பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

January 22, 2011

உமாபாரதி என்கிற சோஃபியா - புஹாரி ராஜா



”ஹலோ..என்ன நல்லா இருக்கீங்களா? போன்ல பாட்டு எல்லாம் பயங்கரமா இருக்கு...”
நீங்க யாருங்க பேசுறது...

”நான் பாரதி பேசுறேன்.மறந்துட்டீங்களா...”

’அய்யோ இல்லைங்க...அவ்வளவு சீக்கிறத்துல உங்கள உங்கள மறக்க முடியுமா இல்லை மறக்க கூடிய ஆளு தானா நீங்க...என்னங்க எப்போவோ பேசுவீங்கனு எதிர்பார்த்தேன்...நீங்கதான் என்னய மறந்துட்டீங்களோனு நினைச்சேன்...நல்லா இருக்கீங்களா என்ன திடீர்னு போன் பன்னிருக்கீங்க...’.


அதெப்படிங்க போன் பன்னுனது நான் ,,நீங்களே பேசிட்டு இருக்கீங்க...ம் நான் நல்லா இருக்கேன்,,உங்களுக்கு அப்போவே பேசனும்னு தான்  நினைன்ச்சேன் ஆனா உங்க நம்பர  எங்க வச்சேனு தெரியல...இன்னைக்கு அப்பா அம்மாவ ரயில்ல அனுப்பிச்சுட்டு ரயில் பாஸ் தேடுக்கிட்டு இருந்தேன் ..ஒன்னு தேடுனா இன்னொன்னு கிடைக்கிறது ஒன்னும் புதுசு இல்லையே...அப்போ தான் நீங்க எழுதிக்குடுத்த நம்பர் சிக்குச்சு..அதான் பேசலாமென்னு. என நிதானமான வார்த்தைகள் என் அலைபேசியின் எதிமுனையில் இருந்து....

அப்போது தான்நான் படுக்கையில் இருந்து எழுந்து பல் துலக்கிவிட்டுசாப்பிட கிளம்பிக்கொண்டிருந்த போது வந்த அழைப்பு அது..எனக்கு அவளை மீண்டும் சந்திக்க இதைவிட வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் என கொஞ்சமும் நம்பிக்கை இல்லாததால் கொஞ்சம் கூட யோசிக்கதெரியாத என் மூளைக்கு பளிச்சென வந்த யோசனை தான் அது....”ஓ அப்போ நீங்க எக்மோர்ல தான் இருக்கீங்களா? நான் கூட தி.நகர்ல தான் இருக்கேன்..உங்களுக்கு சரி அப்படின்னா இன்னும் இருபது நிமிஷத்துல எனக்கு கிளாஸ் முடிஞ்சுரும்...நாம நேர்லயே பார்க்கலாமே’

சரி சீக்கிரம் வாங்க .நானும் என் பிரெண்டும் ஜங்ஷனுக்கு எதிர்ர்த்தாப்புல இருக்குற சங்கீதா ஓட்டல் வாசல்ல நிக்கிறோம்...என பொதுதொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டது....செயிண்ட் தாமஸ் மவுண்ட் ல இருக்குற வீட்டை கூசாம  தி.நகருக்கு மாட்திட்டோமே என அவசர அவசரமாக கிளம்பி போக ஆரம்பித்தேன் ரயில்வே ஸ்டேஷனுக்கு,,,

ஒரு பத்து நிமிடத்துக்கு மேல் ஆகியிருக்கும்..ரயில் வந்தபாடில்லை...ஒரு காபி குடித்தால் நல்லா இருக்குமே என தோன்றியது...அந்த காபி கோப்பையை பார்த்தபோது என்னையும் அறியாமல் சின்ன புன்னகை எட்டிப்பார்த்தது..ஆமாம் இதே போன்ற காபி குடிக்கும் ஒரு பொழுதில் தான் இவளை நான் சந்தித்தது..அப்போது தான் பருக ஆரம்பித்திருப்பேன் ஒரு ரயில் வந்தது...காபியை கீழே ஊற்ற மனசில்லாமல் அந்த ரயிலை விட்டு விட்டு அடுத்த ரயிலுக்காக காத்திருந்தேன்.....இவளை தேடி கண்டுபிடிப்பதற்குள் எவ்வளவு நேரம் செலவு பண்ணியிருப்போம் எனக்காக இவள் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் அதிகமாக காத்திருப்பதில் தப்பு இல்லை எனவே தோன்றியது எனக்கு. 

இந்த பாரதியை உங்களுக்கு எப்படி அறிமுகம் செய்துவைப்பது என எனக்கு தெரியவில்லை..என் தோழி என்று சொல்லும் அளவிற்கு எங்களுக்குள் ஓர்மை தலை தூக்கியதில்லை...சாதரணமாக ரயில் பயணத்தில் சந்தித்தவள் தான், அதற்காக சக பயணி என்று ஒதுக்கிவைக்கவும் முடியாது....சக பயணிக்கும் ஒரு தோழமைக்கும் இடையேயான ஒரு உறவாகதான் எங்களுக்குள் இருக்க முடியும்...எந்த பொண்ணுகிட்டயாவது பேசிவிட மாட்டோமா என  எல்லா பசங்களும் ஏங்கிகிடக்கும் காலகட்டத்தில்தான் நானும்....ஆரம்ப பள்ளியில் இருந்து கல்லூரி படிப்பு வரை எங்கெல்லம் ஆண்பிள்ளைகள் படிக்கிறார்களோ அங்கேயே தேடி  தேடி வீட்டில் சேர்த்துவிட்டதாலும்...கூட பழகுன பையன்கள் எல்லாம் பொண்ணுங்க கூட பேசிக்கிட்டு இருந்ததாலும் எனக்கு யாரும் இல்லையே என அவனுங்களை பார்த்து பொறாமை பட்ட நேரம் தான் அது....

கல்லுரி கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்தபோது தான் , புராஜெக்ட் விஷயமாக் சென்னை செல்ல வேண்டிய நிர்பந்தம்...ரயில் சினேகம் அவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடாது என என் வயதுக்காரர்கள் சொல்லிய மூடப்பழக்கங்களை நம்பி சுடிதார்களை தேடி அலைய ஆரம்பித்தேன்...எப்படினாலும் இன்னைக்கு ஒரு பிள்ளைகிட்டயாவது பேசிரனும்னு முடிவு பண்ணிட்டேன்...முன்பதிவு செய்யாத பாண்டியன்  ரயில்லின் பெட்டிகளில் ஏதேனும் சுடிதார் தென்படுதா என தேடஅரம்பித்தேன்....எஞ்சினுக்கு பக்கத்து பெட்டியில் எல்லாமே வட இந்தியர்கள் ஒரெ எமாற்றம்,,,,அப்படியே பொடி நடையாக ரயிலின் கடைசி பெட்டிக்கு போகும்போது மழை தூரல் போட தொடங்கியிருந்தது..கள்ளந்திரி கனேசன் மெட்ராசுக்கு போறப்ப கூட ரெண்டு புள்ளைக கிட்ட போன் நம்பர் வாங்கியதை அவ்வளவு பெருமையாக சொல்லிக்கொள்வான்..அவனுக்கு ரெண்டு கிடைச்சது நமக்கு ஒன்னு கூடவா கிடைக்காது என எனக்கு நானே நம்பிக்கை வளர்த்துக்கொண்டுதான் கடைசிப்பெட்டி நோக்கி போய்க்கொண்டிருந்தேன்...என் நம்பிக்கை பொய்க்கவில்லை.கடைசி பெட்டியின் படிக்கட்டில் சிவப்பு கலர் சுடிதாரில் ஒரு பொண்ணும் ஊதா கலர் சுடிதாரில் இன்னொரு பெண்ணும் நின்று கொண்டிருத்தனர்...இது போதும் டா மெட்ராசுக்கு இன்னும் எட்டு மனி நேரம் இருக்கு எப்படின்னாலும் பேசிரமாட்டோமா... என நினைத்து ஒரு மாலை மலர் வாங்கிகொண்டு அந்த பெட்டியில் ஏறிவிட்டேன்.....இந்த இரு பெண்களுக்கும் பக்கத்துல ஒரு பாட்டி  அப்புறம் மூனு குழந்தைகளோடு ஒரு குடும்பம் அவர்களுக்கு பக்கத்துல நான்....மனி இரவு எட்டு முப்பதுஇருக்கும் ரயில் கிளம்ப ஒரு ஐந்து நிமிடத்துக்கு முன்னால் ”ஏய் மழை நின்னுருச்சு டி வா வீட்டுக்கு போகலாம் ”என ரயிலில் இருந்து இறங்க முற்பட்டனர்..எனக்கு மழை நின்றபின் இடி இடிப்பது போல இருந்தது...நமக்கு வாய்த்ததை யாராலும் மாற்ற முடியாது என நினைத்துக்கொண்டு மெதுவாக கம்பார்ட்மெண்டுக்குள் இடம் தேடிய போது தான் கையில் தெர்மோ டயனமிக் புத்தகத்தோடு வெள்ளை கலர் சுடிதாரில் ஒரு பொண்ணு இருப்பதை பார்த்தேன்..இப்போது வெளியில் மழை நின்றாலும் எனக்குள் தூரல் போடுவது போல இருந்தது.... அவளுக்கு பக்கத்தில் ஊதா கலர் சுடிதாரில் ஒரு பொண்ணும் அவளுக்கு பக்கத்தில் ஒரு மஞ்சள் டி ஷர்ட் போட்ட பையன் (இப்படி பொண்ணுங்க கூட பேசுறவனுங்கள பார்த்தாலே அது அந்த பொண்ணொட காதலனாகதான் இருக்க வேண்டும் என முடிவு செய்து இருந்தேன்.. )அவனுக்கு பக்கத்துல இன்னொரு பையன்....இவர்களின் எதிர் இருக்கையில் நான் எனக்கு பக்கத்தில நாற்பது வயதில் கணவன் மனைவியும் இருந்தனர்...ஆனால் இந்த வெள்ளை சுடிதாரை மட்டும் அதற்கு முன்பே பார்த்து இருந்தேன்...ஆமாம் ஒரு இருபது நிமிஷத்துக்கு முன்னர் தங்கரீகல் தியேட்டர் நடைபதையில் அவள் வந்துகொண்டிருந்தபோது அவள் செருப்பு பிய்ந்து போனபோதே அவளை பார்த்து இருந்தேன் ஆனால் இவளோடு தான் என் சென்னை பயணம் என்று நினைத்துகூட பார்த்தது இல்லை...

.இப்போது என்னோட முழு கவனமும் அந்த வெள்ளை கலர் சுடிதார் மீது தான்...எப்படியாவது இந்த பொண்ணுகிட பேசிரணும் எனவும் ,எப்படியெல்லாம் பேசலாம் எனவும் எனக்குள்ளே ஒத்திகை பார்த்துக்கொண்டேன்....எனக்கும் தெர்மோடயனமிக் தெரியும்னு சொல்லி ஆரம்பிக்கலாமா?இல்லை இஞ்சினியரிங் படிக்கிரீங்களா என ஆரம்பிப்போமா? என என்னெல்லாமோ...... ஆனால் அவளோ கொஞ்சம் கூட அசராமல் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு  என்னை விடாமல் பார்ப்பதும்,பக்கத்து பொண்ணு கூட பேசுவதுமாக  பயணத்தை தொடர்ந்தாள்....எனக்கு அவள் கூட பேச வேண்டும் என இன்னும் அதிகபடுத்தியதே அவள் என் மீது தொடர்ந்து வீசிய அவள் பார்வை தான்......

ரயில் திருச்சியில் நின்றிருந்த நேரம்,காபி வாங்க சொல்லி அவளிடம் காசை நீட்டலாமே என்ற நல்ல யோசனையின் பின்னனியில்.அவள் ஜன்னல் அருகே இருந்ததால் ஒரு அஞ்சு ரூபாயை நீட்டி ஒரு காபி வாங்குமாறு சைகையில் சொன்னேன்..அவள் என்னை கண்டும் காணாதது போல ரயிலின் மேற்கூரையை வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தாள்.,,,எனக்கு ரொம்பவே அவமானமாக போய்விட்டது,,,,பக்கத்தில் இருந்த இன்னொருவர் எனக்கு காபி வாங்கி குடுத்தார்,,,காபி குடித்து முடித்ததும் அந்த காபி கோப்பையை இரண்டு நிமிடங்கள் அவள் முகத்திற்கு நேராக வைத்து அதை கசக்கி வெளியே எறிந்த போது தான் அவளை பழிவாங்கி விட்ட ஆனந்தம் எனக்குள்..இனிமேல் இவளை பார்க்க கூடாது என எனக்குள் சமாதானம் செய்து கொண்டேன்..அதன் பிறகு அந்த மஞ்சள் சுடிதார் கூடவும் பேசிக்கொண்டே வந்தவள் அவள் மடியில் கை வைத்து தூங்குவதும் அவள் இவளது மடியில் தூங்குவதுமாக இரவு தொடர்ந்தது..மணி இரண்டரை இருக்கும்...எல்லோரும் தூங்கி இருந்தனர் ..நானும் தூங்குவது போல பாவலா செய்து கொண்டேன்..இப்போது நான் ஹீரோ ஆவதற்கான நேரம்..அவள் இருக்கையின் கடைசி பையனின் கை மெதுவாக மஞ்சள் சுடிதார் மீது அவள் சுதாரிக்கும் நேரங்களில் வெள்ளை சுடிதார் மேலும் படர ஆரம்பித்தது..ஏதோ தூக்கத்தில் தெரியாமல் செஇவது போலவே செய்து கொண்டிருந்தான்....இதை நான் கவனிப்பதை அவன் பர்க்கவே இல்லை...சுற்றிலும் பார்த்த இந்த வெள்ளை சுடிதார் என்னையும் பார்த்தாள்..நான் அமைதியாக இருக்க என் கண்கள் மட்டும் எட்டப்பன் வேலை பார்த்தது...அதன் பிறகு அவன் உங்களை சீண்டவே இல்லை...அப்படியேஎன்னை பார்த்து அவள்சிரிப்பு மட்டும் நன்றிக்கானதாக இருந்தது...

வண்டி விருதாச்சலம் வந்திருந்தது...நிஜமாகவே இப்போ எனக்கு காபி குடிக்கனும் போல இருந்தது ..ஏற்கனவே இவளிடம் அசிங்கப்பட்டுவிட்டதால் இவளிடம் நீட்ட தோனவில்லை... எல்லோரு தூங்கி கொண்டிருந்ததால் நானே கொஞ்சம் கஷ்டப்பட்டு காபிக்கு காசு கொடுக்க முயற்சித்த போது ஒரு கை தாமாகவே முன் வந்து பெற்றுக்கொண்டது....எப்படியாவது சென்னை போவதற்குள் அவளிடம் பேச வேண்டுமென வேண்டிக்கொண்டேன்.....இவள் கூட பேச வேண்டும் என்பதற்காகவே மஞ்சள் சுடிதாரின் தோழனோடு பேசிக்கொண்டே வந்தேன் ..ஒரு கட்டத்தில் இருவரின் செல்போன் எண்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன... இதே போல தாம்பரம் வரும் போது என் போன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி  அவளுக்கு குடுத்து விடலாமென என எழுதியும் வைத்துவிட்டேன்..ஆனாலும் ஏடாகூடமாக போய்விடுமோ என பயந்து அந்த முயற்சியை கைவிட்டேன்....தாம்பரத்தை தாண்ட தாண்ட எனக்கு அவளை இழந்து விட தோணவில்லை...

ரயிலை விட்டு இறங்கியதும் நான் அவளையும் அவள் என்னையுமாக கடைசி வரை பேசிக்கொள்ளாமல் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டோம்...
நம்மளையும் ஒரு பொண்ணுபார்த்து சிரிச்சா ஆனால் விட்டுட்டோமே..அன்பே சிவம் படம் மாதிரி நாம வந்த வண்டியும் எதாச்சும் பிரச்சன ஆயிரூந்தா நல்லா பேசிருக்கலாமே என பரிட்சை முடிச்சுட்டு பதிலை சரிபார்ப்பது போல இப்படி பண்ணிருக்கலாம் அப்படி பண்ணியிருக்கலாம் என என்னென்னமோ நினைத்துக்கொண்டேன்.

ஒரு வழியாக அறைக்கு வந்ததும் நண்பனிடம் சொன்னேன்...அவன் கொடுத்த யோசனையில் மஞ்சள் சுடிதாரின் தோழனுக்கு போன் செய்து சம்பந்தமே இல்லாமல் கொஞ்சம் பேசிவிட்டு,ஒரு வழியாக அவளது விவரம் வேணுமென கேட்டேன்.. எனக்கு தெரியாது என சொன்னான்..அவனுக்கு தெரியாது என்பது எனக்கும் தெரியும்..அதானால் அவனது தோழிக்கு கட்டாயம் தெரிஞ்சுருக்கும் எனக்கு வாங்கி குடுங்க என சொன்னேன்..ஒரு பத்து நிமிஷம் கழிச்சு திரும்ப  கூப்பிட சொன்னான்...ஆனால் நான்  திரும்ப பல முறை அழைத்தும் அவன் போன் எடுக்கவே இல்ல..பக்கத்துல இருந்த ஒரு ரூபாய் பூத்ல இருந்து பேசுனேன் ...எடுத்துட்டாப்..’இல்ல பிரதர் குளிக்க போயிட்டேன் அதான் பார்க்கல என சமாளித்தான்..அவளது பெயரையும் கல்லூரி பெயரைய்உம் மட்டும் சொல்லிவிட்டு அதற்கு மேல் தெரியாது எனவும் சொல்லிவிட்டான்... இதற்கு மேலும் அவனைதொந்தரவு செய்வதில்லலை என நான் விட்டுவிட்டேன் என்பதை விட அவன் விரும்பவில்லை...

மறுநாள் புராஜெக்ட் கிளாஸ் முடிஞ்சதும் இவளின்   கல்லூரி பேருந்து என்னை கடந்து சென்றது..எப்படியாவது அவளை கண்டுபிடித்துவிட வேண்டுமென முடிவு செய்தேன்..என் நண்பனுக்கு விஷயத்தை சொன்னேன்...அவள் கல்லூரி பெயரை சொல்லி இந்த நிறுவனத்துக்கு சென்னையில் மொத்தம் 5 கிளைகள் இருப்பதாகவும்,எந்த கிளைக்கு நான் செல்லப்போவதாகவும் கேட்க எனக்கு தூக்கி வாரிபோட்டது.... பேசாமல் 5 கிளைக்கு போயிட்டு வரலாம் என முட்டாள் தனமான நம்பிக்கையில்  தாம்பரத்தை அடுத்த கிளைக்கு டிப் டாப் ஆக நுழைந்தேன்...என்ன விவரம் என காவலாளிகள் விசாரிக்க  அப்போது அட்மிஷன் சீசன் தொடங்கியதால் புதுசா அட்மிஷன் போடனும் என சொல்லி உள்ளே நுழைந்தேன்..கல்லூரி அலுவலகத்தில் கூட்டம் மண்டியடித்துக்கொண்டு இருந்ததால் கல்லூரியை சுற்றிப்பார்க்க எனக்கு இன்னும் நல்ல வசதியாக இருந்ததே தவிர என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை அவளை...இப்படியே ஐந்து நாட்களில் தொடர்ச்சியாக ஐந்து கல்லூரியையும் தெடிபார்த்து விட்டேன் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை...திரும்பவும் முதல்ல இருந்தே தேட ஆரம்பித்தேன்...

அன்று ஒரு பஞ்சு மிட்டாய் கலரில் சட்டை போட்டிருந்தேன்....ஒரு குரல் ”ஹெலோ ராமராஜன் ராம ராஜன் ”என யாரோ யாரையோ கூப்பிடுறாங்க போல என குரல் வந்த திசையை பார்க்க ஒரு கட்டடத்தின் மாடியில் பொண்ணுங்க கூட்டமாக நின்று கொண்டிருக்க ஆறு பொண்ணுங்களும் என்னை பார்ப்பதும் பிறகு கீழே குனிந்து பார்ப்பதுமாக இருந்தார்கள்...இன்னும் கொஞ்சம் நேரம் சுற்றிவிட்டு ஏமாற்றத்தோடு கல்லூரியை விட்டு வெளியே வந்த போது எதிரே உள்ள பலசரக்கு கடையில் அவளை பார்த்துவிட்டேன் என சொல்லுவதை விட அவள் தான் எனக்காக காத்திருந்திருக்க வேண்டும் என தோண்றியது..அன்னைக்கு ரயில்ல பார்த்தப்போ போட்ட அதே வெள்ள கலர் சுடிதார்..

  இந்த முறை தவறவிடக்கூடாது என்பதால் சிரித்துவிட்டேன்..அவளே என்னிடம் வந்து பேசினாள்...”என்னங்க இந்த பக்கம் என....இல்லைங்க என் தங்கச்சிய இந்த காலேஜ் ல சேர்க்கணும்னு சொன்னாங்க அதான் விசாரிச்சிட்டு போலாம்னு வந்தேன்.. நீங்க இந்த காலேஜ்னு நினைச்சு கூட பார்க்கலேங்க..நல்லதா போச்சுங்க பயந்துகிட்டே இருந்தேன் தெரியாத இடத்துல எப்படி சேர்த்துவிடுறதுனு, நல்ல வேள நீங்க இருக்கீங்க.....என பேசிக்கொண்டிருந்தோம் கொஞ்ச நேரம்..அன்னைக்கு தான் தெரியும் அவபேரு உமாபாரதினு. அவளுக்கு ஹாஸ்டலுக்கு நேரமாகி இருந்ததால் கிளம்புறேன்னு சொன்னப்போ அந்த கடையில ஒரு பேப்பர் வாங்கி என் போன் நம்பரையும் குடுத்து விட்டேன்....கிட்டத்தட்ட ஒரு வாரமா தண்ணி மாத்தாத மீன் தொட்டிக்கு தண்ணி மாத்துனா எப்படி தொட்டில் மீன் இருக்குமோ அதே நிலைம தான் எனக்கும் இருந்துச்சு...

அப்போ குடுத்த நம்பருக்கு தான் இப்போ இன்னைக்கு போன் பன்னியிருக்கா இவ..எக்மோர் ரயில் நிலைத்துக்கு எதிரே உள்ள ஓட்டலில் தான் காபி குடிக்க போனோம்..நான்.பாரதி மற்றும் அவள் தோழி பிரியா என மூவரும்....
“எடுத்த எடுப்பிலேயே அவள் கேட்ட கேள்விக்கு எனக்கு புரை ஏறியது....உங்க தங்கச்சிய எந்த டிபார்ட்மெண்ட்ல சேர்த்தீங்கனு கேட்டா?

இல்லைங்க ரொம்ப தூரம இருக்குறாதால மதுரையிலேயே சேர்த்துட்டாங்கன்னு சொல்லிட்டேன்...

அன்னைக்கு ராமராஜன்னு ஓட்டும்போதே நினைச்சேங்க எவனோ தெரிஞ்சவன் இருக்கான்னு..யாத்தே இப்படி கட்டய குடுக்குறீங்களேங்க..இதுக்கே தனியா ஏதும் படிப்பீங்களோ?

அப்படியெல்லாம் இல்ல நான் பஞ்சுமிட்டாய்னு தான் கூப்பிட சொன்னேன் இவளுக தான் கொஞ்சம் டீசெண்டா ராமராஜன்னு கூப்பிட்டாளுக என பிரியாவை கை காட்டினாள்...அதன் பிறகு எங்களுக்குள் உரையாடல் இப்படிதான் இருந்தது....

அதென்னங்க பேரு உமாபாரதின்னு..உங்க அப்பா ஆர் எஸ் எஸ் ஆ?

இல்லையே

சொந்த ஊரு திருனெல்வேலியா?

இல்ல எனக்கு ஈரோடு ...ஏன் அப்படி கேட்கிறீங்க..

ஈரோடா, அப்ப உமா ராமசாமினு தானே வச்சுருக்கனும்... பாரதியார் நெல்லையில பொறாந்ததால அவர் நினைப்புல பாரதி சேர்ந்துட்டாரானு நினைச்சேன்.

அப்படியெல்லாம் இல்ல சின்ன வயசுல நல்லா பேச்சுபோட்டியில பேசுவேனான் அதுனால 5 வயசுக்கு மேல தான் பாரதின்னு சேர்த்துட்டாங்க..என தன்னிலை விளக்கம் குடுத்தாள்.. 

ஈரோடு அப்படின்னா அன்னைக்கு மதுரைக்கு எப்படி?

என் பெரியப்பா வீடு அரசரடியில தான் ..என் அக்காவுக்கு நிச்சயதார்த்தம் அதான் மதுரை வந்தேன்...ஊரா அது நீங்களும் உங்க ஊரு பாஷையும்...அவிங்கெ இவிங்கெணு ஒரு மரியாதையே இல்லாம..எங்க ஊர்ருல 1 வயசு குழந்தைய கூட வா கண்ணுனு மரியாதையா பேசுவாங்க...என் கிளாஸ் கீதா எப்போ பார்த்தாலும் எங்க ஊரு மாதிரி வருமா வருமானு இம்சை பண்ணிக்கிட்டு...

யப்பா என்னங்க அன்னைக்கு ரயில ஒன்னுமே தெரியாத மாதிரி இருந்தீங்க இன்னைக்கு இப்படி வெடிக்கிறீங்க...? வீட்டுக்கு ஒரே பொண்ணா?ரொம்ப செல்லமோ?

நீங்க வேற..எங்க வீட்டுல ஆறு பொண்ணுங்க இருந்தாலும் எங்க அப்பா எங்கள செல்லமா தான் வளர்ப்பார்..

நீங்க சிரிக்கும்போது உங்க எத்துப்பல்லு அழகா இருக்குங்க-இது நான்..

முன்னெல்லாம் பொண்ணுங்க சிரிக்கும்போது கன்னத்துல குழி விழுந்தாதான் ரசிப்பீங்க இப்போ எத்துப்பல்லெல்லா ரசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?

உங்களுக்கு வெள்ள கலர் ரொம்ப படிக்குமா?

ஆமா ..

அதுக்காக ரயில்ல பார்த்தப்போ போட்ட சுடிதார் தான் அன்னைக்கு நான் காலேஜ்ல பார்த்தபோவும் போட்டுருந்தீங்க.இன்னைக்கும் அதே கலரா?

அப்படியெல்லாம் இல்லைங்க ..என் கிட்ட இதே மாடல்ல மூணு சுடிதார் இருக்கு..என அவள்]

ஏங்க சமாளிக்கிறாதுக்கும் ஒரு அளவு இருக்குங்க அதுக்காக இப்படியெல்லாம் சொல்லாதீங்க...மதுரைக்காரங்கெ  முரட்டு பயலா இருக்கலாம் அதுக்காக முட்டாபயன்னு நினச்சுராதீங்க....என பேசிக்கொண்டிருக்கும்போதே இருவரின் அடுத்த திட்டங்கள் என்ன என்பதும் பேச்சினூடே வந்தது..

எங்கெங்க.,எங்க செட்டுக்கு ரெண்டு வருஷத்துகு முன்னால முடிச்சவனுக்கே இன்னும் வேல கிடைக்கல..எனக்கெல்லாம் கிடைக்குமுனுன்னு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல...

இவ்வளோ பெரிய ஊருல எதுவுமே தெரியாம என்னய கண்டுபிடிச்சீங்க ,நாலு வருஷம் படிச்ச படிப்ப வச்சு வேல வாங்க முடியாதுன்னு சொல்லுறீங்க.அப்படியெல்லாம் இல்ல நல்லா தேடுங்க தேடுனா எதுவும் கிடைக்கும்...என எனக்கு இன்னும் நம்பிக்கை தந்த வார்த்தைகள்....

ப்புறம் நீங்க...

இந்தா இன்னும் மூணு மாசத்துல காலேஜ் முடிஞ்சதும் கல்யாணம் தான்...வாழ்க்கைய கொண்டாடனும்ல..

என்னங்க உடனே கல்யாணமா? ஏதும் லவ் மேரேஜ் ஆ..

சீ சீ .லவ் லாம் நமக்கு ஒத்துவராது..

என்ன அனுபவமா?சும்மா சொல்லுங்க ஏதும் பெயிலியர் ஆயிருச்சா?
அரளிவிதைய சாப்பிட்டா செத்து போவோம்னு சொல்றதுக்கு அனுபவம்லாம் தேவ இல்ல..சொல்லி கேட்டாலே போதும்...

அய்யோ ரொம்ப சினிமா பார்ப்பீகளோ?

ஏன் உங்கள விடவா நான் வசனம் அதிகமா பேசுறேன்..இது அவள்
எல்லோரும் கிளம்பும்போது அவள் என்னிடம் நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்கனு சொல்ல நானும் தயங்காமல் நீங்க சிரிக்காமலே அழகா இருக்கீங்க என சொல்ல இந்த வாய் தாங்க.. இந்த வாய் மட்டும் இல்லனா  உங்களயும் என் கூட இருக்குற மதுரைக்காரியையும் நாய் தூக்கிட்டு போயிரும் போல.....என இருவரும் விடைபெற்றோம்..

அதன் பிறகு வாரத்துக்கு ரெண்டு தடவை அவளிடம் போன் வரும்.....இடையே என் போனை தொலைத்துவிட்டதாலும்,எனக்கு வேலை கிடைத்து மும்பை சென்றதாலும் இருவருக்குமிடையே தகவல் பறிமாற்றங்களூம் இல்லை.ஒவ்வொரு தடவையும் இண்டர்வியூ ல  பெயிலாகும் போதெல்லாம் அவ்வளவு பெரிய ஊருல பேரே தெரியாம கண்டுபிடிச்சோம்..என இதையே எனக்கான உற்சாக டானிக்காக மாற்றிக்கொண்டேன்...

எட்டு மாதம் கழித்து பணி இடமாற்றம் காரணமாக மீண்டும் சென்னைக்கே வந்தேன்..எழும்பூர் பேருந்து நிலையத்தில் 23சி ல் ஏறினேன்..சாந்தி தியேட்டர் கிட்ட வரும்போது பஸ் உள்ளே ஒரு  குரல் என் பெயரை சொல்லி கூப்பிட  திரும்பி பார்த்ததில் ரொம்பவும் சந்தோஷம்..பாரதியின் தோழி ப்ரியா தான் என்னை கூப்பிட்ட குரலுக்கு சொந்தகாரி.... பாரதியை  பற்றி விசாரித்தேன்...

அவ ஆசைப்படியே பெங்களுரு போயிட்டா...உங்ககிட்ட கூட இடையில பேசமுடிலனு சொன்னா.ஆள் பேச்சு தான் அப்படி..ஆனா உதவின்னு வந்துட்டா அவ போட்டிருக்க துணிய கூட குடுத்துட்ட் வந்துருவா...பேரு கூட மாத்திட்டா சோஃபியா நல்லா இருக்குல்ல...என்ன பாரதி மட்டும் இதுலயும் சேர்த்துகிட்டா..சோஃபியா பாரதி..

என்னங்க லவ்லாம் பண்ணமாட்டேன் சொன்னாங்க ..இப்போ பேர மாத்துற அளவுக்கு  மாறிட்டாங்க போல.....

ஓ நீங்க அன்னைக்கு சொன்னத நம்பிக்கிட்டு இருக்கீங்க போல...அப்படியெல்லாம் ஒன்னும் இல்லங்க...அவளுக்கு கன்னியாஸ்திரியாவது தான் ஆசை..ஆசைப்படியே இப்போ பெங்களுர் ல அது சம்பந்தமா படிச்சுட்டு இருக்கா...நிஜமாகவே இவ எங்க எல்லாருக்கும் ரோல் மாடல் ஆயிட்டா....வீட்டுக்காக  இங்க படிச்சா..முடிச்சதும் இப்ப பெங்களுர் ல இருக்கா..இதான் அவ நம்பர் என எழுதிக்கொடுத்த பின் அவள் இறங்கி போய்விட்டாள்...

வெள்ளை கலர் பிடிக்கும்னு சொன்னாள்,,வெள்ளை கலருக்கு தான் அவளை பிடித்திருக்க வேண்டும்..திரும்பவும் அதே வெள்ளையில் பார்க்க என் மனசுக்கு பிடிக்கவில்லை....எது எப்படியோ அவள் சேவை தொடரட்டும் என என் மனசுக்குள் சொல்லிக்கொண்டு நம்பர் எழுதிக்குடுத்த டிக்கெட்டை கீழே வீசிவிட்டு அன்று முழுதும் சந்தோஷத்தை தேடிக்கொண்டிருந்தேன்....

- புஹாரி ராஜா

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com