லெட்சுமி அம்மாளுக்கு இப்போது 54 வயது ஆகிறது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மனைவிஇவர். உண்மையான பொதுவுடைமைவாதியின் மனைவியாக இருப்பது சவால் நிறைந்ததாகும். மேலும், தமிழ்த் தேசிய அரசியலில் தோழர் பெ.மணியரசன் தீவிரம் காட்டத் தொடங்கிய பிறகு, வாழ்க்கை மிகுந்த சிக்கல்களுக்குள்ளானது. வறுமையின் கோரம், கொலை மிரட்டல்கள், அவமானங்கள், தனிமை, போராட்டங்கள், கைதுகள், சிறையடைப்புகள் இவற்றுக்கிடையே குழந்தை வளர்ப்பு என லெட்சுமி அம்மாளின் காலம் அனுபவங்களின் பெட்டகமாகவே உள்ளது. இந்த அனுபவங்கள் காட்சியில் தொடராய் இடம் பெறுகிறது. முந்தைய பகுதிகளுக்கு இங்கே சொடுக்கவும்.
பகுதி 9
நான் வீட்டை விட்டுப் போவதில் அம்மாவுக்கு மகிழ்ச்சிதானே தவிர, துக்கம் இல்லை என்பதைப் பட்டவர்த்தனமாக அவள் அறிவித்துவிட்டாள். சுற்றிலும் பார்த்தேன். அப்பா தன் இரண்டாம் மனைவியின் வீட்டில் இருந்தார். என் தங்கைகள் சரோஜா, வளர்மதி இருவரும் எங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு என்னைப் பற்றிய அக்கறை இல்லை. நானும் அவர்களோடு ஒட்டியதில்லை. பிறந்தது முதலே அவர்களும் நானும் வேறு வேறாகத்தானே நடத்தப்பட்டோம்!
இரண்டாவது மனைவிக்கு அப்பா பெரிய ஓட்டு வீடு கட்டிக் கொடுத்திருந்தார். எங்களுக்குக் கூரை வீடுதான். என் அம்மா இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டாளா இல்லையா என்பது எனக்கு இன்றும் புதிராகத்தான் இருக்கிறது. தனக்கு துரோகம் செய்யும் கணவன் மீது பாசமும் ஒரு பாவமும் செய்யாத என் மீது வெறுப்பும் என் அம்மாவுக்கு எப்படி ஏற்பட்டது என்பதையும் என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
ஆனால், என் அம்மா தன் கடைசிக் காலத்தில், தன் தவறுகளுக்கெல்லாம் பிராயசித்தம் செய்ய விரும்பியது போல் நடந்து கொண்டாள். கடந்த 2001 ஆம் ஆண்டு அவள் இறந்தாள். மரணத்துக்கு முன், ஐந்து ஆண்டுகளாகவே அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டது. அப்போது நான் தஞ்சாவூரிலிருந்து வல்லம் சென்று அவளைக் கவனித்து வந்தேன். அந்தக் காலத்தில்தான் என் அம்மா என்னிடம் ஒரு தாய் போல் நடந்துகொண்டாள். உண்மையிலேயே அவள் தன் கடந்த கால வாழ்க்கை குறித்து வருந்தியிருக்க வேண்டும். அந்தக் காலத்தில் என்னிடம் என் அம்மா மிகுந்த பரிவுடனும் உள்ளார்ந்த அக்கறையுடனும் நடந்து கொண்டாள். நான் பணம் கொடுத்ததாலோ, அவளைக் கவனித்ததாலோ அவ்வாறு நடந்துகொண்டதாக நினைக்கவில்லை.
எல்லா மனிதர்களுக்குமே ஒரு காலம் இப்படி வரும் என்றுதான் நினைக்கிறேன். தான் செய்த தவறுகளை உணர்ந்து வருந்துவதுதான் முதுமையின் விதியாக இருக்கும் என்பதும் என் எண்ணம். என் அம்மாவின் கடைசிக் காலத்தில் அவள் என்னுடன் நெருக்கமாக இருந்தபோது கூட பலமுறை எனக்குள் ஒரு எண்ணம் எழுந்தது.
‘நான் வீட்டை விட்டுப் போறேன்னு சொன்னப்ப ஏம்மா தடுக்கலை?’ என்று கேட்க வேண்டும் என்ற எண்ணம் அது. ஆனால், ஒரு முறை கூட இந்தக் கேள்வியை நான் கேட்கவில்லை.
அம்மா இறப்பதற்குச் சற்று முன்னால், என் கைகளைப் பிடித்துக் கொண்டு எதுவுமே பேசாமல் கண்ணீர் விட்டாள். நீண்ட நேரம் அவள் அழுதுகொண்டே இருந்தாள். நான் என்ன எனக் கேட்டபோதெல்லாம் அவள் ஒன்றுமில்லை என்பது போல் தலையை ஆட்டினாள். மரணம் நேரப் போவதை அவள் முன் கூட்டியே உணர்ந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். பல முதியோர் மரணத்தில் இவ்விதமான அனுபவங்களை நான் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கு மரணத்தை உணர முடிகிறது. அந்த இறுதிக் காலத்தில், அவர்கள் தங்கள் வாழ்க்கையை அசை போடுகிறார்கள். நல்லது கெட்டதைப் பகுத்துப் பார்க்கிறார்கள். தாம் செய்த தவறுகள், துரோகங்கள், பிழைகள் ஆகியவற்றுக்காக வருந்துகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். பிறர் தமக்கு செய்த துரோகங்களையும் அந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறார்கள். ஆக மொத்ததில் மரண நேரத்தில் யாரும் தம் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை எண்ணிப் பார்ப்பதில்லை. ஆகவே, இறுதிக் காலத்தில் சிந்தும் கண்ணீரைக் குறைக்க வேண்டுமானால், வாழும் காலத்தில் பிறருக்குத் தவறிழைக்காமல் வாழ வேண்டும்.
என் அம்மாவின் வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடங்களில் இதுவும் ஒன்று.
நான் வீட்டை விட்டு வெளியேறியே தீர வேண்டிய இரவு அது. கட்சி வேலைகள், டேவிட்டுடனான திருமணம் குறித்த பேச்சுகள் என் வீட்டுக்கு வெளியே காத்திருந்தன. இவற்றைத் தவிர எனக்கு வேறு எந்த நம்பிக்கையும் அல்லது பிடிப்பும் அப்போது இல்லை. அதாவது, முற்றிலும் புதியவர்களை நம்பி அல்லது அவர்கள் கொண்ட கொள்கைகளை நம்பி நான் என் குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டும். வெளியேறுவதில் எனக்குப் பெரிய மனத் தடை இருக்கவில்லை. குடும்பம் என்னை அங்கீகரிக்கவே இல்லை எனும்போது. அதிலிருந்து பிரிவது பெரிதல்ல.
ஆனாலும் அன்று இரவு எனக்கு மன உளைச்சல் அதிகமாக இருந்ததை மறுக்க முடியாது. ஏதோ ஒரு சோவியத் நாவலில் படித்த வாசகம் ஒன்று என்னைத் தேற்றிவிட்டது. ‘புரட்சி எனும் சுழல் என் கால்களைச் சுற்றி இருக்கிறது’ என்பதே அந்த வாசகம்.
சிறு வயதில், கிறித்துவ மடத்தில் இருந்தபோது, ‘பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்’ என்ற பைபிள் வாசகம் எனக்குப் பல இரவுகளில் துணை இருந்தது. அந்த வாசகத்தை நினைக்கும் நிமிடங்களில் எல்லாம், மாதா என் அருகே அமர்ந்து என் தலையைக் கோதி விடுவது போன்ற நிம்மதி பிறந்தது. இப்போது மேற்கண்ட வாசகம் எனக்குத் துணிவைக் கொடுத்தது. எல்லாம் மனம்தானே!
எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த சக்தி டூரிங் டாக்கீஸில் இரண்டாம் ஆட்டம் படம் ஓடிக் கொண்டிருந்தது. நள்ளிரவு என்பதால் வசனம் தெளிவாகக் கேட்டது. நானும் ஒரு பெண் என்ற படம் என நினைக்கிறேன். அந்தப் படத்தின் நாயகி அடிக்கடி கூறும் வசனம் ஒன்று, ‘முடிந்தால் திருந்துங்கள் இல்லையேல் வருந்துங்கள்’ என்பது.
அதிகாலை, நடப்பதற்கான வெளிச்சம் கிடைத்ததும் என் பையுடன் வீட்டை விட்டு வெளியேறினேன். அத்தனை ஆண்டுகளாக நான் வாழ்ந்த மாட்டுக் கொட்டகையின் சுவரில், ‘முடிந்தால் திருந்துங்கள் இல்லையேல் வருந்துங்கள்’ எனப் புறப்படும் முன் கரிக் கட்டையால் எழுதி வைத்து விட்டேன்.
கனத்த மனதோடும் கனமில்லாத மஞ்சள் பையோடும் என் ஊரைப் பிரிந்தேன். என் அடுத்த பயணம்?
தஞ்சாவூரில் தோழர் வெங்கட்ராமன், டேவிட் இருவரும் என்னை தோழர் கிருஷ்ணன் வீட்டில் தற்காலிகமாகத் தங்க வைத்தார்கள். தஞ்சாவூரின் நகரத்திலிருந்து ஒதுங்கி இருந்த பூக்காரத் தெரு பகுதியில் இருந்தது தோழர் கிருஷ்ணன் வீடு. சில நாட்கள் அங்கிருந்தபடி டாண்டெக்ஸ் வேலைக்குப் போய் வந்தேன். திடீரென என் வீட்டிலிருந்து யாரும் வந்து என்னை வீட்டுக்கு அழைத்தால் என்ன முடிவு எடுப்பது என அடிக்கடி என்னை நானே கேட்டுக் கொண்டேன். குழப்பம்தான் பதிலாக வந்தது. ஆனால்,அப்படி ஒரு இக்கட்டுக்குள் என்னைத் தள்ளவில்லை என் பெற்றோர். அவர்கள் யாரும் என்னைத் தேடி வரவே இல்லை.
பூக்காரத் தெருவில் இருந்த தோழர்கள் எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்கள். திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்திலிருந்து தோழர்கள் க.பழனிமாணிக்கம், அவர் மனைவி தோழர் லெட்சுமி ஆகியோர் அடிக்கடி வந்து என்னைப் பார்த்துக் கொண்டனர். எனக்காக ஒரு கூட்டமே உருவாகியிருந்தது. இத்தனை உறவுகள் ஒரே நேரத்தில் கிடைப்பது அரிதுதான்.
நான் கடந்த காலம் எனும் பாதாளத்தைத் தாண்டிவிட்டேன். அந்த பாதாளம் என்னை விழுங்கும் முன், கை கொடுத்துத் தூக்கப்பட்டேன். இனி என் பழைய சுவடுகள் என்னிடம் தென்படாது. தோழர்கள் அனைவருமே அவரவர் சொந்த வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். ஆனால், நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம்.
அவசர நிலைக் காலத்தின் கொடூரங்களில் ஒன்று தோழர்களின் குடும்ப வாழ்க்கை சிதைந்து போனது. லெட்சுமி என்னிடம் அடிக்கடி வருந்திப் பகிர்ந்து கொள்ளும் சேதி தன் மகளுக்கு அப்பா யாரெனத் தெரியவில்லை என்பது. இப்படி ஒரு சிக்கலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தோழர் பழனிமாணிக்கம், போலீசால் தேடப்பட்டவர். தலைமறைவாக இருந்துகொண்டே கட்சி வேலைகள் செய்து வந்தவர். அந்த நெருக்கடி நிலையிலும் அவர் போகாத கிராமங்கள் இல்லை; அவர் சந்திக்காத தோழர்கள் இல்லை. சைக்கிளை எடுத்தால், ஒவ்வொரு நாளும் 30 கிலோ மீட்டர் கூட மிதிப்பார். அந்தக் காலத்தில் சாலைகள் மிகக் குறைவு, இருக்கும் சாலைகளிலும் போக முடியாது. போலீஸ் ஜீப்புகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும். ஆகவே, போலீஸ் போக முடியாத கடுமையான பாதைகளைத் தேர்ந்தெடுத்துப் பயணம் செய்ய வேண்டி இருந்தது.
தோழர் க.பழனிமாணிக்கம், எங்களால் கே.பி என்று அழைக்கப்பட்டார். உறுதிக்கும் அர்ப்பணிக்கும் கே.பி ஒரு முன்னுதாரணமாக இருந்தார். அவருக்குக் கண்டமங்கலத்தில் கணிசமாக நிலங்கள் இருந்தன. ஆற்றுப் பாசனம். கட்சி வேலைகளில் ஈடுபட்டது முதல், விவசாயம் செய்வதில் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டார். தன் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், கட்சித் தோழர்கள் வாழ்க்கைக்கும் சேர்த்து கடன்கள் வாங்குவார். அதிகக் கடன் சேர்ந்த போதெல்லாம் ஏதேனும் ஒரு நிலத்தை விற்று வந்தார்.
அவர் மனைவி லெட்சுமி, அவருக்குச் சற்றும் சளைக்காதவர். இந்த இருவரும் சேர்ந்து கட்சிக்காக உழைத்தார்கள். இவர்களது மூத்த மகள் தேன்மொழி பிறந்த நேரம், அவசரநிலைக் காலம். தேன்மொழி தன் அப்பாவைப் பார்க்காமல் வளர்ந்தாள். கே.பி தன் வீட்டுக்குப் போக முடியாது. அப்படியே போனாலும் மாறு வேடத்தில், நள்ளிரவில்தான் போக முடியும். இதனால், தேன்மொழிக்குத் தன் அப்பாவைத் தெரியாமல் போனது. ஒரு கட்டத்தில், கே.பி அவளைத் தூக்கிக் கொஞ்ச முயலும்போது, அவள் அவரைக் கண்டு பயந்து அழத் தொடங்கிவிட்டாள். இவர்தான் உன் அப்பா என லெட்சுமி சொன்னதை அவள் நம்பவில்லை.
இப்படி ஒவ்வொரு தோழருக்கும் ஒவ்வொரு சோகம்.
ஒரு நாள், மாணிக்கம் என்ற தோழர் வந்தார். அவருடன் ஒரு இளம் பெண் வந்தாள். அவள் டேவிட்டின் தங்கை என்று மாணிக்கம் அறிமுகம் செய்து வைத்தார். அந்தப் பெண் என்னைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டாள். மாணிக்கமும் என்னை விசாரித்தார். அவர்களது பேச்சுகள் சுமூகமாகவும் நட்புணர்வுடனும்தான் இருந்தன. ஆனாலும், எனக்கு சங்கடமாக இருந்தது.
அவர்கள் இருவரும் சென்ற பிறகு, வெங்கட்ராமன், டேவிட் இருவரும் வந்தார்கள். எனக்காக ஒரு தகரப் பெட்டி வாங்கி வந்திருந்தார்கள். என் பொருட்களை அதில் போட்டுக் கொண்டு கிளம்பச் சொன்னார்கள்.
நாங்கள் திருக்காட்டுப் பள்ளி வந்தோம். மன்னர் மன்னன் வீட்டில் என்னைத் தங்க வைத்துவிட்டுச் சென்றார்கள். மன்னர் மன்னனின் மனைவி அனார்கலியும், அம்மாவும் இருந்தார்கள்.
எத்தனை நாட்கள் இங்கு தங்குவது என நான் டேவிட்டிடம் கேட்டபோது, ஒரு வாரம் தங்க வேண்டி வரலாம் என்றார். கம்பெனியில் லீவு சொல்லவில்லையே என்றேன். தோழர் எம்.கே.பி லீவு சொல்லிவிட்டார் என்று பதில் வந்தது.
எல்லாம் மர்மமாக இருந்தது. தோழர்கள் இரவு நேரங்களில் வருவார்கள். கூடிப் பேசுவார்கள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பகல் பொழுதுகள் அமைதியாகவும் வெறுமையாகவும் கழிந்தன. ஒரு இரவு தோழர்கள் வெங்கட்ராமன், மன்னர்மன்னன், கே.பி பேசும்போது, எனக்கும் டேவிட்டுக்கும் திருமணம் ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.
- லெட்சுமி அம்மா

