ஆவணப்பட இயக்குநர், தமிழ்தேசிய ஆர்வலர், இயற்கைவேளாண்மை ஆர்வலர் என பன்முக தன்மை கொண்ட ம. செந்தமிழன் அவர்கள் எழுதிய இராசராசச் சோழர் தமிழிய ஆய்வு என்ற குறுநூல் காட்சியில் தொடராக வருகிறது -காட்சி
பகுதி -2
களப்பிரர்
களப்பிரர்கள், பிராமண எதிர்ப்பாளர்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. அது உண்மையன்று. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள பூலாங்குறிச்சியில் களப்பிரர் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகள் கிடைத்தன. பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் என அழைக்கப்படும் அக் களப்பிரர் கல்வெட்டுகள் பின்வரும் செய்திகளைத் தாங்கியுள்ளன:
·
பிரமதேய நிலங்கள் எனும் பிராமணருக்கு நிலம் வழங்கும் முறை களப்பிரர் காலத்தில் இருந்தது. இவர்கள் கன்னட பிராமணர்கள் ஆவர்.
பிரமதேய நிலங்கள் எனும் பிராமணருக்கு நிலம் வழங்கும் முறை களப்பிரர் காலத்தில் இருந்தது. இவர்கள் கன்னட பிராமணர்கள் ஆவர்.
· இந்த பிரமதேய நிலங்களை வாங்கவும் விற்கவும் முடியும். அதாவது, இந்த நிலங்கள் இலவசமாக பிராமணருக்கு வழங்கப்பட்டாலும், வழங்கப்பட்ட பின்னர் அப் பிராமணருக்கே முழு உரிமை உடையனவாக விடப்பட்டன. அரசுக்கு அந்நிலத்தில் உரிமை இல்லை.
· கோயில்களுக்கென நிலங்கள் ஒதுக்கப்பட்டன. அந்த நிலங்கள் பிராமணர்களின் பயன்பாட்டுக்கென கொடையாக அளிக்கப்பட்டன.
· கோயிகளின் பூசை உரிமையைக் குறிப்பிட்ட குலத்தவர்தான் செய்ய வேண்டும் என்ற முறையை (குடுமி முறை) முதன் முதலில் அறிமுகம் செய்தவர்கள் களப்பிரர்.
(முன் தோன்றி மூத்தகுடி / குணா / தமிழக ஆய்வரண் 2007 / பக் :60 – 66)
மேற்கண்ட செய்திகள் களப்பிரரின் ஆரிய பிராமணியச் சார்பையும் விளக்குகின்றன. தமிழர் மரபைத் தாக்கிச் சிதைத்து, ஆரியத்தைத் தமிழரிடையே விதைக்க எண்ணிய களப்பிரர், ஆரியக் கருத்தியல்களான, புத்தம், சமணம், பிராமணியம் ஆகிய மூன்றையுமே தமிழருக்கு எதிராகப் பயன்படுத்தினர் என்பதே வரலாறு காட்டும் உண்மை. அந்தளவுக்குத் தமிழர் மீது ஆரியக் கலப்பாளரான களப்பிரருக்குப் பகைமை!
மதுரை உலகத்தியான் குளத்தின் வடக்கே இருந்த ஆசீவகப் பள்ளிக்குள்ளே, பெருமாள் கோயிலைக் கட்டியவர்கள் களப்பிரர்! (மேலது நூல் / பக்: 65)
ஆசீவகத்தைத் தமிழகத்தில் ஒழித்துக் கட்டுவதில் களப்பிரர் முனைப்புக் காட்டினர் என்பதற்கு இது சிறந்த சான்று. மேலும், களப்பிரர் காலம் குறித்த கூடுதல் தரவுகள் கிடைக்கும்போது, இவைபோன்ற எண்ணற்ற சான்றுகளும் கிடைக்கும் எனலாம்.
ஆரியத்தின் தென்னிந்தியப் பிரிவினரான களப்பிரர் காலத்தில்தான், திராவிடம் எனும் சொல்லும் உருவானது.
பூச்சியபாதர் என்பவரின் மாணவரான வச்சிரநந்தி என்பார் மதுரையில் ’திராவிட சங்கம்’ ஒன்றை நிறுவினார். இதன் காலம் கி.பி.470 ஆகும். சமண அறத்தைப் பரப்புவதும், சமணக் கொள்கைகளை விளக்கக் கூடிய நூல்களைத் தோற்றுவிப்பதுமே இச்சங்கத்தின் நோக்கமாகும். (தமிழக வரலாறு – மக்களும் பண்பாடும் / முனைவர் கே.கே.பிள்ளை / உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2000/ பக் :186)
தமிழர் சங்கம் அமைத்த மதுரையில், ‘திராவிட சங்கம்’ அமைத்த களப்பிரர், சமண சமயத்தைப் பரப்பி, தமிழரது சமயமற்ற, இயற்கையோடு இயைந்த வழிபாட்டு முறைகளை ஒழிப்பதற்குப் பெருமுயற்சிகள் எடுத்தனர். ஒருபுறம், பிராமணரைக் குடியமர்த்தி, தமிழர் நிலங்களைப் பறித்தனர். கோயில்களைக் கட்டி, அக்கோயில்களின் வழிபாட்டு உரிமையில் சாதியத்தைத் திணித்தனர். மறுபுறம், சமணத்தைப் பரப்பினர். இவையே களப்பிரர் காலத்தின் முக்கிய அரசியல் போக்குகள்.
எனது இந்தக் கூற்றுகளை மறுப்போர், பூலாங்குறிச்சி போன்ற சமகால கல்வெட்டு சான்றுகள் கொண்டு மறுக்க வேண்டும். பொத்தாம் பொதுவாக, களப்பிரர் காலத்தில்தான் பிராமணியம் ஒழிக்கப்பட்டது என்ற பரப்புரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரப்புரைக்குச் சான்றாக அவர்கள் முன்வைப்பது வேள்விக்குடிச் செப்பேடுகள் எனும் சான்று மட்டுமே.
’பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனும் சங்ககாலப் பாண்டிய மன்ன்ன், பிராமணருக்கு தானமாகக் கொடுத்த நிலங்களை, கலியரசன் எனும் களப்பிர மன்னன் பிடுங்கிவிட்டான். கி.பி.768 ஆம் ஆண்டு, பாண்டிய மன்னனிடம் ஒரு பிராமணன், இதைச் சொல்லி அழுகிறான். அப் பாண்டியன் மீண்டும் நிலங்களை பிராமணனுக்கு தானமாக அளித்தான்’ என்பதே வேள்விக்குடிச் செப்பேடு உரைக்கும் சேதியின் சாரம்.
’சங்ககாலத்தில் பிராமதேய முறைப்படி பிராமணருக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால், களப்பிரர்கள்தான் அந்த முறையை மாற்றினார்கள்’ என்ற முடிவை இந்த செப்பேட்டுத் தகவலின் அடிப்படையில் முன்வைக்கும் வழக்கம் தமிழகத்தில் உள்ளது.
முதலாவதாக, வேள்விக்குடிச் செப்பேடு, களப்பிரர் காலத்தில் எழுதப்படவை அல்ல. களப்பிரருக்குப் பிந்தைய காலத்தில் எழுதப்பட்டவை அவை. ஆகவே, அவற்றைச் சமகாலச் சான்றுகளாகக் கொள்ளவே முடியாது. களப்பிரர் காலம் கி.பி.6 ஆம் நூற்றாண்டிலேயே முடிந்துவிட்டது. வேள்விக்குடிச் செப்பேடு காட்டும் பாண்டிய மன்னன் கி.பி.8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அதாவது, களப்பிரர் காலம் முடிந்து ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பின் நடந்ததாகக் கூறப்படும் நிகழ்வு அது. இதைவிட, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் காலம், இச் சம்பவம் நடந்த்தாக்க் கூறப்படும் காலத்திலிருந்து ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஆகவே, செவி வழிச் செய்திகளை மட்டுமே கொண்டுதான் மேற்கண்ட சேதி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, வேள்விக்குடிச் செப்பேட்டின் மேற்கண்ட தகவல், ஒரு பிராமணரின் கூற்றையேஅடிப்படையாகக் கொண்டுள்ளது. அப்பிராமணர், தாம் பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாகக் கூறும் நிகழ்வு உண்மையா? பொய்யா? எனச் சோதிக்க எந்த அளவுகோல் உள்ளது? ஒன்றும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.
முறையான ஆய்வு மேற்கொள்பவர்கள் இவ்வளவு சிக்கல்கள் நிறைந்த ஒன்றைச் சான்றாகக் கொள்ளமாட்டார்கள். அவ்வாறு சான்றுகளில் ஒன்றாக இதையும் கொண்டாலும், இந்த ஆதாரமற்ற தகவலைக் கொண்டு, களப்பிரர்கள் பிராமண எதிரிகள் என்று முடிவு கட்டுதல் நேர்மையான ஆய்வாகுமா?
ஆனால், நாம் சான்றாகக் காட்டும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள் இவ்வாறான குழப்ப வகைப்பட்டவை அல்ல. எப்போதோ நடந்ததாக, யாரோ கூறியதாக, வேறு ஒரு காலத்தில் எழுதப்பட்ட செப்புப் பட்டயம் அல்ல, பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள். களப்பிரர் காலத்திலேயே, அக்களப்பிரரின் ஆணைப்படியே வெட்டப்பட்ட கல்வெட்டுகள். அக்கல்வெட்டுகளின் சிலவரிகளைக் காணலாம்;
.....(ழவரும்) ரு...ங் கூடலூரு நாட்டுப் பிரமதாயஞ் சிற்றையூருப் பிரம்ம தாயக்கி
....(ழமை)யும் (மீயா)ட்சியுங் கொண்டாளும் மவூருப் கடைய வயலென்னும்
....புலத்தவன் விற்றுக் கொடுத்த புன்செ நிலனு
....துப் பிரமதாயத்துப் பிரமதாயக் கிழவரா(ன)
....வரு குடிகளையும்...டையாரும் பிரம்மதாய முடையாருந் நாடு காப்பாரும் புறங்காப்
-இக்கல்வெட்டுக்கள் வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் ஆகிய பிரமதேய கிராமங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இந்த பிரமதேய நிலங்களைப் பெற்றுக் கொண்ட பிராமணர்களைப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள், ‘பிரமதேய கிழார்கள்’ என்கின்றன.
(முன்தோன்றி மூத்தகுடி / குணா /2007/ பக் 62,66, 67)
களப்பிரர் காலம்தான் பிராமதேய நிலங்களை எல்லாம் ஒழித்துக் கட்டிய காலமாயிற்றே, அக் காலத்தில் எப்படி பிராமதேய நிலங்கள் வந்தன என்று கேட்கிறோம். திரிபுவாதிகள் விடை கூறட்டும்.
இவை ஒருபுறமிருக்க, வேள்விக்குடிச் செப்பேட்டை வைத்துக் கொண்டு, களப்பிர்ர்கள் பிராமண எதிரிகள் என்ற முடிவை எடுக்கவியலாது’ என்கிறார் ஆய்வுப் பேரறிஞர் மயிலை.சீனி.வேங்கடசாமி. இது குறித்து அவர் கூறும் கருத்து,
‘களப்பிர்ர் வேள்விக்குடி தானத்தை இறக்கினார்கள் என்று செப்பேடு கூறுவது உண்மைதான். ஆனால், அதன் காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. களப்பிர்ர் பிராமண்ருக்குத் தான்ங் கொடுத்து ஆதர்ரித்த்தை ‘அகலிடமும் அமருலகும்’ எனத் தொடங்குகிற செய்யுள் கூறுகிறது.
பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி
இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து
மனமகிழ்ந்து
அருபுரி பெரும் அச்சுதர் கோவே’ என்று அந்தச் செய்யுள் கூறுவது காண்க. இதனால் களப்பிரர் பார்ப்பனரை வெறுத்தவர் அல்லர் என்பது தெரிகிறது’
(களப்பிர்ர் காலத் தமிழகம் / மயிலை சீனி.வேங்கடசாமி / குயிலோசை 2005/பக்72,73)
ஒன்று, வேள்விக்குடிச் செப்பேட்டின் காலம் மற்றும் அச்செப்பேடு கூறும் தகவலுக்கான தர்க்கப்பூர்வச் சான்று ஆகியவை அத்தகவலின் மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்தவில்லை.
இரண்டாவது, ஒருவேளை அத்தகவல் உண்மையே எனக் கொண்டாலும், அதை மட்டும் வைத்துக் கொண்டு களப்பிரர்கள் பிராமண ஆதிக்கத்தை ஒழித்தார்கள் என முடிவு செய்யவே இயலாது. பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளும், மயிலையார் மேற்கோள் காட்டும் பாடலும் மிகத் தெளிவாக, களப்பிரரின் பிராமணச் சார்பைக் காட்டுகின்றன.
பிராமணச் சாதி தமக்கு மட்டுமேயான ஒழுக்கங்களை வரையறுத்து எழுதி வைத்த காலமும் களப்பிர்ர் காலம்தான். அதுவரை, தமிழரின் சங்க்கால ஆட்சியில் பிராமணர்களுக்குச் சில தமிழ் மன்னர்கள் மட்டுமே முக்கியத்துவம் அளித்தனர். ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் பிராமணரை, ஒரு சிறுபான்மை இனம் என்றளவில் மட்டுமே வைத்திருந்த்து. ஆனால், களப்பிர்ர்தான் பிராமணரை அரசு அதிகார நிலைக்கு உயர்த்தினர். அதாவது, பிராமணர்களை மிகப் பெரும் நிலவுடைமையாளர் ஆக்கினர் களப்பிர்ர். மேலும், வடமொழியை வளர்த்தெடுத்து, தமிழ் மொழியைச் சிதைத்தனர். இதனால், களப்பிர்ர் காலத்தில்தான் முதன் முதலாக, பிராமணர்களுக்குத் தமக்கான ஒழுக்கங்களை – குறிப்பாக்க் குடும்ப ஒழுக்கங்களைத் தொகுத்து முறைப்படுத்தும் புறநிலை சூழலும் தேவையும் உருவானது.
இதன்விளைவே, ஆசாரக் கோவை எனும் நூல்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் 14 நூல்கள் களப்பிரர் காலத்தில் எழுதப்பட்டவை என்பார் ஆய்வறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி (களப்பிரர் ஆட்சியில் தமிழகம்). இந்த 14 நூல்களில் ஒன்றுதான் ஆசாரக் கோவை.
· கீழ்மக்கள் உடல் தொட்டுவிட்டால், குளித்துவிட வேண்டும் (ஆசாரக் கோவை – 10)
· பார்ப்பாரை இகழ்வோருக்கு ஐம்பூதமும் கெட்டுக் கேடு செய்யும் (15)
· கல்யாணம், தேவர், பிதிர் விழா, வேள்வி ஆகியவற்றின் பொருட்டு தானம் செய்ய வேண்டும் (48)
· பெரியவர்கள் எதிரே – சிரிப்பு, கொட்டாவி, எச்சில் காறுதல், தும்மல் ஆகியவை செய்தால் பழி சேரும் (73)
· நான்குவேதங்களைக் கற்ற பிராமணரைத் தம் குருவாக ஏற்க வேண்டும் என்பதுதான், கற்றோர் அறிவாளர் முடிவு (61)
இப்படியான பிராமணர்களின் ஆசாரங்களைக் கொண்ட நூல்தான் ஆசாரக் கோவை. ’இந்நூல், வடமொழி ஸ்மிருதிக் கருத்துகளைப் பின்பற்றி எழுதப்பட்ட்து என்பதைச் சிறப்புப் பாயிரச் செய்யுள் பகுதி தெரிவிக்கிறது’ என்றார் முனைவர் ச.வே.சுப்ரமணியன்.
(பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் / மெய்யப்பன் பதிப்பகம் 2007 / பக் 153)
தமிழரின் பல்வேறு குலத்தவரை, ’தீண்ட்த்தகாதோர்’ என்றாக்கிய முதல் நூல் ஆசாரக்கோவைதான் என்பதை மறந்துவிடலாகாது. தீண்டாமைக்கான கருத்து வடிவத்தை ஆசாரக்கோவைக்கு முன், எந்த்த் தமிழ் நூலிலும் காண இயலாது. ஏனெனில், தமிழர்ளின் மரபில் சாதி இல்லை, ஆகவே தீண்டாமையும் இல்லை.
தீண்டாமை, என்பது தமிழர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொண்ட இழிவு, பிராமணியம் இதற்குப் பின்புலமாக இருந்தது என்ற கருத்துதான் இன்றைய திராவிடக் கோட்பாட்டாளர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
உண்மையில், தீண்டாமை என்பது – ஆரியச் சார்பாளர்களான திராவிடர்கள், தமிழர்கள் மீது செலுத்திய ஆதிக்கமே ஆகும். அதாவது, தமிழரைத் தீண்டக்கூடாது என்று பிராமணர் வகுத்த கொள்கையே தமிழகத்தில் தீண்டாமையின் தொடக்கம். இதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கி, பிராமணர்களைப் பாதுகாத்தவர்களே திராவிட அரசர்கள்!
களப்பிரர் காலத்தில், அவர்கள் ஆசியோடு தொகுக்கப்பட்ட ஆசாரக்கோவை தீண்டாமையை எவ்வாறு வலியுறுத்துகிறது எனக் காண்போம்.
தொடரும்....
ம. செந்தமிழன்.

