பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

January 27, 2011

எம்.ராஜா கவிதைகள் - 1

கவிஞர் அறிமுகம்:  M.ராஜா என்றெனக்கு பெயர். சொந்த ஊர் ஈரோடு மாவட்டத்திலுள்ள காங்கயம். தொழில் நிமித்தம் சென்னையில் மருத்துவராக பணிபுரிகிறேன். பிரத்தியேக வலைப்பதிவிலும் எழுதிவருகிறேன். எழுதியவற்றுள் சில உயிரோசை, திண்ணை போன்ற இணைய இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.

இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது.


நாதப்பிரம்மம்:




தனிமையின் சன்னல் பரப்புகளில்
சுருக்கிட்டுத் தொங்கும் திரைச்சீலையின் கால்களை
ஆட்டிப் பார்க்கிறது காற்று
வெறுமை இறுகி
சுற்றிலும் சுவர்களாய்ச் சமைந்திருக்கும் இந்த அறைக்குள்
கூடிவிடுகிறது இருத்தலின் கனம்

தூங்கி விடு
தூக்கம் விடுதலை
சாலையில் வண்டிச் சத்தங்கள்
செவிக்குள் புகுந்து மூளையைச் சிதறடிக்கும் இடி
ஜன்னலை இழுத்து மூடு
கதவைச் சாத்து
சுவரில் உச்சுக் கொட்டுகிறது கடிகாரம்
நொடியின் மரணத்தில் ஜனிக்கும் ஓசை
காலத்தின் கடிகார இயக்கம்
எப்போது துவங்கியிருக்கும்
எப்பொழுதில் நிற்கும்
நிறுத்துவது நீயாக இருக்கட்டும்
பேட்டரியை கழட்டி வை... ம்...

கதவடைத்தும் வாகன இரைச்சல் நின்றபாடில்லை
காதடை
நாதம் நாதம் சர்வம் நாதம்

ஒலி புகா ஒரே இடம் அம்மா
நெஞ்சுக்கூடு தடதடக்கிறது
எப்போது கடக்கும் இந்த ரயில்
அம்மாவ பார்க்கணும்
மாரோடு சேர்த்து தலையணை அழுத்து
பஞ்சடைத்த வஸ்து வெடியடக்குமா ?
எதுக்கும் அம்மாட்ட ஒருதடவை பேசிடலாமா ?
வழியிருக்கிறது.

ஒரத் தையல் பிரித்து துருத்திய பஞ்சுருட்டி
நாசித் துவாரங்களை அடைத்தான்
நுழை பிளந்தது நுரையீரல் ஆணைக்கு
உமிழ்ந்த உஷ்ணத்தில் சர்ப்பத்தின் அரவம் கேட்டான்
அரவத்தில் அமிழ மகுடிக்கு இசைந்தது பாம்பு
விழித்துக் கொண்டவன்
ஒருபோதும் உறங்கவில்லை மீண்டும்...

- எம்.ராஜா

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com