சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச்சார்ந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும், முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக்கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர். தற்போது கோவையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். இவருடைய கவிதைகள், கட்டுரைகள், காலச்சுவடு,கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன்,வார்த்தை, வடக்கு வாசல், அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில்பிரசுரமாகி இருக்கின்றன. இவருடையக் கவிதைகள் காட்சியில் சுமதி கவிதைகள் என்றுதொடராய் இடம் பெற்றுள்ளன. அதை தொடர்ந்து "கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற தலைப்பில் காட்சியில் தொடர்கதை வெளிவருகிறது.
பகுதி-13
வயக்காட்டுக்கு போகிறவர்கள் கூட்டம் கூட்டமாக போய்கொண்டிருந்தார்கள். நாலைந்து நாட்களுக்கு முன்பாகவே ஆரம்ப்பள்ளியிலிருந்து பேத்தியின் மதிப்பெண் பட்டியலை வாங்கி வந்து வீட்டில் வைத்துவிட்டார் சீனிதாத்தா. அவருக்கு சந்தோசம் சந்தோசமாய் இருந்த்து. தன் குடும்பத்தில் தானோ தன் பிள்ளைகளோ ஐந்தாம் வகுப்பை கூட தாண்டியதில்லை. அந்த குறையை தீர்க்கும் விதத்தில் பேத்தியை ஆறாம் வகுப்பில் சேர்க்கப்போகிறார். சாந்தியின் அம்மா மங்கம்மா மகாராஷ்டிராவில் இருந்தாள். பேத்தி ஆறாம் வகுப்பு போவது குறித்துப் பெருமையாக மகளுக்கு கடிதம் கூட எழுதிப் போட்டிருந்தார். அந்த விடுமுறையில் பேத்தியை அழைத்துக்கொண்டு போய் அம்மா அப்பாவைக் காட்டிவிட்டு திரும்பியிருந்தார்.
சரக்கு வாங்குவதற்காக பலகை கட்டியப் பழைய “அட்லஸ்” பெயர் பாதி அழிந்த நிலையில் இருந்த மிதி வண்டியில் பேத்தியை உட்கார வைத்துக்கொண்டார். மஞ்சள் பையில் பழைய நோட் ஒன்றும் தூக்கு சட்டியும் இருந்தது. அதை வாங்கி முன் பக்கம் மட்டிக்கொண்டார். மேற்கு பக்கம் நோக்கி அழுத்தினார். ஊருக்கு மேற்கே ஐந்தரைக் கிலோமீட்டர் தொலைவில் பாப்பைநாயக்கன்பட்டியில் உயர்நிலைப்பள்ளி இருந்தது. ஊரிலேயே நாலைந்து மிதிவண்டிகள்தான் இருந்தன. மிதிவண்டி வைத்திருப்பது பெரிய விஷயமும் கூட. சாந்தியின் தாத்தாவிடமும் ஒன்று இருந்தது. பத்து வருட்த்திற்கு முந்தையது. வண்ணமெல்லாம் போய் பழசாக இருந்தாலும் செலவு இழுத்துவிடாமல் மாடாய் உழைத்தது.
பின்புறம் ஒய்யாரமாய் உட்கார்ந்து வந்தாள் பேத்தி. வேடிக்கை பார்த்தப்படி பலகையின் நுனிக்கு சாந்தி வரும்போதெல்லாம் “ஒழுங்கா உட்காரு ஒரு பக்கமா சாயுது” என்று அதட்டினார். போகும்போதே மாற்றுவழி ஒன்றையும், கடந்து போன காடுகள் எல்லாம் யாருடயவை என்பதையும் சொல்லிக்கொடுத்துக் கொண்டே வந்தார். இரண்டு மூன்று பாதையோரக் கிணறுகளைத் தாண்டும் போதெல்லாம் “இங்கெல்லாம் விளையாட்டுத்தனமாக நடந்து வரக்கூடாது சூதானமாய் வரனும்” என்று சொல்லிக்கொடுத்தார்.
உழுதுபோட்ட கரிசல் காடுகளுக்கு நடுவே ஒற்றையடிப்பாதை இருந்தது. அது நடப்பதற்கும் மிதிவண்டியில் போவதற்கும் வசதியாய் அமைந்திருந்தது. சைக்கிளில் வந்தால் மணி அடித்துக்கொண்டே வரவேண்டும், அப்போழுதுதான் முன்னாடி நடந்து போகிறவர்கள் பாதையிலிருந்து விலகி வழிவிட்டு நடப்பார்கள். சாந்தி பின்னாடி உட்கார்ந்து கொண்டே முன்னாடி நடந்து போகிறவர்களை எட்டிப்பார்த்தார்கள். பக்கத்து ஊர்ப் பிள்ளைகளோடு முத்தேலக்காவும் விமலாக்காவும் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் அவள் படிக்கப்போகும் பாப்பையாநாயக்கன்பட்டி உயர்நிலைப்பள்ளியில் எட்டிலிருந்து ஒன்பதிற்கு போகிறார்கள். தாத்தாவின் மிதிவண்டியின் மணி சத்த்த்திற்கு ஒதுங்கி நின்ற அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்து சாந்தி சிரித்தாள் .விமலாக்கா தாத்தாவிடம் கேட்டாள் தெலுங்கில்
“பெத்தைய்யா சாந்தினி பள்ளிட்டான சேரா பொய்யரா?”
“பெரியப்பா சாந்தியைப் பள்ளிக்கூட்த்தில் சேர்க்கப் போகிறீர்களா?” என்று. தாத்தா திரும்பி பாராமல் “அவ்வும்மா” என்றபடி சைக்கிளை மிதித்தார். ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டு, என்னென்ன புத்தகங்கள், நோட்டுகள் வாங்க வேண்டுமென்று சாந்தியின் வகுப்பு வாத்தியாரிடம் கேட்டுக்கொண்டார். மறந்து விடுவோமென்று எழுதி வாங்கிக் கொண்டார். ஒரே வாரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் போய் புதுசே வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்தார்.
அன்று இரண்டாம் வருட மாணவிகளுக்கு தேர்வு இருந்ததால் சாந்தி சீக்கிரமாகவே வந்துவிட்டாள். அவளுக்கு முன்பாகவே புளோரா வந்து பதிவாளர் அலுவலகம் போய் அவளுக்கான வினாத்தாளையும் சேர்த்தே எடுத்து வந்து அவளுடைய டேபிள் மேல் வைத்திருந்தார். பார்த்துவிட்டு
“தேங்க்ஸ் மேம் “ என்றாள் சாந்தி
“கொஸ்டின் சரியா இருக்குதான்னு ஒரு தடவை சரிப் பார்த்துக்கோங்க சாந்தி” என்றார். அவள் வினாத்தாளை வாசித்துப் பார்த்தப்போது மணிமேகலையில் ஆசிரியர் சாத்தனாருக்குப் பதிலாக இளங்கோவடிகள் பெயரை எழுதியிருந்தாள்.
“புளோராவிடம் காட்டி “மேம் அவசரத்துல ஆசிரியர் பெயரை மாத்தி எழுதிட்டேன். போன உடனே ஸ்டூடண்ட்ஸ்கிட்ட சொல்லித் திருத்த சொல்லிடலாமா மேம் “? என்றாள் சாந்தி.
வாங்கிப் பார்த்துவிட்டு “அதனால ஒண்ணுமில்ல போனவுடனே சொல்லிடுங்க” என்று சாந்தியிடம் திருப்பித்தரும்போது, பாலின் வேகமாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். அவர் முகத்தை பார்க்கும்போது கடுகு போட்டு தாளிக்கலாம் போலிருந்தது. அவ்வளவு கோபம். சாந்தியும் புளோராவும் பேசவுதற்குப் பயந்தார்கள்.
கைப்பையை வைத்தவர் திரும்பியும் பார்க்கவில்லை. யாருடனும் பேசவில்லை. மேஜை சுத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும் தூசு இருப்பதாக நினைத்து துடைப்பதற்காக பழைய பேப்பர்களைக் கிழித்து, சரசரவென்று இழுத்துக் கூடையில் போட்டார். பேப்பரை எடுக்க பீரோவை திறந்தவர், அதை எடுத்துவிட்டு கால்களால் அதிக சத்தத்துடன் சாத்தினார்.
தேவையான வினாத்தாள்களை எண்ணி எடுத்துக்கொண்டு மீதியிருந்த்தை பாலின், மேஜையில் வைத்திருந்தாள் சாந்தி. மற்ற இருவருக்கும் முன்னதாகவே வகுப்பிற்குக் கிளம்பிப் போய் மாணவிகளை உட்கார வைத்துக்கொண்டிருந்தார்கள். முதலில் விடை எழுதுவதற்கான தாள்களைக் கொடுத்துவிட்டு பிறகு வினாத்தாள்களைக் கொடுத்தாள். அதிலிருக்கும் தவறை திருத்திக்கொள்ள சொல்லிவிட்டு, பாலினிடமும் அதைச் சொல்லிட வேண்டுமென்று கிளம்பி வந்தாள். வகுப்பின் வாசல்வரை கூட வந்திருக்கமாட்டாள். பாலின் எதிரே வந்து நின்றார். அவர் கையில் வினாத்தாள் இருந்தது.
தொடரும்....
