கூரிய இலைகள் உரசும் இடைவெளியில்
பச்சைக் கேள்விகள் மலிந்த
வாதங்கள் குறுகி நுழையும்
பாறைகளின் இடுக்கில்
உருவற்ற நம் எண்ணப் படிமங்கள்
வைகறை வானத்துடன்
நிறம் மாறிக் கொண்டிருக்கின்றன...
திசை பிரிவதற்கான ஒத்திகையை முடிக்குமுன்
விடுபட்டுப் பறந்த வார்த்தைகள்
கருநீல வெளியைக் கிழித்துப் பாயும்
ஒளிக்கற்றைகளிடமிருந்து ஒளிந்து தப்பி
நிழலைத் தேடித் திரியும்
எதிர்பாராத ஒரு நொடியில்
சட்டென்று நிசப்தத்தின் ஒரு அலையிலேறி
நட்சத்திரங்களின் மீளா உறக்கத்தில் சாய்ந்துவிடுகின்றன
இணக்கத்தை தொழுது நிற்கும்
வேர்விட்ட கண்கள் பற்றிய சலனமின்றி...!
- அவனி அரவிந்தன்.

