நேற்றைய இரவில்
வீட்டின் மொட்டைமாடியில்
மது அருந்தும் பொழுதில்
மம்மூத் கேட்டான்.
“மரணத்தைப் பற்றி ஏதாவது சொல்?”
நம் கையிலிருக்கிற மது.
போதை- நாம் அவ்வப்போது செய்துகொள்ளும்
சின்னஞ்சிறிய தற்கொலைகள் என்று
சுனா.சாமி எழுதுகிறார்.
குப்பைக் கூடைதான் போ.
அது ஒரு வெற்றிடம்.
கூடலின் உச்சத்தில் அதைத்தான் உணர்கிறேன் பாண்டி.
வெட்டியானின் கைபட்டு
சட்டெனத் திறந்துகொண்ட அப்பாவின்
ஒற்றைக்கண் வெறிப்பு.
அது கணந்தோறும் உன்னை பார்த்துக்கொண்டிருப்பதை
உணர்ந்த தருணம்..... இல்லையா?
தேங்கிய நீரில் மழைக் கொப்புளம்.
பயமற்ற ரசனைதான்.
ஆக்ரோஷமாய் சீறிப் பாயும்
ரேஸ் கார்களின் வேகம்.
ஃபைனல் டெஸ்டினேசன்
படக் காட்சி போலவே இருக்கிறது.
“சொர்க்”கடித்து கிணற்றுக்குள் பாய்ந்தவன்
அனுபவிக்கும் நீரின் கன அமைதி.
சுவாரஸ்யமான விளையாட்டு.
வேப்பமரத்திலிருந்து கீழிறங்கிய
காக்கையின் தலைக் கொத்தல்.
மரத்தில் காக்கைக் குஞ்சுகள்.
அமரர் ஊர்தி போன வழித்தடத்தில்
அரளிப் பூக்களின் தனிமை.
சூடப் பிறந்தது சுவடின்றி மறையுமோ?
பேருந்து நிற்பதற்காய் அவஸ்த்தைப்பட்டவன்
அவசரமாய்க் கீழிறங்கி அமர்ந்த
கழிப்பறை சுகம்.
விடுதலையுணர்வு. வேறேதும் சொல்?
ஜிஞ்சிளிக்கான் ஜிப்பி,
மூடிட்டு படுடா டுப்பி.
இப்போதுதான் சரியாகச் சொன்னாய்.
இரவு நல்வணக்கங்கள் நண்பா!
- முத்துப்பாண்டி
