பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

September 8, 2010

பூனை புராணம் - சாம்ராஜ்

 மொட்டை மாடியில்
ஒரு செவ்வக சதுரத்தில்
சந்தித்து கொண்டோம்
நானும் பூனையும்.

எழுதப்படாத
சமாதான ஒப்பந்தமிருந்தது
எங்களுக்குள் ..


இரைக்கோ ,இனைக்கோ
பிச்சைக்காரனின் குரலை
பிரதியெடுத்தது அது

முழு இரவும்
ஆதி மிருகமாய், மனிதனாய்
ஆளுக்கொரு மூலையில்
அமர்ந்திருந்தோம்

எனக்குள் உலவும்
பூனைகளை
அது முகர்ந்திருக்க கூடும்.

யுகங்களுக்கு முன்னால்
குகையில்
சந்தித்து கொண்டவர்களே
நாங்கள்.


*
  
பூனைகளை
வருடும் பொழுது
உன் ஒர்மைகள் வருகின்றன.

நியும் அப்படி
எனக்குள்
முடங்கி கொள்வதுண்டு.
செல்லமான
நகக் கீறல்களுமுண்டு.

பூனைகளை போலவே
நீயும் சொல்லாமல் 
போனாய்.


இப்பொழுதும் இருக்கின்றன
பூனைகளின்
உதிர்ந்த ரோமங்களும்
ஆஸ்த்துமாக்காரனின்
இளைப்பாய்
உன் ஞாபகங்களும்
      
*  
ஆண் பூனைகள்
அதிக நாள்
வீட்டிலிருப்பதில்லை.
சொல்லாமல்
காணாமல் போகும்.

ஏதோவொரு
பின்னிரவிலோ, அதிகாலையிலோ
குரலினால் கதவு தட்டும்..

வேகமாய்
உணவை விழுங்கி கொண்டே
தன் சமிப சரிதம்
சொல்லும்.

மறுபடி
காணாமல் போகும்.
அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம்
இணையுடன் நாடு கடந்திருக்கலாம்
விரைத்து செத்திருக்கலாம்.

இரண்டாம் முறை
திரும்பி வருவதேயில்லை
ஆண் பூனைகள்.

கண்ணகியும் மாதவியும்
அறிந்தே இருக்ககூடும்
இப்பூனைகளை.

   - சாம்ராஜ்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com