பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

October 21, 2010

ஈழ சாட்சியங்கள் - சத்தியா

காட்சியில் ஈழத்து தோழர்கள் தாங்கள் கண்டவற்றை சந்தித்தவற்றை கேட்டவற்றை சாட்சியங்களாக பதிவு செய்கிறார்கள். இப்பதிவுகள் ”ஈழ சாட்சியங்கள்” என்ற பெயரில் இடம்பெறுகிறது. நீங்கள் உங்கள் சாட்சியங்களை அல்லது நீங்கள் கேள்விப்பட்ட உண்மையான நிகழ்வுகளை kaattchi@gmail.comக்கு அனுப்பும் படிக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. காட்சி (ஏனைய ஈழ சாட்சியங்களுக்கு இங்கே சொடுக்கவும்)

நான் பல ஆண்டுகள் என்னைப் போராட்டத்தோடு இணைத்திருந்தேன். அனாதைப் பெண் குழந்தைகளைப் பராமரிக்கவென தலைவர் அவர்களால் அமைக்கப்பட்ட செஞ்சோலை இல்லத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைத்தான் நான் காதலித்துத் திருமணம் செய்தேன். ஒருவயதுக் குழந்தை இருந்தாள். களமுனையில் நின்றிருந்தேன். அடுத்த நொடி எனக்கு என்ன ஆகுமோ என்று தெரியாது. என் மனைவியும், மகளும் எங்கிருந்தார்கள் என்று எனக்குத் தெரியாது. 

எப்படியோ இறைவன் அருளால் நாங்கள் இன்று உயிரோடு இருக்கிறோம். நாங்கள் மூவரும் இன்னும் சந்திக்கவில்லை. நான் வேறொரு முகாமில் அடைபட்டு, சித்திரவதைபடுத்தப்பட்டேன். அவர்கள் இருவரும் வேறு முகாமில். அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று எனக்கும், நான் உயிரோடு இருக்கிறேன் என்று அவர்களுக்கும் நாங்கள் முகாம்களுக்கு வந்தபிறகுதான் தெரியவந்தது. 

வெளிநாட்டில் வாழும் என் சகோதரர்கள் பெருந்தொகைப்பணத்தை இராணுவத்தினருக்குக் கொடுத்து என்னை வெளியே எடுத்துவிட்டனர். என் முகாமில் இருந்து வெளியேற்றப்படுவது எப்படி என்றால், நாள்தோறும் சித்திரவதை, நோய், பாலியல் வல்லுறவு கெர்டுமைகளால் இறந்த உடல்களை மாட்டுவண்டியில்போட்டு வெளியே கொண்டுபோவார்கள். அந்த உடலங்களோடு வெளியே தப்பிக்க ஏற்பாடுசெய்யப்பட்டவர்களையும் கொண்டுபோய்ப் போடுவார்கள். சடலங்களோடு சடலங்களாகக் கிடப்போம். ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி ஓடச்சொல்வார்கள். அப்படித்தான் நான் தப்பித்தேன். 

உடனடியாக என்னை என் உறவினர்கள் அயல்நாடு ஒன்றுக்கு எடுத்துவிட்டனர். இங்கிருந்தபடி முகாமுக்குச் சென்ற உறவினர் ஒருவரது தொலைபேசி மூலமாக என் மனைவியிடம் பேசினேன். போர் உச்சகட்ட நேரத்தில், ஆயிரமாயிரமாய்ப் பிணங்கள் விழுந்துகொண்டிருக்க, எந்த நொடி தான் சாவேனோ என்று அறியாது தவித்து, அப்படி ஏதாவது தனக்கு நடந்துவிட்டால் எங்கள் ஒரு வயதுக்குழந்தையின் கதி என்ன என்று நினைத்து பல நாட்கள் அழுததாகவும், குழந்தையையும் கொன்று தானும் இறந்திடலாமா என்று பலமுறை யோசித்ததாகவும் கூறி அழுதாள்.
- சத்தியா

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com