பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

December 7, 2010

இராசராசச் சோழர் தமிழிய ஆய்வு -ம.செந்தமிழன்

 காட்சி வாசகர்கள் கவனத்திற்கு..
ஆவணப்பட இயக்குநர், தமிழ்தேசிய ஆர்வலர், இயற்கைவேளாண்மை ஆர்வலர் என பன்முக தன்மை கொண்ட  ம. செந்தமிழன் அவர்கள் எழுதிய இராசராசச் சோழர்  தமிழிய ஆய்வு என்ற குறுநூல் காட்சியில் தொடராக வருகிறது -காட்சி

பகுதி -5

இராசராசச் சோழர் காலம்

இராசராசச் சோழர் காலத்தில் நிலவிய சமூக அரசியல் நிலைகளைக் காணலாம். பொதுவாகவே, பிற்காலச் சோழர்காலத்தில் பிராமணர்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தனர். ஆட்சியில், பொதுவான சமூக நிர்வாகத்தில் பிராமணர்களுக்கு எந்தப் பங்கும் இருக்கவில்லை. இராசராசச் சோழர் காலத்தில், பிராமணரின் ஆட்சிதான் நடந்தது என்பதை உரைக்கும் சமகாலச்  சான்று ஏதேனும் இருந்தால் திரிபுவாதிகள் அவற்றைக் காட்டட்டும். அவர்கள் சான்றுகளாகக் காட்டுபவை அனைத்துமே, இராசராசச் சோழர் காலம் குறித்து சில ஆய்வாளர்கள் 20 ஆம் நூற்றாண்டில் எடுத்த முடிவுகளையே! குறிப்பாக, சோழர் வரலாற்றை எழுதிய நீலகண்ட சாஸ்திரியின் அடியொற்றியே, திராவிட ஆய்வுகள் அமைகின்றன. நீலகண்ட சாஸ்திரியின் ஆய்வுகள், பிராமணர்களுக்குத் தமிழகத்தில் பெரும் செல்வாக்கு இருந்தது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை. அந்த மாயைத்தான் திராவிடம் எப்போதும் விரும்புகிறது
.
வேள்விக்குடிச் செப்பேட்டில் ஒரு பிராமணன் கூறிய சேதியை பெரிய சான்றாக, திராவிடம் முன்வைக்கவில்லையா? அதுபோல்தான் இதுவும்
.
பறையர்களுக்கு இறையிலி நிலம் வழங்கிய இராசராசன்!

தமிழிய ஆய்வில் நாம் முன் வைக்கும் சான்றுகள் அனைத்துமே மூலச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை. அந்த வகையில் சில கல்வெட்டுச் சான்றுகளைக் கண்போம்.
உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் தஞ்சாவூர் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரம் உடைய பரமஸ்வாமிக்கு வேண்டும் நிவந்தங்களுக்குத் தேவதானமாகச் சோழமண்டலத்து புறமண்டலங்களிலும் உடையார் ஸ்ரீஇ ராஜராஜ தேவர் குடுத்த ஊர்களில், ஊர்நத்தமும் ஸ்ரீ கோயில்களும் குளங்களும் ஊடறுத்துப்போன வாய்க்கால்களும் பறைச்சேரியும் கம்மாணசேரியுஞ் சுடுகாடும் உள்ளிட்டு இறைஇலி நிலங்களும்...
(இராஜராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/ பக் 425)
தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் மேற்கண்ட கல்வெட்டும் ஒன்று. இக் கல்வெட்டு கூறும் சேதி, இராசராச சோழன் பெருவுடையார் கோயிலுக்கான தேவதான நிலங்களாக்க் கொடுத்த ஊர்களில் பறைச்சேரியும் கம்மாள சேரியும் உண்டு. மேலும் இந்தச் சேரிகளுக்கான நிலங்கள் இறையிலி நிலங்கள் ஆகும். அதாவது, பறைச் சேரி, கம்மாளச் சேரி நிலங்களுக்கு அரசின் வரி விதிப்பு இல்லை
.
பறையர்களுக்கும் கம்மாளர்களுக்கும் பெருவுடையார் கோயிலுக்காக தேவதான நிலம் அளித்த இராசராச சோழன், பிராமண அடிவருடி என்கிறார்கள் திரிபுவாதிகள். பறையர்களை அடிமைகளாக்கிச் சுரண்டினான் இராசராசன்என்று வாதிடுவோரும் உண்டு.
இந்த இடத்தில், அக்கால உற்பத்திப் பொருளியல் குறித்த சில அடிப்படைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். நிலவுடைமைச் சமூகம் அது. வேளாண் உற்பத்திதான் ஒட்டு மொத்த சமூக இயக்கத்துக்கும் அடிப்படை. இந்த வேளாண் உற்பத்தியை அரசு அதிகாரம் எந்தளவு தன் கட்டுப்பாட்டில் கொண்ட்தோ, அந்தளவு அதற்கு வருவாய் குவிந்த்து. பல்லவர்கள், வேளாண் உற்பத்தியைச் சமூக உற்பத்தியாகப் பார்க்கவில்லை. மாறாக, தமது சுரண்டலின் மைய ஆதாரமாகவே கருதினார்கள். இதனால், பிராமணர்களை வடக்கே இருந்து பெருமளவில் தமிழகத்தில் குடியேற்றி, அவர்களுக்கு வரியில்லாத விளை நிலங்களை வாரி வழங்கினர். பிராமணர்கள் உழவை வெறுப்பவர்கள். ஆரியம் என்பதே உடல் உழைப்பை வெறுத்து, மூளை உழைப்பு என்ற பேரால் கள்ளத்தனம் புரிவதை ஊக்குவிப்பதுதான்.

தமிழர் மரபில் வேளாண் மாந்தர், உழவர் – வேளாளர் ஆகிய இரு பிரிவுகளாக இருந்தனர். உழவர் தமது நிலத்தில் உழுவோர். வேளாளர், பிறரைப் பணிக்கமர்த்தி உழுவிப்போர். இவை சாதிகள் அல்ல. தொழிற் பிரிவுகள். ஒருவகையில், வர்க்கப் பிரிவுகள். வேளாளர் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பிரிவினரில், பள்ளர், பறையர் உள்ளிட்ட பல்வேறு குலத்தவரும் உண்டு. இந்த நிலையைக் களப்பிர, பல்லவர் காலம் மாற்றியது. பிராமண வேளாளர்களை அதிகளவில் உருவாக்கிவிட்டனர் மேற்கண்ட திராவிட அரசர்கள்.
இராசராசர் காலத்தில், வேளாண் உற்பத்தியை சமூகப் பொருளாதாரப் பெருக்கத்திற்குப் பயன்படுத்தும் கோட்பாடு உருவானதைக் காண முடிகிறது. இதன் விளைவாகவே, தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கான தேவதான நிலங்கள் சமூகத்தின் பல்வேறு குலத்தவருக்கும் வழங்கினார் இராசராசன். தேவதான நிலங்கள் என்றாலே பிராமணருக்கு மட்டும் கொடுக்கப்பட்டவை என்ற பார்வை தவறானது என்பதை மேற்கண்ட கல்வெட்டின் வழி, உணரலாம்.
பெருவுடையார் கோயிலில் உள்ள மற்றுமொரு கல்வெட்டு,
சோழச் சருப்பேதிமங்கலம் ஆயிரம் பிராமணர்க்கு பங்கெழுதி கூறிட்டுக்கொள்கவென்று திருமுகப் பிரசாதஞ்செய்தருளி சம்கரித்து கூறிட்டமையில்.....இவ்வூர் பங்கெழுதி கரை பறித்து கையோலை வாங்கின...
(சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் / முனைவர் மே.து.ராசுகுமார் /2004/ பக் 152, 153)

இக் கல்வெட்டின் முழுமையான வரிகள் காட்டும் பொருள், பிராமணர்களுக்குக் கொடையாக்க் கொடுக்கப்பட்ட நிலங்கள் அவர்களது முழு உரிமைக்கு விடப்படவில்லை. மாறாக, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கரையோலை முறையில் இடம் மாற்றி வேறு இடம் தரப்பட்டது. இதன் மூலம் பிராமணர்கள் குறிப்பிட்ட நிலத்தின் மீது சொந்தம் கொண்டாடும் முறை தடுக்கப்பட்டது. களப்பிரர், பல்லவர் காலத்தில் சதுர்வேதிமங்கலங்கள் பிராமணர்களுக்கு முற்றும் முழுதான உரிமை உடையனவாக வழங்கப்பட்டன. மேலும் அந்த நிலங்கள் இறையிலி நிலங்கள் ஆகும். அதாவது, அந்நிலங்களுக்காக பிராமணர்கள் வரி செலுத்தவும் தேவையில்லை. அங்கே அரசனின் ஆணை செல்லாது. இந்த நிலையை மாற்றியது சோழர் காலம்.

மேற்கண்ட இரு கல்வெட்டுகளும் காட்டும் உண்மைகள்:
1.        
பிரமதேயங்களில் பிராமணர்களுக்கு நிலம் உரிமையாக வழங்கப்படவில்லை
2.        தேவதான நிலங்களாக, பறையர்களுக்கு நிலம் முழு உரிமையுடன் வழங்கப்பட்டது
3.        தேவதானமாக்க் கொடுக்கப்பட்ட, பறையர், கம்மாளர் உள்ளிட்ட தமிழ்க் குலத்தவரின் நிலங்களில் அரசின் வரி விதிப்பு இல்லை.
அடுத்த சான்றைக் காண்போம்.

சோழ நாட்டு வளமான விளைநிலங்களின் பெரும்பகுதி, பிராமணர்களுக்குக் கொடையளிக்கப்பட்டிருந்தது என்பது உண்மைக்கு மாறானதாகும். சோழநாட்டுக் கல்வெட்டுகளில் கிடைத்த 1300 ஊர்ப் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது, 250 ஊர்களே பிராமண ஊர்களாக இருந்திருக்கின்றன. இது 19.25% மட்டுமே. கோயில் மற்றும் பிராமணர் கொடை தொடர்பான பதிவுகளே கல்வெட்டுகளில் பெரிதும் இருக்கின்றன. எனவே, கோயில் கல்வெட்டுகளில் பதியப்படாத வேளாள ஊர்களையும் கணக்கில் கொண்டால், இந்த அளவு இன்னும் குறைவாகவே இருக்கும்
(மேலது நூல் / பக் 214,215)
பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் மேலும் ஒன்றைக் காண்போம்.
கேரளாந்தகன் வாயில் திருமெய்காப்பாளர், இராசராசன் திருவாயில் மெய்காப்பாளர், அணுக்கன் திருவாயில் மெய்காப்பாளர் என்ற கல்வெட்டு வரிகள் உணர்த்தி நிற்கும் சேதி,
தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் சொத்துக்களை 118 ஊர்களில் ஊருக்கு ஒரு மெய்க்காப்பாளர் என்ற முறையில் நிர்வகித்து வந்தனர். இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த ஊர் மக்களுக்கே விடப்பட்ட்து. இக் கல்வெட்டை ஆய்ந்த முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் பின்வருமாறு வியந்து உரைக்கிறார்;

தஞ்சைப் பெருங்கோயிலின் சொத்துக்கள் எவற்றையும் மன்னனது படையினரோ அல்லது அலுவலரோ பாதுகாக்கவில்லை. நூற்றுப் பதினெட்டுக்கும் மேற்பட்ட சோழமண்டல ஊர்மக்களே பாதுகாத்தனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மக்களாட்சி நெறிக்கு இதனினும் சிறந்த சான்றொன்று இருக்க முடியாது(இராஜராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/பக் 432)

இராசராசன் காலத்தில் கோயில் சொத்துக்கள் பிராமணர் உடைமையாகின  - என்று பொய் கூறிவரும் திரிபுவாதிகளின் கண்டுபிடிப்புக்கும் மேற்கண்ட கல்வெட்டுக்கும்தான் எவ்வளவு தொலைவு! இந்த நெடுந்தொலைவில்தான் தமிழிய எதிர்ப்பு எனும் அவர்களது உண்மை பதுங்கிக் கிடக்கிறது.

அடுத்து, இத்திரிபுவாதிகளுக்கு உவப்பான ஒரு கல்வெட்டைக் காண்போம். இதுவும் அதே தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டுதான். ஆனால், திராவிட இனத்தவரான விஜயநகர அரசர் காலக் கல்வெட்டு.

இக்கல்வெட்டு, மகாமண்டலேசுவரன் திருமலைராயனுடையது. தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த பிரமதேய கிராமங்கள் சிலவற்றை வரி இல்லாத நிலங்களாக மாற்றி ஆணை பிறப்பித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது (மேலது நூல் / பக்446)

இதன் பொருள் என்ன? விஜயநகர திராவிட அரசர்கள் தஞ்சையை ஆளும் வரை, பிராமதேய கிராமங்கள் வரி செலுத்த வேண்டியவையாகவே இருந்தன என்பதுதானே! விஜயநகர திராவிடர்கள், பிராமண அடிவருடிகள் என்பதை எழுதாத வரலாற்றாசிரியர்களே இல்லை. ஆனால், திராவிடக் கோட்பாட்டாளர்களோ, தமிழர்களுக்கு அறிவு இல்லை, தமிழர்கள் மானம் கெட்டவர்கள் என்று தூற்றுவதில் சுகம் காண்பவர்கள். அவர்கள் விஜயநகர – நாயக்க திராவிடர் குறித்து இதுவரை திறனாய்வு நூல் ஏதேனும் வெளியிட்டுள்ளார்களா? மார்க்சியத்தின் பேரால் கொச்சைச் சமத்துவம் பேசுவோரும் விஜயநகர – நாயக்கர் குறித்த ஆய்வுகளை வெளிக் கொண்ர்வதே இல்லை.
இவ்விருவருக்கும் தமிழ் வேந்தரான இராசராசரைத் தூற்றுவதில் பெருமகிழ்ச்சி!

இராசராச்ச் சோழர் குறித்த முக்கியமான வெளிநாட்டவர் ஆய்வுகளை மேற்கோள் காட்டும் ஆய்வாளர் பாமயன், ‘களப்பிர்ர், பல்லவர் காலத்தில் வளர்க்கப்பட்ட பிராமண ஆதிக்க பிரமதேய முறையை மாற்றி அமைத்து, தமிழ்க் குலத்தவருக்கு நிலங்கள் வழங்கவே, கோயில்களைப் பொருளியல் மையங்களாக மாற்றினார் இராசராசன் என்கிறார். ஜப்பானியத் தமிழ் அறிஞர் நொபுரு கராசிமா, ‘சோழர் காலத்தில், பிராமணர்களின் தனியார் நிலங்களையும் பிரமதேயங்களையும் கோயில்களுக்கு மாற்றப்பட்டனஎன்று கூறியுள்ளதைப் பாமயன் தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
(வேளாண்மையை விரித்த வேந்தன் / பாமயன்/ தமிழினி /2010 அக்டோபர்)

இது மிக முக்கியமான பார்வை ஆகும். இன்று தனியார் சொத்துக்கள் வரம்பு மீறும்போதும் ஊழல் மிகும்போதும் அச்சொத்துக்களை அரசுடைமை ஆக்கும் வழக்கம் இன்று உள்ளது. இதேபோல், பிராமணரின் தனியார் சொத்துக்களையும் பிரமதேய சொத்துக்களையும் கோயிலுக்கு மாற்றிவிடுவதும் அரசுடைமையின் அக்கால வடிவம்தான்.

பெருவுடையார் கோயிலின் நிர்வாகம் 118 ஊர்களைச் சேர்ந்த மக்கள் கையில் இருந்தது எனக் கண்டோம். இந்தப் பெருவுடையார் கோயிலுக்கு பிரமதேயங்களும் பிராமணத் தனியார் நிலங்களும் மாற்றப்பட்டன என்னும்போது, பிராமணர் சொத்துக்கள் மறைமுகமாக மக்களுக்கு மாற்றப்பட்டன என்றுதானே பொருள்!
பெருவுடையார் கோயில் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் ஈடுபட்ட வல்லுநர் பட்டியலைக் காணலாம்.
1.        மாமன்னன் இராசராசச் சோழன்
2.        வீரசோழன் குஞ்சரமல்லன் ராசராசப் பெருன்ந்தச்சன் எனும் தலைமைக் கட்ட்டக் கலைஞன்
3.        மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலைக் கட்ட்டக் கலைஞன்)
4.        இலத்தி சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் (இரண்டாம் நிலை)
5.        மாமன்ன்னின் தமக்கை குந்தவைப் பிராட்டியார்
6.        சேனாபதி கிருக்ஷ்ணன் இராமன் எனும் மும்முடிச் சோழப் பிரம்மராயன்
7.        ஸ்ரீ காரியம் பொய்கைநாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான் (கோயிலின் நிர்வாக அதிகாரி)
8.        ஈசான சிவபண்டிதர் எனும் ராஜகுரு
9.        இராஜேந்திர சோழன்
10.     சைவ ஆச்சாரியார் பவனபிடாரன் (தலைமை குருக்கள்)
11.     கல்லில் எழுத்து வெட்டுவித்த சாத்தன்குடி வெள்ளாளன் இரவி பாளுருடையான்
(இராஜராஜேச்சரம் / முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /பக் 25)
இவர்களில் ஆறாம் இடத்தில் உள்ள, சேனாபதி கிருக்ஷ்ணன் இராமன் எனும் மும்முடிச் சோழப் பிரம்மராயன், மட்டும் பிராமணர். மற்ற அனைவரும் பிராமணர் அல்லாதோரே. பிரம்மராயன், பெருவுடையார் கோயிலின் சுற்று மதிலைக் கட்டும் பொறுப்பை ஏற்றவர். கோயிலின் நிர்வாகத்தில் அவருக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. மேலும், பிரம்மராயன் இராசராசரது படையின் தளபதிகளில் ஒருவர் என்பதும் குறிக்கத்தக்கது
.
கோயிலின் நிர்வாகம் முழுக்க தமிழர்களிடம்தான் இருந்தது.
பிற்காலச் சோழர் வரலாற்றை ஆய்ந்த ஆய்வறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் இராசராசச் சோழர் ஆட்சியின் முக்கிய நிர்வாகிகள் 10 பேரை, அவர்களது பொறுப்புகளுடன் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள்,
1.        சேனாபதி கிருக்ஷ்ணன் இராமன் எனும் மும்முடிச் சோழப் பிரம்மராயன் – படைத் தளபதி, பெருவுடையார் கோயில் சுற்றுச் சுவர் பொறுப்பாளர், ஓலை நாயகம்
2.        பரமன் மழபாடியான் மும்முடிச் சோழன் – படைத் தலைவர்களில் ஒருவர்
3.        சேனாபதி குரவன் உலகளந்தானான இராசராச மாராயன் – படைத் தலைவர்களுள் ஒருவர், நில அளவைத் துறையின் தலைவர் – சோழ அரசு முழுமையையும் அளந்தவர்
4.        மதுராந்தகன் கண்டராதித்தன் – இராசராசரின் சிற்றப்பா. கோயில்களின் கண்காணிப்பாளர்
5.        ஈராயிரவன் பல்லவரையன் ஆகிய முமுடிச் சோழ போசன் – தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் சண்டேசுவர தேவர் சிலையை எழுப்பியவர், திருமந்திர ஓலை நாயகம் எனும் ஆவணப் பதிவாளர்
6.        பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்த வேளான் – தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் பூசைப் பணிகளின் பொறுப்பளர்
7.        பாளூர் கிழவன் அரவணையான் மாலாரிகேசவன் – அரசியல் அதிகாரி, பெருவுடையார் கோயில் பூசைப் பணிகள் கண்காணிப்பாளர்
8.        இராசகேசரி நல்லூர் கிழவன் காறாயில் எடுத்த பாதம் – திருமந்திர ஓலை நாயகம் எனும் ஆவணப் பதிவாளர்
9.        வேளான் உத்தமசோழனாகிய மதுராந்தக மூவேந்த வேளான் - திருமந்திர ஓலை நாயகம் எனும் ஆவணப் பதிவாளர்
10.     விளத்தூர் கிழவன் அமுதன் தீர்த்தகரன் - திருமந்திர ஓலை நாயகம் எனும் ஆவணப் பதிவாளர்
(பிற்காலச் சோழர் சரித்திரம் -1 / 2008/ பக் 106-108)
மேற்கண்டோரிலும் பிரம்மராயர் தவிர்த்த அனைவரும் பிராமணர் அல்லாதோர். நாட்டின், கோயிலின் நிர்வாகம் முழுமையும் தமிழர்களிடம் மட்டுமே வழங்கப்பட்டிருந்த்தை இந்தப் பட்டியல் விளக்குகிறது அல்லவா! குறிப்பாக, மதுராந்தகன் கண்டராதித்தன் பொறுப்பின் கீழ் அனைத்துக் கோயில்களும் இருந்த்து எனும் தகவல் முக்கியத்துவம் வாய்ந்த்து.
இராசராசர் காலத்தில் கோயில்கள், உற்பத்தி மையங்களாக மாற்றப்பட்டன. இதற்காக, கோயில்களின் பேரில் நிலங்களும் பிறவகைச் சொத்துகளும் ஏராளமாக எழுதி வைக்கப்பட்டன. குறிப்பாக, பிரமதேயங்களின் செல்வாக்கு முடக்கப்பட்டு அவற்றுக்கான நிலங்கள் கோயில்களுக்கு மாற்றப்பட்டு, அரசுடைமை ஆக்கப்பட்டன. இந்த நிலையில், கோயில்களின் வருவாயைக் கண்காணிக்கும் பொறுப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த்தாக மாறியது. அந்தப் பொறுப்பில் தனது சிற்றப்பாவான கண்டராதித்தரை நியமித்தார் இராசராசர்.

கண்டராதித்தர், கோயில்களைக் கண்காணித்து அவற்றில் தவறிழைத்தவர்களைத் தண்டித்து அவை நல்ல நிலையில் இருக்குமாறு பாதுகாத்து வந்தார்என்கிறார் சதாசிவப் பண்டாரத்தார். (மேலது நூல் / பக் 105)
இராசராசர் காலத்து பிரமதேயங்கள் பற்றிய பொய்ப் பரப்புரையும் தமிழகத்தில் நீண்ட காலமாக வலுவடைந்துள்ளது.

தொடரும்.

ம.செந்தமிழன்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com