பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

September 16, 2010

அஞ்சல் தலை - 9 -வண்ணதாசன் சாருக்கு - சாம்ராஜ்

அன்பிற்கினிய வண்ணதாசன் சாருக்கு,
மழை பெய்யப் போகிறது, மாணவர்கள் பிராக்டிக்கல்லில் மைசூர் பாகு செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில்.
particion work ற்காக மூன்று நாட்களாக இடைவிடாது காதுகளை அறுத்துக் கொண்டிருக்கும் ரம்பங்களூக்கு மத்தியில்.
நிஷாவுக்கான நேர்முகத் தேர்விற்கு  நாளை நாகர்கோவில் போகிறோமா இல்லையா என்ற குழப்பத்தின் ஊடாக.
ஏப்ரல் 24 யாருடைய பிறந்த தினம் என குடைந்து கொண்டிருக்கும் கேள்வியின் ஊடாக..


காலை HBO தொலைக்காட்சியில் பார்த்த ஆங்கிலக் கதாநாயகி யாரின் சாயலென   கேள்வியோடு.
இதனூடாக என்ன எழுதப் போகிறேன் உங்களுக்கு……


ஒவ்வொரு நாள் காலையும் கலவரமாய்த்தான் விடிகிறது. விடாது பணத்திற்காக துரத்தல்.. யார் யாரோ தங்கள் குறிப்பேடுகளில் பணம் கேட்பதற்காக எனது என்னை குறிக்கிறார்கள்.
ஒன்றுமேயில்லாமல்……… ஒன்றுமேயில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது வாழ்வு.


நான் எங்கோ இன்றைக்கு விழிக்க வேண்டியவன். விடாது இங்கேயே எழுந்து கொண்டிருக்கிறேன். நான் போக வேண்டிய பயணங்களும் காண வேண்டிய மனிதர்களும் ஏராளம் உண்டு.  இங்கேயே நின்று விட்டது என் வாழ்வு..


ஒரு பெண்ணை மாத்திரமே நேசிக்க வேண்டுமென்பது கூட சிலுவைதான். . துணைவியார்களின் டீ வடிகட்டி தேனீரை மட்டுமா வடிகட்டுகிறது.
நம்மால் நேசிக்க முடியாமல் போனவர்களும், நம்மை நேசிக்க முடியாமல் போனவர்களும் நமது அடுத்த தெருக்களில் குடி வருகின்றார்கள்.
குடை பிடித்துக் கொண்டு நீ
அருவி முக்காட்டுக்குள்
என் கண்ணீர்……
அறிவுமதிக்கும் மட்டுமா அது.
பவுலினின் ஞாயிற்றுக் கிழமை பிரார்த்தனைகள் இப்பொழுது என்னவாக இருக்கும்.?


சந்தியாவின் மார்க்சிய புத்தகங்கள் இப்பொழுது என்ன சொல்லும்?.
திருமணம் ஒரு வகையில் தேனருவியை ஒன்றரை லிட்டர் பிஸ்லெரி பாட்டிலாக மாற்றுகிறது.


நான் காத்திருக்க வேண்டிய மருத்துவமனை வராந்தாக்களும், கொடுக்க வேண்டிய புத்தகங்களும் எற வேண்டிய மலைகளூம். குளிக்க வேண்டிய அருவிகளூம் மார்போடு அணைத்துக் கொள்ளும் நண்பர்களோடு ஆன மாலைகளும் என எல்லாம் என் வீட்டு சிண்டக்ஸ் குழாய் வழி எப்படி வரும். என்ன செய்வது கண்காட்சி நேரம் காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை என்கிறது காலத்தின் வெட்டுக்கிளி.
நிராசைகளால் நிரம்பியதுதானா நம் வாழ்வு.


ஒவ்வொரு முறையும் எனக்கு இரயிலடி தாங்க முடியாத துக்கத்தைதான் தருகிறது. ஆளில்லாமல் ஏழாவது பிளாட்பாரத்திலிருந்து கிளம்பும். மதுரை-தென்காசி பாசஞ்சர் அதை விட துக்கம். நாலு மணிக்கு பாலக்காட்டின் ரயிலடியில் இறங்கி ஆட்டோவில் பாலக்காட்டின் குறுக்கும் நெடுக்குமான, இருளடைந்த வசீகரமான சாலைகளில் போகும் பொழுது ஏற்படும் வலி சொல்லி மாளாது.  


மொட்டை மாடியிலிருந்து தூரத்தே தெரியும் மலை விளிம்பு என்னை அழ வைக்கிறது. கோழிக்கோட்டின் புராதன தெருக்கள் என்னை நிஷாவின் கைகளை இறுகப் பற்றிக்கொள்ள செல்கிறது


கோழிக்கோடு கிழச்சேலாரி இரவுகள் மிக அமைதியானவை. அம்மாவும், நிஷாந்தும் பின்னே நிஷாவும்.  கட்டன்சாயாவும் அயிலை மினுமாக …….. சமயத்தில் ஒயினுடன் கூடிய இரவுகள் மல்லாந்து நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தைப் பார்க்கச் சொல்பவை.


எஸ் எஸ் தெருவிலிருந்தோ, மிட்டாய்காரத் தெருவிலிருந்தோ, எம்.ஜி சாலையிலிருந்தோ கைநிறைய பலசரக்குகளுடன். பழைய புத்தகங்களோடு அம்மா நான் நிஷா என நடக்கின்ற இரவு பொழுதுகள் தோழமை மிக்கவை.
சென்னை திருவல்லிக்கேணியில் திதாரப்பா தெருவில் ஆசியன் தங்கும் விடுதியில்   தங்கி நண்பர்களொடு சேர்ந்து மதுவருந்தி, எல்லோர் தட்டிலிருந்தும் எல்லோரும் எடுத்துச் சாப்பிடுகிற இரவுகள் அற்புதமானவை.


எல்லா இரவுகளையும் எழுதச் சொல்கிற இந்த இரவு எப்படியானது. நான் அறியேன் சார்.
 பிரியமுடன்
சாம்ராஜ்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com