சுப்பிரமனியம்[பிள்ளை]தன் பள்ளிகூட பையை எடுத்துக் கொண்டார் பேனாவில் இங்க் இருக்கிறதா என லேசாக ஒரு முறை குலுக்கி பார்த்தார். சட்டை பையில் பெரிய இங்க் கறையிருந்தது. பள்ளிகூட பை பல வருட அழுக்கையும் சேர்த்து வைத்திருந்தது. உள் அறையை பார்த்து “ஆஸ்பத்திரிக்கு போகனுமா” என்றார் மொட்டையாக. கேள்வி எல்லா அறையிலும. வௌவாலாக போய் திரும்பி வந்தது. அவர் மனைவி அமராவதியிடமிருந்து ஒரு அனக்கமும் இல்லை எங்கு முடங்கியிருக்கிறளோ. நாலைந்து நாளாய் குன்னி திரிந்தாள் . “யாரையாவது கூட்டிட்டு போ’” அதற்கும் பதில் இல்லை. அதுவும் பின்னால் சட்டமிட்டு அடைத்திருக்கும். கதவில் மோதி வந்தது. சுப்பிரமனியம் சின்ன பிள்ளையாக இருந்த பொழுது கதவை திறந்தால் வைகை ஆறு ஓடும். அதெல்லாம் பழைய காலம். இப்பொழுது சீமை கருவேல மரங்களும், பன்றிகளும், சாரயமும் தான் ஓடுகின்றது. ராத்திரிக்கு மேல் நடப்பதை சொல்ல முடியாது. ஆற்றுக்கான கதவை அடைத்து ரொம்ப காலமாகிவிட்டது. மாடக்குழியில் பணத்தை வைத்தார். கதவை ஒருக்களித்தவாறு சாத்தி வைத்தார். பக்கத்து வீட்டு சரசுவோ,, அமராவதியின் சின்னம்மா மகள் ராணியோ யாராவது அவளை பார்க்க வருவார்கள். அவர் கந்தசாமி பிள்ளை இட்லிகடையை நோக்கி நடந்தார்.
சுப்பிரமனியத்திற்கு ஆசிரியர் பணியில் இது முப்பத்தேழாம் வருடம். மேனேஜ்மென்ட் பள்ளிகூடம். சோழவந்தானிலிருந்து.முள்ளிப்பள்ளத்திலிருக்கும் பள்ளிகூடத்திற்கு ஆற்றை கடந்தே போக வேண்டும். யாருடைய சைக்கிளிலோ, நடந்தோ. சக ஆசிரியர்களின் வண்டியிலோ ,எப்போழுதாவது தாளாளர் காரிலோ 37 வருடமாய் போய் கொண்டிருக்கிறார்.
சுப்பிரமனியத்தின் தந்தை கல்வி இலாக்காவில் எதோ வேலையிலிருந்தார். அவர் கையோடு எழுதி வாங்கிக்கொண்டு வந்து இவரை இந்த பள்ளிகூடத்தில் 22 வயதில் சேர்த்து விட்டார் ஆயிற்று 59 வயது. மொத்த சர்வீஸில் 6ம் வகுப்பில் தான் 33வருடம். பள்ளிகூடத்துக்காரர்களுக்கு ஆறாம் வகுப்பு கனவில் வந்தாலும் இவரே கணிதம் நடத்திக் கொண்டிருப்பார். யாரையும் திட்ட மாட்டார். அடியென்ற பேச்சுக்கே இடம் கிடையாது. எப்பொழுதும் எதோ இழந்தது போலிருப்பார். சக ஆசிரியர்களோடு கூடமாட்டார். இவையல்ல சுப்பிரமனியம் ஆசிரியரின் சிறப்பு.
தனது 37 வருட பணியில் ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காதவர்.எப்பொழுது இப்படி சங்கற்பம் எடுத்துக் கொண்டாரென யாருக்கும் தெரியாது. வேலைக்கு சேர்ந்த மூனாம் வருடம் கல்யாணம் நடந்தது.{கால்பரிட்சை விடுமுறையில் தான்} அம்மா கிடையாது. இரண்டு அண்ணன்கள், இரண்டு தம்பிகள், ஒரு தங்கையென பெரிய குடும்பம்.
இவருக்கு வசதியாக முழு பரிட்சை விடுமுறையில் இறந்து போனார் அப்பா. இவர் அப்பா இறந்த வீட்டில் பத்து பதினைந்துநாள் வரை யாரோடும் ஒரு வார்த்தை பேசாமல் இருந்தார். அம்மா இல்லாமல் அப்பாவே வளர்த்ததினால் அவர்மீது மிகவும் பிரியம்.அப்பாவை தூக்கும் வரை ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லை.சுப்பிரமணியம். யாரோ யரோ “அடக்கி வைக்கதடா சுப்பு அழுடா” என்றார்கள். அப்பாவின் பாடையை தூக்க போகும் பொழுது ஆவேசம் வந்தவராய் அதை சுப்பிரமணி தடுத்தார். யாரோ அபசகுனம் என்று சொல்ல சுப்பிரமணியை அலேக்காக தூக்கிகொண்டு போனார்கள் மச்சினன் பன்னிர்செல்வமும், சகலை ராஜராமும்.
அதன்பின் சுப்பிரமனியத்தின் சுபாவம் இன்னும் சுருங்கிப் போனது இவர் மனைவியோடு சிரித்துப் பேசியோ, சேர்ந்து வெளியில் போனதையோ ஒரு நாளூம் சோழவந்தான்காரர்கள் பார்த்ததில்லை ஒரு ஜப்பசி மாத அடைமழை பெய்த சமயத்தில் மனைவியை வலியெடுத்து சோழவந்தான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்கள் மாமியார் உடன் இருக்க நர்ஸ் சில சமயம் இது பொய் வலியாவும் இருக்கலாம். சாயங்காலம் வரை பார்ப்போம் என்றாள். சுப்பிரமணியம் பள்ளிகூடம் புறப்பட்டார்.. “சாயங்காலம் வந்திர்றேன் என்றார்,மாமியார்காரி என்னத்தை சொல்ல என நின்றாள். இவர் ஆற்றை கடக்கையில் பாலத்தை தொட்டுக்கொண்டு தண்ணிர் ஓடியது. பள்ளிகூடத்தில் வெள்ள எச்சரிக்கைக்காக பள்ளி விடுமுறை என்ற போர்டு நின்றது. மறுபடியும் சோழவந்தான் போகலாமென திரும்பியவரை பாலத்தில் மாட்டு வண்டியை முழ்கடிக்கும் தண்ணிர் வரவேற்றது. மற்ற பாலங்களையெல்லாம் வெள்ளம் அடித்து போய்விட்டதாய் சொன்னார்கள்.
மறுநாள் தான் இவரால் ஆற்றை கடக்க முடிந்தது. அதற்குள் தனது ஒரு பொழுது வாழ்வை முடிந்திருந்தது அவர் குழந்தை. அமராவதி பித்து பிடித்தவளை போல் இருந்தாள். மாமனார் வீட்டில் ஒருவரும் பேசவில்லை.தொட்டில் பாடையில் குழந்தையை தூக்கிய மச்சினன் பொங்கி பொங்கி அழுதவன் இவரை பார்த்து காறி துப்பிவிட்டு போனான்
.அதன்பின் மனைவிக்கும் இவருக்கும் அறவே பேச்சு இல்லை.அவள் பொங்கினால் சாப்பிடுவார். இல்லையெனில் கந்தசாமி பிள்ளை கடை தான்.. மனைவிக்கும் வாங்கி வருவார் .நினைத்தாள் சாப்பிடுவாள் இல்லையெனில் ஈ எறும்பு மொய்த்து கிடக்கும். எப்பொழுதாவது தானே சோறு பொங்குவார். செலவுக்கு மாடகுழியில் எப்பொழுதும் பணம் இருக்கும்.அமராவதிக்கு ஒரு செலவும் கிடையாது. கருத்த நிழல்களாய் இருவரும் அந்த வீட்டில் தனித்து அலைந்து கொண்டிருந்தார்கள்
தம்பி தங்கை கல்யாணத்தையெல்லாம் இவருக்காகவே பள்ளி விடுமுறையாய் பார்த்து வைத்தார்கள். தங்கை நிச்சயதார்த்தம் பள்ளி தினத்தில் வர இவர் போகவில்லை. கல்யானத்தில் மாப்பிள்ளையும் சரி மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் யாரும் இவரிடம் பேசவில்லை, தங்கச்சி திருபூட்டு வரை அழுது கொண்டிருந்தாள்
அண்ணண் வீட்டு காதுகுத்துக்காக கண்ணாபட்டிக்கு வேன் பிடித்து போய் கொண்டிருக்கையில் மறுநாள் தான் ரம்ஜான் என்று பேப்பரில் படித்தவர் பாதியில் இறங்கி பள்ளிகூடம் போய்விட்டார்
. வெளியூர் பயணமெல்லாம் பள்ளிகூட சுற்றுலாவின் பொழுது தான் அதிலும் சக ஆசிரியர்களின் வற்புறுத்தலின் பேரில். மற்ற ஆசிரியரகளூக்கு இவர் வந்தால் மிக உதவி. பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்வார். சக ஆசிரியயைகளோடு கடைக்கு போகவோ ஆசிரியர்களோடு தாக சாந்திக்கு ஒதுங்கவோ வேறு யார் பொறுப்பேற்பார் .கன்னியாகுமரி கடலை மனிக்கனக்காக ஆடாமல் அசையாமல் அந்த விவேகானந்தர் சிலை போலவே பாத்துக் கொண்டிருந்தாய் உடம்பு சரியில்லாமல் அவர் கூடவே உட்கார்ந்திருந்த 8-ஏ பாண்டி சொன்னான்
.உள்ளூர் துக்க வீடென்றால் சாயங்காலத்திற்கு மேல் தான் கேதம் கேட்டல். இவர் போகும் பொழுது பினத்தை தூக்கி கொண்டு போயிருப்பார்கள் நீர் மாலையில் ஊற்றிய தண்ணிரும்,சாமந்திபூவும், சிதேவி வாங்கிய சேலையும். “வச்சு குளிப்பாட்டின” மர நாற்காலியும்,ஆளற்ற பெஞ்சுகளும் அவருக்கு காத்திருக்கும். கொஞ்ச நேரம் உட்கார்ந்திருப்பார் ..குளித்து தலைகாயவோ செத்தவரின்,தலையனை போர்வைகளை குப்பை தொட்டியில் போடவரும் பெண்கள் வாங்கன்னே என்பார்கள். வாக்காளர் அட்டைக்கான புகைபடம் பள்ளியிலேயே எடுத்ததினால் எடுத்துக் கொண்டார். ரேசன் கார்டு யார் வாங்கி தந்தார்களென அவருக்கு தெரியாது. ஓட்டுஸ்லிப் சரியாக வீட்டிற்கு வந்து விடும். மறுநாள் கந்தசாமி பிள்ளை கடையில் அவரை பார்க்கும் குள்ள பாண்டி”மாமா போட்டுட்டேன் உங்க விருப்பப்படி” என்பான் என்ன விருப்பம் எப்பொழுது சொன்னார் யாருக்கும் தெரியாது.
இந்த குள்ள பாண்டிதான் இவர் வீட்டை கடக்கும் பொழுது இவர் தலை தெரிந்தால் “மாமா உங்க பார்வை பட்டு பட்டே இந்த தூணும் நிலையும் ஒரு நாள் மனோகரா படத்தில் வர்ற மாதிரி சிதறப் போகுது” என்பான்.
மதிய சாப்பாட்டிற்கு பிறகு பள்ளிக்கு பின்னால் இருக்கும் புங்க மரத்தடியில் லேசாக கண்ணயர்வது வழக்கம். வழக்கம் போல் படுத்திருந்தவர் பக்கத்தில் கிசு முசு என்று மூச்சு சத்தம் கேட்க. கண்ணை திறந்து பார்த்தார் பியுன் ரங்கசாமி நின்று கொண்டிருந்தான்{இவருக்கு தூரத்து சொந்தம்}.முகம் கோனியிருந்தது “மாமா நம்ம சரசக்கா வீட்டிற்கு போச்சாம். அத்த செத்து விரைச்சு கிடக்காம்,”சொல்லியபடி துண்டை முகத்தில் அதக்கியபடி அழுதான்/ சுப்பிரமனி அவரை சலனமில்லாமல் பார்த்தார்.
“நா ஹெட் மாஸ்டர்ட்ட சொல்லிட்டு வர்றேன் மாமா” என்று போனான்.
சுப்பிரமனி கடிகாரத்தை பார்த்தார் இன்னும் இரண்டு மணிக்கு பத்து நிமிடங்கள் இருந்தன. வெளியே. ஊமை வெயிலாய் இருந்தது.. வானத்தில் ஒரு பறவையும் இல்லை.. டன டன டன பெல் அடித்தார்கள். இரண்டாயிருந்தது .வ்குப்புக்கு தயாரானார். நிழலாடியது. தலைமையாசிரியர் நின்றிருந்தார்” சார் கரஸ்பாண்டட்ட பேசிட்டேன் லீவ் விட்டாச்சு வாங்க போகலாம்” சுப்பிரமனியம் சார் நிதானமாய் தன் பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
சாம்ராஜ்