உடன்போக்கு
ரயிலின் இந்த நீண்ட கூவலே
ஊருக்கு உரைக்க ,
நம் உடன்போக்கின் தபால் .
கண்ணாடியில் உன் பொட்டு
பெற்றோரை காயப்படுத்தட்டும் .
புகார்களற்ற நேசம் தொடரட்டும் .
குறை பொறுக்கும் பக்குவத்தை
இன்றிலிருந்து பழகலாம் .
வாழத் தூண்டும் ஊடலை
நீ நிகழ்த்து
இந்த ரயிலின் ஓசை தேயும் வரை
அல்லது
அடுத்த ரயிலின் ஒலி கேட்கும் வரை .
பூனையின் கோபம் போன்ற
உனது காமத்தினின்று நீயும்
காக்கையின் கரைதல் போன்ற
கோரிக்கையினின்று நானும்
வெகு தூரம் போவோம் .
கடலில் நட்சத்திரம் விழிப்பதை
வியப்புறுவோம் .
உடன்போக்கின் கண்
இடைசுரத்து பசி மீறட்டும்.
பாலை எங்கும் பெருகட்டும்
ப்ரேமையின் பால் .
கள்ளியில் பூக்கட்டும்
கானுறையாத ஆணுறை .
நம் அக்கண
கண்ணீர்த்துளி
காமமன்றி வேறில்லை சகி .
- கார்த்திக் நேத்தா.
