பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

September 9, 2010

2 கவிதை - முத்துப்பாண்டி


பார்த்தல்

உச்சி வெயிலில் வேம்பு
காற்றிற்கேற்ப அசைகிறது தரையில்.
நிழல்வலை மீறி ஒரு சிறு
பறவையேனும் மேலே
கிளம்புமோ என பார்க்கிறேன்.
பார்த்தலின் நோக்கம் வலையாக
விடுபடத் திணறும் பறவையொன்று
முட்டி மோதுகிறது மனக்குகை இருட்டில்.


 ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ்-
அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்


சுஜாதா படிக்கிறார்கள்.
சூடான தேனீர் பருகுகிறார்கள்.
சால்வை போர்த்தி உறங்குகிறார்கள்.
ஸகிரா கேட்கிறார்கள்.
பாலு ஏதோ ஒரு இதழுக்கு
கட்டுரை எழுதுகிறார்.
பயணச்சீட்டு எடுக்காததற்காய்
அர்த்தராத்திரியில்
அடுத்த ஸ்டேஷனில்
இறக்கிவிடப்பட இருக்கிற
அந்த முதிய பெண்மணிக்கு
டிக்கெட் எடுக்கலாமா அல்லது
வெளியே குதித்து தற்கொலை
செய்து கொள்ளலாமா என்று
யோசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.

- முத்துப்பாண்டி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com