அந்தக் காவல் நாய்
என்னைப் பார்க்கிறது
ஐஸ் சப்பும் சிறுமியை
பார்க்கும் கிழவனைப் போல .
பேச ஆளில்லாத
நோயாளியின் கண்களை
அந்த நாயின் கண்கள் பிரதிபலிக்கிறது .
பயணத்தின் தூரத்தை எண்ணி
சலிப்பு கொள்ளும் மூதாட்டியின்
மனநிலையில் அது நின்று கொண்டிருக்கிறது .
இறக்கப் போவதை உணர்ந்த
ஒருவனின் சிரிப்பை
அந்த நாயின் முக நெளிவுகளில்
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .
இறுகிக் கிடக்கும்
மனதிற்கு சாட்சியாக நிற்கிறது .
பஞ்சரான சைக்கிளை
ஓட்டிக் கொண்டு போவது போல
அதன் கண்கள் எதையோ
கண்டு கொண்டிருக்கிறது .
எந்தக் குழந்தையும்
அந்த நாய்க்கு
டாட்டா காட்டவில்லை .
ஒரு துணையாக
எந்த பைத்தியமும்
அதன் அருகில் இல்லை .
முகாமுக்கு போக விரும்பாத
அகதியை பார்ப்பது போல
அந்த நாயைப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அந்தக் காவல் நாய்
என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
என் வாழ்க்கை என்னைப்
பார்த்துக் கொண்டிருப்பது போல
கார்த்திக் நேத்தா.
October 30, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
