காட்சியில் ஈழத்து தோழர்கள் தாங்கள் கண்டவற்றை சந்தித்தவற்றை கேட்டவற்றை சாட்சியங்களாக பதிவு செய்கிறார்கள். இப்பதிவுகள் ”ஈழ சாட்சியங்கள்” என்ற பெயரில் இடம்பெறுகிறது. நீங்கள் உங்கள் சாட்சியங்களை அல்லது நீங்கள் கேள்விப்பட்ட உண்மையான நிகழ்வுகளை kaattchi@gmail.comக்கு அனுப்பும் படிக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. காட்சி (ஏனைய ஈழ சாட்சியங்களுக்கு இங்கே சொடுக்கவும்)
நான் (எனக்கு வயது 13), என் தங்கை (10), தம்பி (6), மற்றும் சின்னம்மாவின் மகன் (4), மகள் (1), எங்கள் அப்பா ஆகியோர் பங்கருக்குள்ளாகவே இருந்தோம். பல நாட்கள் சரியான உணவு இல்லை. பசி மயக்கம், களைப்பு, எறிகணை, விமானக்குண்டுவீச்சு என்று தொடர்ந்தபடி இருந்ததால் பயமாக இருந்தது. என் அம்மா, சின்னம்மா இருவரும் இயலாமல் இருந்த எங்கள் அம்மம்மாவுக்கு காலைக்கடன் முடிக்க உதவிசெய்வதற்காய் பங்கருக்கு வெளியே வந்தனர்.
(சின்னம்மாவின் கணவர் எங்கள் சித்தப்பா சென்ற ஆண்டு வட்டக்கச்சியில் சிறீலங்கா விமானப்படை குண்டுவீசியதில் இறந்துபோனார்.)
(சின்னம்மாவின் கணவர் எங்கள் சித்தப்பா சென்ற ஆண்டு வட்டக்கச்சியில் சிறீலங்கா விமானப்படை குண்டுவீசியதில் இறந்துபோனார்.)
அப்போது எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்தது. அப்பா பங்கரைவிட்டு எட்டிப்பார்த்து அம்மாவைக் கூப்பிட்டார். அம்மாவும், சின்னம்மாவும் உடனடியாக ஓடி வராமல், நடக்க இயலாமல் இருந்த அம்மம்மாவைத் தூக்கியபடி ஓடிவந்தார்கள். அப்போது மற்றொரு செல் வீழ்ந்து வெடித்தது. எறிகணைவீச்சு ஓய்ந்தபின் ஓடிச்சென்று பார்த்தால், எங்கும் சதைகளும், உடல் உறுப்புகளும்... அம்மா நெஞ்சில் கை வைத்தேன். பெரும் ஓட்டையே அங்கிருந்தது. சின்னம்மாவுக்குப் பாதித் தலை இருக்கவில்லை. அம்மம்மாவின் காதில் இரத்தம் வடிந்திருந்தது. அனைவரது உடல்களையும் உடனடியாகப் புதைக்கமுடியவில்லை. இன்னும் பலர் கொல்லப்பட்டிருந்தனர்.
எறிகணை வீச்சுத் தொடர்ந்தது. அம்மாவின் உடலை அணைத்தபடி பங்கருக்குள் இருந்து அப்பா அழுதார். நாங்களும் அழுதோம். அப்பாவுடன் தனியாக இப்போது நாங்கள் ஐவரும். 4 மணிநேரத்துக்குப் பின்னர், வெளியே வந்து, ஒரு இடத்தில் மூவரது உடல்களையும் புதைத்தோம். போர் முடியும் நேரம் முகாமுக்கு வந்து சேர்ந்தோம்.
முகாம் என்று ஒன்றும் அப்போது இருக்கவில்லை. வெட்ட வெளியில்தான் படுத்தோம். எழுந்தோம். என்னால் முடியவில்லை. ஆனால் அம்மாவுக்கும், சின்னம்மாவுக்கும் பதிலாக நான்தானே என் சகோதரர்களைப் பார்க்கவேண்டும் என்று தைரியத்தோடு இருந்தேன். ஒரு வாரமாக மிகவும் முடியாமல்போனது. காய்ச்சலோடு படுத்திருந்தேன். அப்போது அங்குவந்த இராணுவத்தினர் என் தங்கையை விசாரிக்கவேண்டும், அனுப்புங்கள் என்று இழுத்தார்கள். அப்பா விட மாட்டார். அவள் குழந்தை, அவளை விடுங்கள் என்று கெஞ்சுவார். ஒரு சில நாட்கள் இப்படி நடந்தது. வேறு பெண்பிள்ளைகள் பலரையும்கூட இப்படி வந்து இழுத்தார்கள். சிலரை இழுத்துச் சென்றுவிட்டார்கள். பெற்றோர்கள் இல்லாதவர்கள் போனவர்கள் போனவர்கள்தான். திரும்பிவந்த பிள்ளைகள் பலரும் நடைபிணங்களாய்த்தான் வந்தனர். சிலர் பின்னர் முகாமிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தனர். அடுத்த நாளும் அவர்கள் வந்தால் என்ன செய்வது என்று அப்பா கவலையோடு இருந்தார். எங்களருகில் இருந்த மற்றொரு குடும்பத்தினரது மகளையும் இப்படித்தான் இழுக்க வந்தார்கள். அவர்களும் அப்பாவும் யோசித்து ஒரு முடிவு எடுத்தனர். அடுத்த நாள் மருத்துவ உதவிசெய்ய வந்த தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் என் தங்கையையும், பக்கத்தில் இருந்தவர்களது மகளையும் கொடுத்து அவர்களுக்கு உடல் நலமில்லையாதலால் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுங்கள் என்று கூறினார்.
மருத்துவமனைக்கு அருகில் ஒரு கிறித்தவ தேவாலயம் இருப்பது அப்பாவுக்குத் தெரிந்திருந்தது. மருத்துவமனையில் இராணுவ வண்டி நோயாளர்களை இறக்கியதும் எப்படியாவது தப்பித்து அந்த தேவாலயத்துக்குச் சென்று பாதிரியாரின் உதவியைக் கோருங்கள் என்று என் தங்கைக்குச் சொல்லி அனுப்பினார் அப்பா. அப்படியே அவர்கள் இருவரும் எப்படியோ தப்பித்து பாதிரியாரிடம் உதவிகோரி, அவரும் அவர்களைப் பாதுகாப்பாய் மன்னாருக்கு அனுப்பிவிட்டார். இப்போது என் தங்கை அங்குதான் உள்ளதாக உறவினர்கள் சொன்னார்கள். என் தம்பி, சின்னம்மாவின் 4 வயது, 1 வயதுக் குழந்தை ஆகிய அனைவரையும் கவனித்தபடி நான் இன்றும் முகாமிலேயே இருக்கிறேன்.
சின்னம்மாவின், சித்தப்பா வழி உறவினர்கள், எத்தனையோ தடவை சின்னம்மாவின் குழந்தைகளைத் தங்களிடம் தந்துவிடும்படி இராணுவத்தினரிடம் மன்றாடிவிட்டனர். அவர்கள் மறுத்துவிட்டனர். அந்த இரு குழந்தைகளையும் தனியே விட்டு நாங்கள் மட்டும் வெளியே செல்ல விரும்பாததால் நாங்களும் இங்கிருக்கிறோம். வெளிநாட்டில் வாழும் என் மாமாவும் மாமியும் கருணாவின் ஆட்களுக்குப் பணம்கொடுத்து எங்களை வெளியே எடுக்கமுயன்றனர். ஆனால் அவர்கள் பணத்தையும் வாங்கிப்பின் ஏமாற்றிவிட்டனர். இப்போதும் அவர்கள் வேறுவழிகளில் முயன்றபடி உள்ளனர்.
வா. சண்முகநாதன்

