பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

November 13, 2010

ஈழ சாட்சியங்கள் - நிலா

காட்சியில் ஈழத்து தோழர்கள் தாங்கள் கண்டவற்றை சந்தித்தவற்றை கேட்டவற்றை சாட்சியங்களாக பதிவு செய்கிறார்கள். இப்பதிவுகள் ”ஈழ சாட்சியங்கள்” என்ற பெயரில் இடம்பெறுகிறது. நீங்கள் உங்கள் சாட்சியங்களை அல்லது நீங்கள் கேள்விப்பட்ட உண்மையான நிகழ்வுகளை kaattchi@gmail.comக்கு அனுப்பும் படிக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. காட்சி (ஏனைய ஈழ சாட்சியங்களுக்கு இங்கே சொடுக்கவும்)

'திருமணமாகி எனது முதலாவது குழந்தையை எதிர்;பார்த்து நாங்கள் விசுவமடுவில் வசித்து வந்தோம்.  2008ம் ஆண்டு மார்கழி மாதம் கடுமையான மழை வன்னியைத் தாக்கி வெள்ளத்தில் ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்களின் கொட்டகைகளும் அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தன.  நெத்தலியாற்றுப் பாலம், விசுவமடு பாலம் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கியிருந்தன.  கிளிநொச்சியை கூடுதலாகக் கைப்பற்றி மிகவும் வேகமாக மழையாக எறிகணையை வீசியபடி இராணுவத்தினர் கிழக்குநோக்கி நகரத்தொடங்க மக்கள் அலை அலையாய் வாகனங்களில் சுதந்திரபுரம், விசுவமடு, புதுக்குடியிருப்பு நோக்கி இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர்.  எறிகணை வீச்சுக்கள் சற்றுக் குறைவாக இருக்கும்போதுதான் பயணம் செய்யமுடியும். கருவுற்றிருந்த நான் மருத்துவமனைக்குச் செல்வதற்கு மிகவும் அதிக நேரம் பயணம் செய்யவேண்டியிருந்தது.  விசுவமடு பாலத்தைக் கடப்பதற்கு ஒரு டரக்டரில் ஏறித்தான் கடக்க வேண்டும்.  இல்லையெனின் இடுப்பு மட்டத்து நீரில் நடந்து கடக்கவேண்டும்.  அப்படிக் கடந்து அடுத்த பக்கம் சென்றபோதும் ஏமாற்றம்தான். மேற்கொண்டு போக இயலாதவாறு அனைத்து வகையான போக்குவரத்தும் தடைபட்டு இருந்தன.  வீதி நிரம்ப மக்கள் அலை அலையாய் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.  வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினேன். மழையிலும் கூட எறிகணை வீச்சுக்கள் நிற்கவில்லை. அத்துடன் சிறிலங்கா வான்படையின் கிபீர் குண்டு வீச்சு விமானம் எனது வீட்டுக்கு மிக அருகில் குண்டுவீச்சை நடத்தி பல மக்களைக் கொன்றது. அப்போது நான் அதிர்;ந்துபோனேன். கிபீர் விமானங்கள் வருவது மிகவும் அரிதாகவே கேட்கும். குண்டை வீசிய பின்னர்தான் அதன் பறப்பு ஒலி எமக்குக் கேட்கும். அதனால் நாங்கள் அதை எதிர்;பார்த்திருக்கவில்லை. அத்தோடு எங்கள் வீட்டில் அப்போது பதுங்கு குழிகளும் அமைக்கப்படவில்லை. அன்றுதான் என்னுடைய தண்ணீர்க்குடம் உடைந்திருக்கவேண்டும்.  அதன் பின் ஐந்து நாட்களின் பின்னர் எனக்கு வலி ஏற்பட நான் ஒருவாரு மருத்துவமனையைச் சென்றடைந்தேன். ஐந்து நாட்களுக்கு முன்னரே குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினார்கள். உயிரற்ற உடலாய் எனக்கு ஒரு மகன் பிறந்தான். எனது முதற் குழந்தை இறந்தே பிறந்திருந்தது. மகனின் உடலை மருத்துவமனையிலேயே அடக்கம் செய்தோம்.


நிலா.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com