ஆவணப்பட இயக்குநர், தமிழ்தேசிய ஆர்வலர், இயற்கைவேளாண்மை ஆர்வலர் என பன்முக தன்மை கொண்ட ம. செந்தமிழன் அவர்கள் எழுதிய இராசராசச் சோழர் தமிழிய ஆய்வு என்ற குறுநூல் காட்சியில் தொடராக வருகிறது -காட்சி
இராசராசச் சோழர்!
- தமிழிய ஆய்வு
ம.செந்தமிழன்
இராசராச சோழர் கட்டிய, தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து தலைநிமிர்ந்து நிற்கிறது. தமிழர் மட்டுமல்லாது, உலகின் பல இனத்தவரும் இராசராச சோழரின், அவர் காலத்துப் பொறியியல் வல்லுனர்களை வியந்து பாராட்டுகின்றனர். தமிழகத்தில் உள்ள சில திரிபுவாதிகளுக்கு மட்டும் தமிழர் பெருமையடைவதில் எப்போதுமே விருப்பம் இருப்பதில்லை. திராவிடம், பின்நவீனத்துவம், மார்க்சியம் ஆகிய கோட்பாடுகளின் பெயரால் தமிழர் பெருமிதங்களை இழிவு செய்யும் திருப்பணியை அந்தத் திரிபுவாதிகள் செய்துகொண்டுள்ளனர். குறிப்பாக, இராசராச சோழர் மீது சேறு பூசுவதென்றால் அவர்களுக்குப் பெருமகிழ்ச்சி. சோழர்காலம்தான் தமிழகத்தின் இருண்ட காலம் என்பது அவர்கள் முன்வைக்கும் கருத்துகளின் இலக்கு. இராசராசன் குறித்துதான் எவ்வளவு அவதூறுகள்! இவை அனைத்துக்கும் விளக்கம் அளித்து, இந்தத் திரிபுவாதிகளைத் தமிழர்களிடம் அம்பலப்படுத்துவதும், இராசராசரின் மெய்யான வரலாற்றைத் தமிழரிடம் சேர்ப்பதுமே இச்சிறு வெளியீட்டின் நோக்கம்.
இராசராச சோழர் குறித்தும் பொதுவாகவே சோழர்கள் குறித்தும் பரப்பப்படும் அவதூறுகள்:
1.சோழர்காலத்தில் பிராமணர்கள் ஆணைப்படிதான் ஆட்சி நடந்தது
2.சோழர்காலப் பிராமணர்களுக்கு வடமொழி மட்டுமே தெரியும், தமிழ் தெரியாது. இவர்கள் காலத்தில்தான் கோயில்களில் வடமொழி முதல்முதலாக நுழைந்தது
3.பிரமதேய முறையில் பிராமணர்களுக்கு நிலங்கள் வாரி வழங்கப்பட்டன. இந்த கிராமங்களில் அரசன் ஆணை செல்லாது.
4.கோயில் சொத்துக்கள் பிராமணர் உடைமையாகின
5.சாதிப் பிரிவுகள் சோழர்காலத்தில் அதிகரித்தன
6.சேரிகளை உருவாக்கியதே சோழர்கள்தான்
7.பெண்களுக்குப் பொட்டுக்கட்டும் தேவதாசி முறை சோழர்காலத்தில்தான் உருவானது
இவை அனைத்துமே பொய்யானவை என்பதைத் தகுந்த சான்றுகளோடு காணலாம்.
தமிழகத்தில் சங்ககாலம், கி.பி.3 ஆம் நூற்றாண்டுடன் முடிந்துவிட்டது. சங்ககாலத்தில் மட்டும்தான் தமிழர்கள் தமிழகத்தை நீண்ட காலம் ஆட்சி செய்தனர். கன்னடப் பகுதியிலிருந்து படையெடுத்து வந்த கொள்ளையரான களப்பிரர்கள் திராவிடர் ஆவர்.
இவர்கள் கி.பி 250ல், தமிழகத்திற்குள் நுழைந்தனர் எனக் கருதப்படுகிறது.
(பல்லவர் வரலாறு / முனைவர் மா.இராசமாணிக்கனார் / நாம் தமிழர் பதிப்பகம் 2009 /பக் 33)
பல்லவர்கள், ஆந்திரப் பகுதியிலிருந்து வந்த திராவிடர் ஆவர். இவர்களும் கி.பி.250 ஆம் ஆண்டில் தமிழகத்திற்குள் வந்தேறியோரே ஆவர். இந்தத் திராவிடர் படையெடுப்புகள்தான் தமிழகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. சங்ககாலத் தமிழரிடம் பெருமதங்கள் இல்லை. கோயில்கள், அதிகார மையங்களாக இல்லை. சங்ககால நூல்கள் அனைத்துமே சமயச் சார்பற்றவை. சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் தமிழ் மட்டும்தான் ஆட்சி மொழி.
இந்த அனைத்து நிலைகளையும் புரட்டிப் போட்டவர்கள் திராவிடரான களப்பிரர் மற்றும் பல்லவர்.
ஒரு தேசத்திற்குள் அந்நியர் மதம் வரும்போது, தனக்கெனத் தனித்துவம் மிக்க மொழி, இனம், வர்க்கம், பண்பாடு, மெய்யியல் ஆகிய அனைத்தையும் கொண்டுதான் வருகிறது. பவுத்தமும் சமணமும் இந்தத் திராவிடர்கள் ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்துக்குள் படையெடுத்தன. அதுவரை சமயச் சார்பற்று இருந்த தமிழ்ச் சமூகத்தில் சமயச் சார்பைத் திணித்தவர்கள் பவுத்த, சமணர்கள். இவர்களுக்குத் துணை நின்றோர் களப்பிர, பல்லவ திராவிடர். இந்த இரு மதங்களும் தமிழ் மொழிக்கு எதிரானவை என்பதில் ஐயமில்லை.
புத்தர், தமது சமயத்தை, பல்வேறு நாடுகளில் பரப்பும்படித் தமது சீடர்களுக்குக் கூறியபோது, ’அவரவர் தாய்மொழியிலேயே பரப்புரை செய்யுங்கள்’ என்று கட்டளையிட்டதாக ஒரு செய்தி உள்ளது. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை, பவுத்தர்கள் நடந்துகொண்ட விதம் அவ்வாறான மதிப்பீட்டை உருவாக்கவில்லை.
சமணர்களும் இவ்வாறானவர்களே.
‘பவுத்தர், மாகதி எனப்படும் பாலி மொழியையும், ஜைனர் அர்த்தமாகதி எனப்படும் சூரசேனியையும் தமது ’தெய்வ’ மொழியாகக் கொண்டு எழுதிவைத்தபடியாலே, தமிழ்நாட்டிலே அந்த மதங்கள் பரவியபோது, தமிழரும் அந்த மத நூல்களைப் பயில வேண்டியதாயிற்று.
....ஆகவே, பவுத்த ஜைனர்கள் தமது சமய நூல்கள் எழுதப்பட்ட பிராகிருத மொழிகளைத் தமிழருக்குக் கற்பிக்க வேண்டி, புதிதாக ஒருவகை எழுத்துக்களை உண்டாக்கினார்கள். பிராமி எழுத்துக்களிலிருந்து புதிதாக உண்டாக்கப்பட்ட அவ்வெழுத்துக்களுக்குக் கிரந்த எழுத்து என்பது பெயர். இவ்வாறு, பிராகிருத மொழிகள் முதன் முதல் தமிழ்நாட்டிலே பயிலப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் பவுத்த ஜைனர்களே’
என்கிறார் ஆய்வறிஞர் மயிலை.சீனி.வேங்கடசாமி.(பௌத்தமும் தமிழும் / பூம்புகார் 2007 /பக் : 123, 124)
சமஸ்கிருதத்தை முதலில் எதிர்த்த பவுத்த சமண சமண சமயங்கள் பிற்காலத்தில் தமது நூல்களை, சமஸ்கிருதத்தில் எழுதத் தொடங்கின என்பதும் குறிப்பிடத்தக்க சேதியாகும். (மேலது நூல் : பக் 124)
இவைதவிர, தமிழின் செம்மாந்த வளத்தைச் சிதைத்து பல்லாயிரக் கணக்கான தமிழ்ச் சொற்களை வழக்கிலிருந்து அழித்து, அச்சொற்களுக்குப் பதிலாக வடமொழிச் சொற்களைத் திணித்தவர்களும் இந்த பவுத்த சமண சமயத்தவரே.
ஆய்வறிஞர் மயிலையார் மேற்படி நூலில் இது குறித்து,
’இடைக்காலத்திலே, பௌத்த ஜைனர்கள், தமிழ்ச் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் விரவிக் கலந்து மணிப்பிரவாளம் எனும் புதியதோர் உரை நடையை உண்டாக்கினார்கள். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட பௌத்த ஜைன நூல்கள் இடைக்காலத்திலே பயிலப்பட்டன.’ என்று விளக்குவார்.
(பக் :125)
தமிழ் மொழியைக் கலப்பு மொழியாக மாற்றியதில் பவுத்த, சமண மதங்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. ஆனால், இந்த வரலாற்றைத் திராவிடக் கோட்பாட்டாளர்கள் கூறியதே இல்லை. களப்பிரர், பல்லவர் காலத்தில் ஆரியமயமாக்கல் நடந்தது என்ற வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு, அந்தக் காலம்தான் ஆரியத்தை எதிர்த்த காலம் போன்ற மாயையை உருவாக்குவதில் திராவிடக் கோட்பாட்டாளர்கள் வெற்றியும் பெற்றனர்.
பிற்காலச் சோழர்காலம் என்பது, தமிழக வரலாற்றில் மிகக்குறுகிய காலம் மட்டுமே நீடித்த காலம் ஆகும். இக்காலத்தில்தான் இராசராச சோழர் அரும்பெரும் சாதனைகளைப் புரிந்தார். விசயாலாயச் சோழர், கி.பி.846 ஆம் ஆண்டு பிற்காலச் சோழர் பேரரசைத் தோற்றுவித்தார். மூன்றாம் இராசேந்திரச் சோழரோடு, கி.பி.1279 ஆம் ஆண்டு பிற்காலச் சோழர் வரலாறு நிறைவு பெற்றுவிட்டது. இராசராச சோழர், கி.பி 985 முதல் கி.பி 1014 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வது இராசராச சோழர் ஆட்சி செய்த இக்குறுகிய காலத்தை மட்டுமே. ஆயினும், தேவை கருதி, சில செய்திகளை இக்காலத்துக்கு முன்னும் பின்னும் காணலாம்.
பிற்காலச் சோழர் ஆட்சி அமைப்பதற்கும், சங்ககாலச் சமூகம் திராவிடரால் அழிக்கப்பட்டதற்கும் இடையில், ஏறத்தாழ 821 ஆண்டுகள் இருந்தன. இந்த நெடுங்காலம் முழுக்க தமிழரை ஆண்டவர்கள் திராவிடர்களான களப்பிர, பல்லவர்களே!
இந்த உண்மையை உள்வாங்கினால் மட்டுமே இராசராச சோழர் காலத்தைத் திறனாய்வு செய்ய முடியும்.
இப்போது, களப்பிரர் மற்றும் பல்லவர் காலம் குறித்த சில வரலாற்றுத் தகவல்களைச் சுருக்கமாகக் காண்போம்.
தொடரும்.....
ம.செந்தமிழன்.
