பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

September 15, 2010

535 கி.மீட்டர்களுக்கு அப்பால் - முத்துப்பாண்டி

அழகிய உன் கண்ணீரை
மிக பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்
என் மூச்சோடு மூச்சாக.
திறந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும்
மேலும் மேலும் அழகாகிறது அது.


அடர்வனத்தில் இறங்கும்
நாளின் முதல் வெளிச்சம் போல.
தூங்கும்போது முகத்தை நக்கும்
சிம்சனைப் போல.

சாம்பல் நிறக் காலைகளில்
மிதிக்க மனமில்லாமல்
தாண்டிப் போகிற
மார்கழிக் கோலங்களைப் போல.

விசாலம் காபி கடையில்
சுடுகிற குவளையை
கைக்குட்டை போர்த்திக் குடிக்கிற
 சிறுமியின் தூக்கத்தில்
வீங்கிய கண்களைப் போல.

கூடலில் நெரியும் உன்
விரல்களைப் போல
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொன்றாய் விரியும்.

உனக்கும் எனக்குமான தூரங்களில்
உருண்டுகொண்டே இருக்கின்றன
பிரிவுதாளா உன் அன்பின் கண்ணீரும்
அதைப் பற்றிய எனது
கோடான கோடி வார்த்தைகளும்.

பிரியாவிற்கு

ஒருபோதும் தவிர்க்க முடியாத
தனிமையின் அலறல்
வெவ்வேறு ரூபங்களில்
பிய்த்துத் தின்பதைப் பொறுக்காமல்

எவ்விடம் போட்டுடைப்பதென்று அறியாமல்
வெயில் கொட்டும் வெளியில்
நான் அலைந்து திரிகையில்
கோவில்பட்டியின்
தரை படர்ந்ததொரு பறவையின்
பறக்கும் நிழலின் உள்ளிருந்து
அழைத்திட்ட ஈரக்குரல்
நீயென்றானது.

- முத்துப்பாண்டி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com