கவிஞர் அறிமுகம்:
வணக்கம், என் பெயர் கோ.நாகராஜு. நான் கோநா என்ற பெயரில் எனது பிரத்தியேக வலைப்பூவில் கடந்த ஆறு மாத காலமாக கவிதைகள் எழுதி வருகிறேன். எனது கவிதைகள் ஆனந்த விகடன் வார இதழிலும், திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்துள்ளன.
இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது.
மறந்துவிட்ட பொம்மைகள்:
கண்களில் மைதீட்டி
கன்னங்களில் பௌடரிட்டு
உதடுகளில் சாயம்பூசி
கவர்ச்சி உடையணிந்து
வண்ண வண்ண மலர்கள் சூட்டி
அழகாய்த்தான் அனுப்பிவைத்தாய்
ஒரு துரோகத்தை.
சுகித்துப் பழுத்த நான்
ஒப்பனை கலைத்து
ஒவ்வொரு ஆடையும் களைந்து
நிர்வாணப் படுத்தியதில்
குழந்தையாகிவிட்ட உன் துரோகத்துடன்
கொஞ்சி விளையாடுகிறேன்.
மறந்துவிட்ட பொம்மைகளென
மரித்துக் கிடக்கின்றன தரையில்
வெறுப்பும் தண்டனையும்.
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
நான் சூன்யம்:
கல்லெறியக் கலங்கி
கலைந்து அலையலையாய்
நெளிந்து பரவியபின்
தெளிந்த ஆழ்மௌன மோனத்தில்
தலைக்குப்பின் வந்த ஒளிவட்டச் சூரியனுடன்
குளக்கரை புத்தனானேன்
அந்தி சாய்ந்து சற்றே இருட்ட
வந்த பிறைநிலவு சூடி
சிவனானேன் குளத்து நீரில்
சுத்தமாய் இருட்டிவிட
கலைந்து அலையலையாய்
நெளிந்து பரவியபின்
தெளிந்த ஆழ்மௌன மோனத்தில்
தலைக்குப்பின் வந்த ஒளிவட்டச் சூரியனுடன்
குளக்கரை புத்தனானேன்
அந்தி சாய்ந்து சற்றே இருட்ட
வந்த பிறைநிலவு சூடி
சிவனானேன் குளத்து நீரில்
சுத்தமாய் இருட்டிவிட
நான் சூன்யம்.
- கோநா.

