பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

September 14, 2010

அற்றவைகளால் நிரம்பியவள்-21 -யமுனா ராகவன்

யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் "அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர் கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்

பகுதி 21

அஞ்சனாவின் தூய அந்திரேயர் பள்ளிக்கு போக பதினைந்து நிமிடங்கள் ஆகும். வீட்டை விட்டு நடக்க தொடங்கினால், பாரதி வீட்டை தாண்டி செல்லும்போது அவளையும் அழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே செல்வதில் நேரம் போவதே தெரியாது. பாரதி எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பாள், அஞ்சனா என்ன சொன்னாலும். அவர்கள் தெருவில் தொடங்கி, மெயின் ரோட்டிற்கு வர சிறிது தூரம் நடந்தால், ரெட்டை கண் வாராவதி தாண்டவேண்டும். ஒரு பக்கம் கார், ஆட்டோ, லாரி எல்லாம் போகவும், இன்னொரு பக்கம் சைக்கிள், மோட்டர் வண்டிகள், நடைபயணிகள் எல்லோரும் செல்வார்கள். எப்போதும் கூட்டமாக இருக்கும் பகுதி. எப்படியாவது இரண்டு மூன்று பேராவது இடிப்பார்கள், உராய்ந்து கொண்டே செல்வார்கள். யாராவது வண்டியில் செல்பவர்கள் உள்ளே தவறி விழுவார்கள், கெட்ட பேச்சுகளோடு சண்டை நடக்கும். சில வேலைகளில் வாத்துகள், மாடுகள் ஓட்டி செல்வார்கள். பெண்கள் சந்தைக்கு செல்ல பெரிய கூடைகளை தலையில் சுமந்து, வெற்றிலை குதப்பியபடி, அவ்வப்போது வாராவதியின் சுவற்றில் உமிழ்ந்தபடி செல்வார்கள்.

அஞ்சனாவிற்கு அந்த பாலத்தின் கீழே நடக்கும் இரண்டு நிமிடம் மிக பிடிக்கும். 1860களில் ஆங்கிலேயர் அரசால் கட்டப்பட்டதாம். அதற்கு முன் வண்டி கட்டி செல்லும் பாதையாக இருந்ததாம். சிறிய குன்றை குடைந்து செய்த இந்த பாலத்தை தாண்டி தான், நிறைய ஊர்களுக்கு செல்ல வேண்டியிருந்ததால் ஜனநடமாட்டத்திற்கு குறைவே இருக்காதாம். Underground bridge ஆக கட்டிய பின், கீழே வாகனங்களும், மேலே ரயிலும் செல்வது போல அமைத்தார்களாம். அதே போன்ற பாலத்தை அவள் பெரம்பூரில் பார்த்து இருக்கிறாள். ஆனால் அவள் ஊர் பாலம் போல அழகு இல்லை, நீளமும் இல்லை என்று பெருமிதம் அவளுக்கு.  

எத்தனை வெயில் அடித்தாலும், அந்த வாராவதியின் உள்ளே, தொடக்கத்தில் இருந்து முடிவு வரை கும்மிருட்டாக இருக்கும். அஞ்சனாவிற்கு ‘’ Light at the end of tunnel’’ என்ற வாசகத்திற்கு அர்த்தம் புரிந்ததே அந்த இருட்டு வெளிச்சத்தால் தான். மேலே இரண்டு இடங்களில் பெரிய சதுரமான இடம் ஒதுக்கி இருப்பார்கள். அதில் இருந்து வரும் தங்க துகள் போன்ற தூசு மிதக்கும் வெளிச்சம் அத்தனை அழகு. இரண்டு பக்க பாலத்தையும் இணைக்கும் படி இருபதடிக்கு ஒரு arch போல வழி இருக்கும். மொத்தம் 4 இணைப்பு இருக்கும். அஞ்சனாவும் பாரதியும் நடக்கும் பாதையில் கூட்டம் அதிகமாக இருந்தால், இந்த இணைப்பு வழி, வண்டி ஓடும் பாலத்திற்குள் நுழைந்து செல்வார்கள். வண்டி ஏதாவது வந்தால், அதே இணைப்பு வழி இந்த பக்கம் தாண்டி வருவார்கள். மேலே ரயில் ஓடும் போது, முழுப்பாலமும் கட கட என்று தாளத்தோடு ஆடும். அந்த சப்தம் கேட்கும் போதெல்லாம் குறுகுறுப்பும் பயமும் சேர்ந்து வரும். ஓடும் ரயில் திடீரென விழுந்தால் என்ன ஆகும் என்று பயமும், பாலத்தை ரயில் கடக்க, வேகமாக தானும் கடக்க, ரயில் தாண்டுவதற்குள் அவள் வெளியே வந்துவிட்டால், நேரத்தை ஜெயித்தாற்ப்போல சந்தோஷம் கொள்வாள்.

சிறுவயதில் நிறைய ஊர்களுக்கு விடுமுறையின் போது குடும்பமாக செல்வார்கள். அப்படி போகும் போதெல்லாம், கலர் பெயிண்ட், சுண்ணாம்பு அடிக்காத கோபுரங்களும், கோட்டைகளும் அவளை ஈர்த்தது. கருங்கல்லின் மீது கைவைத்து பார்க்கையிலேயே, எங்கிருந்து இந்த கல் வந்திருக்கும், யார் தூக்கி வந்திருப்பார்கள், எப்படி இங்கு வைத்திருப்பார்கள், யார் செதுக்கியிருப்பார்கள், எத்தனை நாள் ஆனதோ என்று மண்டைக்குள் மூவாயிரம் கேள்விகள் ஓடும். இவளுடைய வாராவதியும் அவளுக்கு, ஏதோ கோட்டையின் பக்கம் நடுவே நடப்பது போல யோசிக்க வைக்கும். சதுரமான பெரிய கருங்கற்களால் கட்டப்பட்ட அந்த இருட்டு வாராவதியின் நடக்கையில், சரித்திரத்தின் ஏதோ ஒரு பகுதியில் அவளும் இடம்பெற்றது போல தோன்றும். எப்போதும் அதன் உள்ளே சகதியாக தான் இருக்கும். கேட்டதற்கு பெரிய ஊற்று அதன் கீழே இருப்பதாகவும், பல நூறாண்டுகளுக்கு முன் அங்கு குளம் இருந்ததாகவும் சொல்வார்கள். அவளுக்கு அந்த ஈர சகதி வாசம் கூட பிடிக்கும்.

சமீபத்தில் அவள் ஊருக்கு சென்ற போது வாராவதியின் கருங்கற்களில் சிமெண்டும், தரை முழுக்க சிமெண்டும், இரண்டடிக்கு ஒரு ட்யூப் லைட்டும் போட்டு, இணைப்பை எல்லாம் செங்கல் வைத்து அடைத்து புதுமையாக்கியிருந்தார்கள். மனதிற்குள் இருந்த கோட்டை காணாமல் போனது மிக வருத்தமாக இருந்தது. தாண்டி நடக்கையில், இரண்டு பெண்கள், `` இந்த லைட்டை போட்டு, ரோட்டை போட்ட பிறகு தான் இதுக்குள்ள நடக்கற மாதிரி இருக்கு`` என்று சொன்ன படி சென்றார்கள். ஒரு பக்கம் tunnel வழி நான்கு சக்கர வாகனங்கள் போய் கொண்டு இருக்க, இன்னொரு பக்கம் tunnel தொடக்கத்திலும் முடிவிலும் இரண்டு மூன்று பெரிய இரும்பு தண்டவாளம் வைத்து இருந்தார்கள். மாடுகள் உள்ளே நுழையாதிருக்கவும், சமயங்களில் செல்லும் ஆட்டோக்களை நிறுத்தவும் என்று சொன்னார்கள். முன்பு போல் இரைச்சல் இல்லை, இருட்டு இல்லை, மாடுகள் இல்லை. இத்தனை நாள் இருந்த ஏதோ தொலைந்தது போலிருக்க, தரையின் அங்கங்கே இன்னமும் நீர் கசிந்து கொண்டே, தேங்கி இருந்தது. இவள் அதை பார்த்து கொண்டு நிற்பதை பார்த்து, தாண்டி சென்ற ஒரு தாத்தா, `` நிறைய சிமெண்ட், ஜல்லி, மணல் எல்லாம் போட்டு மூடி பார்த்தாங்கம்மா. என்ன செஞ்சாலும், தண்ணி ஊத்தை நிறுத்த முடியலை. எல்லாத்தையும் மாத்தினாலும், இது மட்டும் வருஷக்கணக்கா அப்படியே தான் இருக்கு, லேசா மழை பேஞ்சாலும், முட்டியளவு தண்ணி வந்துருது`` என்று சொல்லியபடி கடந்து சென்றார். மனம் பழைய சினேகிதியை பார்த்தது போல சந்தோஷம் தந்தது.

சேய்ஷல்சில் ஜெப்பின் குன்றும், இருட்டில் அங்கு கடல்வழி பயணப்பட்டதும், நிலவை மலைமுகட்டில் இருந்து பார்த்ததும், ரணமான மற்றும் ரணம் ஆறிய கதைகள் பகிர்ந்துக்கொண்டதும் அஞ்சனாவிற்கு அவளுடைய வாராவதியை நினைவுப்படுத்தியது. வாரங்கள் உருண்டோடியது, ஜெப் அவளை தொடர்பு கொள்ளவே இல்லை. டேமியன் வந்து அவளோடு தங்கப்போவதாய் சொன்னான், அவன் மகளோடு. கருப்பு வயரை தலையில், கூடையாக கவிழ்த்தது போல இருந்தது அவள் தலைமுடி. பெயர் தாஷிகி (Dashiki). டேமியனின் இளவரசி, வயது 7. துறுதுறுவென பழுப்பு கருவிழிளோடு, அஞ்சனா என்ன செய்தாலும், அவளை பின் தொடர்ந்தப்படியே இருந்தாள். டேமியன் அவளை ``சிக்கி`` (Chiki) என்று அழைத்தான். வார இறுதியில் வந்ததால், நல்ல உணவு, காரில் ஊரெல்லாம் சுற்றி, கடலில் குளித்து இரண்டு நாட்களை கழிக்க முடிவுசெய்திருந்தார்கள். டேமியன் காதலி வேலை விஷயமாக மொரிஷியஸ் சென்றிருந்ததால், அவனோடு வரவில்லை.

வீட்டில் இருக்கும் நேரம், மூவரும் சீட்டுக்கட்டை வைத்து விளையாட, தாஷிகி அவள் அப்பாவிடம் கெஞ்சி கூத்தாடி, பெரிய சீப்பும் ரப்பர்பேண்டுகளும் எடுத்து வந்தாள். தண்ணீரில் நனைத்தாலும், நனையவே இல்லை தாஷிகியின் முடி. Shampoo போட்டு கழுவ முயற்சி செய்து தோற்று போனாள் அஞ்சனா. டேமியன் வந்து துணி துவைப்பது போல பாதி பாட்டில் ஷாம்பூ ஊற்றி கழுவினான். அஞ்சனாவிற்கு வாரவும் வரவில்லை. எத்தனை அழுத்தி பின்னலிட்டாலும், spring போல நழுவியது. பக்கத்தில் இருந்த அழகு நிலையத்திற்கு கூட்டி போக, ஒரு டப்பா நிறைய styling gel எடுத்து, நூறு சிறு பின்னலாக மண்டையோடு ஒட்டியபடி போட்டார்கள். வீட்டிற்கு வந்ததும், தாஷிகி சீப்பை எடுத்து அஞ்சனா தலைமுடியை வாரியபடியே இருந்தாள். டேமியன் சிரித்தான், `` சிக்கி! அஞ்சனா முடி ஒன்றும் Barbie doll முடி இல்லை. விடு அவளை ! என்று சொல்ல மனதே இல்லாது விட்டாள்.

ஞாயிறு காலையிலே கிளம்பி சென்றார்கள் ஆன்ஸ் பொடேனிற்கு. இந்த இடத்தின் கடல் வெகு அமைதியாக இருக்கும், கடற்கரையில் இருந்து 200 அடி வரை, வெறும் இடுப்பளவு தண்ணீர் தான். லேசான வெயிலில், மிதமாக இருந்தது கடல் தண்ணீர். நீலத்தில் கருப்பு கோடு போட்ட மீன்கள் நிறைய சுற்றி சுற்றி வந்தது. டேமியன், தாஷிகிக்கு நீந்த சொல்லிக்கொடுத்தான். அவள் இப்போது மிதக்க கற்றுக்கொள்ள, அஞ்சனாவும் தாஷிகியும் கையை பிடித்துக்கொண்டு மிதந்தார்கள். டேமியன் நன்கு நீச்சல் தெரிந்தவன், ஆதலால், சுற்றி வந்து இவர்களை நன்கு பயமுறுத்தினான். கொஞ்சம் நேரம் நீந்தியதும், களைத்து பசிக்க தொடங்கியது எல்லோருக்கும். பக்கத்திலேயே இருந்த உணவு விடுதியில் ஆளுக்கு ஒரு பிட்சா வாங்கி சாப்பிட்டார்கள். அங்கு இருந்த பலர் அஞ்சனாவை அடையாளம் கண்டு, நீச்சலுடை, நீளஸ்கிர்ட்டில் வித்தியாசமாக இருப்பதாக சொல்லி சென்றார்கள். ஆண்களின் பார்வை சிறிது ஆச்சரியத்தோடும், பெண்களின் பார்வை கேள்வியோடும் தெரிந்தது அவளுக்கு. இதை பற்றியெல்லாம் யோசித்து, அந்த அழகான நாளை கெடுத்துக்கொள்ள பிடித்தமில்லை.

இவர்கள் இருந்த கடற்கரையை ஒட்டி நிறைய குன்றுகள் இருந்தது. பல நூற்றாண்டுகளாக, புதையல் தேடி அலைபவர்கள் அந்த குன்றுகளை ஒட்டி தேடுவதாக டேமியன் சொன்னான். சேய்ஷல்ஸில் கடற்கரைகளை ஒட்டி, நிறைய தென்னமரங்களோடு, முந்திரி மரங்களும் பார்க்கலாம். தென்னை மரங்கள் கடலோரம் வளர்வதற்கான காரணம் படித்திருக்கிறாள். ஆனால் தோப்பாக இருக்கும் முந்திரி மரங்கள், எப்படி அங்கு வந்ததோ, யாருக்கும் தெரியாது அதன் பூர்வீகம். குடை போல இருந்த தரையை தொடும் கிளைகளோடு இருந்த முந்திரி மரத்தில், அஞ்சனா சாய்ந்து இருக்க, அவளை ஒட்டி Beach டவலில் டேமியனின் கையில் தலைவைத்து, அவன் மேல் கால் போட்டு படுத்திருக்க, டேமியன் சேய்ஷல்ஸின் மர்மங்களை பற்றி, சுவாரசியமாக சொல்ல தொடங்கினான். இந்தியாவின் வரலாறு தொன்று தொட்டு வருவதற்கு சாட்சியாக பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த தீவுகள் 16 நூற்றாண்டு வரை யாரும் கண்டுப்பிடிக்கவில்லை அல்லது கண்டுப்பிடித்ததை யாரும் பதிவு செய்யவில்லை என்றான் டேமியன்.

பிறகு அவன் சொல்ல சொல்ல, அஞ்சனாவிற்கு கற்பனையில் படமாக ஓடத்தொடங்கியது காட்சிகள். முதன்முதலில் இந்த தீவு இருப்பதை தூரத்தில் இருந்து பார்த்தது, 15 நூற்றாண்டில் இந்தியாவிற்கு கடல்வழி வந்த வாஸ்கோடகாமா ( Vasco Da Gama ), ஆனால் அருகில் சென்று பார்க்கவில்லை. அதன்பின் 16 நூற்றாண்டில், இந்தியாவிற்கு வணிக நிமித்தம் வந்த ஆங்கிலேயர்களின் ``கிழக்கிந்திய கம்பெனி`` (British East India Company) கப்பல்கள், கடலில் வரும் வழியில், மனித புழக்கம் இல்லாத இந்த தீவுகளில் நிறுத்தி, தண்ணீர், மீன், விலங்குகள் எடுத்துக்கொண்டு, மீண்டும் இந்தியாவை நோக்கி சென்றார்களாம். ஆனால், இந்த தீவு ஒன்றுக்கும் உதவாது என்று எண்ணி, வரைபடத்தில் குறித்துக்கொண்டு சென்றுவிட்டார்களாம். ஆனால், இந்த தீவு பிரபலமாக ஒரே காரணம், கடல் கொள்ளையர்கள், அதிலும் மிக முக்கியமாக ஒரே ஒருவனால்.

அஞ்சனாவிற்கு ‘’ Pirates of the Caribbean ‘’ படம் பார்ப்பது போன்று தோன்றியது, இந்த கதையை கேட்க கேட்க. 16களின் இறுதியில், மிகவும் வசதியும் அதிகாரமும் நிறைந்த ப்ரெஞ்ச் குடும்பத்தில் பிறந்து, அருமையான கல்வி பயின்று, கப்பல் படைத்தளபதியாக, வெகு சிறுவயதில் பொறுப்பேற்றவன், அவன். பெயர் ஓலிவர் லேவாசே ( Oliver Levasseur ). ஸ்பெயினோடு நடந்த யுத்தத்தில் பங்குபெற்று, மாமன்னர் 16ம் லூயிஸின் பெருமதிப்பை பெற்றவனாம். தைரியசாலி, பலசாலி, சண்டையில் பாய்ந்து சண்டை இடும் அவன் தீரத்தை கண்டு, லா போச் ( La buse ), அதாவது பாய்ந்து கவ்வும் கழுகு, பருந்து போல சண்டையிடுபவன் என்று பெயரிட்டு கூப்பிட்டார்களாம். சண்டையில் அவன் கண் பழுதாகி, கண்பார்வை இழக்க, அந்த தழும்பை மறைக்க, கருப்பு துணியால் ஆன eye patch அணிந்து வந்தானாம். அவன் இந்துமகா சமுத்திரத்தில் கொடிக்கட்டி பறக்கும் கடல் கொள்ளையனாக மாறி, அத்தனை கொள்ளை நிகழ்த்தியிருக்கிறான். அவனுடைய ராஜ்ஜியமாக மாறிய தீவு தான் சேய்ஷல்ஸ் என்றும் அவனுடைய புதையல் முழுக்க, வெகு திறமையாக மறைத்து வைத்திருக்கிறான் என்றும் சொன்னான் டேமியன்.

இப்படி இருக்க, ப்ரெஞ்ச் அரசு, சேய்ஷல்ஸை கைப்பற்ற, அவனையும் பிடிக்க, 1730ம் ஆண்டு, ஜூலை ஏழாம் தேதி, 5 மணியளவில் அவனை தூக்கிலேற்றியதாம். சாக போகும் முன், அவன் முன் இறப்பை பார்க்க நின்ற கூட்டத்தை பார்த்து, `` Find my treasure, ye who may understand it ‘’ என்று சொல்லிக்கொண்டே, கழுத்தில் இருந்த தாயத்தை, பிய்த்து கூட்டத்தில் எறிந்துவிட்டு, இறந்து போனான். அந்த தாயத்திற்குள், சங்கேத பாஷையால் எழுதப்பட்ட 12 வரிகள் அடங்கிய சுருள் இருந்ததாக சொல்கிறார்கள். புதையல் கடலுக்கு அடியில் எங்கேயோ புதைந்து இருப்பது உறுதி செய்வது போல, சில கொள்ளையர்களின் சவப்பெட்டி, ஒரு கைப்பிடி தங்க காசும், சில தங்க நகைகளும் கிடைத்ததில், தேடுதல் வேட்டை காலம் காலமாக போய் கொண்டிருப்பதாக சொல்லி முடித்தான் டேமியன்.

எத்தனை அறிவாளியாக இருந்தால், இந்த காலக்கட்டத்தில், இத்தனை தொழில் முன்னேற்றம் அடைந்த பின்னும், அதை கண்டுப்பிடிக்கமுடியா வண்ணம் செய்திருப்பான் என்று யோசித்து வியந்தாள் அஞ்சனா. அந்த கடல் கொள்ளையன் மேல் ஒரு அலாதி பிரியமே ஏற்பட்டு போனது அவளுக்கு. அடக்கமுடியாது கேட்டே விட்டாள், இன்றைய மதிப்பில் எத்தனை இருக்கும் புதையல் என்று கேட்டதும், டேமியன் எழுந்து, கையில் இருந்த குச்சியால், மண்ணில் zero என்று போட தொடங்கி, 200,000,000,000 பவுண்ட்கள் என்று முடித்தான். பிளந்த வாயோடு பார்த்தவளுக்கு, சிறிது நேரம் ஆனது சாதாரணமாக யோசிக்க.

இப்படியே பேசிக்கொண்டிருந்து திரும்ப கடலுக்குள் குளிக்கப்போனார்கள். ஒருவர் மேல் ஒருவர் தண்ணீர் தெளித்து அஞ்சனாவும் தாஷிகியும் விளையாடிக்கொண்டிருக்க, கண்ணுக்குள் கடல் நீர் பட்டு, எறிந்தது. வெகு அருகில், படகொன்று செல்லும் சப்தம் கேட்டு, எல்லோரும் திரும்பி பார்த்தார்கள். படகின் முனையில், மீண்டும் உணர்வுகள் மறுத்த முகத்தோடு ஜெப் நின்றிருந்தான். இவளை பார்த்தானா என்று தெரியவில்லை. நொடியில் படகு குன்றுகள் பக்கம் சென்று மறைந்தது. டேமியன் வெறுப்போடு இவர்கள் அருகில் நீந்தி வந்து, `` இனி இங்கு இருப்பது சரியில்லை! போகலாம்`` என்றான். அவன் சொல்படியே, மூவரும் கடலுக்குள் இருந்து வந்து, ஈரம் போக துடைத்து, உடுப்பு மேலேயே போட்டு கிளம்பினார்கள்.

காரின் அருகே செல்லுகையில், வெகு அருகில், படகு போன்ற இன்னொரு சிகப்பு BMW கார் வந்து நின்றது. அதனுள் இருந்து அதிர்ந்த பாட்டு சப்தத்தையும், காரின் அழகையும் பார்த்தப்படி, தாண்டி நடக்க முற்பட, ஜெப் கண்ணாடி இறக்கி, `` Hi அஞ்சனா! `` என்றான். அஞ்சனாவும் திரும்ப சிரித்துவிட்டு அவர்கள் வந்த காரை நோக்கி நடந்தாள். ஜெப் மேலும், `` அஞ்சனா! உன்னை பார்க்க மூன்று மணி நேரத்தில் வரவா`` என்று கேட்க, அஞ்சனா இன்று பார்க்க இயலாது இன்னொரு நாள் பார்க்கலாம் என்று கூற, அவன் சரியென்று தலையாட்டி, போனில் கூப்பிடுவதாய் சொல்லிவிட்டு, வண்டியை ஒட்டிவிட்டு சென்றான். டேமியனின் முகம் கேள்வியும், கோபமும் தாங்கி இருந்தது. வீடு வந்து சேரும் வரை ஒன்றுமே பேசவில்லை. சாயந்திரம் 6 மணிக்கு கிராண்ட் ஆன்ஸில் இருந்து செல்லும் கடைசி விமானத்தில் மாஹே திரும்ப போவதற்கு ஏற்கனவே டிக்கெட் வாங்கியிருந்தான் டேமியன். அதற்கு இன்னும் சில மணி நேரமே இருக்க, வீட்டிற்கு வந்து எல்லோரும் குளித்து உடைமாற்றி அமர, அஞ்சனா டீ போட்டு எடுத்துவந்தாள். தாஷிகி பயங்கர களைப்பாக இருந்ததால், நாற்காலியில் அமர்ந்து கார்ட்டூன் பார்த்தவள், அப்படியே சரிந்து உறங்க தொடங்கியிருந்தாள்.

டேமியன், `` அஞ்சனா! நீ விவரம் தெரிந்தவள். உனக்கு நான் புத்திமதி சொல்ல தேவையில்லை. ஆனால் உனக்கு இன்னமும் இங்கு உள்ள மக்களின் மனோபாவம் தெரியவில்லை. You are quite vulnerable. எல்லோரும் நல்லவர்கள் என்று நம்பாதே. அதிலும் ஜெப் எப்படி பட்டவன் என்று எனக்கு நன்கு தெரியும். உனக்கு தெரியாது போனாலும், உன்னை சுற்றி இருப்பவர்கள், உன் எல்லா அசைவுகளையும் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இது சிறு தீவு கூட்டம். மக்களுக்கு பொழுதுபோக வேறு ஒன்றுமே இல்லை. அவர்களால் முடிந்தது கூடி அமர்ந்து, வம்பு பேசுவது தான். உன் செயல்கள் எல்லாம், மாஹேவில் எனக்கு சொல்லக்கூடிய அளவிற்கு ஆட்கள் நோட்டமிடுகிறார்கள். உன் ஒவ்வொரு செயலையும் நீ பார்த்து, யோசித்து செய்யவேண்டும். You are one of the most favourite women to me. உனக்கு என்னால் முடிந்த எந்த உதவியானாலும் செய்ய காத்திருப்பேன். And I have a huge soft corner for you. உன்னை பற்றி பேசினால், ஷீபாவிற்கு அத்தனை insecurity. இருந்தாலும், இதை எல்லாம் பொருட்படுத்தாது, உன்னோடு நேரம் கடத்துகிறேன். வழிமாறி செல்ல, இங்கு நிறைய பாதைகள் இருக்கும். நீ பத்திரமாக இருக்கவேண்டும்`` என்று முடித்தான்.

அஞ்சனாவிற்கு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை. ம்ம் என்ற தலையசைப்போடு அவன் சொன்னதை ஒப்புக்கொண்டு சிரித்தாள். தாஷிகியை தோளில் போட்டுக்கொண்டு டேமியன் நடக்க, அவர்களின் பையை எடுத்துக்கொண்டு, வீட்டை பூட்டிவிட்டு, காரில் ஏறி, விமான நிலையத்திற்கு வந்தார்கள். சுமார் 15 நிமிட பயணத்தில், சகஜ நிலமைக்கு திரும்பி, பேசி சிரித்தப்படி, விமானத்திற்கு காத்திருக்க, அவளை சுற்றி இருந்த பலரை பார்த்தாள். பெரும்பாலும் டூரிஸ்டுகளால் நிரம்பியிருந்தது அந்த இடம். விமானம் வரப்போவதாய் அறிவித்தப்பின், தாஷிகியை எழுப்பாமல் நெற்றியில் முத்தமிட்டு, டேமியனை அணைத்து விடைக்கொடுத்தாள் அஞ்சனா. Check in queueவில் அவர்கள் நிற்க, அஞ்சனா சட்டென வெறுமையானதை உணர்ந்தப்படி நின்றாள்.

அவளின் அருகே நின்றிருந்த ஜோடியை பார்க்காது இருக்கமுடியவில்லை. வெள்ளைக்கார பெண்ணொருத்தியும், சேய்ஷல்ஸ் ஆணும் கண்ணில் நீர்தளும்ப நின்றிருந்தார்கள். அவன், `` why don’t you stay here? `` என்று கேட்க, அவள், `` You know my situation. I have to leave ‘’ என்றாள். அவள் போகும் முன் அவன் அவளை இறுக்கமாக அணைத்து, சீக்கிரம் வருவாயல்லவா என்று கேட்க, அவள் கலங்கிய முகத்தோடு பதில் சொல்லாது, அவனை திரும்ப திரும்ப பார்த்தப்படி சென்றாள். அஞ்சனாவின் மனதை வெகுவாக பிசைந்தெடுத்தது அந்த காட்சி. மனது சட்டென கேரளாவை நினைக்க வைத்தது.
      
- யமுனா ராகவன்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com