருந்தான்..எனக்கு தாண்டா இவ கூட வாழ குடுத்துவைக்கலைன்னு நா எப்படிடா அவ கிட்ட சொல்றது,என புலம்பிக்கொண்டிருந்தவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்பது தெரியவில்லை என நினைக்கும்போது அசிங்கமாக தான் இருந்தது...

   வெறும் காய்ச்சல் என நினைத்து பக்கத்துல இருக்குற மெடிக்கல்லயே மாத்திரை வாங்கி குடுத்துருக்காங்க..ரெண்டு நாளைக்கு மேல கன்னம் எல்லாம் வீங்கி போக, பயந்துகிட்டு பாலக்கரை ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்குறாங்க..ரத்தம் இ சி ஜி எல்லாம் எடுத்துப்பார்த்தப்போ நாய் கடிச்சதற்கான அறிகுறி இருந்திருக்கிறது..இந்த பொண்ணுகிட்ட கேட்டதற்கு ஆமா நம்ம ஜிம்மி தான் ஒரு மாசத்துக்கு முன்னால சும்மா லைட்டா கடிச்சதாக சொல்லி இருக்கிறாள்..நாள் ஆக ஆக  ஒரு கட்டத்தில் காப்பாற்ற முடியாது என டாக்டர்கள் கைவிரிக்க ,அட்டெண்டர்கள்ஏதுக்கும்  வீட்டுக்கு கொண்டு போயுடுங்க ,இல்லை ஆஸ்பத்திரியிலேயே உசுரு போச்சுனா, அறுத்து தான் குடுப்பாங்கஎன சொல்ல வீட்டுக்கு கூட்டி வந்துவிட்டனர்..இரண்டு நாள் வீட்டிலேயே இருந்திருக்கிறாள்..வெள்ளிக்கிழமை காலை நாலு மணிப்போல் உயிரை விட்டிருக்கிறாள்...
  அன்னைக்கு சாயங்காலமே கல்லுக்குழி காலனியில இருந்த சுடுகாட்டுல எரித்துவிட்டு வந்தோம்..நாங்களும் ஒரு வாரம் அவன் கூடவே இருந்துவிட்டு கிளம்பிவிட்டோம்,,,அதன் பிறகு இவர்களும் வீட்டை காலி பண்ணிட்டு சொந்த ஊருக்கு போய்விட்டனர்,,இவனோ பித்து பிடித்தவன் போல ஆகிவிட்டான்...சொந்த ஊருக்கே போகாமல் அவ இருந்த வீட்டையே சுத்தி சுத்தி காலையிலயும் சாயங்காலமும் போயிட்டு வந்தவன நாங்க தான் விருதாச்சலம் கூட்டி போய் வச்சோம்...அவன் வீட்டுல உள்ளவங்கனாலயும் ஏதும் பேச முடில..”ஒரே புள்ள னு தானப்பா அவன் ஆசைப்படியே விட்டோம் நாங்க எந்த குடும்பத்துக்கும் கெடுதல் நினைக்கலயேப்பா எங்களுக்கு மட்டும் என்ன இப்படியெல்லாம்என அவன் குடும்பத்து விரக்தியும்,எங்கே ஏதும் பன்னிக்கொள்வானோ என்கிற பயமும் அவர்களுக்கு...
    அவனது ஊர் நண்பர்களிடமும் அவனை தனியா இருக்க விடாம பார்த்துக்கங்கனு சொல்லிட்டு நாங்களும் கிளம்பிட்டோம்...அதன் பிறகு மாத மாதம் விருதாச்சலம் போயிட்டு வந்துகொண்டிருந்தோம்...இரண்டு மாசத்துலயே மூணு தடவ தற்கொலை பண்ன  முயற்சி பண்னி கடைசியில உசுர காப்பாத்தி வச்சுருந்துருக்காங்க...அதன் பிறகு ஒரு தடவை திருச்சிக்கு போய் வேலையை எழுதி குடுத்துவிட்டு வீட்டையும் காலி செய்துவிட்டு வரலாம்னு போயிருக்கிறான்,எல்லா பசங்கலும் காலேஜுக்கு போயிட்டதால் இவன் மட்டும் தனியா இருந்திருக்கிறான்..
        புதுசா குடிவந்த பசங்க எதிர் வீட்டு பொண்ணை கிண்டல் பன்னுறாங்கனு அவ மாமா கிட்ட சொல்லீருப்பா போல,வனோ வேகமா வீட்டூக்குள்ள வந்து அடிக்க வந்துருக்கான்...இவனும் இருந்த எல்லா வெறியையும் சேர்த்துவச்சு ,பக்கத்துல இருந்த ஏர் ஸ்டவ் அடுப்பால ஓங்கி அடிக்க மண்டை உடைஞ்சு, கேஸ் ரிமாண்ட் என ஆகிவிட்டது.. ஆறுமாசம் வரை உள்ளே இருந்தவனை இரண்டு தடவை மனு போட்டு போய் பார்த்துவிட்டு வந்தோம்..
வெளியே வந்த பிறகு திருச்சியிலேயே அரசியல் செல்வாக்கில் கட்டபஞ்சாயத்தையே முழு நேர தொழிலாகவும் மாற்றிக்கொண்டான்,..இரண்டு மாசத்துக்கு முன்னால தான் பால்பண்னைகிட்ட வச்சு ஏழு பேர் இவனை கண்டந்துண்டமா வெட்டிபோட்டதை பேப்பர் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்..
          எப்போதாவது போனில் பேசிக்கிட்டாலும் அவனை கடைசியா பார்த்தது இரண்டு வருஷத்துக்கு முன்னால தான்,,கல்யாணமே பன்னிக்காம இருந்தான்..எப்படிடா இருக்கு இப்போ திருச்சி.? ஜீவா கல்யானத்துக்கு கூட நீ வரல நு கேட்டேன்,,
 ”எங்கடா ,நான் மருந்தை குடிச்சப்போ கூட நான் நினைச்ச மாதிரியா நடந்துச்சு?..இல்ல நான் நினைச்சதெல்லாம் நடந்திருந்தா நான் எப்படிடா இப்படி ஆயிருப்பேன்.,இப்படியெல்லாம் ஆயிடுச்சுன்னு என்னாலயே நம்ப முடியலடா..வீட்டுலதான்  ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..ஒவ்வொரு நேரமும் உசுர கையில புடிச்சுட்டு தான் இருக்கேன்..எப்போவோ அவளுக்காக போயிருக்க வேண்டிய உசுரு தானே அதுனால கவலை இல்லடா...ஆனா என்ன சர்க்கிய்யூட் ஹவுஸ்ல சிந்து வீட்டு பக்கம் போகும்போது மட்டும் நிஜமாவே நாலு பேரு டூல்ஸோட நெஞ்சுல குத்துன மாதிரி இருக்கும்னு சொன்னான்...

நாம இருந்த வீடு ,அப்புறம் சிந்து பிள்ள வீடுலாம் இருக்காடா? னு கேட்டேன்..

”எங்க ,,நாம இருந்த வீட்டை அந்த பஞ்சாயத்துகு அப்புறம் படிக்கிற, வேலை பார்க்குற பசங்கலுக்கு அந்த தெருவிலேயே வீடு இல்லங்கிற நிலமைக்கு ஆக்கிட்டாங்கெ..அந்த இடம் மேல கீழ ஃபுல்லா காம்ப்ளக்ஸ் கடை தான்..இருந்தாள்ள, எவனோ கட்டய குடுத்ததுக்கு என்னய போட்டுக்குடுத்தாளே எதிர்த்த வீட்டு ஜோதி,எவனையோ கூட்டி ஓடிட்டாளாம்..அப்ப எல்லாம் அவ மாமன்காரன் என்னத்த புடுங்குனான்னு தெரியல...
 சிந்து வீட்டை அவுங்க காலி பண்ணுனதுக்கப்புறம் யாரோ குடி வந்துருக்காங்கெ...அப்போ ஒரு கிழட்டு தாயோலி வயசாயிபோயி செத்துப்போனதுக்கு இவ தான் ஆவியா வந்து கொண்டு புட்டா அப்படின்னு பரப்பிட்டாங்கெ..நானே தங்குறதுக்கு வாடகைக்கு கேட்டேன் நம்ம பன்ற வேலைய பார்த்து தரமுடியாதுன்னுட்டாங்கெ...யாருமே குடிவராம இப்போ தான் கிறிஸ்தவ ஜெப கூட்டம் நடத்துற இடமா மாத்தி ஒரு வருஷமா ஆச்சு.”.

”ஏன் மாப்ள ,இந்த பிட் நோட்டிஸ்ல எல்லாம் கடவுள் இருக்குற இடத்துல சைத்தான் இருக்காதுனு சொல்லுவாங்களே,,,இப்போ சாமிக்கு புடிச்ச தேவதை அங்க குடியிருக்குறதனால தானே மாப்ள நம்மள மாதிரி சைத்தான் பிடிச்சவங்கனால அந்த வீட்டுல இருக்க முடியல...இப்போ கடவுளே இங்க குடியிருக்குறார்னா இது அவர் ஆசிர்வதிக்கப்பட்ட சிந்து என்கிற என் தேவதை வாழும் வீடு தானேஎன அவன் சொன்னது மட்டும் இன்னும் மறக்கவோ மறுக்கவோ முடியவில்லை..,இப்போதெல்லம் திருச்சி போனாலோ இல்லை திருச்சி தொட்டு வேறு எங்கும் போனாலோ மறக்காமல் அந்த தேவதையின் வீட்டுப்பக்கம் போய்விட்டுதான் வருகிறேன்..

.புஹாரி ராஜா.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com