பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

February 2, 2011

இவள்பாரதி கவிதைகள்-12

இவள் பாரதி எனும் பெயரில் கவிதைகள் எழுதுகிறேன். தற்போது தேவதை இதழில் நிருபராக இருக்கிறேன். இதற்கு முன் ஹலோ பண்பலையில் ‘இவள்‘ எனும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும், ‘ஸ்பரிசம்’ எனும் இரவு நேர நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் பணியாற்றினேன். இதுவரை களவு போன கனவு, கணவன் காதலன் தோழன், மற்றும் சில தேன்துளிகளும் எறும்புகளும் எனும் மூன்று கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.

இவரது கவிதைகள் காட்சியில் தொடராக வருகிறது


சொற்களின் வாசனை:



என்னிடம் சொல்வதற்கு
ஒன்றுமில்லாமல் போகலாம்.. 
பிறர் சொல்வதை கேட்க
ஆர்வமில்லாமலும் போகலாம்.. 
நாளைக்கென சொற்களை 
சேமித்து வைக்க முடியாது..
அது அந்தந்த கணங்களில் நிகழ்வது
சுவாசத்தை போல...

 
யாரோ தூவிச் 
செல்லும் சொற்கள் 
என் மீதும் ஒட்டிக் கொள்கின்றன..

தூசு ஒட்டியதைப் போல 
தட்டி விடவோ 
துடைத்து எறியவோ முடிவதில்லை 
திரவத்தைப் போல 
கழுவிடவும் கூடவில்லை..
காற்றென 
மூக்கைப்பொத்தி நகரவும் வாய்ப்பில்லை.. 

என்னை அரித்துத் தின்னும் 
சொற்களை கூறு போடும் 
வழியொன்றும் புலப்படவில்லை..

ஒன்று மட்டும் தோன்றியது 
என் சொற்களும் இப்படித்தான் 
யார் மீதேனும் ஒட்டி 
பாடாய் படுத்தக் கூடும்..
இனி வெளியே தூவுவதில்லை
என் கனமான சொற்களை...!

 - இவள்பாரதி.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com