பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

November 21, 2010

இராசராசச் சோழர் தமிழிய ஆய்வு - ம.செந்தமிழன்


 காட்சி வாசகர்கள் கவனத்திற்கு..
ஆவணப்பட இயக்குநர், தமிழ்தேசிய ஆர்வலர், இயற்கைவேளாண்மை ஆர்வலர் என பன்முக தன்மை கொண்ட  ம. செந்தமிழன் அவர்கள் எழுதிய இராசராசச் சோழர்  தமிழிய ஆய்வு என்ற குறுநூல் காட்சியில் தொடராக வருகிறது -காட்சி
பகுதி -4

தமிழகத்தில் பிராமணர் குடியேற்றம்

களப்பிரர் காலத்தில் நிகழ்ந்ததைக் காட்டிலும் அதிகமாக பிராமணர் குடியேற்றம் பல்லவர் காலத்தில் நடந்தது. இதற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. பின்வரும் சான்றைக் காணலாம்.
-       பல்லவர் காலத்தில், பிராமணர்களுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது. இவ்வாறு தானமாக வழங்கும் முன், அந்த நிலத்தின் சொந்தக்காரர் தனது உரிமையை பிராமணருக்கு மாற்றித் தரவேண்டும். அரசனும், தன்னுடைய வரி விதிப்பு உரிமை இனிமேல், தானமாக அளிக்கப்பட்ட நிலத்துக்குப் பொருந்தாது என விட்டுவிட வேண்டும். அந்த நிலத்தின் மீது, காணி உரிமை (குத்தகை போன்றவை) யாருக்கேனும் இருந்தால் அவர்கள் அவ்வுரிமைகளை விட்டுவிட வேண்டும்.

(தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / முனைவர் கே.கே.பிள்ளை / உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2000/ பக் :246)
பரம்பரை பரம்பரையாக வேளாண்மை செய்த தமிழரிடத்திலிருந்து நிலத்தைப் பிடுங்கி, பிராமணருக்கு வழங்கியது இம்முறை. அரசனுக்குக் கூட அந்த நிலத்தில் உரிமை இல்லை என்று விதி வகுக்கப்பட்டது என்பதிலிருந்து, பல்லவர்கள் எந்தளவு பிராமணியப் பங்காளிகளாகச் செயல்பட்டனர் என்பதை உணரலாம்.

-       பிராமணருக்கு வழங்கப்பட்ட பிராமதேயப் பகுதிக்குள் அரசு அதிகாரி நுழையவே கூடாது.
-       பிரமதேயமாக நிலம் வழங்கப்பட்டது என்ற சேதியை, அறிக்கை ஓலை எழுதி ஊர் மக்கள் தம் தலை மீது வைத்து வெளியிட வேண்டும்.
-       பிராமதேய நிர்வாகத்தில் பிராமணர் மட்டுமே இருக்க வேண்டும். இவர்களுக்கு ‘பெருமக்கள் என்று பெயர். (மேலது நூல் / பக் :247)

பிராமணர்களுக்குக் கேள்வி முறையற்ற உரிமை வழங்கப்பட்டது. உண்மையில், பல்லவர் ஆட்சி என்பது பிராமணர் ஆட்சியே ஆகும். தமிழரது பெருமிதங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கிவிட்டு, ஆரிய பிராமணியத்தின் தென்னிந்தியக் கிளையாக, திராவிட ஆட்சியைக் களப்பிரர் தொடங்கினர், பல்லவர் வளர்த்தனர்.

ஆசீவகம் என்பது சங்ககாலத்தில் ஓங்கி வளர்ந்த தமிழர் தத்துவம் ஆகும். இது ஒரு அறிவியல் கோட்பாடு. கடவுள் மறுப்புக் கோட்பாடு. இந்த ஆசீவகத்தைக் களப்பிரர், பல்லவர் கடுமையாக எதிர்த்தனர்.
கன்னார்கள், தோல் கருவிகள் செய்பவர்கள், கழைக் கூத்தாடிகள், ஆசீவகர்கள், தரையடி நீர் காண்பவர்கள், சூதாடிகள், சவரத் தொழிலாளர் ஆகியவர்களிடமிருந்து வரிகள் தண்டப்பட்டன (மேலது நூல் / பக் :245)

-பிராமணர்களுக்கு வரி விலக்கு; ஆசீவகர்களுக்கு வரி விதிப்பு என்பது பல்லவர் கொள்கை.
பிராமணர்களுக்கு நிலமும் கொடுத்து, அந் நிலங்களில் பணி புரிய தமிழ்த் தொழிலாளிகளையும் அடிமைகள் போல் கொடுத்து, விளைச்சலுக்கு வரி கூட வேண்டாம் என்ற திராவிட அரசு, ஆசீவகர் எனும் தமிழ் அறிவாளர்களைப் பழி தீர்ப்பதற்காக, அவர்கள் தொழில் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவர்கள் மீது வரி விதித்தது. அதாவது, ஒருவர், ஆசீவக தத்துவத்தைக் கடைப்பிடிப்பவராக இருந்தாலே, அவர் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். இது உண்மையில் வரி அல்ல; அபராதம்! ஆசீவகர்களோடு சூதாடிகளையும் பல்லவர்கள் சேர்த்திருப்பதைக் கவனித்தால், திராவிடர் தமிழர் அறிவியலின் மீது எவ்வளவு வெறுப்பு கொண்டவர்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.
தமிழகத்தில் பிராமணர்களின் வளர்ச்சி இவ்வாறாக திராவிட அரசுகளால் விரைவுபடுத்தப்பட்டது.
தமிழர் ஆட்சி திராவிடர்களால் ஒழிக்கப்பட்ட பிறகுதான் - திராவிடர் ஆட்சியில்தான் - ஆரிய பிராமணியம் முழுமையான அரச கோட்பாடாக மாற்றப்பட்டது.

அதற்கு முன்புவரை, எந்தத் தமிழ் அரசரின் கோட்பாடாகவும் பிராமணியம் இருக்கவில்லை. சில அரசர்கள் வேள்வி வளர்த்தனர் என்ற செய்தியை வைத்துக் கொண்டு, தமிழ் அரசர்கள் ஆரிய அடிமைகளாக இருந்தனர் என திராவிடக் கோட்பாட்டாளர்கள் வாதிடுகின்றனர். வேள்வி வளர்த்தல் என்பது, ஒரு சடங்கு, அவ்வளவே. சில அரசர்கள் இச் சடங்கை மேற்கொண்டதாலேயே, ஆரிய பிராமணியத்தைத் தம் அரசுக் கோட்பாடாகக் கொண்டார்கள் என நிறுவ இயலாது. அவ்வாறு நிறுவுவதற்கான எந்த ஆய்வு முடிவையும் திராவிட கோட்பாட்டாளர்கள் இதுவரை முன் வைக்கவில்லை.

ஆனால், திராவிட அரசர்கள் முழுக்க முழுக்க ஆரிய பிராமணியத்தின் பாதுகாவலர்களாகச் செய்ல்பட்டனர் என்பதையும், அவர்களின் அரசுக் கோட்பாடே ஆரிய பிராமணியம்தான் என்பதையும் விளக்குவதற்கு சான்றுகள் உள்ளன. அவற்றில் மிகச் சில சான்றுகளே இங்கே காட்டப்பட்டன.

தொடரும்....

ம.செந்தமிழன்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com