பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

October 17, 2010

தட்டான்பூச்சிகளின் வீடு - மாரிசெல்வராஜ்


            கோவில் கொடை கொடுத்தாயிற்று இன்னும் பலி மட்டும் கொடுத்துவிட்டால் சாமி திருப்தி ஆகிவிடும் அதோடு கொடையையும் முடித்து விடலாம். ஆனால் பலி ஆடுகளுக்கு நாம் எங்கே போவது அதையும் சாமிதான் கொடுக்க வேண்டும் . இதோ என்னிடம் மூன்று பலி ஆடுகள் இருக்கின்றன உனக்கு வேண்டுமானால் ஒன்றை கடனாக தருகிறேன் ஆனால் அடுத்தக்கொடையில் அதை நீ எனக்கு திருப்பித்தர வேண்டும்.
“ஐயோ ச் சீ பாவம் தட்டான்பூச்சிகளை எப்படி ஆடுகளாய் கொல்வது ?

“சாமிதான் சொல்லிச்சு எனக்கு இந்த கொடைக்கு தட்டான் பூச்சிகளை பலி கொடு என்று “
“இல்ல நீ பொய் சொல்லுற சாமி அப்படி சொல்லிருக்காது நான் விளையாட்டுக்கே வரல போ
“பலி கொடுக்காமல் நீ கொடையை முடிக்காமல்  போனால் உன் வீட்டுக்கு பாம்பு வரும் வால் அறுந்த பல்லிகள் வரும் போ
“அப்படின்னா தட்டான்பூச்சிகளை பலி கொடுக்காமல் இன்று சாமிக்கு வெண்டைக்காய்களை பலி கொடுப்போம் “
வெண்டைக்காய்களை எப்படி பலி கொடுப்பது அதுக்கு இரத்தம் வடியாதே
“வெண்டைக்காய்களுக்கும் தலை இருக்கிறது அதுக்கு வெள்ளியாய் இரத்தம் வரும்
“ஆனால் வெண்டைக்காய்கள் பலியிடும் போது துடிக்காதே
“போடா வெண்டைக்காய்களை பலியிட்டால் நான் இருப்பேன் இல்லை நான் போய்விடுவேன்
“சரி சரி வெண்டைக்காய்களையே பலியிடுவோம் ஆனால் இந்த மூன்று தட்டான்களை என்ன செய்வது”\
“அவற்றை பறக்க விடு அவை போகட்டும்
“ஐயோ இவைகளால் இனி பறக்க முடியாது அதன் இறக்கைகளை நான் கசக்கிவிட்டேன் இப்போது என்ன செய்வது
“அதை அப்படியே அந்த முள் மரத்தில் வைத்துவிடு
“ஆனால் யார் பிடிக்க வந்தாலும் அதால் பறக்க முடியாது அது மறுபடியும் பிடிப்பட்டுவிடும் சுந்தரியோ அல்லது கனியம்மாளோ வந்து பிடித்து வந்து சுடலைமாடனுக்கு பலியிட்டுவிடுவார்கள்
“அப்படியானால் நாம் அதற்கு ஓர் வீடு கட்டி அதற்குள் நாம் அதை தங்கவைப்போம் யாருக்கும் தெரியாமல்...தட்டான்பூச்சிகளின் வீடு  எப்படி இப்படித்தான் நாங்கள் அந்த வீட்டை கட்ட முடிவுசெய்தோம். எங்கு கட்டலாம் என்ற போது கருவேலமுள் மரத்தின் கீழே கட்டலாம் என்று சொன்னது அவள் தான் ஏனெனில் அந்த கருவேலமுள் மரம் தான் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருக்கிறது. அவளுக்கு ரயில் தண்டவளாத்திற்கு அருகே வீடு கட்ட வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை என்பதை அவள் நாங்கள் தண்ணீர் எடுக்க போன போதுதான் சொன்னாள்.
யார் கொத்தனாராய் இருப்பது யார் சித்தாளாய் இருப்பது என்ற பெரும் குழப்பம் எங்களிடையே
“நீ தான் ஆண் நீயே கொத்தனாராய் இரு நான் பொம்பளை என்பதால் வேறு வழியில்லை நான் சித்தாள் தான் ஆனால் நீ என்னை தண்ணீர் எடுக்க தனியாய் அனுப்பக்கூடாது நீயும் துணைக்கு வரவேண்டும் ஏன் என்றால் அந்த குட்டக்கரையில் முனி இருக்கிறது என்று என் அம்மா சொல்லியிருக்கிறாள்
நாங்கள் அந்த வீட்டை மூன்று நாட்களாய் கட்டினோம். செம்மண்ணால் அந்த வீட்டை கட்டினோம் வீடு கட்டிகொண்டிருக்கும் போதே எங்கள் ஆடு பக்கத்து வயல்களில் இறங்கிவிடும். வீட்டு வேலையை பாதியில் விட்டுவிட்டு ஓடுவோம் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து எங்கள் வீட்டின் அருகே வந்து மேயவிடுவோம். யாராவது ஆட்கள் அந்த பக்கமாக வந்தாள் அவள் தன் மஞ்சள் துண்டால் எங்கள் தட்டான்பூச்சிகளுக்கான வீட்டை மூடி வைத்துவிடுவாள். ஆம் யாருக்கும் தெரியாமல் அந்த வீட்டை கட்டினோம். ஆனாலும் வேலுச்சாமி மாமா ஒரு நாள் எங்கள் வீட்டை பார்த்துவிட்டார். அவர் ரயில்வே கேட் கீப்பராய் இருக்கிறார். நாங்கள் இல்லாத நேரம் நாங்கள் மூடி வைத்திருந்த மஞ்சள் துண்டை தூக்கி எங்கள் வீட்டை பார்த்துவிட்டார்.
“ரயில் தண்டவாளத்திற்கு அருகே வீடு கட்டுவது சட்டப்படி குற்றம் நான் நினைத்தால் உங்களை போலிசில் பிடித்துக்கொடுக்க முடியும்
முதலில் அவள்தான் அழுதாள் தெரியாமல் செய்துவிட்ட்தாகவும் நான் கொத்தனார் இல்லை வெறும் சித்தாள் தான் அவன் தான் கொத்தனார் என்றும் சொன்னாள். இப்போது நானும் அழுதேன் அந்த வீடு நாங்கள் எங்களுக்காய் கட்டவில்லை தட்டான்பூச்சிகளுக்காகத்தான் கட்டினோம் என்று அழுதேன்.
அழாதீர்கள் அழாதீர்கள் நான் உங்களை போலிசில் காட்டிக்கொடுக்க வேண்டாம் என்றால் உங்கள் வீட்டு பால்காய்ப்புக்கு என்னை நீங்கள் கட்டாயம் அழைக்க வேண்டும் மேலும் வரும் போது எனக்கு நீங்கள் சுருட்டும் வாங்கிதர வேண்டும் என்றார்.
மறுபடியும் நாங்கள் அந்த வீட்டை கட்ட்த்தொடங்கினோம். அந்த செம்மண் வாழை மட்டைகளில் ஒட்டாமல் வழுக்கி வழுக்கி விழுந்த்து அவள் என்னை திட்டினாள் கோபமாய் என் தலையில் கொட்டினாள். எனக்கு கொத்தனார் வேலை பார்க்க தெரியவில்லை என்றும் இனி மேலும் மண் கீழே விழுந்தால் தானே கொத்தனாராய் மாறிவிடுவதாகவும் அவள் மிரட்டினாள். வாழைதண்டுகளுக்கு பதிலாய் மரபட்டைகளை மாற்றியதில் கொஞ்சம் எனக்கு வெற்றி கிட்டியது என்று சொல்ல்லாம். எங்கள் வீடு சிகப்பு கலரில் ஒரு மண் புற்றை போல வேகமாக வளர்ந்த்து அவள் சிரித்துக்கொண்டே அதை வளர்த்தெடுத்தாள் என்று சொல்வதுதான் மிக சரியாக இருக்கும்.

மூன்றாம் நாள் அந்த வீட்டை நாங்கள் கட்டிமுடித்தோம். அதன் ஈரமும் அதன் வண்ணமும் மாறாமல் ஒரு பச்சைகுழந்தை போல அது அந்த கருவேல முள் மரத்தின் அடியில் கிடந்த்து அதன் அழகை பார்த்துகொண்டிருந்தவள் என்னை முத்தமிட்டாள். ஆம் அவள் என்னை முத்தமிட்டாள் பின் என் கண்ணத்தில் ஒட்டியிருந்த எச்சியை அவளே தன் நீலக்கலர் அரசாங்க பாவாடையால் துடைத்துவிட்டாள்.
“ம் வீட்டிற்கு பால் காய்க்க வேண்டும்
“வேலுச்சாமி மாமவை கூப்பிடனுமா
“கூப்பிடலாம் ஆனால் சுருட்டு வாங்க காசு இல்லையே
“என் தூக்குவாளியில் இன்னைக்கு இட்லி கொண்டுவந்திருக்கேன் அதையே கொடுக்கலாம்
எங்கு தேடி பார்த்தும் வேலுச்சாமி மாமா எங்கள் கண்களில் அகப்படவில்லை நாங்களே பால்காய்ச்சினோம் இல்லை இல்லை மோர் காய்ச்சினோம் என்று தான் சொல்ல வேண்டும். எங்கள் தூக்குசட்டியில் மோர் தான் இருந்த்து அதை தான் அவள் ஒரு தேங்காய் சிரட்டையில் காய்த்து கிரேந்தி பூக்களை  வீட்டுக்குள் தூவினாள். இப்போது சூடம்டப்பாவில் அடைத்து ஆச்சிமுத்தா கோவில் ஆலமர பொந்தில் நாங்கள் பத்திரமாய் பாதுகாப்பாய் வைத்திருக்கும் அந்த மூன்று தட்டான் பூச்சிகளை எடுத்து வந்து இந்த வீட்டில் தங்கவைக்க வேண்டும் அவ்வளவுதான்.
நினைக்கும்போதே அவ்வளவு சந்தோசமாய் இருந்த்து. நாங்கள் தட்டான் பூச்சிகளுக்கு வீடு கட்டியிருக்கிறோம் என்று கத்திசொல்ல வேண்டும் போல இருந்த்து. மிக சத்தமாய் கத்தினோம் அந்த மதிய ரயில் எங்களை கடந்து சென்றபோது
“ஹோ இங்கே பாருங்கள் நாங்கள் தட்டான்பூச்சிகளுக்கு வீடு கட்டியிருக்கிறோம் நில்லுங்கள் வந்து பாருங்கள்என்று கத்திகொண்டே ரயில் போனபின்பு ஆச்சிமுத்தா ஆலமரத்துக்கு சென்று பொந்தில் சூடம் டப்பாவில் நாங்கள் அடைத்து வைத்த தட்டான் பூச்சிகளை எடுத்தோம்.
டப்பாவை கரையானும் எறும்புகளும் சூழ்ந்திருந்த்து அதை அப்புறபடுத்திவிட்டு டப்பாவை அவள் திறந்து பார்த்துவிட்டு அழ தொடங்கிவிட்டாள். டப்பாவை வாங்கி பாக்கும்போது அதில் தட்டான்பூச்சிகளின் அரிக்கப்பட்ட உடலின் மிச்சங்கள் தான் இருந்த்து அதையும் எறும்புகள் நக்கிகொண்டு கிடந்த்து. அவள் அழுகையை என்னால் நிறுத்தமுடியவில்லை. நான் புதிய தட்டான் பூச்சிகளை பிடிக்க ஓடினேன். எதுவும் என்னிடம் அகப்படவில்லை. அவள் அழுதுகொண்டே இருந்தாள் இன்னும் அழுதுகொண்டே இருந்தாள் வேறு வழியில்லாமல் நானும் அழத்தொடங்கிவிட்டேன்.
நாங்கள் இருவருமே அழுது ஓய்ந்துவிட்டோம் மேற்கு பக்கமாய் போன அந்த ரயில் இப்போது கிழக்கு நோக்கி வந்துகொண்டிருந்த்து. அவள் அந்த சூடம் டப்பாவை கையில் வைத்துக்கொண்டு வந்தாள். ரயிலின் ஜன்னல் ஓரத்தில் இருந்த சிலர் எங்களை பார்த்து கைகாட்டி சிரித்த்து எங்களுக்கு மேலும் அழுகை வந்துவிடுமோ என்று முகத்தை திருப்பிக்கொண்டோம். அவள் அந்த சூடம் டப்பாவை எங்கள் புதிய வீட்டுக்குள் தனது வலது கையால் தினித்து உள் வைத்தாள்.
“செத்துபோனதை வைத்தால் இது கல்லறையாகி விடும்
“இல்லை இது கல்லறை இல்லை இது தட்டான்பூச்சிகளின் வீடு இங்கு தான் இருக்க வேண்டும் இருக்கட்டும்
என்று வேகமாய் ரயில் தண்டவாளத்தின் மீது ஏறி மேய்ந்துகொண்டிருந்த அவளின் ஆடுகளை விரட்ட அவள் ஓடிவிட்டாள். அதன்பின் இப்போதுதான் இங்கு நான் வருகிறேன் . அவள் இப்போது எங்கு இருக்கிறாள் என்று எனக்கு தெரியாது ஆனால் நாங்கள் கட்டிய தட்டான்பூச்சி வீடு இருந்த இட்த்தில் இப்போது ஒரு மாமரம் இருக்கிறது. ஒருவேளை நானோ இல்லை அவளோ சப்பி போட்ட மாங்கொட்டையில் இருந்து கூட இந்த மாமரம் வளர்ந்திருக்கலாம். எது எப்படியோ அந்த மாமரம் தான் நாங்கள் கட்டிய தட்டான்பூச்சிகள் வீடாக நான் நினைத்துகொள்கிறேன். ஏனெனில் அந்த மாமரத்தின் எல்லா கிளைகளிலும் இலைகளிலும் தட்டான் பூச்சிகள் தான் இருக்கிறது.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com