பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

November 10, 2010

அற்றவைகளால் நிரம்பியவள் 24 -யமுனாராகவன்.


     யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் "அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர் கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். 
பகுதி -24

பள்ளிப்பருவத்தில் 12வது படிக்கையில், தாவரவியல் ரெக்கார்ட்டு புத்தகத்துள் ஒட்டவேண்டி, நண்பர்கள் 10, 15 பேரோடு காடு, மேடு எல்லாம் தேடி specimens சேகரித்தது, நினைவிற்கு வந்தது அஞ்சனாவிற்கு. வாழ்க்கையும் அது சுமக்கவைக்கும் நினைவுகளும் கூட ஒரு விதத்தில் Record notebook தான். புத்தகங்களுக்குள் ஈரம் போக, பதப்படுத்த ஒளித்து வைக்கும் இலைகள், நாளாக பச்சை நிறம் மாறி பழுப்பாகி போகும். மனிதம் கடந்து செல்லும் முகங்களும், அது தாங்கி வரும் சம்பவங்களும் இப்படி தான் நெஞ்சில் பதிகிறது. மாதக்கணக்காய் தேடி, சேகரித்த தாவரங்களின் botanical name இன்னமும் அஞ்சனாவின் மூளைக்குள் Hibiscus rosasinensis, Abrus precatorius, calotropis என்று ஒட்டிக்கொண்டு செல்லமாட்டேன் என்கிறது. தன் வீட்டிற்கு போகும் வழியில் இருந்த செடியில் இருந்ததென்று, வத்சலா பாலிதின் பையில் பிடித்து வந்த கலர் கலர் கோடு போட்ட கை விரல் நீள வெட்டுக்கிளிகள் நினைவிற்கு வந்தது அவளுக்கு.
கல்லூரியின் இறுதியாண்டு படிக்கும் சமயம், விடுமுறையில் வீட்டிற்கு வந்தப்போது, அப்பாவின் நினைவு வர, அவருடைய புத்தகங்கள் அடுக்கியிருந்த அறைக்குள் போனாள் அஞ்சனா. புத்தகங்களின் பக்கங்களில் எழுதியிருந்த அவருடைய எழுத்துகளை தொட்டு பார்த்த போது, அவர் பேனா பிடிக்கும் விதமும், புருவம் லேசாக சுருக்கியபடி எழுதும் styleம் நினைத்தாள். புத்தகத்தில் இருந்த வார்த்தைகளை முகத்தில் மேல் வைத்து, கண்களை மூடி, மெல்ல சுவாசத்தை உள்ளிழுக்க, சட்டென அப்பாவின் சிகரெட் வாசமும், வியர்வை வாசமும், புத்தகத்தின் வாசமும் அறை முழுவதும் நிரம்புவது போல தோன்ற, விவரிக்க முடியாத அழுத்தமான பந்து, நெஞ்சை அழுத்த, கண்களில் தானாக நீர் துளிர்த்தது.
அவருடைய புத்தகங்களை புரட்டியபடி இருக்கும் போது, ஒட்டாது விட்டு போன அரசமர இலையொன்றை கண்டெடுத்தாள். வருடங்கள் உருண்டோடியதின் விளைவாக, இலையின் பச்சை முழுக்க போய், நரம்புகளும் இலையின் வடிவு மட்டும் நன்கு பாதுகாக்கப்பட்டு இருந்தது. வெகு நேரம் கையில் வைத்து பார்த்தவள், அப்போது படித்துக்கொண்டிருந்த Davidson புத்தகத்தில் வைத்தாள். இவைகளை எடுக்கவேண்டி, சைக்கிளில் சிலரும், சிலர் நடந்தும், வழி முழுக்க ஏதோ கொறித்தப்படி, சப்தம் போட்டு சிரித்து நடந்த நாட்களை யோசித்து பார்த்தாள். எத்தனை அழகான பருவம்... அதன் அழகு புரியும் முன்னமே, அதை விட்டு தாண்டி விடுகிறோம். தூரம் செல்ல, செல்ல திரும்பி பார்க்கையில் தான் தெரிகிறது, எத்தனை அருமையான பொழுதுகளை கடந்து வந்திருக்கிறோம் என்று.
       T.S. Elliot எழுதிய கவிதையான ‘’ Burnt Norton’’ல் சொல்லியிருப்பார்,   
``Footfalls echo in the memory
Down the passage which we did not take
Towards the door we never opened’’
வாழ்க்கை பாதையில் கடந்து வெகு தூரம் வந்தபின், தெரியாத பாதைகளும், கதவுகளும், திரும்பி பார்க்கையில் தெள்ள தெளிவாகிறது என்ன மாயமோ.
       தன்னையொட்டி அமர்ந்திருந்த காவ்யாவை பார்த்து கொண்டிருந்தாள் அஞ்சனா. காவ்யா கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்திருந்த கடலை பார்த்துக்கொண்டிருந்தாள். கடலின் ஆழத்தை விட, காவ்யாவின் கண்கள் ஆழமாக தெரிந்தது. Looking at her, the sentence ‘’ lost in the deep pool of her eyes ‘’ made sense. காவ்யா மெதுவாக தொடங்கினாள், ``அஞ்சனா! நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர் என் கணவர். நான் மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள். வெவ்வேறு ஜாதி. கல்லூரியில் தான் சந்தித்தோம். என் பின்னோடு சுற்றி திரிந்தார். நானும் மனதை பறிக்கொடுத்தேன். காதலிக்கும் போது ஒன்றுமே தெரியவில்லை. இரு வீட்டாரையும் எதிர்த்து திருமணம் செய்துக்கொண்டோம். கஷ்டமான வாழ்க்கை பழகியதில்லை அவர். எனக்கும் என்னால் தானே எல்லாம் விட்டு வந்தார் என்ற guilty conscience. ஒன்றரை வருடம் சந்தோஷமாக போனது. பணப்பற்றாக்குறை என்று இல்லாத போதும், அவருடைய பழைய வாழ்க்கையை போல வாழ முடியவில்லை. அது அப்போது பெரிதாக தோன்றியதில்லை. வாழ்க்கை இப்படியே போய்க்கொண்டே இருக்க, இரட்டை குழந்தைகளுக்கு தாயானேன். அதுவரை வேலைக்கு போய்க்கொண்டிருந்த கணவர், சுயதொழில் செய்யப்போவதாக சொல்லி, இருந்த கொஞ்ச நஞ்சம் காசு, நகை எல்லாம் போட்டு, மேலே கடனும் வாங்கி தொழில் தொடங்க, அது மிகவும் நொடிந்து போக, கடனும் வட்டியும் மாத செலவுகளும் சமாளிக்க எங்களால் முடியவில்லை. பிள்ளைகளை பார்த்துக்கொள்ளமுடியாத சூழலில், நான் Beautician course பயின்றேன். பக்கத்திலேயே இருந்த பார்லர் ஒன்றில் வேலை பார்க்க தொடங்கினேன். அவரோ குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் அவர். வேலைக்கும் போகவில்லை. தன்னுடைய இயலாமையை போக்கிக்கொள்ள தெரியாது, குடிப்போதையில் கிடந்தவர், வார்த்தைகளில் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகிக்க தொடங்கி, தினமும் அடிக்க தொடங்கினார். வாழ்க்கையே வெறுத்துவிட்டது எனக்கு`` என்று சொல்லி நிறுத்தினாள் காவ்யா.
       வலி மறத்து போனது போல இருந்தது, அவள் குரல். சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடங்கினாள், `` அஞ்சனா! அதற்குள் என் வீட்டில் நான் படும் கஷ்டங்களை பார்த்து, வந்து போக தொடங்கினார்கள். அவரும் அவர் வீட்டுக்கு போய்வர தொடங்கினார். அவர் வீட்டினர் நினைத்திருந்தால், இந்த கடன் தொல்லையை எளிதில் அடைத்திருக்கலாம். ஆனால், அவரை வீட்டோடு சேர்த்துக்கொண்டவர்களால், என்னையோ குழந்தைகளையோ அங்கீகரிக்க மனம் வரவில்லை. கடன் வளர்ந்துக்கொண்டே போனது. கடன் கொடுத்தவர்கள், வீட்டிற்கே வந்து சண்டைப்போட தொடங்கினார்கள். இவரோ கொஞ்சம் கொஞ்சமாக என் வாழ்க்கையில் இருந்து விலக தொடங்கிவிட்டார். இரண்டு பெண் குழந்தைகள், ஏற்கனவே நொடிந்த குடும்பம், ஒன்றுக்கும் உதவாத கணவர், இதில் என் காதல், ஆசை எல்லாம் கரைந்து போனது, அஞ்சனா! அவர்கள் வீட்டில் சொன்னார்கள், என்னுடைய ஜாதகத்தில் தோஷம், அதனால் தான் என் கணவர் இப்படி ஆகிவிட்டார். நான் அதிர்ஷ்டசாலி இல்லை. என்னை மணமுடிக்காது இருந்திருந்தால், கணவர் பெரிய ஆளாக ஆகியிருப்பார் என்று சொல்லி சொல்லி, அவர் மனதை கலைத்துவிட்டார்கள். இப்படியே பேச தொடங்கி, கடைசியில், என் ஜாதி, என் நடத்தை என்று ஒன்று ஒன்றாக அடுக்கி, என்னை விட்டு விலகினால் தான், அவர் வாழ்க்கை மிளிரும் என்று சொல்ல, பிள்ளைகளை வைத்து கொண்டு, கடனோடு ஒற்றையாக நின்றேன், வயிரெரிய. என்ன செய்வது அடுத்தது என்று புரிபடவில்லை. எத்தனையோ நாள், தூங்கிக்கொண்டிருக்கும் என் மகள்களோடு போய், பக்கத்தில் இருக்கும் தண்டவாளத்தில் தலையை வைத்துவிடலாம் என்று தோன்றியிருக்கிறது தெரியுமா?`` என்று சொன்னபடி விம்மினாள் காவ்யா.
       இருட்டிக்கொண்டு வந்த வானத்தை பார்த்தப்படியே இரண்டு பெண்களும் கடற்கரை மதிலின் மீது அமர்ந்திருக்க, கடலின் நீர்மட்டம் ஏறிக்கொண்டே இருந்தது. கடல் பார்க்கும் போதே நிறம் மாறிக்கொண்டிருந்தது. அஞ்சனா ஒன்றுமே பேசவில்லை, காவ்யாவே தொடர்ந்தாள், `` மனசு முழுக்க கோபம், வெறுப்பு, பயம், அஞ்சனா! அந்த நேரத்தில என்னை பார்த்திருக்கணும் அஞ்சனா, நீ. முகம் இப்போ இருக்கறது போலவே இருக்காது. கல்யாணம் ஆன 4 வருஷத்தில 20 வருஷம் வயசு ஏறினது போல இருந்தது எனக்கு. காதலிக்கும்போது அழகா தெரிஞ்சவன், இப்ப அருவெறுப்பா தெரிஞ்சான். எங்க வீடு வசதில குறைவு தான், ஆனா அப்படி நான் அவஸ்தை பட்டதில்லை. என்னதான் அப்பா, அம்மா இருந்தாலும், புருஷன் இல்லாத போனாலோ, இல்லை சரியான புருஷன் கிடைக்காத பொண்ணுன்னு தெரிஞ்சா, அதுவும் காசுக்கு கஷ்டப்படுறது தெரிஞ்சிட்டா, அப்ப தான் you tend to see true colours of most of the people. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பலர் வெறும் நிழல் மனுஷங்க தான். இவங்களோட நிஜம் பயங்கர perverted. கொஞ்ச நாள் இப்படியே போக, ரொம்ப தொல்லை கொடுத்துட்டு இருந்த கடன்காரனுக்கு காசு கட்டவேண்டி இன்னொரு இடத்தில கடன் கேட்க போனேன். நாக்கு வரண்டு போய், வியர்த்து விறுவிறுக்க, பஸ்க்கு காசு கொடுக்க இல்லாம, 12 கிலோமீட்டர் நடந்தே போனேன். இவங்க காசு கொடுத்தா, அதை வாங்கி, வீட்டுக்கு வந்து கண்டமாதிரி பேசுற அந்த பொறம்போக்குக்கு கடனை கொடுத்து ஒழிச்சரலாம்னு பார்த்தேன். ஏன்னா அந்த பரதேசி, தராதரம் இல்லாம, கேவலமா பேசுவான். காசு தரேன்னு சொன்னவங்க வீட்டு முன்னாடி இரண்டு மணிநேரம் காத்து இருந்தேன். கடைசில காசு இப்ப கொடுக்க முடியாது, கொஞ்சம் சிக்கல் அப்படின்னு சொல்லிட்டாங்க. மணி ஏழு இருக்கும். பசி, பயம், அடுத்து என்ன அப்படின்னு தெரியாத குழப்பம், கண்ணை இருட்டிக்கிட்டு வந்தது. திரும்ப அழுதுட்டே வந்தேன், அஞ்சனா. வீட்டுக்கு வந்து சேரும்போது கிட்டத்தட்ட மணி பத்து. அந்த ராத்திரில தனியா நடந்து வந்தேன். எவன் எவனோ ஒரு ராத்திரிக்கு வந்து தங்கிட்டு போன்னு கூப்பிட்டானுங்க. கேவலமா பார்த்தானுங்க. வீடு வந்து சேர்ந்த பின்ன, நெஞ்சுல தீ வைச்சு கொளுத்தி போட்ட மாதிரி இருந்தது. என்னோடு பொண்ணுங்க, தூங்க அடம்பிடிச்சு, அப்பா வேணும்னு கேட்க, அந்த பிஞ்சு குழந்தைங்க ரெண்டு பேரையும் கண்ணு மண்ணு தெரியாம அடிச்சேன், பேய் பிடிச்ச மாதிரி. எங்க அம்மா அப்பா ஓடிவந்து, குழந்தைங்கள பிடிச்சுக்கிட்டு, என்னை தள்ளிவிட்டுட்டு, நல்லா திட்டினாங்க, அஞ்சனா!`` என்று சொல்லும்போது குலுங்கி அழத்தொடங்கிய காவ்யாவை, தோளோடு சாய்த்துக்கொண்டாள்.
யாராவது அழுதால், அஞ்சனாவிற்கும் அழுகை வரும். ஒரு போதும் காவ்யாவின் முகம் சுருங்கி பார்த்ததில்லை. சிரித்தப்படியே எப்போதும் வளைய வரும் இவளுக்குள் இத்தனை சோகமா என்று எண்ணும் போது வருத்தமாக இருந்தது. லேசாக சமாதானம் ஆக தொடங்கியபின், மேலே சொன்னாள், `` எங்க அப்பா பாவம், sugar, BP patient. அவரு ஒரு பக்கம் அழ, எங்கம்மா ஒரு பக்கம் அழ, என் பிள்ளைங்கல அடிச்சதில உடம்பெல்லாம் சிவந்து போயி அழ, என்னால முடியலை. என் குழந்தைகளை காரணமே இல்லாம அடிச்சிட்டேன். அதுவும் ஊருல இருக்க கோவம் எல்லாம் வச்சி அடிச்சிட்டேன். சத்தியமா பைத்தியம் பிடிக்கிறாப்புல இருந்தது. தலையில அடிச்சிகிட்டு நான் அழ ஆரம்பிச்சேன், அஞ்சனா. என்ன செய்ய போறேன், எப்படி என் பிள்ளைங்களை கரை சேர்க்கப்போறேன், எப்படி கடனை அடைக்கப்போறேன் தெரியாம, அழுதுட்டே இருக்க, நீ நம்பமாட்டே,  என் பொண்ணுங்க ரெண்டு பேரும் ஓடிவந்து என்னை கட்டிப்பிடிச்சு, ’’அழாதீங்க அம்மா! நாங்க இனி குறும்பு செய்யமாட்டோம்னு`` நெஞ்சோடு ஒட்டிக்கிச்சுங்க. அந்த நிமிஷம், நான் நிமிர்ந்தேன். என் பிள்ளைங்களுக்காக நான் உயிரை கூட கொடுக்க தயாராயிட்டேன். என் மனசு முழுக்க ஒரு வெறி வந்துச்சு பாரு. இப்ப வரைக்கும், என் நெஞ்சில எரிய வைச்சிக்கிட்டே இருக்கேன்.’’ என்றாள். அஞ்சனா இருண்டு போயிருந்த கடலை பார்த்தாள். உலகில் உள்ள எல்லா விஷயங்களுக்கும் Melting point உண்டு. அது பெண்களுக்கும் பொருந்தும். அந்த கொதிநிலை அடைந்தபின் ஏற்படும் விளைவுகளை ஆண்களால் தாங்கமுடியாது.
       `` Beauty parlourல் வேலை செய்யத்தொடங்கி, சின்னதா புடவை வியாபாரம், சீட்டு இப்படி எல்லாம் செய்யத்தொடங்கினேன். ஒரு கல்யாணத்தில bridal makeup போட போகும் போது, என் புருஷனை பார்த்தேன். பொண்டாட்டி செத்தா புருஷன் புது மாப்பிள்ளைன்னு சொல்லுவாங்களே, அது மாதிரி இருந்தான். அவன் முன்னாடியே, நிறைய கஸ்டமர் கல்யாண பெண் மேக் அப் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அதில சில முக்கிய புள்ளிங்க என்கூட பேச நிறைய ஆசைப்பட்டாங்க. அவன் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியலை, அவனை பார்க்க பார்க்க, நானும் என் குழந்தைகளும் அவன் முன்னாடி, தலை நிமிர்ந்து நிக்கணும்னு இன்னும் அழுத்தமா தோணுச்சு. இந்த சமுதாயம் ஒரு வேடிக்கையான விஷயம், அஞ்சனா. I came to know about it the hard way. நல்ல குடும்பப்பெண்ணாக இருக்கும் போதும், பணத்துக்கு அல்லாடிட்டு இருக்கும் போது, என்னை துச்சமா பேசினாங்க, என்னுடைய நடத்தையை பற்றி தப்பா பேசினாங்க. ஆனா once I started making money, எல்லாமே சரியாகிடுச்சு. You know what`s the ulterior motive with most of the men? Sex. அவ்வளவு தான். அதுக்கு மேலே ஒன்றுமே இல்லை. நானே கொஞ்ச கொஞ்சமா என்னுடைய பார்லர் வைக்கிற அளவு பெரியதா ஆனேன். Private clients, Foreign clients வர தொடங்கினாங்க. அப்படி வந்த ஒருத்தர் தான் எனக்கு Beauty therapist cum masseuse ஆக, இந்த வேலைய இப்போ கொடுத்திருக்கார். என் கடனெல்லாம அடைச்சிட்டேன். சொந்தமா நிலம் வாங்கி, வீடு கட்டி முடிச்சிட்டேன். என் குழந்தைங்க ரெண்டு பேரும் நல்ல பள்ளிக்கூடத்தில படிக்கிறாங்க. அப்பா அம்மாவை நல்லபடியா வைச்சு பார்த்துக்கிறேன். என்னுடைய பார்லரை தெரிஞ்ச ஒருத்தர்க்கு leaseக்கு விட்டிருக்கேன். இன்னும் ரெண்டு வருஷத்தில என்னால நல்ல அளவு பணம் சேர்த்திர முடியும். I will be fine and my children would be fine. நான் செய்ததெல்லாம் தப்பு அப்படின்னு சமூகம் சொல்லலாம், நீ கூட சொல்லலாம். ஆனா என்னை பொறுத்தவரைக்கும் நான் செய்தது சரி. என்னுடைய வாழ்க்கையை எடை போட வர நாக்கு ஒண்ணு கூட, நான் அழுது மருகிட்டு இருக்கும் போது வரலை. ஒரு வேளை நானும், என் பிள்ளைகளோ தண்டவாளத்தில செத்து போயிருந்தால், ரெண்டு நாள் பரப்பரப்பா பேசியிருப்பாங்க. ஆனா அப்புறம் இவங்க மெல்ல வேற விஷயம் கிடைச்சிடும். So I don’t give a rat’s arse about what people want to name me. ’’ என்று சொல்லி அஞ்சனாவை பார்த்து சிரித்தாள் காவ்யா.
       இருட்டில் இருவரும் அமர்ந்திருந்தார்கள் வெகு நேரம் ஒன்றும் பேசாது. அஞ்சனா மெதுவாக பெருமூச்சி விட்டு, காவ்யாவை பார்த்து சொன்னாள், `` I should say, kavya, I feel so proud about you ‘’ என்று. ஜெனிஃப்ர் லோபேஸ் நடித்த படமான ‘’Maid in Manhattanல்`` Bob Hoskins சொல்லும் வசனம் நினைவிற்கு வந்தது. பெரிய ஹோட்டல் ஒன்றில் maid ஆக வேலை செய்வாள் ஜேலோ. அங்கு நிகழும் குழப்பத்தால், பணிநீக்கம் செய்துவிடுவார்கள் அவளை. தன்னுடைய தளத்தின் Manager பாப் அப்போது அவளிடம் சொல்வார், `` Sometimes we are forced in directions, we ought to have found ourselves. What we do, does not define who we are. But what defines us, is how well we rise after falling. இந்த வசனம் காவ்யாவின் வாழ்க்கையை ஒத்ததாக இருந்தது. அவளின் திடமான மனது பிடித்திருந்தது. வறண்ட வாழ்க்கையை எதிர்நோக்கும் போது, பெண்களின் பலம் பன்மடங்கு உயர்ந்து நிற்கிறது உண்மை தான். அஞ்சனா கேட்டாள், `` What next? ‘’ என்று. காவ்யா மெல்ல சிரித்து சொன்னாள், `` இங்கு வந்த பின், வாழ்க்கையை எப்படி மக்கள் நடத்துகிறார்கள் என்று புரிகிறது, அஞ்சனா. இத்தனை நாள், எல்லாவற்றையும் விட்டு கொடுத்துவிட்டேன். சமுதாயம், கட்டுப்பாடு, கோட்பாடு என்று வாய் கிழிய பேசிவிட்டு, படுக்க வரியா அப்படின்னு கூப்பிடற கூட்டத்துக்கு பதில், முகத்துக்கு நேரா வந்து பேசுற இந்த ஊர் ஆம்பளைங்க எவ்வளவோ தேவலாம். இப்போது தான் வாழ்கிறேன். I met someone here and I’m happy,’’ என்றதை கேட்டு, சிரித்தாள் அஞ்சனா.
சேய்ஷல்ஸ் ஆண்களை விவரிக்கவேண்டும் என்றால் super flirtatious என்று தான் சொல்ல வேண்டும். அப்படியிருக்க, இங்கு இருக்கும் ஆணோடு எப்படி வாழ்க்கை நடத்துவாள், எத்தனை நாள் இப்படியே போகும், இங்கிருந்து கிளம்பினால் என்ன செய்வாள் இப்படி நிறைய கேள்விகள் கேட்கலாம்தான். ஆனால், அஞ்சனாவிற்கு எதுவும் கேட்க தோன்றவில்லை. சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்ததும், அதன்பின் காவ்யாவை அவளுடைய பாய்ஃப்ரெண்டோடு சில இடங்களில் பார்த்ததும், விடுமுறைக்கு தன் மகள்களை அழைத்து வந்து நான்கு பேரும் காரில் செல்வதை பார்த்தப்போது சந்தோஷமாக இருந்தது. Value of life is not in its length, but it is in the weight of the moments we cherish.        
படுக்கையில் புரண்டபடி மீண்டும் மூன்று பெண்களின் வாழ்க்கையும் நினைத்து பார்த்தாள் அஞ்சனா. இவர்களின் பின்புலம் கிட்டத்தட்ட ஒன்று தான். ஏதோ ஒரு விதத்தில் தன்னை திருப்தி படுத்தாத மூன்று கணவர்கள், தேடுதல் தீர்ந்து வாழ்க்கையே முடிந்துவிட்டது என்ற நிலையில் நின்ற மூன்று பெண்கள், நல்லவனோ கெட்டவனோ அவர்களை மீண்டும் பெண் என்று உணர்த்திய வேறு மூன்று ஆண்கள், குழப்பங்களின் உச்சத்தில் அவர்கள் எடுத்த மூன்று முடிவுகள். வெளிநபராக நின்று பார்க்கையில், இவர்களின் வாழ்க்கையையோ, முடிவையோ நிர்ணயிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பது மட்டும் தான் உண்மை. சமுதாயம், அதன் வரைமுறைகள் எல்லாம் யாரால் நிர்ணயிக்கப்பட்டது? எங்கிருந்து மருவி வந்தது?
அஞ்சனாவின் பாட்டி சொல்லியிருக்கிறார் கேரளாவில் போன நூற்றாண்டு வரை இருந்த பழக்கம் ஒன்றை பற்றி. சாதாரண வீட்டில் கூட, வீட்டின் ஆண்மகன் நுழைவாயிலின் நடுவே செம்பு குவளையில் நீர் தளும்ப வைத்திருந்தால், வீட்டினுள் நுழையகூடாதாம். அதன் அர்த்தம், அந்த பெண்ணிற்கு அவனோடு வாழ விருப்பம் இல்லை என்றும் அத்தோடு வேறு ஆண்மகனை மணக்க எந்த தடையும் இருந்ததில்லை என்று சொல்வார்கள். ஆக மொத்தம் எப்படி எப்படியோ தொடங்கிய கலாச்சாரம், இன்று இப்படி வந்து நிற்கிறது. யோசித்து பார்த்தால், வனிதா, ஜோல்ஸ்னா, காவ்யாவின் நிலைக்கு காரணம் யார்?  சமுதாயம் வெகு சுலபமாக பேர் வைத்துவிட்டது உடல் தினவெடுத்து திரிபவர்கள் என்று. இப்போது உள்ள சமூகத்தில், பெண்மையை தராசில் நிற்கவைத்தால், அவளுடைய பிறப்புறுப்பு தான் நிர்ணயிக்கும் அவள் தரமானவளா இல்லையா என்று. அவளுடைய குணமோ, படிப்போ, பண்போ இல்லை.
அஞ்சனாவை பொறுத்தவரை நல்லது கெட்டது என்று ஒன்றுமே இல்லை. வாழ்க்கையில் பிடித்தது பிடிக்காதது என்பது தான் உண்டு. பொதுவாக எல்லோருக்கும் பிடித்த காரியம் நல்லதாகவும், பிடிக்காத காரியம் கெட்டதாகவும் மாறிவிட்டதென்றே அவளுக்கு தோன்றியது. நரமாமிசம் சாப்பிடும் கூட்டத்தில் அது நல்ல காரியம் தான். அதுவே இன்னொரு இடத்தில் கொடும் பாவம். பாஞ்சாலி போல ஐந்து கணவரை மணக்கலாம் என்று சொல்லி இன்னமும் பழக்கத்தில் வைத்து வாழும் சில வர்க்கங்களுக்குள் அது நல்ல காரியம் தான். அதுவே இன்னொரு இடத்தில் இழுக்கு. கணவர் இறந்தவுடன், பிடித்ததோ பிடிக்கவில்லையோ அவனோடு இறந்து போகவேண்டும் என்று சொன்னப்போது அது தெய்வ காரியமாக தான் இருந்தது. ஆனால் இப்போது அதை ஒப்புக்கொள்ளமுடியவில்லை. பிறப்பால் இனத்தை வரையறுத்தி பல நூற்றாண்டுகள் படிப்போ பாண்டித்தியமோ மறுக்கப்பட்டது அன்று சரியானதாக தோன்றியது. இன்று அது தவறு என்று புரிபடுகிறது. இப்படி உதாரணங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம்.
அஞ்சனா வாழ்வில் பிறப்பையும் இறப்பையும் பொதுவான மக்களை காட்டிலும் கூடுதலாக பார்த்ததாலோ என்னமோ வாழ்க்கை எத்தனை flimsy ஆன விஷயம் என்பது புரிந்தது. என்னதான் 100 வருடம் வாழ்ந்தாலும், கோடிக்கணக்கான பணம் கொண்டாலும், பதவி அந்தஸ்தோடு வாழ்ந்தாலும், கடைசியில் இறப்பு சர்வநிச்சயமான ஒன்று. இதில் சமாதானமாக, மனநிம்மதியோடு வாழ்வது மட்டும் தான் முக்கியமானதாக பட்டது. அதை, கணவனோடு காதலில் வாழ்ந்தாலும் சரி, கணவனை வெறுத்தாலும் அனுசரித்து வாழ்ந்தாலும் சரி, இல்லை கணவனை விடுத்து தனியே வாழ்ந்தாலும் சரி இல்லை வேறு ஒருவரை இஷ்டப்பட்டு வாழ்ந்தாலும் சரி, It doesn’t matter. We all are going to die. செத்தப்பின் சொர்க்கமா, நரகமா என்ற கதைக்கே அவள் செல்லவில்லை. But don’t we deserve to be happy as human being? ஏனோ சந்தோஷமான விஷயங்கள் எல்லாமே மனிதகுலத்தில் மாபெரும் guilty conscience தருபவையாக சித்தரிக்கப்படுகிறது. நல்ல உணவு, நல்ல உறவு, காமம் இப்படி பலவும் தீட்டு, தகாதது என்ற மனநிலை புகுத்தப்பட்டது எந்த காலக்கட்டத்தில் இருந்து தெரியவில்லை.
இப்படி யோசித்து யோசித்து புரண்டு படுத்தவள், மொபைலில் நேரம் பார்க்க மணி இரண்டு ஆகியிருந்தது. மழை இன்னும் வலுத்துக்கொண்டே போக, தலைவலிக்க தொடங்கியது அஞ்சனாவிற்கு. தூக்கம் எப்போதும் போல வழுக்கிக்கொண்டே போனது. எழுந்து அவளுடைய ipodல் பாடலை போட்டு கேட்க, ஜேசுதாஸ் அவர்கள்
`` பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி இருக்கும் என்பது மெய்தானே
  ஆசைகள் என்ன? ஆணவம் என்ன? உறவுகள் என்பதும் பொய்தானே
  உடம்பு என்பது உண்மையில் என்ன? கனவுகள் வாங்கும் பைதானே ``
என்று பாடுவதை கேட்டப்படி தூங்கிப்போனாள் அஞ்சனா. 
 தொடரும்....
யமுனாராகவன். 

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com