பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

August 25, 2010

அஞ்சல் தலை - 8 - ப்ரிய அகல்யாவுக்கு - விக்னேஷ்வரன்


என் ப்ரிய அகல்யாவுக்கு!


நான் உன்னைக் கடிதம் வழியாகத் தொடர்பு கொள்வேன் எனக் கனவிலும் நினைத்ததில்லை. நீ எப்பொழுதும் என்னருகில் எனக்கான கடிதங்களை வாசித்துக் காட்டும் ஒரு துணையாகவே உன்னை எண்ணியிருந்தேன். இந்த சில வருடங்களில் நான் விதியை தூற்றி சபிக்காத நாட்களை எண்ணிவிடலாம் அகல்யா! நீ எப்படி இருக்கிறாய்? உன் நாய்க்குட்டி எப்படி இருக்கிறது. இன்னமும் உன் விஜயலக்ஷ்மியை நாய்க்குட்டி என்றழைத்தால் உனக்குக் கோபம் வருகிறதா? நம் விஜிக்குட்டி இன்றும் உயிரோடு இருக்கும் என நான் நம்பவில்லை. ஆனால் நம் நண்பன் பல வருடங்கள் கழித்து பாரில் வைத்து விஜிக்குட்டி எப்படி இருக்குமென கேட்டபொழுது என்னால் உன்னை நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

உன் வாழ்க்கை எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் ஓவியங்கள் வரைகிறாயா? அதற்கெல்லாம் நேரமிருக்கிறதா? சத்தியமாக உன் சாஃப்ட்வேர் முதலாளிகள் அதற்கு நேரம் உருவாக்கித் தரப்போவதில்லை. ஆனாலும் உள்ளொளியை காணும் சித்திரங்களின் மேல் உனக்கிருக்கும் ப்ரியத்தை உன்னைத் திருமணம் செய்து கொண்டவராவது புரிந்து கொண்டாரா?.  எனக்கும் கல்யாணமாகிவிட்டது அகல்யா!.  என்னை இன்னும் புரிந்துகொள்ளவில்லையானாலும் என்னை புரிந்துகொள்ள எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கிறாள். அதற்காகவேனும் அவளை நீ வாழ்த்த வேண்டும்.

எல்லாக் காதலும் கல்யாணத்தில் முடியவேண்டும் என்பதில்லை. ஆனால் எல்லாக் கல்யாணமும் காதலில் ஆரம்பிக்க வேண்டுமென்பதில் மிகவும் தீர்மானமாக இருக்கிறாள். பெண்களை பற்றிய என் அனுமானங்களை துடைத்தெறிய தீவிரமாக இருப்பவள். இவள் என்ன மாதிரியானவள் என்பதை தினந்தோறும் ஊகிக்க வைத்துக் கொண்டிருப்பவள் அவள். உன்னைப் பற்றிப் 
பேசினாலோ உன் சம்பந்தப்பட்ட எதையும் சந்தித்தாலோ அவள் மிகுந்த பதற்றமடைகிறாள். அதீத நல்லவர்களின் துன்பம்...!

சமீபமாக எனக்கொரு கனவு அகல்யா. நீ ராணியாக இருப்பது போலவும்  நான் புரட்சி செய்து உன் ஆட்சியை அபகரிப்பது போலவும் , என்னைக் கொல்ல நீ ஒபாமாவிடம் பேச்சு வார்த்தை நடத்துவது போலவும் , பதிலுக்கு என் மனைவி அணுகுண்டுகள் தயாரித்து ,அதை நான் பிரயோகித்து உன்னை வீழ்த்துவது போலவும் ஒரு கொடூரமான கனவு. அதுவே உனக்கு இந்த மடலை எழுதவும் தூண்டியது. விஜயலக்ஷ்மியை நாய்க்குட்டி என்றழத்தாலே அழும் உன்னை அணுகுண்டு வீழ்த்திக் கொல்வது போன்ற கனவை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. உன் மேல் எனக்கு துளி துவேஷமும் இல்லை. முன்னாள் காதலியுடன் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் டைட்டானிக் படம் பார்ப்பது போல் கனவு வந்தால் பரவாயில்லை. அணுகுண்டு வீசிக் கொல்வதை எவனால் ஜீரணிக்க முடியும்.

சில சமயங்களில் இந்த வாழ்க்கையே ஒரு குறுக்கெழுத்துப் புதிர் போல தோன்றுகிறது. சில கட்டங்களுக்கு விடை அறிய முடிவதில்லை.சில கட்டங்களுக்கு விடையை நிரப்ப இஷ்டமில்லை. நீ அவ்வாறான ஒரு கட்டம் அகல்யா! உன்னை நிரப்பாமல் புதிர் முழுமை அடையாது எனத் தெரிந்தும் இந்தப் புதிரை முடிக்க எனக்கு இஷ்டமேயில்லை.

என் வாழ்வின் மிகப்பெரிய அதிர்ஷ்டம் நான் யாரெனத் தெரியாமலேயே என்னை நீ காதலிக்க ஆரம்பித்தது. மிகப்பெரிய துரதிர்ஷ்டம் இன்று வரையிலும் கூட என் மொழியும் ,ப்ரியமும் ஸ்னேகமும் சரிவரப் புரியாமலே போனது. அதைவிட துரதிர்ஷ்டம் அதை உன் அப்பாவுக்குப் புரியவைக்க முயற்சித்துத் தோற்றுப் போனதுதான். சோறும் பருப்பும் எல்.ஐ.சி பாலிஸியும் மட்டுமே ஜீவாதாரம் என்றிருப்பவரிடம் ஜன்னல்வழி நிலா பார்ப்பதும் , அமாவாசை மொட்டைமாடியில் ஆத்மாநாம் கவிதைகளும் வாழ்வில் சுகந்தம் என்று விளக்கப் பாடுபட்டது எவ்வளவு அபத்தம் என்று இப்பொழுது புரிகிறது.
ஆனாலும் நிஜங்கள் சுவாரஸ்யமானவை அகல்யா ! விரும்புகிறோமோ இல்லையோ விதி அதுபாட்டுக்குத் தன் நிகழ்வை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. 

என் வாழ்வில் அங்கங்கே எனக்கு விருப்பமான பிரயாணங்கள் விதியின் தயவால் அறுந்து தொங்குகின்றன. இச்சைகளை அலைக்கழித்தபடி காலம் தன் சக்கரத்தை முன்னோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கிறது.நம் காதல் சில சமயங்களில் அலைவரிசைக்குள் சிக்கிக்கொண்ட பாடல்களை போல் தோன்றுகிறது. யாரோ கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய பாடலை யாரோ யாருக்கோ டெடிகேட் செய்வதைப்போல நம் காதலும் உன் கல்யாணத்தன்று ஆனது. அன்றிலிருந்து இன்னும் உன்னை சந்திக்கவில்லை என்பதில் மிகுந்த ஆச்சர்யம். "அஞ்சு நாளா உன்னைப் பார்க்கலைன்னா எனக்கு ஜுரம் வந்திடுது" என்று பிதற்றிய நாட்கள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.

கொன்று புதைத்த நினைவுகளை அகழ்வாராய்ச்சி செய்வதில் யாருக்கென்ன லாபமிருக்க முடியுமென கேட்கிறாய் ? இதற்கென்ன பதில் சொல்வது. நாமென்ன நூற்றாண்டுகளாகவா ஜீவித்திருக்கப்போகிறோம். மரிக்காத நினைவுகளும் நிஜங்களும் கணமேனும் சந்தோஷம் தரவில்லையா அகல்யா?அப்படி எதைத்தான் தேடி இந்த வாழ்க்கை முழுக்க அலைந்துகொண்டிருக்கிறோம்? அதுவும் இந்த பெருநகர குப்பை வாழ்க்கையை நினைத்தால் குமட்டிக் கொண்டு வருகிறது.  ஞாயிற்றுக்கிழமையை எப்படி செலவளிப்பது என்ற கவலையில் ஞாயிற்றுக்கிழமையயும் முழுக்கத் தொலைத்துவிட்டு எதற்காக இப்படி பரபரப்பாக அலைகிறோம் அகல்யா?.  நாம் கனவு கண்ட சைக்கிள் சுற்றல்களும், மழைக்கால பால்கனி கொஞ்சல்களும்,அதிகாலை சீண்டல்களும் எங்கே போயின அகல்யா? மெஷின்களின் உலகம் நம்  கனவுகளை தின்று பெரிதாக ஏப்பம் விட்டு விட்டது . எனக்குப் புரியாமலேயே இந்த உலகத்தைப் பின் தொடர்ந்து நானும் அதே வலையில் சிக்கிவிட்டேன். இதோ உனக்கான கடிதத்தை எப்பொழுது எழுதுவது என்ற கவலையிலேயே பல நாட்களை கழித்ததின் அவஸ்தை உனக்குப் புரியாது அகல்யா. எதற்காக இந்த மீள்நினைவுகள்? எதன்பொருட்டு இந்த ஞாபகார்த்தங்கள் ...? எனக்கும் தெரியவில்லை. 

வேண்டுமென்றே தொலைத்த உன் விலாசம் , விருப்பத்துடன் அழித்த உன் மொபைல் நம்பர் , சற்றே துக்கத்துடன் எரித்தழித்த உன் புகைப்படம் என எல்லா நினைவுகளுடன், எல்லாரையும் போல மிகவும் சாதாரணமாக வாழ்ந்துது கொண்டிருக்கிறேன் அகல்யா. ரொம்பவும் சாதாரணமாக. நீயும் மிகவும் சாதாரணமாக வாழ்ந்துகொண்டிருப்பாய் என்கிற நம்பிக்கையில்.

ப்ரியமுடன்

ஆத்மா

பின் குறிப்பு : விஜயலக்ஷ்மி இன்னும் உயிரோடு இருக்கிறதா? 
என்றேனும் உன் குண்டு எழுத்துகளில் மீண்டும் எனக்காக ஒரு கடிதம் எழுதுவாயா?.

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com