பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 23, 2010

கோடிட்ட இடங்களை நிரப்புக - 6 - சுமதி

சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச்சார்ந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசி sfr கல்லூரியிலும்,  முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக்கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர். தற்போது கோவையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.  
இவருடைய கவிதைகள், கட்டுரைகள், காலச்சுவடு,கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன்,வார்த்தை, வடக்கு வாசல், அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில்பிரசுரமாகி இருக்கின்றன. இவருடையக் கவிதைகள் காட்சியில் சுமதி கவிதைகள் என்றுதொடராய் இடம் பெற்றுள்ளன. அதை தொடர்ந்து "கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற தலைப்பில் காட்சியில் தொடர்கதை வெளிவருகிறது.

பகுதி 6

சிவசுப்பு சார் வேலை பார்ப்பது என்னவோ சென்னையில் உள்ள தாம்பரம் கல்லூரியில்தான். அமெரிக்கன் கல்லூரியின் பழைய மாணவர். அவர் வேலுபிரபாகரின் வகுப்புத் தோழர். அங்கு விடுமுறையென்றால் இங்கு வந்துவிடுவார். பாதிபேருக்கு சிவசுப்புசாரும் அமெரிக்கன் கல்லூரியில்தான் வேலைபார்த்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டார்கள். அமெரிக்கன் கல்லூரியில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளுக்கெல்லாம் தவறாமல் அவருக்கு அழைப்பு போய்விடும். வாதவிவாதங்களில் கண்டிப்பாக பங்கேற்பார். முதுகலை படிக்கிற மாணவர்கள் விரிவுரையாளர் தகுதிக்கான தேர்வு(UGC) எழுதுவதற்குப் பயிற்சி வகுப்புகள் கூட நடத்தினார். அதற்கான புத்தகங்களையும் நகல் எடுத்துக் கொடுத்தார். சாந்தி எம் ஏ இரண்டாம் வருடம் முடிக்கும் தருவாயில் இருந்தாள். மற்றவர்களெல்லாம் முடித்துவிட்டார்கள். டைஃபாய்டில்  கிடக்கும்போது எழுதாமல் விட்ட தொல்காப்பியம் சொல் தோற்றது ஒன்று இருந்தது. ஜுன் வாக்கில் எழுதுவதற்கு வாய்ப்பு இருந்தது. எழுதினாள். எழுதிய ஒருவாரத்திலே தேர்வுமுடிவு வந்துவிட்டது. தேர்வு முடிவைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள். புதியவர்கள், பழையவர்கள் என்று எப்பொழுதும்போல் கல்லூரி இயங்கத் தொடங்கியிருந்தது. 

சாந்தி போயிருந்தபோது, துறைக்கு அருகிலிருந்த கல் இருக்கையில் சிவசுப்பு சாரும் வேலு பிரபாகரும் பேசிக் கொண்டிருந்தார்கள். முடிவைத் தெரிந்து கொள்ள அறிவிப்புப் பலகையைப் பார்க்கச் சொன்னார்கள். நாற்பத்தைந்தை தாண்டவில்லை. ஆனாலும் போதுமென்றுதான் சாந்திக்குத் தோன்றியது. பார்த்துவிட்டு வந்து அவர்களிடம் சொன்னாள். இந்த முடிவுக்காக காத்திருந்ததால் எம் ஃபில்(கலையியல் ஆய்வு நிறைஞர்) படிப்பதற்கு எந்தக் கல்லூரியிலும் போடாமல் இருந்தாள். சில கல்லூரிகளில் விண்ணப்பம் கொடுத்து முடித்து நுழைவுத் தேர்வுகூட நடத்தியிருந்தார்கள்.

எம் ஏ படிக்கும் போது சாந்தியுடன் படித்தவர்கள் இவளைச் சேர்க்காமல் பதினாறு பேர். அவர்களில் பத்துபேர் காமராசர் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு, நுழைவுத்தேர்வு எழுதி எம் ஃபில் வகுப்புகளுக்குத் தயாராக இருப்பதாக வேலுசார் சொன்னார். “சிவசுப்பு சாரோட காலேஜ்ல இன்னும் நுழைவுத்தேர்வு வைக்கல அப்ளிகேஷன் கொடுக்கிறங்களாம் டிரை பண்ணி பாருங்க சாந்தி” என்றார். 

“மெட்ராஸுக்கா? ஐய்யோ! அவ்வளவு தூரம் வேணாம் சார்” என்றாள் உடனே.

“சும்மா போட்டு வைங்க தூரத்தைப்பத்தி அப்புறமா யோசிங்க” பதில் பேசாமல் நின்றபோது,

“எம் ஃபில்க்கு தொல்காப்பியமெல்லாம் ஒரு பாடமா இருக்காது” என்றார் வேலுசார், சாந்திக்கு சிரிப்புதான் வந்தது. 

ஒருவழியாக வேலுசாரின் தூண்டுதலினால் சிவசுப்பு சாரின் கல்லூரியில் விண்ணப்பம் பெறுவதற்காக தனது முகவரியை எழுதிக் கொடுத்துவிட்டு வீடு திரும்பினாள்.

இரண்டு முடிவுகளில் ஏதேனும் ஒன்றை அவள் தேர்ந்தெடுக்கக்கூடிய கட்டாயத்தில் இருந்தாள். முதுகலை தமிழ் படித்ததற்கு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் போய் கணக்குதான் பார்க்க முடியும். தன் இனத்தில் பட்டம் வாங்கிய பெண்கள் அலுவலகத்திற்குப் போகாமல் மாப்பிள்ளைக்காகக் காத்திருந்தார்கள். ஆசிரியர் பயிற்சி படித்திருந்தாலாவது ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்திருக்கும். முதுகலை தமிழ் முடித்ததற்கு எம் ஃபில் படித்தால் வேண்டுமானாலும் கல்லூரியில் பணியாற்றலாம்.

படித்தது போதுமென்று வீட்டில் இருந்துவிட்டால், ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் வீட்டில் வைத்துப் பார்ப்பார்கள், அதற்குப்பிறகு மடியில் நெருப்பு கட்டிக்கொண்டு இருப்பதாக சொல்லி, அம்மாவும் அப்பாவும் சேர்ந்து ஏதாவது ஒரு வரனைப் பார்த்து முடித்துவிடுவார்கள்.
அவ்வளவு சீக்கிரமாகக் கல்யாணத்தை செய்து கொண்டு வீட்டிலிருந்துவிட அவளுக்கு விருப்பமில்லை, கலையியல் நிறைஞர் ஆய்வு படிக்க நினைத்தாள், வேலுசார் சென்னை கல்லூரியைப்பற்றி சொன்னதும் அதையே உறுதியாகப் பிடித்துக்கொண்டாள்.

லட்சுமி சித்தி வீட்டுடனோ, தாத்தா பாட்டியுடனோ பேச்சு வார்த்தை இல்லாமல் போனதால், அவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல்தான் சென்னைக்கு கிளம்பினாள், அத்தையுடன்.
கிளம்பிவந்து நான்கு முக்கு சாலையில் பேருந்தில் ஏறினாள். அவள் ஏறிய பேருந்தில்தான் பானுச்சித்தியின் பையன் ராஜசேகர் இறங்கி வந்தான். அவனும் இவளைப் பார்த்து சிரித்தான். இவளும் சென்னைக்குக் கிளம்பிப்போவதைச் சொல்லலாம் என்று திரும்பியபோது,
“என்ன வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற வண்டியை எடுத்துடப் போறான். உங்க அம்மாவுக்குத் தெரிஞ்சதுன்னா சத்தம் போடுவா! பேசாம வா” என்று கையைப் பிடித்து இழுத்தாள் அத்தை.
                               
தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக விடுமுறையில் இருந்தது. ஒருவிதமான சலிப்பை அவளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. பொட்டப்ப வாத்தியாரும், சேது வாத்தியாரும் வெவ்வேறு நாளில் அவளிடம் பேசும் போது ஒரு விசயத்தைச் சொன்னார்கள். அவள் படித்திருக்கும் முதுகலை படிப்பு சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஆரம்ப மற்றும் உயர்நிலைப்பள்ளிக் குழந்தைகளுக்கு சற்றும் பயன்படாது என்று சொல்லிவிட்டுப் போனார்கள். உபரியாக அவள் ஏன் பி.எட் முடிக்கவில்லை என்று கேட்டார்கள். ஒரு வருடம்தான் பி.எட். படித்தால் நிச்சயம் வேலை என்றார்கள்.

பி.எட் முடித்த ஒரு பள்ளி ஆசிரியையாக பிரம்புடன் தன்னைக் கற்பனை செய்து பார்த்தாள். அவள் இயல்புக்குச் சற்றும் பொருந்தாதாய் அப்பணி கற்பனையிலும் தெரிந்தது.

ஆரம்பப் பள்ளியில், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது மிகக் கடினமான வேலை. எப்பொழுதும் விளையாட்டில் இருக்கும் அக்குழந்தைகளைக் களைத்துப் போகும்படி, ஒரே அறைக்குள் அடக்கி வைத்து ஒன்றுக்கும், ரெண்டுக்கும் மட்டுமே வெளியே அனுப்பி, மீண்டும் உள்ளே வரழைத்து உள்ளே அடைத்து விப்பது என்பது சிறைச்சாலைக்கு ஒப்பானதாக நினைத்தாள். 

பக்கத்துவீட்டுக் குழந்தைகளைப் பார்க்கும்போது கூட, வகுப்பறையைத் தாண்டிய கேள்விகளைத்தான் கேட்பாள். தான் படித்த அதிசயத்தக்க வான்வெளி மண்டலத்தைப்பற்றி, நிலா, சூரியன், நட்சத்திரங்கள் பற்றி, பூமியில் மிச்சங்களின்றி மறைந்துப்போன அபூர்வமான பறக்கும் விலங்குகளைப் பற்றி பேசுவாள். அக்குழந்தைகள் கண்களை விரித்துக் கொண்டும், காதுகளைக் கூர்தீட்டிக்கொண்டும் கேட்டு, மலைத்துப்போகும்படி செய்வாள்.

வீட்டில் சும்மாதானே இருக்கிறாளென்று, பக்கத்திலிருந்த குழந்தைகளை அழைத்து வந்து வீட்டில் பாடம் சொல்லிக்கொடுக்கும்படி அம்மா அவளை வற்புறுத்தினாள். நான்கைந்து குழந்தைகளையும் அம்மாவே பிடித்து வந்தாள். வெவ்வேறு வகுப்புகளில் படிக்கின்றவர்களாக இருந்தார்கள் குழந்தைகள். கணக்கும் அறிவியலும் கடினமென்றார்கள். அந்தப்புத்தகங்கள் அவள் வீட்டுப்பாட எடுத்தவரை திறக்கப்படாமலேயே இருந்தன. வீட்டுவேலைகள் செய்யாமல், குழந்தைகளுடன் கதை பேசிக் கொண்டிருந்த இரண்டு மூன்று நாட்களையும் அம்மா கவனித்துப் பார்த்திருப்பாள் போல, பாடம் சொல்லித்தர வேண்டாமென்றாள். சாந்தி கேட்கவில்லை.

சாந்தியிடம் பேசி பிரயோஜனமில்லையென்று. குழந்தைகளின் அம்மாக்களிடம் போய் பாடம் சொல்லிக்கொடுப்பதற்கு நூறு ரூபாய் என்று சொல்லியிருந்தாள். சொத்தையே எழுதித் தரும்படி கேட்டதுபோல ஆடிப்போனார்கள். அடுத்த நாளில் அவள் வீட்டுப்பக்கமே குழந்தைகள் ஒருவரும் வந்திருக்கவில்லை. இரண்டு மூன்று நாள் கழித்து ஞாயிற்றுக் கிழமைப் பொழுதில், சிரித்துக் கொண்டே தன் சதி வேலையைப் பற்றி விவரித்தாள் அம்மா.

கறிக்கோழி பிரியாணிக்கு வாகாய் இருக்கவேண்டுமென்று,  வெங்காயப் பச்சடிக்குப் பெரிய வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த சாந்திக்குக் கோபம் கோபமாக வந்தது. சூடாய் பிரியாணியை இறக்கி வைத்ததும், தங்கைகளுக்கும் கொடுக்காமல் அவளுக்குக் கொடுத்து அம்மா சமாதானப்படுத்த முன்வந்தபோது, வேண்டாமென்று மறுத்து, கடைசியாய் ஆறிப்போன பிரியாணியே சாப்பிட்டுக் கோபத்தை வெளிப்படுத்தினாள். மனசு கேட்காமல், மீண்டும் தானே நேரில் போய் வேண்டுமானாலும் குழந்தைகளை அழைத்து வருவதாகச் சொன்னாள் அம்மா. சாந்தி மறுத்துவிட்டாள்.
                               
சென்னை தாம்பரம் கல்லூரிக்கு விண்ணப்பம் போட்டுவிட்டு, அப்பாவிடம் சாந்தி சொன்னபோது, முதலில் மறுத்தார். என்னதான் மகள் முதுகலை படித்திருந்தாலும் மஹாராஷ்ட்ராவில் வைத்துக்கொண்டு வசூலுக்கா உடன் அழைத்துப் போக முடியும் அவரால்.
“இந்தப்படிப்பை பையனாக இருந்து படிச்சிருந்தேனா என்கூட வச்சிக்குவேன்” நான்கும் பெண் குழந்தைகளாக பிறந்ததற்காக அவர் வார்த்தைகள் கொண்டு அழுவதற்கு சாந்தி மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டாள்.

நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக கல்லூரியிலிருந்து அனுமதிக் கடிதம் வந்ததும், சாந்தி எம்ஃபில் படிக்கப்போகும் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தாள். அவளுடைய உறுதியை தொலைபேசி வழியாகத் தெரிந்து கொண்ட அப்பா, அத்தையை அழைத்துக் கொண்டு நுழைவுத் தேர்வு எழுதப் போகும்படி சொல்லிவிட்டார்.

சென்னைக்குக் கிளம்புவதற்கு முன்னால், வேலுசாரிடம் சாந்தி தொலைபேசியில் பேசியிருந்தாள். சிவசுப்புசாரிடம் தானும் பேசுவதாகச் சொன்னார். சிவசுப்புசாரின் வீடு கல்லூரிக்குப் பக்கத்தில்தான் இருப்பதாகவும், அவரைப் போய் பார்த்தால் வேண்டிய உதவிகளை அவளுக்கு செய்துதருவார் என்று, முகவரியைக் கொடுத்தனுப்பினார் வேலு சார்.
                               
அப்பாவைப்பார்க்க அம்மாவுடன் மஹாராஷ்டிரா போகும்போது பல நகரங்களையும், அவற்றின் நெரிசல் மிக்க அதற்கே உரிய அசாதரணமான ஒளி வீசும் இரவுகளையும் பார்த்திருக்கிறாள். பயணப்படுவதற்கும் பார்த்துவிட்டுப் போகட்டுமே உகந்த நகரத்தில், அதுவும் மாநிலத் தலைநகரான சென்னையில், எப்படி இருக்கப் போகிறோம்? என்ற பயமும் அவளோடு சேர்ந்தே பயணப்பட்டது.

இரயிலில் அடிக்கடி வந்து போனவர்கள், “எக்மோர் ஸ்டேஷனுக்கு போகிற வண்டி தாம்பரத்திலேயே நிக்கும், சீக்கிரம் இறங்கிவிட வேண்டும்” என்றார்கள். இரயிலிருந்து இறங்கி ஆட்டோபிடித்து, சிவசுப்பு சாரின் வீடு இருந்த சேலையூர் முகவரியைச் சொன்னாள். சீக்கிரமே கொண்டு போய் சேர்த்துவிட்டார் ஆட்டோக்காரர்.

சிவசுப்புசாரின் மனைவி மதுரைப்பக்கம். சாந்தியும் அவளுடைய அத்தையும் குளித்து சாப்பிட்டுவிட்டு கிளம்புவதற்கு, ஏற்பாடுகள் செய்துக் கொடுத்தார். சிவசுப்புசாரின் மகனுக்கு மூன்று வயதிருக்கும். அவர் மனைவியின் இடுப்பில் இருந்து கொண்டே சாந்தியைப் பார்த்து சிரித்தான். மற்ற நேரமாக இருந்தால் கன்னத்தைத் திருகி முத்தியிருப்பாள். புது இடம் புது ஆட்கள், நுழைவுத்தேர்வுக்குப் போகிற அவசரம் எல்லாம் சேர்ந்து கொண்டதால் பதிலுக்கு சிரிக்க மட்டும்தான் செய்தாள் சாந்தி. அத்தை சிவசுப்பு வீட்டில் இருக்காமல் தானும் உடன் வந்து கல்லூரியைப் பார்க்கவேண்டுமென்றார்.

நுழைவுத் தேர்வு எழுதிய உடனேயே ஒரு மணி நேரத்தில் முடிவை சொல்லிவிட்டார்கள். அவளுக்கு இடம் கிடைத்துவிட்டது. தமிழ்த்துறைத் தலைவரிடம் சிவசுப்புசாரின் உதவியோடு கல்லூரி விடுதியில் இடம் போய் வேண்டுமென கேட்டுப்பார்த்தாள்.

“ஒன்லி யு.ஜி, பிஜிக்கு மட்டும்தான் ஆஸ்ட்டல். ரிசர்ச் பண்றவங்க. எல்லாம் பிரைவேட் ஆஸ்டல்ல இருந்துதான் வரணும் என்றார் துறைத்தலைவர். மேலும் “வெளிய்ய நிறைய்ய ஆஸ்டல்ஸ் இருக்கும்மா, அதுல ஏதாவது ஒண்ணுல கேட்டுப்பாருங்க” என்று ஆலோசனை கூறினார் துறைத் தலைவர்.

திரும்ப இருந்தவளிடம்

“எந்த ஊர்ல இருந்து வந்திருக்கீங்க?” என்றார்.

“சிவகாசி பக்கம் சார்”

“சாத்தூர் உங்களுக்குப் பக்கமா?”

“ஆமா சார்”

“யூஜி யில பைனல் இயர் படிக்கிற பொண்ணு ஒருத்தி இருக்கா, சாத்தூர்கார பொண்ணுதான். அவளுக்கே உள்ள இருக்கிற ஆஸ்டல்ல இடம் கிடைக்காமதான் பல்லாவரத்துல  இருக்கிற ஆஸ்டல்ல இருந்து வர்றா. அந்தப் பொண்ணை வரச் சொல்றேன். ஆஸ்ட்டலைப் பத்தின விவரம் என்னன்னு கேட்டுக்கோங்க” என்றார்.

“சார் ஒரு நிமிசம் வெளிய நிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அத்தையைப்பார்க்க ஓடிவந்தாள். துறைக்கு வெளியே நான்கடி தள்ளிக்கொண்டு வந்திருந்த பையைக் கீழே வைத்துவிட்டு, இருகைகளையும் பின்னாடி கட்டிக்கொண்டு தூணோடு தூணாக சாய்ந்து, சாந்தியின் வருகைக்காகக் காத்திருந்தாள் அத்தை. 

விசயத்தைச் சொன்னாள் சாந்தி. வெளியில் தங்கி, கல்லூரிக்கு வந்து படிக்கவேண்டும் என்று தெரிந்ததும்.

“வெளியே இருக்கிற ஆஸ்டல்ல தங்கி, எப்படி காலேஜ்க்கு வந்து போவேம்மா?” என்று வருத்தப்பட்டாள் அத்தை.

“முதல்ல ஆஸ்ட்டல் கிடைக்கட்டும் அத்தே அந்தப் பொண்ணெல்லாம் எப்படி வருதோ அப்படி வர்றதுக்கு யோசிக்கலாம்”

துறைத் தலைவர் அந்தப் பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்தார். செல்வி தெற்குக்கே உரிய நல்ல கருப்புடனும் வெள்ளை சிரிப்புடனும் இருந்தாள். முட்டிவரை நீண்ட சுடிதாரில் நடுத்தர உயரத்தில் இருந்தாள்.

“எங்க ஆஸ்டல்ல இடம் இருக்கு, சார். இவங்களை காலேஜ் முடிஞ்சி போறப்போ கூடவே கூப்பிட்டுட்டு போறேன்” என்றாள்.

வகுப்புகள் தொடங்கும் நாள், எம்ஃபில் வகுப்பிற்குக் கட்ட வேண்டிய பணம் என்று , எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டாள் சாந்தி. 

மதிய உணவை,அத்தையோடு போய் கல்லூரியின் சிற்றுண்டி சாலையில் சாப்பிட்டுக்கொண்டாள். சிவசுப்பு சார், வீட்டுக்கு அழைத்தார். ஆஸ்ட்டல் விவரத்தைக் கேட்டுவிட்டு, ஊருக்குக் கிளம்புவதற்கு முன்னால் வீட்டிற்கு வந்து கிளம்புவதாக சாரிடம் அனுமதி பெற்றுவிட்டுக் கொண்டாள்.

செல்வியை அழைத்து, “மெட்ராஸுக்கு இந்த அக்கா புதுசு பார்த்து கூப்பிட்டுட்டு போங்க. ஆஸ்ட்டலைக் காட்டிவிட்டு விவரம் கேட்ட்தும் நீங்களே மறுபடியும் டிரெயினேத்தி விட்டுடுங்க” என்றார் சிவசுப்புசார்.

- சுமதி

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com