பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

November 16, 2010

இராசராசச்சோழர் தமிழிய ஆய்வு - ம.செந்தமிழன்



 காட்சி வாசகர்கள் கவனத்திற்கு..
ஆவணப்பட இயக்குநர், தமிழ்தேசிய ஆர்வலர், இயற்கைவேளாண்மை ஆர்வலர் என பன்முக தன்மை கொண்ட  ம. செந்தமிழன் அவர்கள் எழுதிய இராசராசச் சோழர்  தமிழிய ஆய்வு என்ற குறுநூல் காட்சியில் தொடராக வருகிறது -காட்சி
பகுதி -3


எச்சிலார் தீண்டார் – பசு, பார்ப்பார், தீ, தேவர்,
உச்சந்தலையோடு, இவைஎன்ப; யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள். (5)

-எச்சிலார் என்றால், இழிந்தோர்என்று பொருள். பசு, பிராமணர், தீ, தேவர் ஆகியோரை இழிந்தவர்கள் தீண்டக் கூடாது என்கிறது இவ்விதி. பசுவையும் நெருப்பையும் தீண்டாமல் அக்காலத்தில் மக்கள் எப்படி வாழ முடியும்? ஆனால், தீண்டக் கூடாது என்கிறது ஆசாரக்கோவை. இதன் பொருள் என்னெவெனில், கால்நடை வளர்ப்போர், தீ மூட்டிப் பல்வேறு பணிகள் புரியும் தொழிற் கலைஞர்கள் ஆகியோர் இழிந்தோர் – எச்சிலார் என்பதே ஆகும். இந்த ஒரு விதியினால், தமிழ்க் குலங்கள் அனைத்துமே இழிந்த குலங்கள் ஆகிவிட்டன அல்லவா!

கீழ்மக்கள் உடல் தொட்டால் குளிக்க வேண்டும் (10) என்பது தீண்டாமையின் நேரடியான கட்டளை. இந்த விதிகள் எல்லாம் தமிழகத்தில் எழுதப்படுவதற்கான சூழல், தமிழர் ஆட்சிக்காலத்தில் இல்லை. தமிழர்களைத் தமிழக ஆட்சியிலிருந்து களப்பிர்ர் நீக்கினர். பல்லவர் அதை உறுதி செய்தனர். பிராமணர், தமக்கான அடித்தளங்களை அமைத்துக் கொண்டனர்.

களப்பிரர் காலத்தில்தான் பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் தொகுக்கப்பட்டன அல்லது எழுதப்பட்டன. அவை அனைத்துமே நீதி நூல்கள். ஆகவே, களப்பிரர் காலமே பொற்காலம்என்று தமிழகத்தின் திரிபுவாதிகள் பரப்புரை செய்கின்றனர். தாழ்த்தப்பட்ட சாதி இயக்க இளைஞர்களும் அறிவாளர்களும் இந்தப் பரப்புரையை நம்புகின்றனர். இது திட்டமிட்ட சதி ஆகும். எந்தத் திராவிடக் களப்பிர்ர்கள் தமிழரைத் தீண்ட்த்தகாதோர் ஆக்கினரோ, அவர்கள் காலத்தையே பொற்காலம் என நம்பவைக்கும் சதி இது என்பதை, ஆசாரக்கோவையைப் படித்தாலே எவரும் உணரலாம்.

திருக்குறள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று என தொகுக்கப்பட்ட்து. உண்மையில் திருக்குறள் தமிழர் ஆண்ட சங்க்காலத்தில் இயற்றப்பட்ட்து. அந்த நூலுக்கு இருந்த பெரும் செல்வாக்கினால் அதற்குச் சமண நூல் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் சதியின் விளைவாகவே இத்தொகுப்பில் திருக்குறள் இணைக்கப்பட்டது. பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் தொகுக்கப்பட்ட காலம், களப்பிரர் காலத்துக்குப் பிந்தையது எனும் கருத்து ஆய்வுலகில் நிலவுகிறது. முனைவர் ச.வே.சு, மயிலையார் ஆகியோர் இக் கருத்தின் அடிப்படையையே முன்வைக்கின்றனர். அவ்வாறே இருப்பினும், திருக்குறளைச் சமண நூலாகக் கற்பித்த முயற்சியைக் களப்பிரர் காலச் சமணத் துறவிகள்தான் செய்திருப்பர் என்று கருத வாய்ப்புண்டு.

ஏனெனில், களப்பிரர் காலத்தின் இறுதிக் கட்டத்தில், தமிழகத்தில் தீவிர சமண எதிர்ப்பு உருவாகிவிட்டது. களப்பிரருக்குப் பின் ஆண்ட, சோழ பாண்டியர், சமணத்தை ஆதரித்து வளர்க்கவில்லை. சில, சலுகைகளை மட்டும் அச்சமயத்துக்கு வழங்கினர். இவ்வாறான நிலையில், தமிழ் நூலான திருக்குறளைச் சமண நூல் என தமிழ் வேந்தர்கள் ஏற்றிருப்பார்கள் என்பது முரண்.

அடிப்படையில், திருக்குறள் சமண நூல் அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும். பதினெண் கீழ்க் கணக்கின் சமண நூல்கள் அனைத்தும் ஆருகன் எனும் சமணக் கடவுளை வாழ்த்தித் தொடங்குவன. திருக்குறள் ஆருகனை வணங்கவும் இல்லை; அவ்வாறான கடவுள் குறித்துக் குறிப்பிடவும் இல்லை. மேலும், சமணத்தில் துறவே முதன்மை. திருவள்ளுவர், இல்லறத்தையே வலியுறுத்தினார். காமத்துப் பால் இயற்றிய திருவள்ளுவரை, துறவறமே இலக்குஎன்ற சமணத்துடன் இணைத்தது சதிச் செயல் அன்றி வேறில்லை!

ஆக, சங்க காலத்தில், தமிழகத்தைத் தமிழர் ஆண்ட காலத்தில் தமிழிய நெறிப்படி தமிழரால் இயற்றாப்பட்ட திருக்குறளைச் சமண நூல் ஆக்கும் முயற்சி, களப்பிரர் காலத்தில்தான் தொடங்கி இருக்க வேண்டும் என்பது என் கருத்து. பதினெண் கீழ்க் கணக்கின் 4 நூல்கள் முறையே பின் வரும் காலங்களில் இயற்றப்பட்டவை என்பது மயிலையார் முடிவு.
1.        திருக்குறள்
2.        களவழி நாற்பது
3.        முதுமொழிக் காஞ்சி
-கடைச் சங்ககாலத்தில் இயற்றப்பட்டவை.
4. நாலடியார் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு. களப்பிரர் ஆட்சிக்குச் சற்று பின்னர் எழுதப்பட்டிருக்கலாம்.
(மேலது நூல்)

பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்என்று உரைக்கும் திருக்குறளும், எச்சிலார் என்ற சொல்லால் தமிழரைக் குறிக்கும் ஆசாரக்கோவையும் ஒரே தொகுப்பு நூல்கள் என்று உரைப்பது தர்க்கப்பூர்வமாகவே தவறு அல்லவா!
நிலவுடைமை முறையை பிராமணர்கள், சமூகத்தின் இன்றியமையாத் தேவையாகவும், நிலவுடைமையாளராக இருப்பது ஒருவரது வாழ்வின் சிறப்பு வாய்ப்பாகவும் கருதினர். இந்தக் கருத்தை ஆசாரக் கோவையின் விதிகளில் ஒன்றாகவும் எழுதி வைத்தனர்.

பிறப்பு, நீண்ட ஆயுள், செல்வம், வனப்பு, நிலக்கிழமை, புகழ், கல்வி, நோயின்மை – இந்த எட்டும் ஒழுக்கம் கெடாமல் வாழ்வோருக்குக் கிடைக்கும் என்கிறது ஆசாரகோவையின் 2 ஆம் விதி.

நிலக்கிழமையைத் தனி மனிதர் வாழ்வின் அங்கமாக, இன்றியமையாத் தேவையாக அறிவித்திருக்கிறார்களெனில், எந்தளவுக்கு பிராமணர்கள் களப்பிரர் காலத்தில் செழித்து வாழ்ந்தனர் எனப் புரிந்து கொள்ள முடிகிறது.
சோழர்காலத்தில் நிலவுடைமைச் சுரண்டல் இருந்த்து என்று கூக்குரலிடும் திரிபுவாதிகள், களப்பிரர் காலத்து பிராமணர்களின் மேற்கண்ட விதியைப் பற்றி என்றேனும் எழுதியதுண்டா?

பல்லவர்

களப்பிரரைத் தொடர்ந்து, பல்லவர்கள் தமிழகத்தைக் கைப்பற்றினர். பல்லவர் ஆட்சிக் காலத்தின்போதும், தமிழகத்தின் சில பகுதிகளில் களப்பிரர் ஆட்சியாளராக நீடித்தனர்.
வரலாற்றறிஞர்கள் பல்லவர் கால பட்டயங்களை மூன்றாகப் பிரிக்கின்றனர்.

1.     பிராகிருத மொழிப் பட்டயங்கள் (கி.பி 3, 4 ஆம் நூற்றாண்டுகள்)
2.     வட மொழிப் பட்டயங்கள் (கி.பி. 4,5,6 ஆம் நூற்றாண்டுகள்)
3.     கிரந்த தமிழ்ப் பட்டயங்கள் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு)
என்ற வகையில் பல்லவரது பட்டயங்கள் அமைந்தன.
(பல்லவர் வரலாறு / மா.இராசமாணிக்கனார் / நாம்தமிழர் 2009 /பக் 40)
இப்பல்லவர்கள், தெலுங்கு குலத்தவர் ஆவர்.

பிராமணர்களது கோட்பாடுகளை, அரசுக் கோட்பாடுகளாக மாற்றியவர்கள் பல்லவர்கள் ஆவர். தமிழ் அரசர்கள் சிலர், பிராமணருக்கு நெருக்கமாக இருந்தபோதும், பிராமணியத்தை அரசக் கோட்பாடாகக் கொள்ளவில்லை.ஆனால். பல்லவர்கள் காலத்தில் பிராமணியமே ஆதிக்கம் செலுத்தியது.

இதன் ஒரு கூறாகவே, பட்டயங்களின் மொழியில் கூட தமிழ் புறக்கணிக்கப்பட்டது. அதாவது, தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி அல்ல; வடமொழியே ஆட்சி மொழி என்ற நிலையை உருவாக்கியவர்கள் பல்லவர்கள். களப்பிரரும் இதையே செய்தனர். பல்லவர் ஆட்சி எல்லை தமிழகத்தின் பெரும்பகுதிக்குப் பரவி இருந்தது. ஆகவே, பல்லவரின் இந்தத் தமிழ் விரோதக் கொள்கை, தமிழ் வளர்ச்சியை வெகுவாகப் பாதித்தது.

பல்லவர் காலத்தின் இறுதிக் கட்டத்தில் மட்டும் தமிழும் ஒரு பட்டய மொழியாக்கப்பட்டது. அப்போதும் தமிழ் ஆட்சி மொழி ஆக்கப்பட்டதற்கான சான்றுகள் ஏதும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடரும்...
ம. செந்தமிழன்.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com