அந்த பேருந்தின் ஜன்னலோரத்தில் நீல கலர் புடவையில் கையில் குழந்தையோடு போவது சென்பகவள்ளியா. யாரிடம் கேட்பது யார் இருக்கிறார்கள் அவளையும் என்னை தெரிந்தவர்கள் அப்படியே சிலர் இருந்தாலும் அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள். முதலில் சென்பகவள்ளி என்னை நினவில் வைத்திருப்பாளா அவள் ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டி பார்த்து சிரித்தது என்னை பார்த்து தானா...உண்மையில் அவள் என்னை பார்த்தாள் சிரிப்பாளா. அது இருக்கட்டும் அந்த குழந்தை யாருடையது அவளுடயதுதானா அவள் தான் அதற்கு தாயா. ஐயோ குழந்தை எவ்வளவு அழகாய் இருந்தது.
ஆமாம் குழந்தை மட்டும் எப்படி இவ்வளவு அழகாய் அது எப்படி, ஒருவேளை அவள் கணவன் அழகாய் இருப்பானோ. அப்படியே அழகாய் இருந்தாலும் எப்படி இவளை திருமணம் செய்திருப்பான். திருமணம் செய்திருப்பான் ஆனால் காதலித்திருப்பானா......
நிச்சயமாக அவள் சென்பகவள்ளியாக இருக்க அநேக வாய்ப்புகள் இருக்கிறது. அந்த குழி விழுந்த கண்களும் பெரிய பெரிய உதடுகளும் அந்த உதட்டையே அத்துமீறும் முன் இரண்டு தெத்துபற்களும் எப்போதுமே காற்று ஊடுருவும் அந்த கற்றை முடிகளும் கருப்பான ஆண்களே வெறுத்து பாவமாய் திரும்ப வைக்கும் அவளின் தேக கருப்பையும் பார்த்தால் கண்டிப்பாக அவள் சென்பகவள்ளியாகத்தான் இருக்க வேண்டும். அப்படியே அவள் சென்பகவள்ளியாக இல்லாமல் போனால்தான் என்ன. எனக்கு அந்த நீல கலர் புடவை அணிந்த பெண் சென்பகவள்ளியை நினைவு படுத்திவிட்டாள். எனக்கு இனி அவள் சென்பகவள்ளி தான். ஒருவேளை அந்த பேருந்தில் செல்லும் பெண்ணின் பெயரும் சென்பகவள்ளியாய் இருக்கலாம்தானே எனக்கு அவள் சென்பகவள்ளி எனும்போது உங்களுக்கும் அவள் சென்பகவள்ளிதான்.......
முதல் காதலியாய் தங்கிவிட்ட அந்த பெயர் சொல்ல முடியாத பிசாசுக்கு பின் என் மனதில் மறையாமல் சென்பகவள்ளி முகம் மட்டும் தான் நிறைந்திருக்கிறது. சென்பகவள்ளியை நான் ஆறாம் வகுப்பு போன முதல் நாளிலே ஹெட்மாஸ்டர் அறையில் வைத்து பார்த்தது கூட என் நினைவில் உள்ளது. எப்படி என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவள் அம்மா கையை பிடித்து கொஞ்சம் மிரட்சியோடு பள்ளியையும் அதில் நடமாடுபவர்களையும் பார்த்தது என் நினைவில் நிச்சயமாய் கலங்கி மங்கலாய் கிடக்கிறது. சென்பகவள்ளி என்னோடு ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தவள். கோனார் ரைஸ்மில் வழியே உடை மரங்களுக்குள் புகுந்து எல்லாரும் வைக்கிறார்கள் அதனால் நானும் வைக்கிறேன் என்று தனக்கு கொஞ்சம் கூட அழகூட்டாத மஞ்சை கிரேந்தி பூக்களையும் தன் நிற விரோதியான மஞ்சளை முகம் நிறைய அப்பிக்கொண்டும் வாட்டர்டேங் ஒத்தயடிபாதை வழியாக நடந்து பெருமாள் கோவில் பாதி படிகட்டுகளை கடந்து மலையில் இருந்து கீழ் நோக்கி பள்ளிக்கு கோமதியோடும் புஸ்பலீலாவோடும் அவள் நடந்து வந்தது கூட நினைவில் அழியவில்லை.
மொத்த பள்ளியில் உள்ள மாணவர்களும் பேச விரும்பாத பெயரை கூட உச்சரிக்காத பெண்ணாய், தான் இருப்பதை நினைத்து அவள் கவலைபட்டதை யாருக்கும் காட்டிக்கொடுக்காத கண்கள் அவளுக்கு. எத்தனை கணவர்கள் அவளுக்கு அன்று பள்ளியில் இருந்தார்கள். ஆம் பந்தயங்களில் தோல்வியுற்றவன், பல் விளக்காதவன், காதில் சீழ் வடிகிறவன், பிட் அடித்து மாட்டிக்கொண்டவன், அழுக்கு சட்டை அணிந்து வருபவர்கள், ஆங்கிலம் வாசிக்க தெரியாதவர்கள் இப்படி எல்லாரும் அன்று சென்பகவள்ளியின் கணவன் என்று தான் கிண்டல் செய்யப்படுவார்கள். பரீட்சையில் முட்டை மார்க் எடுப்பவர்கள் எந்த வகுப்பில் இருந்தாலும் சரி அவர்களை “நீ படிக்கிற படிப்பிற்கு உனக்கு சென்பகவள்ளியை தான் கல்யாணம் பண்ணிவைக்கனும்” என்று ஆசிரியர்கள் சொல்லும் போதும் அதற்கு சக மாணவர்கள் சிரிக்கும்போதும் உடம்பும் கண்களும் அப்படி கூசும் அவர்களுக்கு.
நான் கூட அவளுக்கு கணவனாக இருந்திருக்கிறேன் என்பதை உங்களிடம் சொல்வதில் எனக்கு உடம்பு இன்று கூசப்போவதில்லை என்ற நம்பிக்கையில் சொல்கிறேன். அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்த மதியவேளை பெருமாள் கோவில் மலை படிக்கட்டுகளில் டிபன் பாக்ஸ் உருட்டிவிடும் போட்டியில் என் டிபன்பாக்ஸ் மிகப்பெரிய தோல்வி அடைந்து கடைசி இடம் பிடித்ததற்காய் தான் நான் சென்பகவள்ளிக்கு கணவன் ஆனேன்.
நன்றாக நினைவில் இருக்கிறது ஒரு மாதம் நான் அவளுக்கு தெரியாமல் அவளின் கணவனாக இருந்திருக்கிறேன். ஒருநாள் தண்ணீர் குடிக்கும்போது சுந்தர் மீது நான் தண்ணீர் தெளித்ததற்காய் சுந்தர் என்னை பார்த்து “போடா சென்பகவள்ளி புருஷா” என்று சொன்னபோது அவள் நூலக வாசலில் நின்று என்னை பார்த்து சிரித்தால் (அது அழகாய் இல்லை) தெரிந்துதான் சிரித்தாளா தெரியாமல் சிரித்தாளா.....
சென்பகவள்ளியை ஆண்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு பிடிக்காதோ அவ்வளவுக்கு அவ்வளவு பெண்களுக்கு அவளை புடிக்கும் அதுவும் குறிப்பாக என் வகுப்பு மாணவிகளுக்கு அவளை ரொம்பவே பிடிக்கும். ஏனெனில் சென்பகவள்ளியால் மட்டுமே எந்த நேரத்திலும் எங்கும் சென்று வர முடியும். ஆலமரத்திற்கு கீழே வத்தல் மாங்காய் விற்கும் பட்டறை பாட்டியிடம் சென்று அவளால் மட்டுமே வெட்கபடாமல் மாங்காயும் பலாப்பழ கொட்டைகளையும் வாங்கிவர முடியும். நொண்டி ஆறுமுகம் கடையில் சினிமா பாட்டு புத்தகங்களை வாங்கி வந்து வகுப்புக்கு கொடுக்க முடியும். காதலிக்கும் பெண்களுக்கு தூது போவது, அவசரமாக செல்லும் பெண்களுக்கு துணைக்கு போவது எல்லாம் அவள் தான். அது மட்டுமல்லாமல் சில ஆசிரியைகளுக்கு பேன் பார்ப்பது, அவர்களின் சாப்பாட்டு பாத்திரங்களை கழுவிக்கொடுக்கும் அவளுக்கு இதற்காக அவளுக்கு வகுப்பில் எந்த இரக்கமும் காட்டபட்டதாய் எனக்கு நினைவில் இல்லை.
எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தெரியாத அவளிடம் ஏன் எல்லா வகுப்புகளிலும் முதல் கேள்வி கேட்கபட்டது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை ஒருவேளை தூக்க கலக்கத்தில் இருக்கும் மற்ற மாணவர்களை விழிக்க வைப்பதற்காகவும், வகுப்பில் ஒருவித கலகலப்பை கொண்டு வருவதற்கும் ஆசிரியர்கள் பயன்படுத்திய ஒரு உத்தியோ என்ற சந்தேகம் எனக்கு இப்போது வருகிறது. “ உன் சட்டையில காக்கா பேண்ட்ருக்கு ச்சீ சீ “ இது தான் அவள் என்னிடம் பேசி என் நினைவில் இருக்கும் முழுவார்த்தை. அப்போது நாங்கள் பள்ளி தோட்ட கிணறை சுத்தபடுத்திக்கொண்டிருந்தோம் மண்ணை அள்ளி வெளியே கொண்டு போய் கொட்டும் போது என் பின்னால் நின்று சொன்னாள் “ உன் சட்டையில காக்கா பேண்ட்டிருக்கு ச்சீ சீ “
கடைசியாய் என்று பார்த்தது இந்த சென்பகவள்ளியை,
அது பத்தாம் வகுப்பு தொடக்கம் அன்று மழை பெய்து ஓய்ந்திருந்ததா இல்லை தொடக்க தூறல்கள் தூறி கொண்டிருந்ததா என்பதில் எனக்கு சந்தேகம் தான். ஆனால் வீசிய காற்று திறந்த ஜன்னல்கள் வழியாகவும் வாசல் வழியாகவும் பழுத்த அரச மர இலைகளை அள்ளி கொண்டு வந்து எங்கள் கால்களுக்கு அடியில் சத்தமில்லாமல் போட்டுகொண்டிருந்தது. எங்கள் சந்தோசம் யாரும் கவனிக்காமல் விட்ட கொதிக்க வைக்கபட்ட பால் போல் எல்லாரிடத்திலும் நிறம்பி வழிந்துகொண்டிருந்தது. அப்பட்டமான உண்மை. எல்லாருடய முகத்திலும் மகிழ்ச்சி இருந்தது. என் நினைவில் இருப்பதால் அது அந்த வருடத்தின் முதல் மழையாக இருக்கவேண்டும். நாங்கள் மர பெஞ்சுகளில் தாளமிட்டோம். வகுப்பு மாணவிகள் கொலுசுகளாலும் சைகைகளாலும் எங்களிடம் பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது, அந்த சத்தம் எங்கள் வகுப்புக்கு அடுத்துள்ள தலைமை ஆசிரியர் அறையில் இருந்து கேட்டது. மிக தெளிவாய் கேட்டது ஒரு மாதமாய் விடுப்பில் இருந்த எங்கள் கணக்கு வாத்தியாரிடம் எங்கள் தலைமை ஆசிரியர் ஒரு மாதம் தொடர்ந்து விடுப்பு எடுத்தது தவறு என்றும் அதனால் பொதுதேர்வு எழுதபோகும் மாணவர்களான நாங்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளோம் என்றும் கோபமாக பேசிக்கொண்டிருந்தார். கணக்கு வாத்தியாரும் தன் விடுமுறைக்கான தர்க்க நியாயங்களை கோபமாக பேசிவிட்டு அதே கோபத்துடன் நாங்கள் ஊகிப்பதற்குள் எங்கள் வகுப்புக்குள் வந்துவிட்டார். அண்ட சராசரமும் அடங்கி ஒடுங்கியது எங்கள் வகுப்புக்குள். “ஏலேய் ஒருத்தன் போய் அந்த டெஸ்ட் நோட்டையெல்லாம் போய் எடுத்துட்டு வா”
“எந்த டெஸ்ட் நோட்டு சார்”
“அதுதான் போன மாச பஸ்ட்ல டெஸ்ட் வைச்சேம்லா அதை தான் அப்படியே ஸ்டாப் ரூம்ல ஒரு பிரம்பு இருக்கும் அதையும் எடுத்துட்டு வா”
திடீரென்று வெப்ப காற்று அனலாய் வகுப்பின் எல்லா துவாரங்களின் வழியாகவும் வீசுவது போலிருந்தது. எப்படியும் இவர் திருத்த மாட்டார். அப்படியே திருத்தி அதை நமக்கு தர இவர் பள்ளிக்கு வரமாட்டார் என்று எல்லாரும் எழுதிய ஒரு வகுப்பு தேர்வு அது. நோட்டுகளும் ஒரு பிரம்பும் வந்தமர்ந்தது, எங்களுக்கும் அவருக்கும் இடையில் உள்ள அந்த தூக்குமேடை போன்ற மர மேஜையில்.
முதலில் ஆண்கள் எவனும் தப்பிக்கவில்லை அங்கேயே திருத்தி அங்கேய தண்டனை அதிகபட்சமாக முப்பத்திரெண்டு எடுத்த முருகேசனுக்கே கதறி அழும் வரை அடி என்றால் எங்களுக்கு சொல்லவே முடியாது. நான்காவது அடியை வெறி கொண்டு அவர் ஓங்க நான் முறைக்க என் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியதால் அப்போதைக்கு நான் சாகாமல் தப்பித்தேன். இப்போது வெளியே நல்ல மழை பெய்துகொண்டிருந்தது.
பெண்கள் புஸ்பலீலாவும் பத்மாவும் மட்டுமே தப்பினார்கள். மற்றவர்கள் தம் தலைமுறையே படிப்பை இனி வெறுக்கும் என்பது போல கத்தினார்கள். சென்பகவள்ளி எப்படி சொல்வேன் அதை. என்னால் சொல்லமுடியுமா முயற்சித்து பாக்கிறேன்.
“வாடி ஆக்கங்கெட்டவளே நீ எல்லாம் எதுக்குடி வர்ற என் உயிர வாங்கிறதுக்கா “
இந்த வார்த்தைகளுக்கே அழுதுவிட்ட அவள் “ முஞ்சிகளையும் மோறைகளையும் பாரு மனுசன் கஞ்சி குடிப்பானா இந்த லெட்சனத்துல உங்க மூஞ்சியள பார்த்து நான் பாடம் நடத்தலன்னு கண்ட நாய்வள் வந்து கேள்வி கேக்குதுங்க என்ன இருக்கு மூஞ்சியிலயும் பேப்பருலயும்” இந்த வார்த்தைகளில் செத்துபோகமால் கையை நீட்டியவள் பற்களை கடித்துக்கொண்டு மூன்று அடிகளை விரித்த இரண்டு உள்ளங்கைகளும் தாங்கினால் நான்காவது அடிக்கு பிரம்பு வான் நோக்கி போனபோது அவள் சிறுநீர் பாவாடை வழியாக கீழ் நோக்கி வந்தது. சிலர் சிரித்தார்கள். சிலர் அனுதாபப்பட்டார்கள்.
“ச்சீ ச்சீ நாய் நாய் போ போ ஓடு ஓடு போய் கிளீன் பண்ணு அடிக்கு பயந்து வேனும்னே என்ன செய்யுது பொட்ட நாய் ஓடு” அவர் விரட்டினார் அவள் தலை நிமிராமல் ஓடினாள் அதற்கு பின் இப்போது தான் பாக்கிறேன் நான் அவளை. இதோ அவள் என் வாழ்விலிருந்து விலகிபோனதை போல அந்த பேருந்தும் மெல்ல மெல்ல மறைய தொடங்கிவிட்டது.
- மாரிசெல்வராஜ்

