பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

September 13, 2010

கோடிட்ட இடங்களை நிரப்புக -9 - சுமதி


சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச்சார்ந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும்,  முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக்கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர். தற்போது கோவையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.  

இவருடைய கவிதைகள், கட்டுரைகள், காலச்சுவடு,கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன்,வார்த்தை, வடக்கு வாசல், அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில்பிரசுரமாகி இருக்கின்றன. இவருடையக் கவிதைகள் காட்சியில் சுமதி கவிதைகள் என்றுதொடராய் இடம் பெற்றுள்ளன. அதை தொடர்ந்து "கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற தலைப்பில் காட்சியில் தொடர்கதை வெளிவருகிறது.

பகுதி 9

அவசரமான சந்தோசமான மாநகர இயக்கத்திற்கு நடுவே, அமைதியான, ஆழமான துயரம் மிகுந்த உலகம் ஒன்றும் இயங்கிக் கொண்டிருந்தது. அது பிச்சையெடுப்பவர்களாலும், மனநோயாளிகளாலும் ஆனது.

பிச்சையெடுக்கின்றவர்களும், மனநோயாளிகளும், முடமானவர்களும் அதிகமாகவே தென்படுகிறார்கள், சென்னையில். சிவகாசியில், ஸ்ரீவில்லிபுத்தூரில், மதுரையில் எல்லாம் கோவில்களிலும், திருமணம் நடந்து முடிந்த மண்டபங்களிலும் வைத்துதான் பாவப்பட்ட அம்மனிதர்களைப் பார்த்திருக்கிறாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சிவகாசி சிவன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் நுழைவாயில்களில் வரிசையாக உட்கார்ந்திருப்பார்கள். பேருந்து நிலையங்களில்  எப்பொழுதாவது கைக்குழந்தையுடன் பிச்சை வாங்க வரும் பெண்களைப் பார்த்திருக்கிறாள் அவ்வளவுதான்.

சென்னையில் படிக்கும்போதும், வேலைக்குப் போகும்போதும் சகப்பயணிகளைப் பேருந்திலோ, மின்சார இரயிலே தினந்தோறும் சந்திப்பது போலவே, அதில்வரும் அல்லது இறங்கி நடக்கும் போது எதிரேவரும் மன நோயாளிகளையும், பிச்சைக்காரர்களையும் பார்க்க முடிந்தது சாந்தியால்.

நடந்து போகும்போது அதுவும் மனநோயாளிகள் எதிரே வந்தால் தலை குனிந்தபடி நடப்பாள். மீண்டும் ஒருமுறை அவர்களை உற்றுப் பார்க்கும் தைரியமற்றவளாய் இருந்தாள். இரயிலில் பார்க்க நேர்ந்தால் கண்களை மூடிக்கொள்வாள்.

மனநோயாளிகள் யாவரும் புரிந்து கொள்ள முடியாத மாபெரும் துயரத்தின் இழப்பின், ஏமாற்றத்தின் குறியீடுகளாய் அவள் கண்ணிற்குத் தெரிந்தார்கள். தெருவில் நடமாடும் மற்ற நாலுகால் ஜீவராசிகளுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்காது. கண்களால் ஒதுக்கிவிட்டு நடக்கும் சக மனிதர்களைப் பார்க்கும்போது வாழ்வின் உலர் தன்மை தெரிந்தது. தானும் அதில் ஒருத்தியாய் ஒதுங்கிப் போகத்தான் முடிந்தது.

அப்பொழுது(சென்னைக்கு வந்த புதிதில்) அவளுக்கு, ஜெயகாந்தனின் “அவர்கள் வெளியே இருக்கிறார்கள்” என்ற புத்தகம் படிக்கக் கிடைத்தது.

தனிமனிதன், அரசாங்கம், தொண்டு நிறுவனம் யாருடைய கண்ணிற்கும் இவர்களது கிழிந்த வாழ்வும், உடையும் உறுத்தாமலா இருந்திருக்கும். இரண்டரை மணிநேரம் திரைப்படம் பார்த்துவிட்டு வருபவர்கள், வீட்டையே கண்ணீர் கடலில் மூழ்கும்படி உட்கார்ந்து உட்கார்ந்து தொலைக்காட்சி தொடர்கதைகளைப் பார்ப்பவர்கள் அதைப்பற்றி மற்றவர்களுடன் சிலாகித்தோ துயரப்பட்டோ பேசுகிறார்கள். நிழல்களின் பிம்பங்களின் துயரங்களைப் பங்கிடுபவர்கள் இவர்கள் யாரும் யோசிப்பதில்லை. சதையும் எலும்புமாய் மனித வடிவத்தில் இருந்து கொண்டு உணவிற்காக நாய்களுடனும், காக்கைகளுடனும் போட்டியிடும், இயலாமையில் நிற்பவர்களைப் பற்றி. ஏன் யோசிப்பதில்லை? மற்றவர்களிடம் அதைப்பற்றி பேசத் தோன்றுவதில்லை?

தான் பார்க்கின்ற எல்லா நிகழ்வுக்கும் ஏன் என்ற கேள்வி மனதிற்குள்ளாக கேட்கத் தொடங்கிய நாளிலிருந்து தனது அமைதியும் சந்தோசமும் வனவாசம் போய்விட்டதாக நினைத்தாள்.

சிக்குப்பிடித்த, எண்ணெய் துளியுமில்லாத தலையைச் சொரிந்து கொண்டிருந்தது ஒருகை. மற்றொரு கை கண் தெரியாத தந்தையின் ஆள் காட்டிவிரலைப் பிடித்துக்கொண்டிருந்தது. தலையிலிருந்த கை நடு நடுவே பயணிகள் முன்னால் நீண்டது. “எங்களுக்கும் காலம் வரும்” என்ற பழைய பாடலை பெரியவர் பாட, என்னவென்று தெரியாமல் கூட பாடிக்கொண்டு பிச்சையெடுத்த நான்கு வயது மதிக்கத் தகுந்த குழந்தையைப் போன வருடம் கல்லூரிமுடிந்து திரும்பும்போது மின்சார இரயிலில் வைத்துப் பார்த்தாள். 

பின்னர்வந்த நாட்களில் மின்சார இரயிலில் பயணிக்கும்போது, வித விதமான குரலை அவள் கேட்க நேரிடும். முக்கால்வாசி பழக்கப்பட்ட குரலாகத்தான் இருக்கும். “அம்மா, அக்கா காசு கொடுங்க சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு” என்றக் குரல்கள் தினமும் அவளுடன் பயணப்பட்டுக் கொண்டே இருந்தது இரயில் சத்ததைப் போலவே.

சிறு இசைக்கருவியொன்றைக் கையில் வைத்துக்கொண்டு, அந்த நாளில் எந்தப் பாடல் பிரசித்திப் பெற்றதோ அந்தப் பாடலைப் பாடியபடி, வெத்தலைவாயுடன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு வரும் வேறு மாநிலத்தைச் சார்ந்த நடுத்தர வயதுக்காரியையும் தெரிந்து வைத்திருந்தாள். இரண்டு வருடங்களில் இத்தகைய வலிகளெல்லாம் பழகிப் போய்விட்டன.
                             
மணி அடித்ததும் வகுப்பைவிட்டு வெளியேறிய சாந்தி தமிழ் துறைக்குள் நுழைய நுழைய, பாலின் பின்னாடி வந்து கொண்டிருந்தார். வரும்போதே

“பெல் அடிக்கிறதுக்கு முன்னாடியே விட்டுட்டீங்களா?” என்றார். 

“இல்லையே பெல் அடிச்சப் பிறகுதான் விட்டேன்” என்ற அவளது பதிலைச் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல்.

“சீக்கிரமா விட்டீங்கன்னா இவளுக(ஸ்டுடண்ட்ஸ்) அங்க இங்க ஆடிட்டு இருப்பாளுங்க. பிரின்சிபல் பார்த்தா உங்களைத்தான் திட்டுவாங்க. அதான் சொன்னேன்”  என்று விளக்கமளித்தார்.
                             
அந்த அறையில் மூலையில் அழுக்குடன் உறைவைத்து மூடப்பட்ட தட்டச்சு இயந்திரம் ஒன்று இருந்தது. அதற்கு அருகில்தான் சாந்திக்காக மேஜை ஒதுக்கியிருந்தார்கள். பையை அதில்தான் வைத்திருந்தாள். உணவு இடைவேளையின்போது மூடப்படாத துணிப்பையிலிருந்து உணவடுக்கை வெளியே எடுத்தாள். துணிப்பையின் உள்ளிருந்து ஏகப்பட்ட கொசுக்கள் பறந்து வந்தன. உபயம் பக்கத்தில் மதில் சுவரைத் தாண்டியிருந்தது கூவம். சிற்றுண்டி சாலையில் அவளுக்காக மற்ற மூன்று பேரும் காத்திருந்தார்கள். அவர்கலுடன் போய் சேர்ந்துகொண்டாள்.
சாந்தி உணவடுக்கைத் திறந்தபோது பெரிய பெரிய பருக்கைகளுடன் புளிப்பில்லாத புளிசாதமும், பூண்டு தட்டி போட்ட பீன்ஸ் பொறியலும் இருந்தது. அவளுக்கு அது இரண்டு வருடமாக பழக்கமாகிப் போன விடுதி உணவுதான். 

சாந்தி தங்கியிருக்கும் பல்லாவர விடுதியில் சாப்பாடு ஒன்றும் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. காலை நேரத்திற்குத் தேவையான உணவு வெளியிலிருந்து ரோட்டோர கடைகளிலிருந்து வரும். பூரி, இடியாப்பம், இட்லியாகத்தான் காலை நேரங்களில் இருக்கும் மதியம் வர முடியாதவர்களுக்கு உணவடுக்குகளில் புளிசாதம், எலுமிச்சை சாதம் கட்டி கொடுத்துவிடுவார்கள். கன்னிகாஸ்திரிகள் சுடும் கணத்த தோசைகளும், கத்திரிக்காய் கிச்சடியும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு இரவு உணவாக அமையும்.

விடுதியின் பின்பக்கம் காலியான இடம் இருந்தது. சிலசமயம் லம்பாடிகள் என்று அழைக்கப்பட்ட ஆந்திராவின் நாடோடிகள் குடிசையிட்ட, குடும்பம் குடும்பமாக ஏழெட்டுக் குடும்பங்கள் இருந்தன. சாந்தி ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து ஏதாவது படித்துக் கொண்டிருக்கும் மாலை வேளைகளில், அவர்கள் சமைக்கும் அசைவ உணவின் வாசம் அறைக்குள் பரவி வந்து வீட்டு ஞாபகங்களைத் தூண்டிவிட்டதுண்டு. அப்பொழுதெல்லாம், அக்கம்மா அத்தை வைக்கும் அயிரை மீன் குழம்பு, முட்டைக் குழம்பு, நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு, மூக்கம்மாப் பாட்டியின் கைம்மணத்தில் உருவாகும் நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கறி வறுவல், பானுச்சித்தி கடும் மெல்லிய வட்டமான ஆம்லெட்டுகள், அம்மா சமைக்கும் மொகல் பிரியாணி, கைம்மா வடைகள் ஞாபகத்திற்கு வந்து எச்சில் சுரப்பிகளைத் திறந்து வைக்கும்.
                                
பாட்டி வாரத்திற்கு ஒருமுறை எள்ளையோ அரிசிமாவையோ வெல்லத்துடன் சேர்த்து  உரலில் இடித்து உருண்டை பிடித்து வைப்பாள். பித்தளை சருவு சட்டியில எப்பொழுதும மாவு உருண்டைகள் இருந்தபடியே இருக்கும். உருண்டைகள் ஒரே அளவிலும் சிதையாமலும் இருப்பதற்குப் பாட்டிக்கு ஏதோ ஒரு மந்திரசக்தி உதவியிருக்கவேண்டும் என்று சாந்தி நினைத்திருக்கிறாள்.

உரலில் போட்டு வறுத்த மாவை இடிக்கும்போது சாந்தியும் அவளுடைய சித்திப்பையன் ராஜசேகரையும் ருசிபார்க்க சொல்லிவிட்டுத்தான் பாட்டி உருண்டை பிடிப்பாள்.

மாசிமாச சிவராத்திரி விழாவிற்குப் பயிறும் பச்சரிசி மாவும் தாராளமாய் வீட்டில் புழங்கும். சாந்தியின் தாத்தா எந்தப் பண்டிகையையும் கொண்டாடமாட்டார். ஆரம்ப காலத்தில் தி.க. கட்சியின் உறுப்பினர். நான்காம் வகுப்பைக்கூட தாண்டிராத தாத்தாவுக்கு நல்ல உலக ஞானம், அதனால்தான் எஸ்.எஸ்.ஆர்க்கு நம்பிக்கைக்கு உரியவராகவும் கட்சிப்பணிகளில் உதவியாளராகவும் இருந்திருக்கிறார். தாத்தாவைப் போலவே, வீட்டிலிருந்தவர்களும் பண்டிகை நாட்களில் கொண்டாடுவதையோ, புதுத்துணி எடுப்பதையோ அதிக சிரத்தை எடுத்து செய்ததில்லை. ஆனால் மகள்களைக் கட்டிய மருமக்கமார்களோ சொந்த பந்தங்களோ விழாக்காலங்களில்  அல்லது மற்ற நாட்களிலோ வீட்டிற்கு வந்துவிட்டால், கோழி அடிக்க சொல்லி விமரிசையாகக் கொண்டாடிவிடுவார் தாத்தா.

வீட்டிற்கு விருந்தாளிகள் வந்துவிட்டால் பெரியவர்கள் யாரும் சொல்லாமலே பொடிசுகள் வீட்டைச்சுற்றி மேய்ந்து  கொண்டிருக்கும் கோழியைத் துரத்தி பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும்போது பிய்க்கப்பட்ட அதன் இறக்கைகள் காற்றில் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கும். பறக்கும் இறக்கைகளில், இறந்த கோழியின் ஆன்மா அமர்ந்திருப்பதாக தம்பியிடம் காட்டியிருக்கிறாள் சாந்தி.

கோழியின் கழுத்தைப் பாட்டித் திருகும்போதெல்லாம் பொடிசுகள் பக்கத்திலேயே நிற்பதில்லை. அவர்கள் ஓடுவதைப்பார்த்துவிட்டு மூக்கம்மா பாட்டி சொல்வாள். “குழம்பு கொதியில் இருக்கிறப்பவே, ஆளுக்கு முன்னாடி தட்டைத் தூக்கிட்டு வந்து நிக்கிறதுல மட்டும் கொறைச்சல் இல்லே” அப்படித்தான் சாந்தியும் ராஜசேகரும் நடந்து கொண்டார்கள்.

 கல்யாணத்திற்கு முன்பெல்லாம் லட்சுமி சித்தி அசைவம் சாப்பிட மாட்டாள். சொல்லப்போனால் முட்டை, வெண்ணையைக்கூட தொடாதவளாய் இருந்தாள். வீட்டில் அசைவம் என்றால் அவளுக்கென்று இருக்கும் மண்சட்டியில் உருளைக்கிழங்கு வெந்து கொண்டிருக்கும்.

சாந்தியின் பாட்டி வீட்டுக்கு, மழைக்காலங்களில் யார்வந்தாலும் கருப்பட்டிக்காப்பியும் அவித்தசீனிக் கிழங்கையும் சாப்பிட்டுவிட்டுப் போகலாம். மாலையில் அந்த வீட்டு நபர்கள் ஒவ்வொருவரும் மழையை வெறித்தபடி புகை வரும்படி காப்பியை குத்துக்காலிட்டுக் குடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த நேரங்களில் யாரும் யாருடனும் பேசிக்கொள்ள மாட்டார்கள். மழையைத்தான் வேடிக்கை பார்ப்பார்கள். ஒருவேளை ஒவ்வொருவரும் மழையுடன் பேசியிருந்திருப்பார்களோ?என்னவோ?

கருப்பட்டி கலந்த வரக்காப்பி குடித்துக்கொண்டிருந்த அப்படி ஒரு மழைநாளின் மாலைப்பொழுதில், ஈரத்திற்கு நண்டு வந்து வீட்டிற்குள் நுழைந்துவிட்டது நண்டு என்று தெரியாமல் “நட்டுவாக்காலி” என்று சத்தம் போட்டுக் கொண்டு ஓடினாள் சாந்தி. அத்தனைபேரும்  ஓடிவந்து பார்த்துவிட்டு “நண்டுதான் நட்டுவாக்காலி இல்ல” என்று சொல்லி முடிப்பதற்குள், பக்கத்தில் நின்ற மணிநாய் அதை கவ்விக் கொண்டு ஓடிப்போனது.
                                
சிற்றுண்டிச் சாலையில் போய்ச்சாப்பிட்டுவிட்டு திரும்பிவந்தபோது பாலின் மட்டும்தான் இருந்தார். சாந்தியிடம், “சாப்பிட்டாச்சா?” என்று கேட்டுவிட்டு இரண்டு மூன்று நிமிட இடைவேளைக்குப் பிறகு “நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க” என்று பீடிகை போட்டார்.

“சொல்லுங்க” என்றாள் சாந்தி

“நீங்க இன்னிக்குக் கிளாஸ் நல்லாவே எடுக்கலையாமே? பிள்ளைக வந்து சொன்னாங்க. கன்னத்துல கைவச்சிகிட்டு எடுத்தீங்களாமே? அப்படி எடுத்தீங்கனா பேசுறது கடைசி வரைக்கும் கேட்கவே கேட்காது. உங்க நல்லதுக்காகத்தான் சொல்றேன். என்கிட்ட சொன்ன மாதிரி இந்தப் பிள்ளைக புளோராகிட்ட சொன்னாங்கன்னா, அவங்க பிரின்சிபால்கிட்ட சொல்லிடுவாங்க. அவங்களும்(பிரின்சிபாலும்) புளோராவும் ஒரே ஊர்க்காரங்க. நாகர்கோவில். இவங்க என்ன சொன்னாலும் அவங்க கேட்டுக்குவாங்க.” அடுத்தடுத்துக் தாக்குதல்களைத் தந்தபடி இருந்தார்.
                                    
திரும்பும்போது எழும்பூர் இரயில் நிலையத்தில கூட்டம் அதிகமாய் இருந்தது. உள்ளேபோய் நிற்பதற்கு அவளுக்கு இடம் கிடைத்ததே பெரிய விஷயம்தான். இரண்டு மூன்று நிலையங்கள் தாண்டியும் கூட்டம் குறையவில்லை. மாம்பலம் நிலையத்தில் எதேச்சையாக பின்பக்கம் திரும்பியபோது, பக்கத்து அறை நிர்மலாக்கா உட்கார்ந்திருந்தார். “நுங்கம்பாக்கத்தில் ஏறியிருப்பார். எப்படி பார்க்காமல் விட்டோம்” என்று தோன்றியது. சாந்தி பார்ப்பதை அவரும் பார்த்துவிட்டார்.

பட்டர்பிஸ்கெட் விற்ற பையனையும், சப்போட்டா விற்ற பெண்ணையும் தாண்டி நிர்மலாக்கா இருந்த இடத்தைப்போய் அடைவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

சிரித்தவாறு “முதல்நாள் காலேஜ் அனுபவம் எப்படி இருந்தது? கிளாஸ் எடுக்கலையாம்.. எனக்கு தெரிஞ்சு நான் திருப்தியா எடுத்த மாதிரிதான் தோணுது” என்றாள் சாந்தி.

“ஏன் இவ்வளவு சீரியசா எடுத்துக்கறே? புதுசா ஒருத்தங்க போனா ஆரம்பத்துல இப்படித்தான் இருக்கும். அவங்க சும்மா சிரிச்சிட்டு கூட பாலின்கிட்ட சொல்லி இருக்கலாம். போகப்போக சரியாப்போகும். இது பரவாயில்ல. பசங்க காலேஜ்க்குப் போனேன்னா இன்னும் பெரிய பெரிய பிரச்சனைகளை பேஸ் பண்ணவேண்டியதாயிருக்கும்” .ஏதேதோ அவளை சமாதானப்படுத்திக்கொண்டே வந்தார் நிர்மலா.

- சுமதி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com