பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

September 6, 2010

கோடிட்ட இடங்களை நிரப்புக - 8- சுமதி


சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச்சார்ந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும்,  முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக்கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர். தற்போது கோவையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.  

இவருடைய கவிதைகள், கட்டுரைகள், காலச்சுவடு,கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன்,வார்த்தை, வடக்கு வாசல், அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில்பிரசுரமாகி இருக்கின்றன. இவருடையக் கவிதைகள் காட்சியில் சுமதி கவிதைகள் என்றுதொடராய் இடம் பெற்றுள்ளன. அதை தொடர்ந்து "கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற தலைப்பில் காட்சியில் தொடர்கதை வெளிவருகிறது.

பகுதி 8

முதல் வகுப்பு இரண்டாம் மாணவிகளுக்கு,முதலில் சாந்தி தன்னை  அறிமுகப்படுத்திக் கொண்டு மாணவிகளின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொள்ள முயன்றாள். முக்கால்வாசி பெயர்கள் சாந்திக்கு பழக்கம் இல்லாத , வாய்க்குள் நுழையாத கிறிஸ்தவ பெயர்களாக இருந்தன. அத்தகைய பெயர்களை அவள் படித்த கிறித்தவக் கல்லூரிகளிலும் கூட கேள்விபட்டதில்லை.

மாணவிகளின் பெயரை வாசிப்பதற்குத் திணறிய சமயத்தில், அவர்களே எழுந்துநின்று பெயரைச் சொல்லி வருகையைக் கொடுத்தது திருப்தியாக இருந்தது. முடிந்துவிட்டு நிமிர்ந்தபோது, ஒரு மாணவி எழுந்து “மேம், உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?” என்று கேட்டாள்.

சாந்தி “இல்லை” என்று சிரித்துக்கொண்டே சொன்னாலும் அவர்களுக்குத் தேவையில்லாத விசயத்தைப் பற்றி கேட்பதாக அவளுக்குத் தோன்றியது. இன்னும் ஏதாவது கேட்பார்களோ என்ற பயமும் கூடவே இருந்தது.

பேச்சை மாற்ற நினைத்தாள் “புக்ஸ் எடுங்கம்மா” என்று சொன்னவுடன் லேசான சலனம் ஏற்பட்டது. ஏற்கனவே புளோரா மேம் கொஞ்சம் நடத்திவிட்டு, அதற்கான குறிப்புகளும் கொடுத்திருந்தார். அதை ஞாபகப்படுத்திவிட்டு சாந்தி அடுத்தப் பகுதியை நடத்தினாள். கடைசி நிமிடம் வரைக்கும் வகுப்பு எடுக்காமல் ஐந்து நிமிடத்திற்கு முன்பாகவே நிறுத்திக்கொண்டாள். வகுப்பையும், மாணவிகளையும் ஒரு முறை நோட்டம் விட்டாள். அதில் சில முகங்களை மனதிற்குள் பதித்துக்கொள்ளவும் முயற்சி செய்தாள்.

வகுப்பில் பாதி போர் ஜீன்ஸிலும் , மீதி பாதி பேர் சுடிதாரிலும் இருந்தார்கள். அவள் எம்ஃபில் படித்த தாம்பரம் கல்லூரியிலும் மாணவிகளின் உடை இதே போன்றுதான். விழா நாட்களில் மட்டும் தான் சேலை அணிந்து கொள்வார்கள். ஆய்வு மாணவிகள் சிலபேர் மட்டும் கல்லூரிக்கு வரும்போது சேலையில் வந்தார்கள். சென்னைக்கு வந்த புதிதில் புதிதாக தெரிந்த உடை விசயம் இரண்டு வருடம் ஆனதும் பழகிப்போனது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஏதேனும் ஓரிரு மாணவிகள்தான் ஜீன்ஸில் இருப்பார்கள். அவர்களை எல்லாம் "அரேபியன் குதிரை" என்று அழைத்தார்கள் மாணவர்கள்.
                              
சென்னைக்கு வந்தபோது சாந்தியைத் திகைக்க வைத்த விசயங்கள் நான்காக இருந்தன. ஒன்று உடை, இரண்டு உணவு, மூன்று மொழி, நான்கு போக்குவரத்து. இந்த நான்கு விசயங்களிலும் மாநகரம் தன்னை நகரத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொண்டது.

வெவ்வேறு ஊர்க்காரர்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள், உடைகள் உணவுகள் எல்லாம் கலந்த கலவையாக சென்னை இருந்தது. மின்சார இரயிலில் ஏறி, தாம்பரத்திலிருந்து கடற்கரை வரைக்கும் ஒருமுறை போய்விட்டு வந்தால் போதும், சென்னையின் அத்தனை அம்சங்களையும் அதற்குள் பார்த்துவிடலாம்.
மீன் கூடைகளை சுமந்து வருபவர்கள் பிஸ்கட் விற்பவர்கள், பூ விற்பவர்கள், பழம் விற்பவர்கள் இவர்களின் பேச்சு,உடை, நடந்து கொள்ளும் விதம் எல்லாமே வித   விதமாக இருந்தன. அவசர அவசரமாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.

வேலைபார்க்கும் பெண்களுக்கும் படிக்கப் போகும் பெண்களும் பெரும்பாலும் மின்சார இரயிலையும் அதில் வரும் பெண்கள் பெட்டியையும் வாழ்க்கையில் இருந்து பிரிக்க முடியாத அளவிற்கு ஒரு அங்கமாகிவிடும். அவர்களின் பேச்சில் பாதி ஆங்கிலம் பாதி தமிழும் கலந்திருந்தது.

காலை, மாலை நேரங்களில் கல்லூரிக்கு போகும்போதும் முடிந்து திரும்பும்போது கண்டிப்பாக பெண்கள் பெட்டியில்தான் ஏறியாக வேண்டும் மற்ற ஆண்களுக்கான பெட்டிகளில் பிதுங்கிக் கொண்டு நிற்பார்கள்.

படிக்கின்ற காலத்தில் கல்லூரிக்குப் போய்வர இரயிலைப் பயன்படுத்தியது போலவே, கல்லூரி வேலைக்குப் போய் வரவும் மின்சார இரயிலையே பயன்படுத்திக் கொண்டாள், சாந்தி விடுதியிலிருந்து ஏழரைக்குக் கிளம்பினால் சரியாக இருக்கும். பல்லாவரம் இரயில் நிலையத்திற்கு நடந்துவர பதினைந்து நிமிடங்கள் ஆகிவிடும். அரைமணி நேர இரயில் பயணத்தில் எழும்பூர் நிலையம் வந்துவிடும். மேம்பாலம் ஏறி வலது பக்கமாக நடந்து இறங்கினாள், பேருந்து  நிலையம்  வந்து விடும்.  17D,23A பேருந்தோ தள்ளி நிற்கும். பேருந்தை எடுக்கும்போது கூட்டமில்லாமல் இருந்தாலும் போகப்போகக் கூட்டம் சேர்ந்து இறங்குவதற்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். பெரும்பாலும் அந்த நேரத்தில் கலைஞர்நகர் போகும் அந்தப் பேருந்தில் பள்ளிக் குழந்தைகளோ, கல்லூரி மாணவிகளோ ஆசிரியர்களோ இருப்பார்கள். ஆண்கள் ஒரு சிலரைத் தவிர.

தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் மின் வண்டிகளில் காலை மாலைகளில் செல்வோர் கல்லூரி மாணவ மாணவிகள், அலுவலகம் செல்லக்கூடியவர்களாக இருந்தார்கள். பல நாட்களில் மாமிகள் சேர்ந்து பஜனைப்பாடல்களை நல்ல சங்கீத ஞானத்துடன் பாடி வந்ததை கவனித்திருக்கிறாள். கல்லூரி மாணவர்கள் சிலர் கானாப் பாடல்கள் பாடி கைத்தட்டிக்கொண்டு மகிழ்ச்சியுடன் பயணிப்பதை, பலதடவை இரயிலிருந்து இறங்கி நடந்தவாறே பார்க்கவும் கேட்கவும் செய்திருக்கிறாள். பஜனைப் பாடல்களாகட்டும், காணாப்பாடல்களாகட்டும் எந்த ஒரு திரைப்படத்தின் பாடலாகவும் இல்லாமல் இருந்தன. சில நேரம் எரிச்சல் எரிச்சலாகவும் இருக்கும். கால்வலிக்க, கை மேல் தூக்கி பெட்டியில் நிற்பதன் அவஸ்தையானது உட்கார்ந்து பூ கட்டியவாறோ மடியில் கை வைத்து தப்பாது தாளம் தட்டியவாறோ பாடும் மாமிகளின் மடியில் போய் உட்கார்ந்து கொள்ளலாமா என்று கூடத் தொன்றும்.

பல்லாவரத்தில் (ஏறிப்) பயணித்து எழும்பூரை அடைவதற்குள் (இரண்டுமுறை கூவத்தை கடந்ததாக வேண்டும்) மழை இல்லாத நாட்களில் கருப்பாய் கூவம் இருந்தது. அதுவும் குறிப்பாக மழைக் காலங்களில் மூக்கைப் பொத்திக்கொண்டாக வேண்டும். மழை இல்லாத நாட்களில் கூவம் இருந்தது சேரிகள் இருந்தன பன்றிகளோடு சிறுவர்களும், எருமை மாடுகளும் குடிசைகளைச் சுற்றி வந்தன.
பல்லாவரத்தில் எருமை மாடுகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருந்தன. வாகனங்களோடும், மனிதர்களோடும், சர்வசுதந்திரமாய் இயங்கிக் கொண்டிருந்தன. வாகனப் பழக்கம் இல்லாத இடங்களைப் பார்த்து அசைபோட்டபடி சில உட்கார்ந்திருந்தன. காலை நேரங்களில் நகர்வலம் வருகின்ற அவைகள், தன்னிச்சையாக மாலையில் நகர்வலம் முடித்து, வீடு திரும்பி விடுமென்று, விடுதிக்குப் பால் கொண்டு வரும் பால்காரப் பாட்டி சொல்லியிருந்தாள்.

இரயில் நிலையத்தில் சில தெருக்களை, இரு சாலைகளைக் கடந்து சாந்தி செல்கையில், முன்னதாகவோ, பக்கவாட்டிலோ வால்வீசி ஒய்யாரமாய் போகும் எருமைமாடுகளைப் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வாள். இதில் எந்த மாட்டின் பால் தனக்கு வந்து சேர்கிறதோ என்று.

நான்கு ஐந்து மணி அளவில் கையேந்தி பவன்களும், துரிதக உணவகங்களும் களைகட்டத் தொடங்கும். குடும்பப் பெண்கள் யாரும் அந்தப் பக்கம் திரும்பியே பார்க்கமாட்டார்கள். மாணவர்களை, ஜாலியான ஆண்களை, குழந்தைகளை, வெளியூர்க்காரர்களை வசீகரிக்கும் உலகமாக அவை இருந்தன.
                               
சாந்தி சுடிதார் அணிய ஆரம்பித்ததே 9 ஆம் வகுப்பு படிக்கும் போதுதான் 8 ஆம் வகுப்பு முழுப்பரீட்சை விடுமுறைக்கு மஹாராஷ்டிராவிற்கு போய் திரும்பும்போது அப்பாவிடம் அழுது புலம்பி ஒரு சுடிதார் வாங்கி வந்தாள். அதை, கிராமத்தில் அணிவதற்கான வாய்ப்பே இல்லை என்று உத்தரவாதம் அளித்துத்தான் கொடுத்து அனுப்பினார்.

வகுப்பு ஆரம்பித்த முதல் நாள், சுடிதாரைப் போட்டுக் கொண்டு போனபோது, ஊரிலும் சரி பள்ளியிலும் சரி, வித்தியாசமாகத்தான் பார்த்தார்கள் எப்பொழுதும் வழிபாடு ஆரம்பிப்பதற்கு முன் ‘நீராடும் கடல் உடுத்த’ பாடும் அவளுக்கு அன்று எல்லோர் முன்பும் சுடிதார் அணிந்து கொண்டு பாட, கூச்சமாக இருந்தது.

வகுப்பு பையன்கள் கைபொத்தி நமட்டுச் சிரிப்பு சிரித்ததையும் பார்த்துக்கொண்டாள். மாணவிகளோ அவள் போடக்கூடாத ஒன்றை போட்டுவிட்டுவந்து நிற்பதாக நினைத்து விலகினார்கள். அன்றோடு சுடிதார் ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டாள்.

சிவகாசியில் இளங்கலை படிக்கும்போது, வெள்ளிக்கிழமை மட்டும் சுடிதார்(துப்பட்டாவோடு) அணிந்து வரலாம் என்றார்கள். சாந்திக்கு அணிய விருப்பமில்லை. கல்லூரிக்குள் பயமில்லை என்றாலும் 2 கிமீ மிதிவண்டியை மிதித்து வந்து முக்கு ரோட்டில் பேருந்து ஏறி கல்லூரிக்கு வரும் வரை எத்தனை பேர் தன்னைப்பார்ப்பார்கள் என்ற கூச்சம் இருந்தது.

மதுரையில் முதுகலை படிக்கும்போது விடுதியில் இருந்தாலும், தோழிகளோடு வெளியே போகும் வாய்ப்பு கிடைத்தாலும், அப்பா அனுப்பிய பணத்தில் சுடிதாரும் நைட்டியும் எடுத்து அணிந்துகொள்ள ஆரம்பித்தாள். சுடிதார் வசதியான உடையாகவும் அமைந்துவிட்டது. ஊருக்குப் போவதற்கெல்லாம் சேலை உடுத்திக்கொண்டாள்.

எம்ஃபில் வகுப்பில் இவளையும் சேர்த்து மொத்தம் ஆறே பேர்தான். நான்கு பேர் பெண்கள் இரு ஆண்கள் மற்ற மூன்று பெண்களும் சென்னையை சேர்ந்த வேறு வேறு கல்லூரிகளிலிருந்து வந்தவர்கள். இவளைத்தவிர வேறுயாரும் விடுதியில் இல்லை.

முதுகலை படிக்கும் வரை சுடிதார் போட்டதாகவும், எம்ஃபில் வந்தால் சேலைக்கு மாறிவிட்டதாகவும் ஒரு மாதம் பழகிய பிறகு அவளிடம் சொன்னார்கள். மின்சார இரயிலில் போய்விட்டுவர சுடிதார்தான் தனக்கு வசதிப்படும் என்று சொல்லிவிட்டாள்.

தற்போது வேலைக்கு வந்ததும் முதல் நாளிலே சேலையும், கொண்டையும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய விசயங்களில் ஒன்றாகிவிட்டது.

- சுமதி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com