யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் "அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர் கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்
பகுதி 22
அஞ்சனா டேமியனையும் தாஷிகியையும் ப்ராலின் ஏர்போர்ட்டில் வழியனுப்பி விட்டு, திரும்ப வண்டி ஓட்டிக்கொண்டு வந்து வீடுவரை வந்து சேர்ந்ததே தெரியவில்லை. இரவு மணி 7 ஆகியிருந்தது. வண்டியை வீட்டிற்கு திருப்பாது, நேரே கோட் டோர் ( Cote dor ) நோக்கி திருப்பினாள். அங்கு வண்டியை கடற்கரையை ஒட்டி நிறுத்தமுடியும். கிட்டத்தட்ட கடலலை காரை தொடும் வரை செல்லக்கூடிய அந்த இடத்தில், அங்கொன்றும் இங்கொன்றுமாக படகுகள் நின்றிருக்க, அந்த நேரத்திலும் சில வெள்ளைக்கார ஜோடிகள் கடலில் குளித்துக்கொண்டு இருந்தார்கள். காரில் எப்போது பயணப்பட்டாலும், அவளுக்கு பிடித்த பாடல்களை கேட்டப்படி ஓட்டுவாள். இப்போதும் ராஜாவின் பாடல், `` எங்கே என் பாதை மாறி, எங்கெங்கோ தேடி தேடி `` என்று உருகிக்கொண்டிருந்தது.
மிக பெரிய கிரேக்க அரசரின் அழகான புதல்வி அவள். கல்வி, வீரம், அழகு இப்படி எல்லாம் சேர்ந்து இருந்த அவளை மணக்க பலர் போட்டி போட்டுக்கொண்டு இருக்க, அவளை மிகவும் கவர்ந்தவன், அழகானவன், பண்பானவன், மிகுந்த பலசாலி, நல்ல நீச்சல்வீரன் ஆனால் அடிமை. இருவருக்குள்ளும் காதல் மலர, வெகுவாய் மகிழ்ந்திருந்தார்கள். இதற்குள் அவளுக்கு திருமணத்திற்கு தோதான ஆண்மகனை தேர்ந்தெடுக்கும் பொருட்டு, பல போட்டிகள் அறிவித்தார் அரசர். பல நாட்டு இளவரசர்கள், பெருந்தலைகளும், வீரர்களும் அவளுக்காக இந்த ஆபத்தான போட்டிகளில் கலந்து கொண்டார்கள், அடிமையும் கலந்து கொண்டான். குதிரையேற்றம், மல்யுத்தம், வில்வித்தை என்று படிப்படியாக நடந்த போட்டிகளில் ஒவ்வொருவராக தோற்றுப்போக, கடைசியில் இருவர் மட்டும் மிஞ்சுகிறார்கள். அது அடிமையும் பக்கத்து நாட்டு இளவரசனும். அரசர் அவர்கள் இருவரையும் பார்த்து, `` இதுவரை எல்லா வித போட்டிகளிலும் நீங்கள் ஜெயித்து வந்துவிட்டீர்கள். இப்போது நீங்கள் மணக்கப்போகும் பெண்ணை கவரும் விதத்தில் அவளுக்கு மிகவும் பிடித்த பரிசு பொருளை கொடுக்க வேண்டும். யார் இதில் அவள் மனதை கவருகிறீர்களோ, அவர் தான் அவளை மாலை சூட்டி, நாட்டு அரசராக ஆவார்`` என்கிறார். இளவரசன், அவனுடைய நாடு திரும்பி 100 யானைகள், 100 குதிரைகள் மீது கொள்ளும் அளவு நகையும், துணியும், விலை உயர்ந்த நவரத்தின கற்களும் கொண்டு வந்து அவள் முன் வைக்கிறான். ஆனால் அடிமையை காணவில்லை.
இளவரசி மனம் உடைந்து கடற்கரையில் வந்து நின்றாள். அவளை நோக்கி ஒரு நுரைகுமிழ் சுழித்தபடி வந்தது. அதை உற்று நோக்க, அதில் இருந்து அடிமையின் குரல் கேட்டது. தண்ணீரில் அமர்ந்து அவன் என்ன சொல்கிறான் என்று கேட்க, அவன் சொன்னான், `` இளவரசி! நான் உன்னை மிகவும் விரும்புகிறேன். உனக்கு பரிசாக கொடுக்க அடிமையான என்னிடம் ஒன்றும் இல்லை. அதனால், கடலில் குளித்து உனக்கு ஒரு முத்தை பரிசாக கொடுக்கலாம் என்று கடலுக்குள் நீந்தினேன். மிக அழகான கருப்பு முத்து ஒன்றை எடுத்தேன். உன்னை பார்க்க கரைக்கு நீந்திக்கொண்டிருக்கையில், ஒரு அழகான பவழப்பாறை கண்டேன். அதனை எடுக்க மீண்டும் முங்கினேன். பவழத்தை எடுத்தும் விட்டேன். திரும்பி பார்க்கையில், நம் நாட்டை கடலுக்கடியில் தாங்கி நிற்கும் தூண்களை பார்த்தேன். பெரிய தூண்களில் ஒரு தூண் சிதைந்து சரிய தொடங்கியது. இப்படியே போனால், மற்ற தூண்களும் உடைந்து போகும். அதனால், உடைந்த அந்த தூணிற்கு பதிலாக நான் தூணாக நாட்டை தாங்கி நிற்கிறேன். உனக்கு இதோ என் பரிசு`` என்று சொல்ல, முத்து சிப்பி ஒன்று இன்னொரு நீர்குமிழில் மிதந்து வந்தது. அதில் அழகான முத்தும், பவழங்களும் வைத்து கழுத்தில் அணியும் நகை இருந்தது. இளவரசி அழுகையின் ஊடே கேட்டாள், `` நம் நாட்டின் கடலுக்கடியில், எரிமலை இருக்கிறதே. உனக்கு சுடவில்லையா ? என்று. அவன் சொன்னான், `` இல்லை, இளவரசி! உன் நினைவு என்னை சுகமாக வைத்திருக்கிறது `` என்று. அவள் கதறியபடி கேட்டாள், `` உன்னை இனி எப்போது பார்ப்பேன் ?`` என்று. அதுவரை அவளை சுற்றிக்கொண்டிருந்த நுரை அடங்கி போனது, அதனோடு அவன் குரலும். அவன் பதில் என்னவென்றே தெரியாது, மீண்டும் என்றாவது வருவான் என்று தினமும் கடற்கரையில் காத்திருந்த அந்த அழகு இளவரசியும், அடிமை வீரனும் அஞ்சனாவின் மனதை விட்டு போனதே இல்லை.
ரயில் பயணம் போன்ற வாழ்க்கையில் எத்தனை விதமான மனிதர்களை சந்திக்கிறோம். எதனை நோக்கி பயணம். என்ன இந்த வாழ்க்கையின் பொருள் என்று யோசிக்கையில் புரிவதே இல்லை. `` உன்னை எப்போது பார்ப்பேன், அஞ்சனா? என்று கேட்டபடி, ரயிலை பிடித்து நடந்த அவன் இருண்ட முகம் நினைவிற்கு வந்தது. அவன் கோபகுமார். அஞ்சனா சேய்ஷல்ஸ் வருமுன் வேலை பார்க்க சென்றது, கேரளாவிற்கு. மனம் பின்னோக்கி நடந்தது. ‘’ A new wound makes all the old ones ache again ‘’ என்று படித்தது நினைவிற்கு வந்தது. மருத்துவ படிப்பு முடித்தப்பின் அஞ்சனா, வேலை செய்தது, சென்னையில். ஒரு வருடம் சென்னையில் வேலை முடித்து, அதனூடாக படித்து, பரிட்சை எழுதி, இங்கிலாந்திற்கு சென்றாள். 3 வருடம் அங்கு வேலை செய்து, திரும்பினாள். அதன் பின், அவளுக்கு சேய்ஷல்ஸில் வேலை கிடைத்தும், உடனடியாக சேர முடியாது போனது. இதற்கு இடையில் எங்கு வேலை செய்வது என்ற, சிறிய குழப்பத்திற்கு பிறகு, இந்தியன் எக்ஸ்பிரஸில் கேரளாவில் இருந்த பிரபல மருத்துவமனையில் வேலைக்காக விண்ணப்பம் போட்டிருந்தாள். அவள் விண்ணப்பித்த இரண்டு நாட்களில் வந்து சேரும்படி தொலைப்பேசியில் கேட்டு கொண்டார் அந்த மருத்துவமனையில் clinical director சாமுவேல்.
அவள் ஊரின் வழியே சென்ற Allapey expressல் இரவு ஏறினால். காலை சாலக்குடியில் சென்று இறங்க வேண்டும். அங்கு சென்று சேர்ந்தபின், யாராவது வந்து அவளை அழைத்து போவார்கள் என்று தொலைப்பேசியில் சொன்னார்கள். கிட்டத்தட்ட 180 bed கொண்ட அந்த மருத்துவமனைக்கு வேலைக்கு செல்ல போகிறேன் என்று சொன்ன பிறகு, அம்மா சொன்னார்கள், `` பத்திரமாக இரும்மா! அப்பா இருந்திருந்தால், நீ இப்படி இங்க அங்க அலையவேண்டி இருந்திருக்காது`` என்று கண்கள் கலங்க. அண்ணா ரயிலேற்றி விட வந்தான்.
அஞ்சனா A/C கோச்சில் புக் செய்திருந்தாள். கேரளா சிறுவயதில் பாட்டி குடும்பத்தினரை சென்று பார்த்திருக்கிறாள். ஆனால் அதெல்லாம் விவரம் தெரியாத வயதில் நடைப்பெற்ற சம்பவங்கள். ஆனால் ஒரு ஒரு விடுமுறைக்கும் பாட்டி, எல்லா பேரப்பிள்ளைகளையும் உட்கார வைத்து மலையாளம் எழுதவும் படிக்கவும் சொல்லி தருவாள். எத்தனை தூரம் நினைவில் இருக்க போகிறது, பள்ளி சமயத்தில் படித்த மலையாளம் என்று தெரியாது, தூங்கி போனாள். ரயிலில் தூங்குவது ஒரு சுகம். பெரியதாகி, தூளியில் படுக்க முடியாத அளவு, வளர்ந்த பின்னும், ரயிலின் தடதடப்பு தாலாட்டுவது போலவே எப்போதும் தோன்றும் அவளுக்கு. ஆனால் வண்டி நிற்கும் போதெல்லாம் எழுந்து பார்த்துக்கொண்டே இருந்தாள். வண்டி அரக்கோணம், ஜோலார்ப்பேட்டை, சேலம் என்று நிற்கும்போதெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தவள், அப்புறம் உறங்கி போனாள். லேசாக வெளிச்சம் வந்த பின், கண்விழித்து பார்த்தவள், மெல்ல எழுந்தாள். காதில் பாட்டு கேட்டு கொண்டே இருந்தது. எங்கு போனாலும் தொடரும் hutch நாய்க்குட்டி போல, அவளை தொடர்வது என்றுமே இசை தான்.
வண்டி பாலக்காடு தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. எந்த பக்கம் பார்த்தாலும், தண்ணீரும் பச்சை பசேலென கடவுள் தனியாக பிரத்யேகப்பட்டு கலர் அடித்தது போல இருந்தது. It’s truly was God’s own country. பி. சி. ஸ்ரீராம் கேமிரா வழியாக பார்ப்பது போல இருந்தது அஞ்சனாவிற்கு. அதே சமயம், சட்டென தன்னை சுற்றி நிகழும் எல்லா விஷயங்களின் pace மாறி போயிருந்தது. மக்களின் நடை, பேச்சு, ஆள் அரவம் எல்லாமே மாறி போனது, அவளுக்கு வித்தியாசமாக இருந்தது. தாண்டி செல்லும் ஊர்களையும், வீடுகளையும் மெய்மறந்து பார்த்து கொண்டிருந்தாள் அஞ்சனா. வடக்கஞ்சேரி, திருச்சூர் தாண்டி சாலக்குடி வந்தது. வண்டியில் இருந்து இறங்கி சுற்றி முற்றி பார்த்தவள், ரிசர்வேஷன் கௌண்டர் பக்கம் வந்து நின்றாள். சாலக்குடி பார்ப்பதற்கு அவள் ஊர் போல தான் இருந்தது. ஆனால் entirely different back drop. அங்கு ஒட்டியிருந்த படப்போஸ்டர்களை எழுத்து கூட்டி படிக்க யத்தனிக்க, வெளியே ஜீப் ஒன்றில் இருந்து 50 வயது மதிப்புள்ள ஒருவர் வந்து சுற்றி முற்றி தேடிக்கொண்டிருந்தார். ஒல்லியான தேகம், salt and pepper முடியோடு, அத்தனை காலையில், formal wear அணிந்து, சற்று தாங்கி நடந்த மனிதரை பார்த்த படி நின்றாள். இவளை தாண்டி அவர் சென்று, ஸ்டேஷனில் பார்த்து கொண்டு இருந்தார். அஞ்சனா சரி வேறு யாரையோ கூட்டி செல்ல வந்தவர் என்று எண்ணி திரும்பி நின்றாள். சற்று நேரம் பொறுத்து இவள் அருகே வந்து நின்றவர், `` Hi! Are you Dr. Anjana, by any chance? என்றார். அதற்கு அவள் ஆமென சொன்னப்பின், கொஞ்சம் அதிர்ச்சியும், சிரிப்புமாக முகம் மாற, `` I’m Joshua Edavaparambil, Medical administrator ‘’ என்று கூறினார்.
ஜீப்பில் ஏறியவள், மருத்துவமனையை பற்றி விசாரிக்க, பேச்சு சுவாரசியமாக சென்றது. மனிதர் பிரபல ஏர்லைன்ஸில் எஞ்சினியராக பல நாடுகளில் பணி புரிந்தவராம், ரிட்டையர்ட் ஆகிய பின் இந்த இடத்தில் வேலைக்கு கூப்பிட்டதால் வந்ததாக சொன்னார். மகன் எஞ்சினியரிங்கும், மகள் 8வதும் படிப்பதாக சொன்னார். சாலக்குடியில் இருந்து 30 நிமிட பிரயாணத்தில் மருத்துவமனையை பற்றியும் அது அமைந்திருக்கும் மாலா ஊரை பற்றியும் முன்னாள் கேரள முதலமைச்சர் கருணாகரன் அவருடைய தொகுதி என்றும் பிரபல நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்த் இந்த ஊர் என்றும் சொல்லி கொண்டே வந்தார். எந்த பக்கம் பார்த்தாலும், குளமும், கால்வாயும், பெரிய மரங்களும், அஞ்சனாவிற்கு, ரஜினி நடித்த ராஜாதி ராஜா பட பாடல் நினைவிற்கு கொண்டு வந்தது. எப்போதோ தாண்டி செல்லும் வண்டிகளும், சில்லென காற்றும், எண்ணை படிய பின்னலிட்ட, சந்தனம் வைத்த சேச்சிகளும், பீடி வலித்த படி சென்ற சேட்டன்களையும் பார்த்தபடி வந்தாள். ஜோஷ்வா சார், `` நான் ஒன்று சொன்னால் தவறாக எண்ணக்கூடாது. சத்தியமாக, நான் 40, 45 வயதான பெண்ணாக இருப்பீர்கள் என்று எண்ணியிருந்தேன். இது வரை தனியாக இளம்பெண் எந்த துணையும் இல்லாது வருவதை பார்ப்பது முதன்முறை`` என்றார். அதற்கு அஞ்சனா, `` I have lived in UK alone for 3 years. Next to that, Kerala shouldn’t be difficult ‘’ என்று சொன்னதை கேட்டு, சிரித்தார்.
கூட பணிப்புரியும் டாக்டர்கள் ப்ரகாஷ், ஃபெமினா இருவரும் நல்ல அரட்டை கும்பலாகி போக, அஞ்சனாவிற்கு அங்கு பணிப்புரிவது கடினமாக தெரியவில்லை. எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் அஷோகன், தோல் மருத்துவர் லட்சுமி, மனநல மருத்துவர் ஷாஜி இன்னும் சிலரும் கூட மிகவும் நட்பாக பழகினார்கள். ஒரு மாதத்தில் தினசரி routine புரிப்பட்டது. மருத்துவமனையில் இருந்து பத்து நிமிட தொலைவில் இருந்த, மூன்று பெட்ரூம் வீட்டை அஞ்சனாவிற்கு கொடுத்தார்கள். அஞ்சனாவிற்கு அவள் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வரும் வழி மிகவும் பிடித்தது. மாலாவின் பிரதான தெரு வழியாக நடந்து, எல்லா கடைகளையும் தாண்டி நடக்கையில், காட்சி பொருள் போல பார்த்தது மட்டும் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. அங்கு இருக்கும் பெண்களிடம் இருந்து எந்த விதத்தில் மாறுப்பட்டாள் என்று அவளுக்கு இதுவரை புரியவே இல்லை.
ஒரு நைட் ட்யூட்டியின் போது, 3 மணி போல, ஜீப் ஒன்று வந்து நின்று 10, 15 பேர் அலறி அடித்தப்படி தூக்கி வந்தார்கள் ஒருவரை. அஞ்சனாவும் வந்தவுடன், ஈசிஜி எடுக்க சொன்னாள். Heart attack என்று பார்த்த மாத்திரத்திலேயே, அதற்கான தேவையான மருந்துகள் கொடுத்து, அவரை stabilize செய்துவிட்டு, பக்கத்தில் இருந்த கொடுங்கநல்லூர் அரசு மருத்துவமனைக்கு பேசி, அங்கு இருந்த இருதய சிகிச்சை பிரிவிற்கு அனுப்பிவிட்டாள். இது நடந்த சில வாரங்கள் கழித்து, அவளுடைய ஓய்வு நாளில், துணி துவைத்துக்கொண்டிருக்கும் போது, கதவு தட்டும் சப்தம் கேட்டு, சென்று பார்த்தவள் திகைத்து போனாள். இரண்டு கார் வாசலில் நிற்க, கதவின் அருகே பெரிய கூட்டம். சாதாரண சல்வாரில், அங்கங்கே சோப்பு நுரை படிந்து, வியர்த்து விறுவிறுக்க இருந்த அவளை பார்த்தப்படி நின்றார்கள் எல்லோரும். அஞ்சனாவிற்கு ஒன்றும் புரியாது, என்ன என்று கேட்க, இவள் முதலில் பார்த்த மனிதர் இப்போது நலமாக இருப்பதாகவும், இவள் நேரம் கடத்தாது, தேவையானவைகளை கொடுத்ததால் தான் இது சாத்தியமானது என்று சொல்லி, பழங்களும் இனிப்பும், கேக்கும், புடவையும் வைத்திருந்த கவரை நீட்டினார்கள் அந்த அம்மா. அஞ்சனா விஷயம் கேட்டதே சந்தோஷமாக உள்ளது என்று, அவர்கள் தந்ததை வாங்க மறுத்துவிட்டாள். அந்த அம்மா வம்பு செய்து வாங்கியே ஆகவேண்டும் என்று தந்துவிட்டு போனார்கள். பிறகு விசாரித்ததில், அவள் பார்த்த மனிதர், மாலாவில் ஒரு முக்கிய பிரமுகர் என்று தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு மருத்துவமனையிலும், ஊரிலும் நல்ல பெயர் கிடைத்தது.
இங்கு வந்து கிட்டத்தட்ட 2 மாதம் ஆன சமயத்தில், ஊருக்கு செல்ல விடுமுறை வாங்கினாள். ஒரு வாரம், அம்மா சமையல், அவளுக்கு பிடித்தவை எல்லாம் சமைத்து தந்தார்கள். உட்கார்ந்த இடத்திலேயே சுட சுட, அதுவும் பிடித்த சாப்பாடு கிடைப்பது எத்தனை பெரிய விஷயம், என்று தனிமையில் நாக்கு செத்து போன பின் தான் உணரமுடிகிறது.
பார்த்தார் போல, ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை. தக்கலில் டிக்கெட் கிடைக்கும் என்று சொன்னவர் கடைசி நேரத்தில் கையை விரித்து விட்டார். பொழுதோடு கிளம்பினால், break journey செய்தாலும், இரவுக்குள் போய் சேரலாம் என்று எண்ணியவள், காலை வந்த கோவை எக்ஸ்ப்ரஸ் பிடித்தாள். கோவை சென்று சேரும் போது, மதியம் 2 ஆகியிருந்தது. மதியம் 3 மணிக்கு பாலக்காடு கிளம்பின பஸ்ஸை பிடித்தவள், அங்கு சென்று சேரும்போது 6 மணி. ஆகி போனது. அதன்பின் காத்திருந்து திருச்சூர் போகும் பஸ்ஸில் ஏறினால், சாலக்குடியில் இறங்கலாம், எப்படியும் இரவு 10 மணிக்குள் போய்விடலாம் என்று யோசித்து கொண்டே இருந்தாள் அஞ்சனா.
தனியாக பயணம் செய்வது கொஞ்சம் போரான சங்கதி. பைகளை தூக்கிக்கொண்டு தனியே அலைவதே தன் பிழைப்பாகி போனது என்று சிரித்து கொண்டாள். பாட்டி சொல்வார்கள், `` இவளுக்கு காலுல சக்கரம் ரேகை இருக்கு. கட்டாயம் ஊர் சுத்திட்டே இருப்பா `` என்று. பஸ், டிரெயின், கார், விமானம், படகு, சைக்கிள், கைனெடிக் ஹோண்டா இப்படி எல்லாவற்றிலும் சுத்தியாகி விட்டது. ஆனால் எப்போதும் பஸ் பிராயணம் பிடித்ததில்லை. பஸ் பிரயாணத்தில் கொஞ்சம் தூங்கி விழித்து, உட்கார்ந்தே கால் வலித்து, கொஞ்சம் கூட திரும்ப முடியாது, பக்கதில் இருப்பவரின் குறட்டையும், வியர்வை வாசமும் சகித்து, வெளியே செல்லும் காட்சி பார்த்தபடி அமர்ந்தவளுக்கு பயம் தொற்றிக்கொண்டது. ட்ராஃபிக் காரணமாக, பஸ் மெதுவாக தான் சென்றது, திருச்சூர் சேரும்போதே பஸ்ஸில் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தது. அங்கிருந்து சாலக்குடி செல்லும் பஸ்ஸில் ஏறும்போது மணி 10 ஆகிப் போனது. இருட்டு எத்தனை பெரிய முகமூடி. எத்தனை தைரியமாக தென்பட்டாலும், சுற்றி முற்றி, பஸ்ஸில் கைவிட்டு எண்ணும் அளவு தான் மக்கள் இருந்தது, அதிலும் எல்லோரும் ஆண்களாகவே இருந்தது இன்னும் யோசிக்க வைத்தது.
அத்தனை சீட் காலியாக இருந்தாலும், தன் பின்னாலே வேண்டும் என்றே அமர்ந்து சிலிமிஷம் பண்ண ஆரம்பித்திருந்த 60 வயது கிழவரை எண்ண செய்யலாம் என்று யோசித்தாள். என்ன கிடைக்கும், இந்த அல்பத்தனமான தொடலில் இந்த மனிதருக்கு, என்று எண்ணி, பொறுக்க முடியாது திரும்பி, `` அச்சா! இப்போழ் சமயம் எத்தறையாயி? ( அப்பா! இப்போ மணி என்ன ஆச்சு ?) என்று கேட்டாள். கொஞ்சமேனும் அப்பா என்று கூப்பிட்டது உரைத்திருக்க வேண்டும் அவருக்கு. மணி என்ன என்று சொன்னவரிடம், இன்னொரு முறை அழுத்தி நன்றி, அப்பா! என்று சொல்லிவிட்டு திரும்பியவள் சிரித்து கொண்டாள். அதன்பின் அவர் ஒன்றும் தொந்திரவு செய்யவில்லை.
சாலக்குடி வந்து பஸ் நின்ற போது, மணி பணிரெண்டரை ஆகியிருந்தது. பஸ் ஸ்டாண்ட் பக்கதிலேயே, கள்ளு கடை இருந்ததில், சில குடிமகன்கள் நடு ரோட்டில் எட்டு போட்டு பழகி கொண்டிருந்தார்கள். காலை ஆறு மணிக்கு துவங்கிய பயணம். களைத்து போயிருந்தாள், அஞ்சனா. முகத்தில் அழுக்கும், வியர்வையும் சேர்ந்து நற நற என்றது. வெகுவாக பசித்தது. பக்கத்தில் இருந்த ஒரு தாத்தாவிடம், மாலா பஸ் எப்போது வரும் என்று கேட்டாள். தாத்தா, அவளை மேலும் கீழுமாக பார்த்து, எல்லா பஸ்ஸும் போய்விட்டது. இனி காலை 5 மணிக்கு தான் துவங்கும் என்று சொல்லிவிட்டு, தரையில் பேப்பர் விரித்து படுக்க தயாராகி கொண்டிருந்தார்.
மொத்தமே 10 பேர் மட்டும் தான் இருந்திருப்பார்கள் அந்த பெரிய பஸ் நிறுத்ததில். அதில் இவள் மட்டும் தான் பெண். மொபைலில் மருத்துவமனைக்கு கூப்பிட்டு, வந்து கூட்டி செல்லுமாறு அழைக்கலாம் என்று பார்த்தால், பேட்டரி சார்ஜ் தீர்ந்து அணைந்து போயிருந்தது. நம்பரும் நினைவிற்கு இல்லை. அவளுக்கு இந்த பக்கத்தில் 3 ஆண்கள் இவளை பார்த்தவாறே நின்றார்கள். 30களில் இருந்த ஒருவன் வந்து, மிக அக்கரையாக, எங்கு போகவேண்டும், நான் வேண்டுமானால் கொண்டு விடவா என்று கேட்டு இளித்தான். அவனிடம் ஒன்றும் சொல்லாது, வெளிச்சம் இருக்கும் இடத்திற்கு வந்து நின்றாள். கொஞ்சம் தள்ளி இருந்த டீக்கடையில், இரண்டு மூன்று டிரைவர்களும், கண்டெக்டர்களும், இன்னும் ஒருவரும் நின்று டீ குடித்தப்படி பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவள் அவர்களை நோக்கி நடந்து, `` சேட்டா! இவிட இருந்நு மாலா போகாம் வேறு எந்தெங்கிலும் வண்டியிண்டோ? (இங்கே இருந்து மாலா போக வேறு ஏதாவது வண்டி இருக்கிறதா? ) என்று கேட்டாள். அவர்கள் எல்லோரும் ஒருவர் ஒருவர் முகத்தை பார்த்து, `` இப்போது ஒன்றும் இல்லையே அம்மா. நீ எப்படி போவே ? என்று திருப்பி கேட்டார்கள். அஞ்சனா அவர்களிடம், இங்கிருந்து கார், ஆட்டோ ஏதாவது போகுமா? என்று கேட்க, அவர்கள் அவை அத்தனை நம்ப தகுந்தவை இல்லை என்று சொல்ல இன்னும் குழம்பி போனாள். மணி ஒன்று ஆகியிருந்தது. அவர்களில் வயதான ஒருவர் சொன்னார், `` யடா கோபா! நினக்கு ஜோலி பரிவாடி கழிஞ்சல்லோ. நீ போவுன்ன இடைக்கு, ஈ குட்டியினை இறக்கிவிடாம் பற்றோ? ( கோபா, உனக்கு வேலை முடிஞ்சிருச்சில்லையா, நீ வீட்டுக்கு போகும் வழியில இந்த பொண்ணை இறக்கிவிடறியா? ) என்று கேட்க, அதுவரை முதுகு காட்டி நின்றிருந்தவன் திரும்பினான்.
தலைவிரி கோலமாக, கறுத்து, அயர்ந்து ஆ என்று நின்ற அஞ்சனாவை, புழு போல பார்த்துவிட்டு, எங்கே போகணும் என்று கேட்டான். மாலாவில் வீட்டினுடைய விலாசம் சொல்ல, ம் என்று சொல்லி அங்கிருந்தவரிடம் விடை சொல்லிவிட்டு கிளம்பினான். இவள் பையை தோள் மாற்றி தோள் தூக்கிக்கொண்டு அவன் பின்னாலே செல்ல, கொஞ்சம் தள்ளி நிறுத்தியிறுந்த என்ஃபீல்ட் புல்லட்டை நோக்கி நடந்தான். அஞ்சனாவிற்கு ஒன்றும் பேசும் அளவு தெம்பு இல்லை. முன்பின் தெரியாத யாரோடோ வண்டியில் போக போவதை எண்ணி, சரியா தவறா என்று கணிக்க முயன்று தோற்று போனாள். Beggars can’t be choosers என்று சொல்லிக்கொண்டாள். அவன் ஒன்றும் பேசவில்லை. அவளை வண்டியில் ஏற்றி வருவதை அத்தனை விரும்பவில்லை என்பது மட்டும் புரிந்தது. ஆனால், காலை வரை குளிரில், இருட்டில் இங்கு நிற்பதற்கு வீடு போய் சேர்ந்தால் போதும் என்று இருந்தது. 30 நிமிட பயணத்திற்கு பிறகு, அவள் வீட்டின் இரும்பு கேட் முன்பு இறக்கிவிட்டவன், கிளம்பும் முன், அவனுடைய விசிடிங் கார்ட் கொடுத்தான். பேச கூட திராணியில்லாத போதும், வீடு வந்து பத்திரமாக சேர்ந்ததில் மனது லேசானது. அவனை பார்த்து, `` வளர thanks! ( ரொம்ப நன்றி ) என்று சொன்னாள். கிளம்பும் முன், அவளை இன்னொரு முறை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு, என்ன பேர் என்று கேட்டான். இவள் அஞ்சனா என்று சொல்ல, அவன் ம் என்று ஆமோதித்து தலையசைத்து சென்றே விட்டான். வீட்டின் உள்ளே நுழைந்தவள், நேரே குளியலறைக்கு சென்று குளித்து வந்து படுக்கும் முன், கார்ட்டை எடுத்து பார்த்தாள், அதில் Gopakumar, administrative head, KSRTC, chalakudy என்று எழுதியிருந்தது. குளித்த ஈரத்தலையை கூட துவட்ட தோன்றாது தூங்கி போனாள் அஞ்சனா அன்று இரவு.
- யமுனா ராகவன்
- யமுனா ராகவன்

