அம்புஜம் சித்ராவிடம் மறுபடியும் கேட்டாள்
“நீ சினிமாவுக்கு வரலையா சித்ரா”
”இல்லக்கா.. நா வர்ல…… லேசா தலைவலி மாதிரி இருக்கு. நா வீட்லய இருக்கேன். செந்திலும், மாமாவும் எட்டு மணிக்குள்ள வந்திருவாங்கல்ல…..”
“அவங்களுக்காக இருக்கணும்னு இல்ல. மகாம்மா வீட்ல சாவி கொடுத்தா வாங்கிக்கிருவாங்க”
“இல்லக்கா நா வரல….”
“சரி” என்றாள் அம்புஜம்.
அவளைப் பார்க்க பாவமாயிருந்தது. அம்புஜத்தின் கடைசித் தங்கை சித்ரா. மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்பா இருந்திருந்தால் இன்னும் வேகமாக நடந்திருக்கும். அம்மா தனியாகப் பார்க்க வேண்டும். கொஞ்சம் கையடக்கமாக வேறு செய்ய வேண்டும். அம்புஜத்திற்கு அடுத்தவள் கனகா. அவள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சித்ரா சென்னைக்கு வந்திருக்கிறாள். இது அக்கா வீடு மட்டுமல்ல. மாமாவும் அந்நியமல்ல. சொந்தத் தாய்மாமா. எப்போதும் சிடுசிடுவென இருப்பார். அம்புஜத்திற்கு கல்யாணமான இந்த 15 வருடத்தில் .எல்லாம் பழகி விட்டது. ஊரிலிருந்து வருபவர்களுக்கு அது புரியாது.
“செந்தில் வந்தா குழம்பு சூடாக்கிக் கொடு. அவனுக்கு குழம்பு சூடா வேணும். மாமா சாப்பிடறதுக்குள்ள நா வந்திருவேன்.”
பிள்ளைகள் குதித்துக் கொண்டோடின. சித்ரா மாடியிலிருந்து அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது மத்திய அரசுக் குடியிருப்பு. கீழே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சாட்டுக்கும் ஆரவாரித்துக் கொண்டிருந்தார்கள். இடை இடையிடையே இவள் பார்ப்பதையும் பார்த்தார்கள். மாமாவுக்கு இப்படி ஜன்னலோரம் நிற்பது பிடிக்காது.
”காவாலிப் பயலுக நிக்கிறாய்ங்க. அங்க என்னத்துக்கு நிக்கிறீங்க” அவருடைய பத்து வயது மகளைக் கூட நிற்க அனுமதிக்க மாட்டார்.
சித்ரா வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு தன்ராஜ் ஞாபகமாகவே இருந்தது. ஊருக்குக் கிளம்பியதைக் கூட தன்ராஜிடம் சொல்லவில்லை. தகவல் தெரியாமல் தவித்திருப்பான். பிறகு யார் மூலமாவது தெரிந்திருக்கும். எப்போ ஊருக்குப் போவோமெனத் தெரியாது. மாமாதான் முடிவு செய்து டிக்கட் எடுத்து வருவார். அன்றைக்கு கிளம்ப வேண்டியதுதான். பிள்ளைகள் இன்னும் வண்டலூர் ஜூ, கடற்கரை, மகாபலிபுரம் என பட்டியல் நீளமாய் வைத்திருந்தார்கள்.
சூரியன் தன் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். கீழே கிரிக்கெட் முடிந்திருந்தது. யார் வீட்டிலோ வாங்கி வந்திருந்த ஐஸ் வாட்டரைக் குடித்துக் கொண்டிருந்தார்கள். மாமாவின் தலை குவார்டர்ஸ் வாசலில் தெரிந்தது. சட்டென்று அந்தப் பக்கம் நகர்ந்தாள். ஆனாலும் ஜன்னலில் நிற்பதைப் பார்த்திருப்பார்.
கதவைத் திறப்பதற்கு முன்னே கத்த ஆரம்பித்தார்.
“எத்தன தடவ சொல்லியிருக்கேன். ஜன்னலில் நிக்காத நிக்காதன்னு.. அறிவில்ல…….”
சித்ரா பதில் சொல்லாமல் கதவைச் சாத்தினாள்.
“எங்க ஒளிஞ்சு போயாச்சு எல்லாரும்…….”
”சினிமாவுக்கு…….”
சின்னதாய் மாமாவின் முகம் மாறியது. சட்டென்று கோபம் தணிந்த குரலில் “சரி. எல்லா ரூம்லயும் லைட்டப் போட்டு விடு”
வெளியே இருட்டியிருந்தது. கூட்டத்தைப் பிரிந்த ஒரு பறவை பதறித் திரும்பிக் கொண்டிருந்தது. கீழ் வானில் ஒரு நட்சத்திரம் மின்னியது. நிலாவைக் காணோம். யார் வீட்டிலோ அகாலமாய் சுப்ரபாதம் பாடிக் கொண்டிருந்தது. நாய் ஒன்று புதருக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தது.
கதவை திறந்து விட்டாள் சித்ரா.
“மாமா வந்துட்டாரா…….. செந்தில் வந்துட்டாரா……..” என்றாள் அம்புஜம்.
”ம்….ம்” என்றாள்.
பிள்ளைகள் தூங்கத் தொடங்கியிருந்தனர். எழுப்பி சோறு கொடுத்தாள். செந்தில் அதற்குள் உறங்கிவிட்டான். பிள்ளைகளை படுக்கையில் உறங்கப் போட்டவள் தனக்கும் சித்ராவிற்கும் விரித்தாள். அடுத்த அறைக்குள் நுழைந்தாள். அம்புஜத்திற்கு முதுகு காட்டிக் கொண்டு நின்றார்.
”சாப்பாடு எடுக்கட்டா……..”
“போடி..ங் கொம்மால……. எங்கடி ஊர் மேஞ்சிட்டு வர்றே…..”
“கொஞ்சம் மெதுவா பேசுங்க………. பிள்ளைகளுக்கு கேட்கப் போகுது”
“அப்படியே எவனாவது கள்ளப் புருஷனோட போக வேண்டியதுதானே…….”
பதில் சொல்லாமல் வெளியே வந்தாள் அம்புஜம். சித்ரா பால்கனியில் நின்று கொண்டிருந்தாள்.
“என்னடி ஒரு மாதிரி இருக்க……”
சித்ரா வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள்.
“என்னடி ஆச்சு……. என்னாச்சு……… சொல்லித் தொல”
“மாமா முடியெல்லாம் பிடிச்சு இழுத்து என்னென்னமோ பேசுறாருக்கா……. எனக்கு பயமாயிருச்சு. பால்கனியில் வந்து நின்னுட்டேன். செந்தில் வந்த பிறகுதான் கதவ தெறந்தேன். நா ஊருக்கு போறேன்க்கா…….” கட்டுப்படுத்த இயலாமல் அழுதாள்..
“சரி போகலாம்……… கண்ணத் தொடச்சிட்டு போய் படுத்துக்க. யார்கிட்டேயும் இதைச் சொல்ல வேணாம் முக்கியமா………. அம்மாட்ட” சித்ரா தயங்கித் தயங்கி முன்னறைக்குச் சென்றாள். அவள் சாப்பிடவில்லை என்று ஞாபகம் வந்தது. இப்ப சொன்னாலும் சாப்பிட மாட்டாள். அம்புஜத்திற்கு தன் கணவனை தெரியும்தான். பார்வைகளைக் கவனித்திருக்கிறாள். அடுத்த வீட்டு மகாம்மா வீட்டு வாசலில் நின்றே பேசிவிட்டுச் செல்வார்கள். எவ்வளவு கூப்பிட்டாலும் உள்ளே வர மாட்டார்கள். எல்லாம் தன் புருஷனுடைய பார்வைதான் என்று தெரியும். பிறந்ததிலிருந்து அறிந்த ஒன்றை தன் புருஷனிடம் கண்டுபிடிக்க முடியாமலா போய் விடும். ஆனால் இப்படியா தரங்கெட்டுப் போய் வீட்டிலேயே இப்படி என்றால் வெளியில் எப்படியோ.
அம்புஜத்திற்கு சாப்பிடத் தோன்றவில்லை. சித்ரா உறங்கிவிட்டிருந்தாள். இரவு விளக்கு எங்கும் ஒரு மெல்லிய திரையை படர்த்தியிருந்தது. யார் வீட்டிலோ மிக்ஸி ஓடிக் கொண்டிருந்தது.. எப்பொழுது தூங்கினாள் என்று தெரியாது.
சட்டென்று செருமல் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள். புருஷனின் செருமல் சத்தம்…… பல வருடமாய் கேட்கும் சத்தம். இத்தனைக்குப் பிறகும் அம்புஜம் அடுத்த அறைக்குப் போய்தான் தீர வேண்டியிருந்தது.
- சாம்ராஜ்
